சிலியின் கொடிய காட்டுத்தீ, காலநிலை மாற்றம் மற்றும் சோசலிசத்தின் தேவையும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இரண்டு நாட்களில், சிலியின் வால்பரைசோ (Valparaiso) மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான வினா டெல் மார் (Viña del Mar) மற்றும் குயில்பூஏ (Quilpué), லிமாச் (Limache) மற்றும் வில்லா அலெமனா (Villa Alemana) ஆகிய முனிசிபாலிட்டிகளில் கொடிய காட்டுத்தீ பிடித்துள்ளது, கடந்த வியாழன் நிலவரப்படி குறைந்தது 131 பேர் இறந்துவிட்டனர், மேலும் நூற்றுக்கணக்கானவர்களைக் காணவில்லை. இது நாட்டின் வரலாற்றில் தீயினால் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாக இருக்கிறது. இது முதன்மையாக முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட காலநிலை நெருக்கடியின் விளைவாகும், இது பூமியின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்கள்தொகை மீது பேரழிவை ஏற்படுத்தும் அதிர்ச்சிகளாக இருக்கிறது.

வால்பாறைசோவுக்கு வெளியே காட்டுத்தீ கட்டுப்பாட்டை மீறி எரிகிறது [Photo: @BomberosdeChile]

தொழிலாள வர்க்க சமூகங்களில் அவற்றின் தாக்கத்தின் அளவும் அதே நேரத்தில் பல பத்தாண்டுகளாக சமூகவியல் கொள்கைகளின் ஏற்பட்ட நேரடி விளைவாகவும் இருக்கின்றது - சிலியில் அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜெனரல் அகஸ்டோ பினோஷேவின் மிருகத்தனமான அமெரிக்க ஆதரவு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழ் தொடங்கியது - இது சமூகத்தின் உழைப்பு, அதன் செல்வம் மற்றும் அதன் வளங்களின் பலன்களை எண்ணிக்கையில் சிறிய மற்றும் ஒட்டுண்ணி பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்கின் வசம் கொண்டு சேர்த்துள்ளது.

1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் வால்பரைசோவில் ஏற்பட்ட அபாயகரமான கட்டுக்கடங்காத பெரிய காட்டுத்தீயானது, ஆஸ்திரேலியாவில் 2009 இல் தீயினால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு உலகளவில் ஏற்பட்ட மிகக் கொடிய காட்டுத்தீயாகும், மேலும் 2010 பூகம்பத்திற்குப் பிறகு சிலியில் ஏற்பட்ட மிக மோசமான பேரழிவாகவும் இது இருக்கிறது.

ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றுநோய் மற்றும் அதற்கு முந்தைய ஒவ்வொரு சுகாதார, சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நெருக்கடியைப் போலவே, தீ அளவிற்கொவ்வாத வகையில் ஏழை “பாரியோக்கள்” (barrios) மற்றும் குடிசைப் பகுதிகளை பாதித்துள்ளது.அங்கு நீர் ஓட்டம், கழிவுநீர் அமைப்புகள், மின்சாரம், அகல அலைவரிசை (broadband), நடைபாதை சாலைகள் மற்றும் தீ அணைப்புக் குழாய்கள் கூட இல்லாமலிருக்கின்றன, இருந்திருந்தால் மக்களுக்கு குறைந்தபட்சம் உயிர்களைக் காப்பாற்ற ஒரு போராடும் வாய்ப்பைக் கொடுத்திருக்கும்.

கடந்த புதன்கிழமை அறிவிக்கப்பட்ட 131 பேரின் இறப்பு எண்ணிக்கை நிச்சயமாக உயரும், 300 க்கும் மேற்பட்டவர்கள் கணக்கில் வரவில்லை. மேலும் தீயினால் பாதிக்கப்பட்டவர்களில் 40,000 பேர் போட்டிருந்த துணிகளைத் தவிர வேறு எதுவும் இல்லாமல் இருந்தனர். ஏறக்குறைய 12,000 வீடுகள், குடும்ப வணிகங்கள் மற்றும் உள்ளூர் கடைகள், ஏராளமான வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாக மாறிவிட்டன. வால்பரைசோவின் தொழிலாள வர்க்கம் குறுகிய, மோசமாக கட்டப்பட்ட சாலைகள் காரணமாக மலைப்பாங்கான நிலப்பரப்பில் கீழே வாகனம் ஓட்ட முடியாமலிருந்தனர், வசிப்போர் பலர் கால்நடையாக வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

