முன்னோக்கு

காலநிலை நெருக்கடியும் சோசலிசத்திற்கான போராட்டமும்

புவி வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கான உறுதிமொழிகளை அரசாங்கங்கள் கைவிடுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உலகளாவிய வெப்ப அலையானது, 2,000ம் ஆண்டுகளுக்கும் மேலான வெப்பமான கோடைக்கான பாதையில் உலகை வைத்து, நான்கு கண்டங்களையும் பற்றிக் கொண்டிருப்பதால், உலகம் முழுவதும் வெப்பநிலை பதிவுகள் சாதனையளவு உயர்ந்துள்ளன.

உலகெங்கிலும் உள்ள நகரங்கள் 40°C (104°F) க்கும் அதிகமான வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. மெக்காவில் வீசிய அதிக வெப்பநிலையால், ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் மட்டும் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மெக்சிகோவின் வெராக்ரூஸ் நகரில் உள்ள ஒரு கட்டுமான தளத்தில் தொழிலாளர்கள் தங்கள் வேலை நாளின் போது, அதிக சூரிய வெப்பத்திற்கு மத்தியில் வேலை செய்கிறார்கள். on June 17, 2024.  [AP Photo/Felix Marquez]

இந்த ஆபத்தான வெப்பத்தின் மூலம், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் கடுமையான வெப்பநிலையில் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உலக சோசலிச வலைத் தளத்துடன் (WSWS) பேசிய அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்கள், குளிரூட்டிகள் அல்லது மின்விசிறிகள் இல்லாமல் 100°F (37.7°C) க்கும் அதிகமான வெப்பநிலையில் வேலை செய்வதாக தெரிவித்தனர்.

இந்த வெப்ப அலைக்கு, எல் நினோவும் ஓரளவு காரணமாகும். இது உலகம் முழுவதும் சூடான வெப்பநிலையைக் கொண்டுவரும் வெப்பமயமாக்கும் சுழற்சியாகும். ஆனால், இந்த காலநிலை மாற்றத்தால் அதிக வெப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக காலநிலை விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, 2023, வெப்பமான ஆண்டாக இருந்தது, 2024 ஏற்கனவே கடந்த ஆண்டின் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கிறது. கடந்த 11 மாதங்கள் வரலாற்றில் மிக அதிக வெப்பம் பதிவானதுடன், தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.

சராசரியாக சில டிகிரி கூட புவி வெப்பமடைதல் என்பது சுற்றுச்சூழலில் கணிசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 1.5 டிகிரி உயர்வு ஒரு முக்கியமான மைல் கல்லாகும். உலகளாவிய சராசரி வெப்பநிலை, தொழில்துறைக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி அதிகமாக இருந்தால், காலநிலை மாற்றத்தை மாற்ற முடியாததாக ஆகிவிடும், மேலும் கடுமையான இயற்கை பேரழிவுகளுக்கு எரிபொருளாக மாறும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

ஜேர்மனியில் உள்ள காலநிலை தாக்க ஆராய்ச்சிக்கான போட்ஸ்டாம் நிறுவனத்தின் இணை இயக்குனரான ஜோஹன் ராக்ஸ்ட்ரோம், ஏப்ரலில் Earth.org இடம், “2023 இல் நடந்ததற்கும் 2016க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது பதிவு செய்யப்பட்ட இரண்டாவது வெப்பமான ஆண்டாகும். இது நாங்கள் எதிர்பார்த்த அனைத்தையும் தாண்டியது, மேலும் என்ன நடந்தது என்பதை எந்த காலநிலை மாதிரிகளும் மீண்டும் உருவாக்க முடியாது. பின்னர் 2024 தொடங்குகிறது, அது இன்னும் வெப்பமடைகிறது. இந்தப் போக்குகளை எங்களால் இன்னும் விளக்க முடியவில்லை, மேலும் இது என்னைப் போன்ற பூமியின் மீள்தன்மையில் செயல்படும் விஞ்ஞானிகளை மிகவும் பதட்டப்படுத்துகிறது” என்று கூறினார்.

