மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
கடந்த செவ்வாய்க்கிழமை வலென்சியா வெள்ளத்தில் ஏற்பட்ட பேரழிவுகரமான தாக்கமும் இறப்பு எண்ணிக்கையும் சமூக மற்றும் அரசியல் ஒழுங்கின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும். வலென்சியா ஐரோப்பாவின் மிகவும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் ஒன்றாக அறியப்படுகிறது. மேலும், விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை, மக்களைப் பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை குறித்து எச்சரித்து வந்துள்ளனர். ஆயினும்கூட, செவ்வாயன்று, திடீர் வெள்ளத்தால் பெருந்திரளான மக்களுக்கு, அவர்களது வீடுகள் மற்றும் பணியிடங்களில் நீரினால் சுவர்கள் உடைந்து விழுவதற்கு முன்பு எந்த எச்சரிக்கையும் கிடைக்கவில்லை.
ஸ்பானிய அதிகாரிகள் பேரழிவின் வீச்சை மூடிமறைக்க முயன்றதோடு, இறப்பு எண்ணிக்கையை வெளியிட மறுத்தனர். வலென்சியாவில் நடந்த பிராந்திய அதிகாரிகளின் கூட்டத்தின் குறிப்புகள் பத்திரிகைகளுக்கு கசியும் வரை, வெள்ளத்தின் பாதிப்பு வெள்ளிக்கிழமை மாலை வரை தெரியவில்லை. இந்த பேரழிவில், 1,900 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 200 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அப்போதிருந்து, உறுதிப்படுத்தப்பட்ட இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஸ்பெயின் முழுவதும் 217 ஆக உயர்ந்துள்ளது. இதில், வலென்சியா பிராந்தியத்தில் 213 பேர்கள் அடங்குவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் விண்வெளித் திட்டமான கோப்பர்நிக்கஸ் அவசரகால மேலாண்மை சேவையின் புகைப்படத் தரவுகளின்படி, 199,000 மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள குறைந்தது 77,000 கட்டிடங்களை வெள்ளம் தாக்கியுள்ளது. பல உடல்கள் சேற்றில் புதைத்துள்ளதோடு, வெள்ள நீர் பலரை கடலுக்குள் இழுத்துச் சென்றுள்ளது. வெள்ள நீரில் தீப்பெட்டிகள் போல தூக்கி வீசப்பட்ட வாகனங்களால் தெருக்கள் சிதறிக்கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இன்னமும் குடிநீர், மின்சாரம், வெப்ப சூடேற்றிகள் மற்றும் மருந்துகள் கிடைக்கவில்லை. அப்பகுதி முழுவதிலும் உள்ள கடைகளும் பல்பொருள் அங்காடிகளும் அழிந்து போயுள்ளன.
சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் சுமர் அரசாங்கத்தின் பிரதம மந்திரி பெட்ரோ சான்சேஸ் அப்பகுதிக்கு 10,000ம் சிப்பாய்கள் மற்றும் இராணுவ போலீசாரை அனுப்ப உத்தரவிட்டுள்ள அதேவேளை, மீட்பு நடவடிக்கைகள் இன்னும் பெரும்பாலும் தன்னார்வலர்களாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகள் “பொறிவின் விளிம்பில்” இருப்பதாக ஸ்பானிய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. வெள்ளிக்கிழமை வாக்கில், அதன் அவசரகால தொலைபேசி எண்ணுக்கு 75,000ம் அழைப்புகள் வந்துள்ளன. ஸ்பானிய பொருட்களில் 40 சதவீதம் கடந்து செல்லும் மத்தியதரைக் கடல் வழித்தடங்கள் மூடப்பட்டுள்ளன. மாட்ரிட்-வலென்சியா ஏ3 நெடுஞ்சாலை துண்டாடப்பட்டுள்ளதுடன், வலென்சியாவில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் டசின் கணக்கான சாலைகள் மற்றும் பாலங்கள் இடிந்துபோய் உள்ளன.
மேலும், புயல் இன்னும் கிழக்கு ஸ்பெயினை தாக்கிக் கொண்டிக்கிறது: முர்சியா, அல்மேரியா, அலிகாண்டே, காஸ்டெல்லான், டாரகோனா மற்றும் இப்போது தெற்கு வலென்சியாவிலுள்ள அனைத்து இடங்களும் மீண்டும் வெள்ள எச்சரிக்கையில் உள்ளன.