காட்டுத்தீ பருவம் வருவதற்கு இன்னும் வெகு நாட்கள் இருக்கிறது. சிலியின் மத்திய மற்றும் மத்திய தெற்குப் பகுதிகள், முக்கியமாக பிராந்திய மற்றும் கிராமப்புறப் பகுதிகள், சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு மிகப்பெரும் காட்டுத்தீயின் காட்சியாக இருந்தன. இதில் இரண்டு டஜன் மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் தென் அரைக்கோளத்தில் 400,000 ஹெக்டேர்களுக்கு மேல் அதிக வெப்பநிலையின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டது மற்றும் ஒரு பத்தாண்டு கால வறட்சியின் மத்தியில் பலத்த புயல் காற்றும் வீசியது.

கலிபோர்னியாவிலிருந்து சுமார் 9,000 கிலோமீட்டர் வடக்கே, 39 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பல மாவட்டங்கள் பேரழிவுப் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன, ஏனெனில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெய்த மழை, ஒரு வாரத்தில் அரை வருட மதிப்புள்ள தண்ணீரைக் கொட்டித் தீர்த்துள்ளது, திடீர் வெள்ளம் மற்றும் நூற்றுக்கணக்கான கொடிய மண்சரிவுகளை உருவாக்கியுள்ளது. அங்கு கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது.

வெள்ளத்திற்கான காப்பீடு இல்லாததால், 7.7 மில்லியன் குடும்பங்களில் 1 சதவீதத்திற்கும் குறைவான குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்ற செய்தியால் நிலைமைகள் மோசமாகிவிட்டன என்று பிப்ரவரி 7 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக, கடுமையான வறட்சி மற்றும் எப்போதும் உயரும் வெப்பநிலை காரணமாக இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய காட்டுத்தீயை அரசு எதிர்த்துப் போராடியது அதாவது 2023 வரை, “நதி நீர் நீராவியாதல்” போக்கு அதன் நிலைமையை விளக்குகிறது.

உலகம் முழுவதும் பதிவுசெய்யப்பட்ட வெப்பத்தின் அளவு 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய நீர் சுழற்சியை ஆழமாக பாதித்து, கடுமையான புயல்கள், வெள்ளம், பெருவெள்ளம் மற்றும் காட்டுத்தீக்களுக்கு முக்கிய பங்களித்துள்ளது என்ற முக்கியமான புதிய ஆராய்ச்சித் தகவலை கடந்த மாதம் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து புதைபடிவ எரிபொருளை (fossil fuel) எரிப்பதன் விளைவாக வறண்ட மற்றும் மிகவும் தீவிரமான நிலைமைகளை நோக்கிய போக்கு உருவாகிறது என்று அந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) மற்றும் உலகளாவிய தண்ணீர் கண்காணிப்புக் கூட்டமைப்பு (Global Water Monitor Consortium) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள், மழைப்பொழிவு, காற்றின் வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம், மண் மற்றும் நிலத்தடி நீர் நிலைகள், தாவரங்கள், நதி ஓட்டங்கள், வெள்ளம் மற்றும் ஏரி அளவுகள் பற்றிய நிகழ்நேர தகவல்களை வழங்குவதற்காக ஆயிரக்கணக்கான தரையில் அமைக்கப்பட்டிருக்கும் நிலையங்கள் மற்றும் பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களின் தரவுகளின் அடிப்படையில் தங்கள் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியரான பேராசிரியர் ஆல்பர்ட் வான்டிஜ்க் (Albert Van Dijk), “கனடாவிலிருந்து பிரேசில் மற்றும் ஸ்பெயினில் இருந்து தாய்லாந்து வரையிலான முன்னர் எடுக்கப்பட்ட தரவுகளைத் தாக்கி 2023 ஆம் ஆண்டு உலகெங்கிலும் சாதனை படைத்திருக்கிறது” என்றும் “2023 இன் நிகழ்வுகள், தற்போதைய காலநிலை மாற்றம் நமது பூமியை எவ்வாறு அச்சுறுத்துகிறது மற்றும் கடந்து செல்லும் ஒவ்வொரு ஆண்டும் எவ்வாறு ஆகப்போகிறது என்பதைக் காட்டுகிறது” என்றும் விளக்கியுள்ளார்.

