முன்னோக்கு

இனப்படுகொலையை இரண்டு கட்சிகளும் கொண்டாடுகின்றன

ஒரு சிறப்புக் கூட்டு அமர்வில் உரையாற்றுவதற்காக பாரிய படுகொலையாளி நெதன்யாகுவை அமெரிக்க காங்கிரஸ் ஜூலை 24 அன்று அழைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கடந்த வியாழன் அன்று, அமெரிக்க காங்கிரஸ் தலைவர்கள் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஜூலை 24, காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவித்தனர். இந்த அழைப்பு, ஒரு வெளிநாட்டு அரச தலைவருக்கு வழங்கப்படக்கூடிய மிக உயர்ந்த மரியாதைகளில் ஒன்றாகும். இது ஒட்டுமொத்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தையும், ஏகாதிபத்திய அரசியல் கட்சிகள் இரண்டையும் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி) இனப்படுகொலையுடன் அடையாளப்படுத்துகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டனில் உள்ள கேபிடல் ஹில்லில் நடந்த காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுகிறார். அப்போதைய துணை ஜனாதிபதி ஜோ பைடென், இடதுபுறம், மற்றும் ஓஹியோவின் சபாநாயகர் ஜோன் போஹ்னர், வலதுபுறம், அவரது உரையை கேட்கின்றனர். மே 24, 2011 ஆவண புகைப்படம் [AP Photo/Susan Walsh]

மே 31 தேதியிட்ட முறையான அழைப்பிதழ் “அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மற்றும் அமெரிக்க செனட்டின் இரு கட்சிகளின் தலைவர்கள்” சார்பாக “மாண்புமிகு பெஞ்சமின் நெதன்யாகு” க்கு வழங்கப்பட்டது. இதில் குடியரசுக் கட்சியின் சபாநாயகர் மைக் ஜோன்சன், குடியரசுக் கட்சியின் செனட் தலைவர் மிட்ச் மெக்கானெல், ஜனநாயகக் கட்சியின் செனட் பெரும்பான்மைத் தலைவர் சார்லஸ் ஷுமர் மற்றும் ஜனநாயக கட்சியின் அவைத் தலைவர் ஹக்கீம் ஜெஃப்ரிஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“பயங்கரவாதத்திற்கு எதிரான உங்கள் போராட்டத்தில் நாங்கள் இஸ்ரேல் தேசத்துடன் இணைந்து கொள்கிறோம்”, என்றும் “ஜனநாயகத்தைப் பாதுகாக்கும்” செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படும் “இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை முன்னிலைப்படுத்தப் போகிறோம்” என்றும் இந்த கூட்டுக் கடிதம் கூறுகிறது.

காஸாவில் இடம்பெற்றுவரும் போரானது, விரிவடைந்துவரும் உலகளாவிய ஏகாதிபத்திய போரில், ஒரு போர் முனையாக இருக்கிறது என்று உலக சோசலிச வலைத் தளம் அதன் பகுப்பாய்வில் அடிக்கோடிட்டுக் காட்டியது. “ஈரான், ரஷ்யா மற்றும் சீனா இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மைக்கு” எதிராக இஸ்ரேலை ஒரு முக்கிய கூட்டாளியாக அடையாளம் காணும் வகையில் இந்த சுருக்கமான கூட்டு கடிதம் செல்கிறது.

1948 இனப்படுகொலை தொடர்பான உடன்படிக்கையின் கீழ், சர்வதேச நீதிமன்றம் (ICJ) ரஃபாவில் “உடனடியாக இராணுவத் தாக்குதலை நிறுத்துவதற்கு” அவசர உத்தரவை இஸ்ரேலுக்கு பிறப்பித்த ஒரு வாரத்திற்குப் பிறகு, நெதன்யாகுவுக்கு இரு கட்சிகளும் இணைந்து அழைப்பை விடுத்துள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர், நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் ஆகியோருக்கு எதிராக பொதுமக்களை “அழித்ததாக” குற்றம் சாட்டி கைது வாரண்டுகளை கோரிய சில நாட்களுக்குப் பிறகு ICJ இன் தீர்ப்பு வெளியானது.