வலென்சியா ஒரு சமூக குற்றத்தின் காட்சியாகும். மனிதனால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம், மத்தியதரைக் கடல் பிராந்தியத்தின் பாதிப்பை, குறிப்பாக கிழக்கு ஸ்பெயினை பேரழிவுகரமான வெள்ளங்களுக்கு உயர்த்தும் என்று விஞ்ஞானிகள் நீண்டகாலமாக எச்சரித்து வருகின்றனர். 2019 இல், வலென்சியா வெள்ளத்தில் மூழ்கிய பிறகு, செஞ்சிலுவை சங்கம் பலவீனமான உள்கட்டமைப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் கட்டிட கட்டுமானம் மற்றும் வலென்சியாவில் இல்லாத பேரழிவு திட்டமிடல் குறித்து எச்சரித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதோடு, மேலும் எதிர்கால வெள்ளத்திலிருந்து அதன் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்தது. இந்த எச்சரிக்கைகள் எதுவும் உத்தியோகபூர்வ வட்டாரங்களில் கவனிக்கப்படவில்லை.
PSOE மற்றும் நடுத்தர வர்க்க போலி-இடது பொடெமோஸ் மற்றும் சுமர் கட்சிகள் வலென்சியன் கூட்டாளிகளுடன் சமரசம் செய்து, பதவியை விட்டு வெளியேறுவதற்கு முன்பு நிதியில்லாத வலென்சியன் அவசரகால ஒன்றியத்தை (UVE) அமைத்தனர். அவர்களின் வாரிசான வலதுசாரி பாப்புலர் கட்சியின் (PP) வலென்சியன் முதல்வர் கார்லோஸ் மசோன், 2023 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் வலென்சியன் அவசரகால ஒன்றியத்தை ரத்து செய்தார். அதேநேரத்தில், மசோன் நில உரிமையாளர்கள் மீதான பரம்பரை வரிகளை குறைத்து, வோல்க்ஸ்வாகன் நிறுவனத்திற்கு பெருநிறுவன மானியங்களில் இருந்து 90 மில்லியன் யூரோக்களை வழங்கினார்.
புயல் நெருங்கியபோது, ஸ்பெயினின் அரச வானிலை அமைப்பு ஐந்து நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கைகளை வழங்கிய போதிலும், செவ்வாயன்று வெள்ள நீர் உச்சத்தை அடையும் என்று சரியாக கணித்த போதிலும், முதல்வர் மசோன் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டார். நாளடைவில் மழை குறையும் என்று பொதுமக்களுக்கு ஆதாரமற்ற உத்தரவாதங்களை அவர் வழங்கினார். செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்குப் பின்னர்தான் அவரது அரசாங்கம் குடியிருப்பாளர்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தி ஒரு குறுஞ்செய்தி எச்சரிக்கையை வெளியிட்டது. ஆனால் அதற்குள், அந்தப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே இறந்துபோயுள்ளனர்.
இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலைமை (The Condition of the Working Class in England) என்ற நுலில், கார்ல் மார்க்சின் மாபெரும் சக-சிந்தனையாளரான பிரெடெரிக் ஏங்கெல்ஸ் சமூக படுகொலை குறித்து ஒரு புகழ்பெற்ற வரையறையை வழங்கினார். “ஒரு சமூகம் நூற்றுக்கணக்கான பாட்டாளிகளை மிக விரைவாகவும் இயற்கைக்கு மாறான மரணத்தையும் சந்திக்கும் நிலையில் அவர்களை வைத்திருக்கும்போது, இந்த நிலைமைகள் அப்படியே இருக்க அனுமதிக்கும் போது, அதன் செயல் நிச்சயமாக ஒரு தனி நபரின் செயலைப் போலவே படுகொலை ஆகும்.”
