முன்னோக்கு

COP28 காலநிலை உச்சிமாநாட்டில் பூகோள வெப்பமயமாதல் குறித்து அரசாங்கங்கள் தமது அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நவம்பர் 29, 2023 புதன்கிழமையன்று நடைபெறும் COP28 ஐ.நா. காலநிலை உச்சிமாநாட்டிற்கான கூடுமிடத்திற்கு COP28 தலைவர் சுல்தான் அல்-ஜாபர் செல்கிறார். [AP Photo]

அதிகரித்து வரும் பூகோள வெப்பநிலை மற்றும் தீவிர வானிலை பேரிடர் நிகழ்வுத் தாக்கங்களின் பின்னணியில் 28 வது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு (United Nations Climate Change Conference) இன்று தொடங்குகிறது. தீவிர வானிலை பேரிடர் நூறாயிரக்கணக்கான தடுத்திருக்கக்கூடிய இறப்புகளுக்கும் மில்லியன் கணக்கான மக்களின் இடப்பெயர்வுக்கும் காரணமாகவுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில், 1850-1900 உலக சராசரியை விட 2.07 பாகை செல்சியஸ் அதிக வெப்பமான நாளாக நவம்பர் 17 ம் திகதி பதிவாகியுள்ளதாக கோபர்நிகஸ் காலநிலை சேவை தெரிவித்துள்ளது.

தற்போதைய விகிதத்தில், 2023 ஆம் ஆண்டு அதிக வெப்பமான ஆண்டாக இருக்கும், மேலும் 2024 இன்னும் வெப்பமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு நாட்கள் தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட குறைந்தது 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தன. இது ஒரு வருடத்தில் இதுவரை இந்த அளவு பதிவு செய்யப்படவில்லை. தொழில்துறைக்கு முந்தைய சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருப்பது உண்மையில் பூமியின் காலநிலைக்கு முக்கியமான வரம்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2023 உமிழ்வு இடைவெளி அறிக்கை பின்வருமாறு எச்சரிக்கிறது :

'இந்த அறிக்கையில் கருத்தில் கொள்ளப்பட்ட மிகவும் நம்பிக்கைக்குரிய சூழ்நிலையில் கூட, பூகோள வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் மட்டுமே உள்ளது, மேலும் பல்வேறு சூழ்நிலைகளானது புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியஸ் அல்லது 3 டிகிரி செல்சியஸைத் கடந்து செல்வதற்கான ஒரு பெரிய வாய்ப்பைத் திறக்கின்றன.'

இந்த ஆண்டு COP28 உச்சிமாநாட்டைப் பற்றிய அனைத்தும், துரிதமடைந்து வரும் காலநிலை பேரழிவு குறித்து முதலாளித்துவ அரசாங்கங்களின் ஒட்டுமொத்த அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றன. புதைபடிவ எரிபொருள் (fossil fuel) விற்பனையிலிருந்து தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை உற்பத்தி செய்யும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த மாநாட்டை நடத்துகிறது. அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் (ADNOC) தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சுல்தான் அல்-ஜாபர் உச்சிமாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமைகளின் கீழ், இந்த உச்சிமாநாடு புதைபடிவ எரிபொருள் தொழில்துறைக்கான (fossil fuel industry) ஒரு 'வர்த்தக கண்காட்சி' என்று விவரிக்கப்பட்டுள்ளது.

2020 ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென், காலநிலை மாற்றத்தை தீவிரமாக எடுத்துக்கொள்வதாகக் கூறி வாக்காளர்களை, குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தார், மேலும் 2021 மற்றும் 2022 காலநிலை உச்சிமாநாடுகளில் கலந்துகொள்வதை ஒரு காட்சியாகக் காட்டினார். ஆனால் இந்த ஆண்டு உச்சிமாநாட்டில் பைடென் கலந்து கொள்ள மாட்டார் என்றும், அதற்கு பதிலாக துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை அனுப்புவார் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்தது. ஹாரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், அவர் எப்படியாவது ஜனாதிபதியை விட குறைந்த அங்கீகார மதிப்பீட்டை பராமரிக்கிறார் என்பதாகும்.