இந்த தீர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக நெதன்யாகுவின் ஆட்சி, ரஃபாவிற்கு எதிரான அதன் அழிப்புப் போரை துரிதப்படுத்தியுள்ளது. காஸாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு, குறிப்பாக 1.7 மில்லியன் மக்கள், இப்போது காஸா பகுதியின் ஐந்தில் ஒரு பகுதிக்கும் குறைவான பகுதிக்குள் நெருக்கி அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தொடர்ச்சியான குண்டுவீச்சுகளை எதிர்கொள்வதோடு, பொதுமக்களுக்கு தேவையான மிகவும் அடிப்படையான உள்கட்டமைப்பு வசதிகள் அல்லது இதர அவசிய தேவைகள் மறுக்கப்பட்டுள்ளன.

இந்தச் சூழலில், நெதன்யாகுக்கு விடுக்கப்பட்ட இந்த அழைப்பானது, திமிர்பிடித்த தன்மையைக் கொண்டுள்ளது. அவரது தலை முதல் கால் வரை புது ரத்தம் சொட்ட சொட்ட கிடக்கும் ஒரு இழிந்த போர் குற்றவாளிக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்படுகிறது. “ஆம், நாங்கள் ஒரு இனப்படுகொலையை நடத்துகிறோம்; இல்லை, உங்களால் எங்களைத் தடுத்து நிறத்த முடியாது” என்று கூறுவது போல் உள்ளது.

கடந்த செவ்வாயன்று, நெதன்யாகுவின் நடவடிக்கைகளுக்கு எதிரான ICCயின் முடிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அதன் அதிகாரிகள் மீது தடைவிதிக்கும் மசோதாவை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது. கடந்த வியாழனன்று, அமெரிக்க காங்கிரசில் நெதன்யாகு ஜூலை 24ல் உரையாற்றுவது தொடர்பான விவரங்கள் முறையாக அறிவிக்கப்பட்ட அதே நாளில், இஸ்ரேலிய அரசாங்கம் இன்னுமொரு பாரிய போர்க்குற்றத்தை காஸாவில் நடத்தியது. மத்திய காஸாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமில் உள்ள பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா. ஏஜென்சியால் நடத்தப்பட்ட பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசி குறைந்தது 40 பேர்களை படுகொலை செய்தது.

நெதன்யாகு ஆட்சியும் அதன் அமெரிக்க ஆதரவாளர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் மிக உயர்ந்த நீதித்துறை அமைப்பை வெளிப்படையாக மீறுவது மட்டுமல்லாமல், ஐ.நா கட்டிடத்தின் மீது நேரடியாக குண்டுவீசி அதன் தீர்ப்பிற்கு திறமையாக பதிலடி கொடுத்துள்ளனர். இந்த படுகொலையைப் பாதுகாத்து, வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர், ஹமாஸ் போராளிகள் “ஒரு பள்ளிக்குள் ஒளிந்துள்ளனர்” என்றும், “அந்தப் பொதுமக்களைக் குறிவைக்க இஸ்ரேலுக்கு உரிமை உண்டு” என்றும் கூறினார்.

வியாழன் அன்று, நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையானது, இஸ்ரேலிலுள்ள நெகேவ் பாலைவனத்தில் உள்ள Sde Teiman தடுப்பு மையத்திலுள்ள நிலைமைகள் பற்றிய மூன்று மாத விசாரணையின் முடிவுகளை வெளியிட்டது. இது ஒரு வதை முகாம் என்று மிகைப்படுத்தப்படாமல் விவரிக்கப்படலாம். ஆனால், காஸாவில் இருந்து கடத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், குழந்தைகள் உட்பட, எந்த குற்றச்சாட்டும் அல்லது விசாரணையும் இன்றி அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களை சிறைப்பிடித்த இஸ்ரேலியர்களால் திட்டமிட்ட முறையில் சித்திரவதை செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, பட்டினியால் வதைக்கப்படுகின்றனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக்கில் உள்ள அபு கிரைப் சித்திரவதை முகாமில் வெளிப்படுத்தப்பட்ட இழிவான பாலியல் சித்திரவதைகள் மற்றும் மின்சாரம் பாய்ச்சுதல் உள்ளிட்ட மிக மோசமான குற்றங்களுக்குப் போட்டியான சித்திரவதைகள் பற்றிய விவரங்கள் டைம்ஸ் அறிக்கையில் புதைந்துள்ளன.

கடந்த மாதம் தகவல்கள் வெளியிடுபவரின் சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு CNN அறிக்கையானது, Sde Teiman தடுப்பு மையத்தில், “தொடர்ந்து கைவிலங்குகளால் ஏற்பட்ட காயங்களால் சில நேரங்களில் கைதிகளின் கைகால்களை மருத்துவர்கள் எவ்வாறு துண்டித்தனர்” என்றும், மேலும் “அழுகுவதற்கு விடப்பட்டு புறக்கணிக்கப்பட்ட காயங்களின் துர்நாற்றத்தால் காற்று நிரம்பியுள்ளது” என்றும் ஏற்கனவே விவரித்துள்ளது.