புவி வெப்பமடைதல் ஏற்கனவே உலகம் முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. 2000 மற்றும் 2019 க்கு இடையில் வெப்பம் தொடர்பான காரணங்களால் ஒவ்வொரு ஆண்டும் 489,000 பேர் அல்லது இரண்டு தசாப்தங்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் இறந்ததாக உலக வானிலை அமைப்பு கடந்த ஆண்டு அறிவித்தது.

உயர்ந்து வரும் உலக வெப்பநிலையை எதிர்கொண்டு, முதலாளித்துவ அரசாங்கங்கள் தங்களது அற்ப மற்றும் போதிய காலநிலை வாக்குறுதிகளை முற்றிலுமாக கைவிட்டு வருகின்றன. 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் பசுமை இல்ல வாயு உமிழ்வை 75 சதவீதமாக குறைப்பதாக உறுதியளித்த ஸ்காட்லாந்து, ஏப்ரல் மாதத்தில் அதன் முழுத் திட்டத்தையும் கைவிட்டது. ஜூன் 3 அன்று, ஜேர்மனியின் காலநிலை ஆலோசகர், 2030 ஆம் ஆண்டிற்கான நாட்டின் வரையறுக்கப்பட்ட காலநிலை இலக்குகளான 30 சதவீத குறைப்புக்கள் எட்டப்படவில்லை என்று அறிவித்தார். இங்கிலாந்தில், பிரதம மந்திரி ரிஷி சுனக் காலநிலை இலக்குகளை “ஏற்றுக்கொள்ள முடியாத சூழலியல் உற்சாக கருத்துக்கள்” என்று விமர்சித்தார். அதே நேரத்தில், இங்கிலாந்தின் தொழிற்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் ஆண்டுக்கு 28 பில்லியன் பவுண்டுகள் ($35.3 பில்லியன்) பசுமை ஆற்றல் திட்டத்திற்கான தனது திட்டத்தை கைவிட்டார்.

கடந்த டிசம்பரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பெருநிறுவன நிர்வாகிகள் சந்தித்த COP 28 காலநிலை உச்சிமாநாட்டைத் தொடர்ந்து இந்த முன்னேற்றங்கள் நடந்தன. இந்நிகழ்ச்சிக்கு, அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் கம்பெனியின் (ADNOC) தலைமை நிர்வாக அதிகாரி சுல்தான் அகமது அல்-ஜாபர் தலைமை தாங்கினார்.

காலநிலை உறுதிமொழிகளை கைவிடுவதற்கான அரசாங்கங்களின் நகர்வுகள் வணிக உலகில் பிரதிபலிக்கின்றன. ஷெல் நிறுவனம், தனது 2035 காலநிலை உறுதிமொழியை மார்ச் மாதத்தில் கைவிட்டது. அதே நேரத்தில், அமெரிக்க வங்கி புதிய நிலக்கரி சுரங்கங்கள் அல்லது மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிதியளிப்பதில்லை என்ற உறுதிமொழியை கைவிட்டது. அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சி என்ற அமைப்பானது, மைக்ரோசாப்ட், JBS மற்றும் யூனிலீவர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்களை, தங்களின் காலநிலை உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதற்காக அதன் சரிபார்ப்பு செயல்முறையிலிருந்து கைவிட்டுள்ளது.

அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான ஏகாதிபத்தியப் போரை விரிவுபடுத்திவரும் நேரத்தில், காலநிலை முன்முயற்சிகள் கைவிடப்படுவதும் நடக்கிறது. போருக்கான நிதியின் முடிவில்லாத திசைதிருப்பல், எஞ்சியுள்ள அனைத்து காலநிலை திட்டங்களையும் துண்டாடுகிறது. NPR தலைப்புச் செய்தியானது, “காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்கா பில்லியன் டொலர்களை கொடுப்பதற்கு உறுதியளித்தது. அதற்குப் பின்னர் உக்ரேனில் போர் தொடங்கியுள்ளது” என்று தெரிவித்தது.