முதலாளித்துவம் தோன்றியதிலிருந்து, எரிசக்தி பெரும்பாலும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதன் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இது கிரீன்ஹவுஸ் வாயு கார்பன் டை ஆக்சைடை (greenhouse gas carbon dioxide) வளிமண்டலத்தில் வெளியிடுகிறது. இதன் விளைவாக, பூமியின் சராசரி வெப்பநிலை 200 ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளில் 1.2 டிகிரி செல்சியஸ் (2.2 டிகிரி பாரன்ஹீட்) உயர்ந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் முறியடிக்கப்பட்ட தீவிர வானிலை பதிவுகளானது நெருக்கடியின் அபாயங்களை எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் பதிவு செய்யப்பட்டதில் வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதமாகும், மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்ற வெப்ப அலைகளுடனும் இருந்தன. செப்டம்பரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் லிபியாவில் 4,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 10,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயுள்ளனர். அமேசான் நதியின் துணை நதி 1902 ஆம் ஆண்டில் பதிவுகள் தொடங்கியதிலிருந்து அதன் மிகக் குறைந்த மட்டத்தை எட்டியது, இது பிரேசிலின் மனாஸில் 481,000 மக்களின் வாழ்க்கையையும் வாழ்வாதாரங்களையும் அச்சுறுத்தியது, இதில் நகரத்தின் குழந்தைகளில் வயிற்றுப்போக்கு, வாந்திபேதி மற்றும் தொற்றுக்களை ஏற்படுத்தியதும் அடங்குகின்றன.

இத்தகைய நிகழ்வுகளானது கடந்த 15 ஆண்டுகளில் வாழ்க்கையின் வழக்கமான பகுதியாக உருவெடுத்துள்ள நீண்ட வறட்சி, பெருவெள்ளம், கடுமையான வெப்ப அலைகள் மற்றும் பேரழிவுகரமான சூறாவளிகளின் பல பேரிடர் நிகழ்வுகளின் ஒரு சிறிய எடுத்துக்காட்டு மட்டுமே ஆகும். ஒரு காலத்தில் 100, 200 அல்லது 500 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்று கணிக்கப்பட்ட தீவிர வானிலை பேரிடர் நிகழ்வுகள் இப்போது ஒவ்வொரு தசாப்தத்திற்கும் ஒரு முறை நிகழ்கின்றன, மேலும் அவைகள் வருடாந்திர பேரழிவுகளாக மாறும் பாதையில் உள்ளன.

பூமி எவ்வளவு அதிகமாக வெப்பமடைகிறதோ, அந்த அளவுக்கு நீண்டகால விளைவுகள் மேலும் பேரழிவை ஏற்படுத்தும். தற்போதைய சுற்றுச்சூழல் பேரழிவு பூமியின் 'ஆறாவது அழிவு' என்று அழைக்கப்படுகிறது, அனைத்து விலங்கு மற்றும் தாவர இனங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை, 3 மில்லியன் வெவ்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் 2050 க்குள் அழியும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு வெளியேற்றத்தை உடனடியாகவும் கடுமையாகவும் குறைக்காவிட்டால், 2100 ஆம் ஆண்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிடும். பெருங்கடல்களின் (சமுத்திரங்கள்) அதிகரித்து வரும் அமிலமயமாதல் உலகின் தாவர மிதவையினங்களை (phytoplankton) அச்சுறுத்துகிறது. தாவர மிதவையினங்கள் முற்றிலுமாக கொல்லப்பட்டால், மிகவும் தீவிரமான சூழ்நிலையில், அது உலகின் உணவுச் சங்கிலியின் அடித்தளத்தை துண்டித்து, பூமியின் ஆக்ஸிஜன் உற்பத்தியை பாதியாகக் குறைக்கும்.