ஸ்பானிய மற்றும் ஐரோப்பிய சமூகத்தை நடத்தும் சமூக கொலைகாரர்கள் மீது கோபம் வெடித்து வருகிறது. கடந்த ஞாயிறு அன்று, பிரதமர் சான்செஸ், ஸ்பெயினின் அரசர் ஆறாம் பிலிப் மற்றும் ராணி லெடிசியா ஆகியோர் வலென்சியாவின் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நகரங்களில் ஒன்றான பைபோர்ட்டாவுக்கு சென்றனர். அப்போது, அவர்களைச் சுற்றி பொலிஸ் ஒரு பாதுகாப்பு வளையத்தை அமைத்ததால், மீட்பு பொருட்களைத் கொண்டு செல்வது அவர்களால் தடைபட்டன. ஆத்திரமடைந்த குடியிருப்பாளர்கள் சான்சேஸ் மற்றும் அரச தம்பதியரைச் சூழ்ந்து, அவர்கள் மீது சேற்றை வீசியதுடன், “வெளியேறு,” “பெட்ரோ சான்சேஸ் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்,” “கொலைகாரர்கள்!” என்று கோஷமிட்டனர்.
இந்த நிலைமையில், பில்லியனிய முதலாளித்துவ பிரபுத்துவத்தினர், வெள்ளத்திற்கு மத்தியில் வேலைக்கு வருமாறு கோரி தொழிலாளர்களுக்கு மரண தண்டனை விதித்தனர். ஸ்பெயினின் மிகப் பெரிய செல்வந்தரான அமன்சியோ ஒர்டேகா (127 பில்லியன் யூரோ நிகர மதிப்பு) இண்டிடெக்ஸ் தொழிலாளர்களை வேலையிடத்தில் தொலைபேசிகளை வைத்திருப்பதைத் தடுக்கிறார். மேலும், அவர்கள் நம்பிக்கையற்ற வகையில் தாமதமாக வந்த உத்தியோகபூர்வ அவசரகால குறுஞ்செய்திகளைக் கூட தவறவிட்டனர். மெர்கடோனா சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் ஜுவான் ரூய்க் (€9 பில்லியன்) புயலின் போது மெர்கடோனாவின் டிரக்குகளை வெளியே அனுப்ப உத்தரவிட்டதுக்காக தொழிலாளர்கள் அவரை எதிர்கொண்டனர். அதற்கு ரூய்க் ஆபாசமாக கூச்சலிட்டு பதிலளித்தார்.
பூகோள வெப்பமயமாதலுடன், தொழிலாளர்களும் இளைஞர்களும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் அழுகிய கட்டமைப்பிற்குள் தீர்க்கப்பட முடியாத ஒரு உலக நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். புவி வெப்பமடைதல் கிரகத்தைச் சுற்றி அதிகரித்தளவில் வன்முறை புயல்களை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும், அதைத் தடுக்க எந்தவொரு ஒருங்கிணைந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அல்லது அத்தகைய அவசரநிலைகளைத் தாங்கும் திறன் கொண்ட உள்கட்டமைப்பு மற்றும் பேரழிவு பதிலளிப்பு திட்டங்களை அமைக்க தேவையான வளங்களுக்கு முதலீடு செய்யப்படவில்லை.
அதற்கு பதிலாக, ஒவ்வொரு நாட்டிலும், அரசு அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் உழைக்கும் மக்களை மோசமான புறக்கணிப்புடன் நடத்தி வருகின்றனர். மேலும், பேரழிவுகரமான புயல்களுக்கு மத்தியில் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள அவர்களை விட்டுவிடுகின்றனர். அமெரிக்காவில், ஹெலன் சூறாவளி சமீபத்தில் கடுமையான வெள்ளத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக 230 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். அதே நேரத்தில், வலென்சியா பேரழிவுக்கு சில வாரங்களுக்கு முன்பு, மத்திய ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட தொடர்ச்சியான மழை வெள்ளமானது, 20 பேர்களின் இறப்புகளுக்கு வழிவகுத்தது. நைஜீரியா, சாட் மற்றும் கானா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 1,500 பேர் உயிரிழந்தனர்.
தொழில்துறை, தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான இருப்புக்கள் பூகோள வெப்பமயமாதலை தடுத்து நிறுத்தவும் அதன் விளைவுகளில் இருந்து மனிதகுலத்தை பாதுகாக்கவும் திறனைக் கொண்டுள்ளன. ஆனால், அவை ஆளத் தகுதியற்ற ஆளும் வர்க்கத்தின் பிடியில் இருக்கும்போது, இந்த நோக்கத்திற்காக அவற்றைத் திரட்ட முடியாது.