மிகவும் வெப்பமான மற்றும் வறண்ட நிலைகள் உலகின் மிகப்பெரிய காடுகளில் பரவலாக சுற்றுச்சூழலில் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 2023 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமேசான் மழைக்காடுகள் மற்றும் ஆறுகள் கடுமையான வறட்சிக்கு வேகமாக மாறிய அதே வேளையில், வடக்கு கோடை காலத்தில் பாரிய காட்டுத்தீ கனடாவை அழித்துள்ளது.

மிகப்பெரும் தீ மற்றும் புதைபடிவ எரிபொருள் எரிப்பு ஆகியவை கடல் மேற்பரப்பு மற்றும் காற்றின் வெப்பநிலையை அதிகரித்து, பருவமழை, சூறாவளி மற்றும் பிற புயல் அமைப்புகளின் வலிமை மற்றும் மழையின் தீவிரத்தை அதிகரித்திருக்கின்றன.

காலநிலை மாற்றத்திற்கான காரணத்தை நிவர்த்தி செய்வதற்காக முன்னர் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கையாக சுற்றுச்சூழல் பேரழிவுகளை எதிர்நோக்குவதற்கும் தயார் செய்வதற்கும் இத்தகைய ஆய்வுகள் அடிப்படையாக இருக்க வேண்டும். இதற்கு கணிசமான அளவில் வளங்களைப் பயன்படுத்துதல் மற்றும் உலகளாவிய அளவில் ஒரு மிகப்பெரும் அவசரக் குழுவை உருவாக்குவது, சமீபத்திய தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் மற்றும் அறிவியல் அடிப்படையிலான பேரிடர் மேலாண்மை தகவல் மற்றும் நுட்பங்கள் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கவேண்டும்.

ஆனால் ஏகாதிபத்திய சிதைவின் தற்போதைய சகாப்தத்தில், சர்வதேச அளவில் நடமாடும் மூலதனத்தை ஈர்ப்பதற்காக பொதுச் செலவினங்களைக் குறைக்க முதலாளித்துவ தேசிய அரசுகள் போட்டி போட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் தற்போதைய சகாப்தத்தில் அத்தகைய முன்மொழிவை பரிந்துரைப்பது கூட சுய-ஏமாற்றுதலுக்கான பிற்போக்குத்தனமான செயலாகும்.

“இடது” அல்லது வலது என்று கூறப்படும் எந்த ஒரு முதலாளித்துவ அரசாங்கமும், சொந்த முதலாளித்துவ வர்க்கத்தின் அல்லது அவர்களின் ஏகாதிபத்திய எஜமானர்களின் தனியார் இலாபக் குவிப்பைத் தடுக்கும் விளைவுளுக்கு தடைகளை உண்டாக்கவில்லை - இயற்கைப் பேரிடரைப் போலவே பங்குகள் மற்றும் பங்குகளின் மதிப்பில் வேகமான வீழ்ச்சி மற்றும் நாணயத்தின் சரிவால் ஏற்படும் பாதிப்பு கடுமையானதாக இருக்கிறது.

மாறாக, சட்டம்-ஒழுங்கு வாய்ச்சவடால் அல்லது அதைவிட மோசமான, பலிகடா ஆக்கப்பட்ட புலம்பெயர்ந்தோர், அகதிகள், பழங்குடியினர் மற்றும் இளைஞர்கள், மக்கள்தொகையில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகள், முதலாளித்துவத்தால் உற்பத்தி செய்யப்படும் இடைவிடாத சமூக சீர்கேடுகளுக்கு அனைத்து வகையான முதலாளித்துவ அரசாங்கங்களும் சாத்தியமான மிகக் கீழான நிலைகளை நோக்கிச் செல்கின்றன.