இந்த ஆண்டு காலநிலை உச்சிமாநாட்டிற்கு முன்னதாக, 200 க்கும் மேற்பட்ட சுகாதார உடல்நலப் பத்திரிகைகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு ஒரு அழைப்பை விடுத்தன, அதாவது 'இந்த ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் நெருக்கடி இப்போது ஒரு உலகளாவிய சுகாதார அவசரநிலையாக இருக்கும் அளவுக்கு கடுமையானது. காலநிலை மாற்றமானது காடழிப்பு மற்றும் பிற நில பயன்பாட்டு மாற்றங்களை இயற்கை இழப்பின் முதன்மை உந்துசக்தியாக முந்தப்போகிறது' என்று அவர்கள் கூறினர். 'நிலப் பயன்பாட்டில் ஏற்பட்ட மாற்றங்கள் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களை நெருக்கமான தொடர்புக்கு கட்டாயப்படுத்தியுள்ளன, நோய்க் கிருமிகளின் பரிமாற்றம் மற்றும் புதிய நோய்கள் மற்றும் பெருந்தொற்று நோய்களின் தோற்றத்தை அதிகரித்துள்ளன' என்று அவர்கள் தொடர்ந்து கூறியுள்ளனர்.

பிற இருத்தலியல் அச்சுறுத்தல்கள் ஏராளமாக உள்ளன. கடந்த நூற்றாண்டில் கடல் மட்டம் ஏற்கனவே 25 சென்டிமீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது, இது மிகவும் ஆபத்தான புயல் எழுச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. பனிப்பாறை உருகுதலால் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்டத்தை ஐந்து அல்லது பத்து மடங்கு உயர்த்த அச்சுறுத்துகிறது. 821 மில்லியனுக்கும் அதிகமான மனிதர்கள் உணவுக்காக நம்பியிருக்கும் நிலத்தில் விவசாயம் செய்ய முடியாததால் பசி அல்லது பட்டினியை எதிர்கொள்கின்றனர். வரவிருக்கும் தசாப்தங்களில் வெள்ளம், காட்டுத்தீ அல்லது சூறாவளியின் விளைவாக வசிக்க முடியாத பகுதிகளில் குறைந்தது 3.2 பில்லியன் மக்கள் வாழ இருக்கின்றனர்.

இவைகள் புதிய ஆபத்துகள் அல்ல. கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மற்றும் பூமியின் காலநிலை ஆகியவற்றின் தொடர்புக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானம் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அறியப்படுகிறது, மேலும் வானிலை முறைகள், விவசாயம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான குறிப்பிட்ட தாக்கங்கள் பல தசாப்தங்களாக அறியப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர், மாநாடுகளை நடத்தியுள்ளனர், நாடாளுமன்ற விசாரணைகளில் சாட்சியமளித்துள்ளனர், மேலும் அரசாங்கங்களை நடவடிக்கைக்கு தூண்டுவதற்கு தங்களால் முடிந்த ஒவ்வொரு எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளனர்.

எவ்வாறெனினும், முதலாளித்துவ அரசாங்கங்கள் வெறுமனே மில்லியன் கணக்கானவர்கள், அநேகமாக பில்லியன் கணக்கானவர்கள் தங்கள் நடவடிக்கைகளின் விளைவாக இறக்கக்கூடும் என்பதைப் பற்றி கவலைப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏகாதிபத்திய சக்திகளின், எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்காவின் கவனம் போரின் மீதே உள்ளது. உக்ரேனில், அமெரிக்காவும் நேட்டோவும் பாசிச ஜெலன்ஸ்கி ஆட்சிக்கும் அவரது நவ-நாஜி கூட்டாளிகளுக்கும் ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தையும் ஸ்திரமற்றதாக்கவும் தூண்டிவிடவும் போர் தொடுக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வழங்குகின்றன. காஸாவில், இதுவரை 20,000 பேரைக் கொன்றுள்ள காஸா மக்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையை பைடென் வெளிப்படையாக ஆதரிக்கிறார் மற்றும் நிதியளிக்கிறார், மேலும் காஸா பகுதியின் அனைத்து 2.3 மில்லியன் குடியிருப்பாளர்களையும் சினாய் பாலைவனத்திற்குள் விரட்ட முயற்சிக்கிறார். முதலாளித்துவத்தின் இன்றைய ஒழுங்கானது சுற்றுச்சூழல் அல்ல, இரத்தமும் எண்ணெயுமாகத்தான் இருக்கிறது.