முதலாளித்துவ அரசாங்கங்கள் கோவிட் பெருந்தொற்றுக்கு பதிலளிக்கும் வகையில், லாபத்திற்காக அடிப்படை பொது சுகாதார நடவடிக்கைகளை கீழ்ப்படுத்தியதைப் போலவே, காலநிலை மாற்றத்தை நிறுத்தவும் மாற்றவும் அவர்களால் தீவிர நடவடிக்கை எதையும் எடுக்க முடியவில்லை மற்றும் அதற்குத் தயாராக இல்லை. முதலாளித்துவம் பாரிய COVID-19 பெருந்தொற்றை அனுமதிப்பதன் மூலம் வெகுஜன இறப்புகளை இயல்பாக்கியுள்ளது. மேலும், அது இப்போது காலநிலை மாற்றத்தை இயல்பாக்குவதுடன், பூமியை வாழ முடியாத கிரகமாக ஆக்குகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் நேற்று X/Twitter இல், இது தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டார்:

“பசுமைவாதிகளைப் போல, பல்வேறு நடுத்தர வர்க்க சுற்றுச்சூழல் இயக்கங்கள் மற்றும் கட்சிகள், முதலாளித்துவ அமைப்பு முறையே இதற்கு அடிப்படைப் பிரச்சினை என்பதை மறுப்பதாகும். இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக மற்றும் பொருளாதார அமைப்பின் கட்டமைப்பிற்குள், பெருகிய முறையில் வெப்பமடைந்துவரும் பூமியின் மோசமான யதார்த்தத்தை நிவர்த்தி செய்வது சாத்தியமற்றது. மேலும், காலநிலை மாற்றத்திற்கான தீர்வு அவசியமாக உலகளாவியதாக இருக்க வேண்டும். எனவே, பெருகிய முறையில் தொன்மையான தேசிய-அரசு அமைப்புடன் இவை பொருந்தாது” என்று கிஷோர் தெரிவித்தார்.

மேலும், “காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பது என்பது அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரச்சினையாகும். காலநிலை நெருக்கடியின் தாக்கம் முக்கியமாக உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை பாதிக்கிறது. மேலும், தொழிலாள வர்க்கம்தான், உற்பத்தி செயல்முறையில் சர்வதேச அளவில் ஒன்றுபட்டுள்ளது. அதன் நலன்கள் தேசிய-அரசு முதலாளித்துவ அமைப்பு முறையை ஒழிப்பதில் அடங்கியுள்ளது.

“காலநிலை மாற்றத்திற்கான தீர்வுக்கு முதலாளித்துவ தன்னலக்குழுக்களின் செல்வம் மற்றும் பொருளாதாரத்தின் மீதான அவர்களின் கட்டுப்பாட்டின் மீது ஒரு முன்னணி தாக்குதல் தேவைப்படுகிறது. சுற்றுச்சூழல் பேரழிவுக்கான அவசர பதில், தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ், உலகளாவிய எரிசக்தி நிறுவனங்களை கையகப்படுத்துவதுடன் தொடங்க வேண்டும்.

“இராட்சத வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களை கையகப்படுத்த வேண்டும் மற்றும் சமூகத்தின் வளங்களைத் திரட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், மாற்று ஆற்றல் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பாரிய சமூக முதலீடு உட்பட, சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கான அவசரத் திட்டத்திற்கு நிதியளிக்க வேண்டும்” என்று கிஷோர் தெரிவித்தார்.

காலநிலை நெருக்கடிக்கு தீர்வு காண்பது, முதலாளித்துவ அரசு மற்றும் அதன் அரசியல் பிரதிநிதிகளிடம் முறையீடு செய்வதன் மூலம் அல்ல. மாறாக, முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமும், காலாவதியான மற்றும் பகுத்தறிவற்ற இந்த சமூக அமைப்பு முறையை மாற்றுவதற்கு சோசலிசத்திற்கான போராட்டத்தின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

Loading