கடந்த ஆகஸ்டில், துருக்கியின் எல்லையில் உள்ள எவ்ரோஸ் (Evros) பிராந்தியத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான காட்டுத்தீயின் மத்தியில், வலதுசாரி கிரேக்கப் பிரதம மந்திரி கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், “இதற்குக் காரணம் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. மேலும் இது சட்டவிரோதமாக குடியேறியவர்கள் பயன்படுத்தும் வழித்தடங்களில் எரியூட்டப்பட்டுள்ளது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.’ புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கையை அவிழ்த்துவிட்டுள்ளார்.

மிட்சோடாகிஸின் இழிவான பலிகடாக்கள் ஆக்குவது மற்றும் அகதிகளை இலக்கு வைத்தல் ஆகியவை இன்றைய வழக்கமாக இருக்கிறது.

சிலியில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், உயர் பணவீக்கம் மற்றும் வட்டி விகித உயர்வு, சுற்றுச்சூழல் பேரழிவுகள், வீட்டுப் பற்றாக்குறை நெருக்கடி மற்றும் தற்போது இருந்து வரும் கோவிட்-19 பெருந்தொற்று நோய் ஆகியவற்றின் மத்தியில், பரந்த முன்னணி-கம்யூனிஸ்ட்-சோசலிஷ்ட் (Broad Front-Communist-Socialist) ஆளும் கூட்டணி அதிதீவிர வலதுசாரி மந்திரக் கொள்கையை கடைபிடித்து “இளங்குற்றவாளிகளின் குற்றம், வன்முறைக் குற்றம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கிப் பெருக்கம் ஆகியவற்றைத் தோற்கடிப்பது” அரசாங்கத்தின் முன்னுரிமையாகப் பேணிவருகிறது. அது, வலது மற்றும் பெருநிறுவன ஊடகங்களின் உதவியுடன், புலம்பெயர்ந்தோர் மற்றும் பழங்குடி மப்புச்சே (Mapuche) சமூகங்களை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் மூலகாரணமாகக் காட்டி, அவர்களுக்கு எதிராக இராணுவத்தை பயன்படுத்துகிறது.

கடந்த வாரம், ஜனாதிபதி கேப்ரியல் போரிக் (Gabriel Boric) ஒரு படி மேலே சென்று, “முக்கியமான உள்கட்டமைப்பை” பாதுகாப்பது என்ற போர்வையில், தொழிலாள வர்க்கம் வசிக்கும் சுற்றுப்புறங்களில் காவல் நடவடிக்கைக்கு ஆயுதப் படைகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக, சர்வாதிகார அடையாளமாக “தேசிய பாதுகாப்பு கவுன்சில்” என்பதைக் கூட்டியுள்ளார்.

பின்னர், உண்மையான மற்றும் கற்பனையான தீ வைப்பவர்கள், திட்டமிடப்பட்ட குற்றம் மற்றும் இளங்குற்றவாளிகளை சமாளிக்க கடந்த வெள்ளிக்கிழமை வால்பரைசோவில் ஏற்பட்ட துயரத்திற்கு பதிலளிக்கும் விதமாக, போரிக் அரசு இயந்திரம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் ஆயுதப்படைகளின் முழு பலத்தையும் பயன்படுத்தப்போவதாக உறுதியளித்துள்ளார். இவைகள் சமூக சமத்துவம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு எதிராக ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கொடூரமான குற்றங்களைச் செய்த வரலாற்றைக் கொண்ட நிறுவனங்களாகும்.