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட அதிகாரத்திலுள்ளவர்களுக்கு விடுக்கும் எந்தவொரு வேண்டுகோளும் புறக்கணிக்கப்படும் என்ற உண்மையானது, காஸாவில் நடந்த இனப்படுகொலையைக் கண்டித்த ஸ்வீடன் காலநிலை ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மீதான சமீபத்திய தாக்குதல்களால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. முன்னதாக அமெரிக்க ஊடகங்களால் ஆண்டின் சிறந்த  நபர் என்றும், ஃபோர்ப்ஸ் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராகவும் பாராட்டப்பட்ட தன்பெர்க், இப்போது 'பயங்கரவாத ஆதரவாளர்' என்று அவதூறு செய்யப்பட்டுள்ளார்.

உலக மக்கள் கோவிட்-19 பெருந்தொற்றால் நிரந்தரமான வெகுஜன நோய்த்தொற்று, உடற்தளர்வு நிலைகள் மற்றும் இறப்பு ஆகியவற்றுடன் 'வாழ' வேண்டும் என்று அரசாங்கங்கள் கோரியதைப் போலவே, அவைகள் இப்போது மக்கள் தடுக்கக்கூடிய காலநிலை பேரழிவை வெறுமனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோருகின்றன.

காலநிலை மாற்றத்திற்கான உண்மையான தீர்வானது உலகளாவிய அளவில் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில் மிகப் பெரிய பரந்த மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். எரிசக்தி உற்பத்தி, சரக்குப் போக்குவரத்துக்கள் மற்றும் விவசாயம் ஆகியவை புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவதற்கும், வளிமண்டலத்தில் இருந்து கிரீன்ஹவுஸ் வாயுக்களை அகற்றுவதற்கும் முழுமையாக மறுசீரமைக்கப்பட வேண்டும். இதையொட்டி, புதிய உள்கட்டமைப்பை உருவாக்கவும், புதிய தொழில்நுட்பங்களை ஆராயவும் ஒரு சர்வதேச முயற்சி தேவைப்படுகிறது. வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும், அவைகளினால் குவிக்கப்பட்டுள்ள செல்வம் இந்த முயற்சிக்கு நிதியளிக்க பயன்படுத்தப்பட வேண்டும், மாறாக இனப்படுகொலைப் போர்கள் மற்றும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் எண்ணெய் ஷேக்குகளை செழுமைப்படுத்துவதற்காக டிரில்லியன் கணக்கான டாலர்களை வீணடிக்க அனுமதிக்கக் கூடாது.

காலநிலை நெருக்கடியைத் தீர்ப்பது என்பது அடிப்படையில் வர்க்கப் பிரச்சினை ஆகும். காலநிலை மாற்றத்தை ஏற்படுத்தியது 'மனிதகுலம்' அல்ல, மாறாக ஒரு திட்டவட்டமான சமூக பொருளாதார ஒழுங்கு முறையாகும்: அதாவது முதலாளித்துவம் ஆகும். இதனால், தொழிலாள வர்க்கத்தால் முதலாளித்துவத்தை தூக்கியெறியும் அரசியல் பணியை அது இன்னும் அவசரமாக்குகிறது. போர், பெருந்தொற்று நோய்கள் மற்றும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றை உருவாக்கும் இதே அமைப்புமுறைதான், இலாபத்திற்காக இந்தப் பூமி கிரகத்தை தீக்கரையாக்குகிறது. இதற்கான ஒரே தீர்வு சோசலிசத்திற்காக தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர போராட்டம் ஆகும்.