வலென்சியாவில் வெள்ளத்தை எதிர்க்கும் உள்கட்டமைப்பை உருவாக்கவும், உயிர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்தக்கூடிய வளங்கள் எங்கே சென்றன என்று கேட்கப்பட வேண்டும்? 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர், ஐரோப்பிய மத்திய வங்கி அதன் இருப்புநிலைக் குறிப்பை பெருமளவில் விரிவுபடுத்தியது, கிட்டத்தட்ட ஐந்து டிரில்லியன் யூரோக்கள் பொதுப் பணத்தை அச்சிட்டு, அது நிதி மற்றும் பெருநிறுவன பிரபுத்துவத்தின் பிணையெடுப்புக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதே காலகட்டத்தில், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் தங்கள் இராணுவ வரவு செலவுத் திட்டங்களை உயர்த்துவதற்காக, நூற்றுக்கணக்கான பில்லியன் யூரோக்களை கூட்டாக செலவிட்டுள்ளன.
சோசலிஸ்ட் கட்சி-பொடெமோஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சி-சுமர் அரசாங்கங்களின் கீழ், ஸ்பெயினின் இராணுவ பட்ஜெட் சாதனையளவுக்கு 26 பில்லியன் யூரோவை எட்டியது. அதேநேரத்தில், காஸாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு மத்தியில், மாட்ரிட் இஸ்ரேலுடன் ஆயுத வர்த்தகத்தைத் தொடர்ந்துவரும் அதேவேளையில், ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பு நிதிகளை ஸ்பானிய பெருநிறுவனங்களுக்கு வழங்குவதை பொடெமோஸ் மற்றும் சுமர் அமைச்சர்கள் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
தொழிலாள வர்க்கம் மீதான அவர்களின் குரோதம், சுமரின் (முன்னர் பொடெமோஸ்) தொழிற் துறை அமைச்சர் யோலாண்டா டயஸினால் சுருக்கமாக எடுத்துக்காட்டப்படுகிறது. இவர் கோவிட்-19 தொற்றுநோய் உச்சத்தில் இருந்தபோது தொழிலாளர்களை வேலைக்குத் திரும்ப இழிவார்ந்த முறையில் உத்தரவிட்டார். இது ஸ்பெயினில் 140,000 க்கும் அதிகமான இறப்புகளுக்கு இட்டுச் சென்றதுடன், மில்லியன் கணக்கானவர்களை நீண்ட கோவிட் நோய்க்குள் தள்ளியது. கடந்த வாரம், புயல் வெள்ளத்தின் போது கார்ப்பரேட் நிர்வாகத்திடம் “பொறுப்புடன்” இருக்க வேண்டும் என்றும், “யாரும் ஆபத்துக்களை கருத்தில்கொண்டு வேலை செய்யவில்லை” என்றும் அவர் சிடுமூஞ்சித்தனமாக அழைப்பு விடுத்தார்.
எவ்வாறிருப்பினும், சான்சேஸ் அல்லது ரூய்க் போன்ற முதலாளித்துவ ஒட்டுண்ணிகளின் மனசாட்சிக்கு தார்மீக முறையீடு செய்வது அர்த்தமற்றது என்பதை கசப்பான அனுபவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அவர்களும் டயஸ் மற்றும் பொடெமோஸ் போன்ற அவர்களின் போலி-இடது பாதுகாவலர்களும், வெகுஜனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு பாப்புலர் கட்சியின் வலதுசாரிகளைப் போலவே உட்படுத்த முடியாதவர்களாக உள்ளனர்.
காலநிலை நெருக்கடி மற்றும் அதன் விளைவுகளுக்கு எளிய தீர்வு இல்லை. வலென்சியா வெள்ளம் போன்ற புதிய பேரழிவுகளைத் தடுப்பதற்கும், ஏகாதிபத்திய போர் மற்றும் இனப்படுகொலையை நிறுத்துவதற்கும், தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சமூக செல்வ வளத்தை முதலாளித்துவவாதிகளின் கரங்களில் இருந்து கட்டுப்பாட்டில் எடுப்பதற்கும், மனிதகுலத்தின் அவசர சமூக தேவைகளைப் பூர்த்தி செய்ய அதைப் பயன்படுத்துவதற்கும், சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.