“இவ்வளவு மரணத்தையும் வலியையும் ஏற்படுத்தக்கூடிய இத்தகைய துயர் மிகுந்த மற்றும் பரிதாபகரமான மக்கள் இருக்க முடியும் என்று நம்புவது கடினம். ஆனால் இந்த நபர்கள் இருந்தால், நாங்கள் அவர்களைத் தேடுவோம், அவர்களைக் கண்டுபிடிப்போம், ” என்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறிய போரிக், அவரது போலி-இடது அரசாங்கம் வால்பரைசோவின் பொறுப்பில் தேசிய பாதுகாப்புப் படைகளை நியமித்து, ஒரு விதிவிலக்கான அரசுக்காக ஆணையிடும் என்று அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புத் தலைவர், ரியர் அட்எம். டேனியல் முனோஸ் (Rear Adm. Daniel Muñoz), திங்களன்று தீ வைத்திருப்பதற்கு திட்டமிட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். “தோற்றத்தில், நமக்குத் தெரிந்தவரை, திட்டமிடல், திட்டமிடப்பட்ட ஏற்பாடு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்றாக இருந்ததைக் குறிக்கும் நடத்தை முறையின் அறிகுறிகள் உள்ளன” என்று முனோஸ் கூறியுள்ளார்.

இந்த இடைவிடாத ஆத்திரமூட்டல்களின் கீழ் தான் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளின் வளர்ச்சி வெளிப்பட்டுள்ளது. மேலும், இந்தச் செயல்பாட்டில், உத்தியோகபூர்வ தீ எச்சரிக்கைகள் மற்றும் தாமதமான அற்பமான அரசாங்க ஆதரவு எதுவும் இல்லாததாலும் நியாயமாக கோபமடைந்த மக்களை “வெளியாட்களுக்கு” எதிரான ஒரு வெறித்தனமான குண்டர் கும்பலாக திசை திருப்பிவிடப்பட்டிருக்கிறது. பெருநிறுவன ஊடகங்களால் தூண்டப்பட்ட இதுபோன்ற பல சம்பவங்களில் ஒன்று, இரண்டு வெனிசுலாவிலிருந்து குடியேறியவர்கள் தீ வைக்க முயன்றதாகக் கூறி கோபமடைந்த குடியிருப்பாளர்களால் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்பட்டனர். பின்னர் போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களை காவல்துறையினர் விடுவித்துள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலின் தொனியை அமைத்துக் கொண்ட ஒரு வெறித்தனமான இனவெறி பேச்சாளரும் பாசிச ஆட்சியாளருமான ஜோஸ் அன்டோனியோ காஸ்டை (José Antonio Kast) பல வழிகளில், போரிக்கும் அவரது “இடதுகள்” குழுவும் அவர்களது முன்னால் எதிரி ஜனாதிபதியை மிஞ்சும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள். இராணுவ ஆட்சியை முழுமையாக மீட்டெடுப்பதே அவரது விருப்பம் என்றாலும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டப்பட்டதை காஸ்ட் பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு ஆளும் அமைப்பும் செய்தி ஊடகமும் “திட்டமிடப்பட்ட குற்றம்” பற்றிய சித்தப்பிரமையின் சூழலை அதிகரிக்கவும், வலுவான கட்டுப்படுத்தல் அவசியத்தை ஊக்குவிக்கவும் தீயை சுரண்டியுள்ளன. பகிரங்கமாக அவர்கள் சமூகத்தினை இராணுவமயமாக்கலுக்கும் ஒரு பொலிஸ் அரசிற்கும் மக்களை தயார்படுத்துகிறார்கள், அதே நேரத்தில் திரைக்குப் பின்னால் அவர்கள் சர்வாதிகாரத்திற்கு தயாராகி வருகின்றனர். இதே நிகழ்வு சர்வதேச அளவிலும் நடந்து வருகிறது.

இதில் போலி-இடதுகளின் பங்கு மையமாக உள்ளது. 2019 இல் வெடித்த தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன கிளர்ச்சியை நசுக்குவதற்கு பினோசேயின் “நவ தாராளவாத” தடையற்ற சந்தை நாசத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவர்களின் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக கூறி அவர்கள் வெகுஜனங்களை விலைக்கு வாங்கினார்கள். தீவிபத்தில் முக்கிய காரணியாக இருந்த பினோசேயின் மரபை பாதுகாப்பதில் மட்டுமே அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர், இப்போது தீவிர வலதுசாரிகளுக்கு வழியமைத்துக்கொடுக்கின்றனர்.