அவரது ஜூலை 24ல் உரையாற்றுவதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவதற்கு அதிக அழைப்புகளுடன் வந்தவர் என்ற சாதனையை நெதன்யாகு வைத்திருப்பார். அவரது முந்தைய உரைகள், 1996, 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதிகளின் கீழ் இருந்தன.

எட்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் அழிப்புப் போரில், நெதன்யாகு இப்போது காஸாவின் கசாப்புக் கடைக்காரராக வரலாற்றில் நிரந்தரமான இழிபெயரைப் பெற்றுள்ளார். இந்த குற்றத்தில், அவரது அமெரிக்க கூட்டாளியான “இனப்படுகொலையாளி ஜோ” பைடெனும் இணைந்துள்ளார்.

காங்கிரசும் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “இரு கட்சிகளின் தலைமையும்” கௌரவிக்கத் தயாராகும் நபர் இவர்தான். அவ்வாறு செய்வதன் மூலம், “சுதந்திரம்”, “ஜனநாயகம்” மற்றும் “விதிகள் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை” நிலைநிறுத்தும் முயற்சியில் “உலகெங்கிலும் குண்டுவீச்சு மற்றும் அதன் வழியில் தடைவிதிப்பதை செய்வதன் மூலம், அதன் சொந்த நம்பகத்தன்மைக்கு மீளமுடியாத மற்றொரு அடியை அது அளித்துள்ளது.

நெதன்யாகுவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பானது, “மனிதாபிமான நிலைமை” பற்றி “கவலைப்படுவது” அல்லது “அமைதிக்கான” ஒன்று அல்லது மற்றொரு திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது போன்ற, காஸாவில் பொதுமக்களின் உயிரிழப்புகளின் எண்ணிக்கையை “விமர்சித்து” பைடென் நிர்வாகம் முன்வைக்கும் அனைத்து நேர்மையற்ற முயற்சிகளையும் முழுமையாக அம்பலப்படுத்துகிறது.

இதில், பிரதிநிதி அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் மற்றும் செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர்களும் அடங்குவர். அவர்கள் 2024 அமெரிக்கத் ஜனாதிபதி தேர்தலில், குறிப்பாக, கடந்த மாதம் இஸ்ரேலுக்கு உத்தேசித்திருந்த சில வெடிகுண்டுகளை நிறுத்தி வைப்பதற்கான பைடெனின் திட்டமிட்ட சைகையைத் தொடர்ந்து, பைடெனை “முற்போக்காளாராக” ஊக்குவிக்கும் நோக்கில், மக்கள் தொடர்புத் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில், கடந்த மாதம், நெதன்யாகுவின் உரையில் கலந்து கொள்ளப் போவதில்லை என்ற சாண்டர்ஸின் அறிவிப்பில் எந்த ஒரு நேர்மையும் கிடையாது.

நெதன்யாகுவின் வருகை பற்றிய விவரங்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு பைடென் ஐரோப்பாவில் வாதிட்டார். கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியாவில் - மற்றும் உள்நாட்டில், மாணவர் எதிர்ப்புகள் மீதான மூர்க்கமான ஒடுக்குமுறை வடிவத்தில் - சர்வாதிகாரம் மற்றும் போரை நோக்கிய முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த வரலாற்றுப் போக்கு, தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. 

நெதன்யாகுவின் வருகை பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சந்திக்கும் மற்றும் சந்திக்க வேண்டும். ஆனால், அமெரிக்க அரசாங்கத்தின் கொள்கைகள், மக்கள் கோபத்தின் பாரிய காட்சிகளால் மாற்றப்படும் என்ற எந்த பிரமைகளும் ஏற்கனவே நெதன்யாகுவிற்கு விடுத்த அழைப்பின் மூலம் தீர்க்கமான பதிலை வழங்கியுள்ளன.

அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் மக்களின் உணர்வுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, அந்நியப்படுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், அந்த உணர்வுகளுடன் இல்லாதது மற்றும் அதற்கு விரோதமானது. அதற்கு, “அழுத்தம்” கொடுப்பதற்கான முயற்சிகள் கண்ணீர் புகை குண்டுகள், ரப்பர் தோட்டாக்கள், கைவிலங்குகள், அவதூறுகள், பணிநீக்கங்கள் மற்றும் வெளியேற்றங்கள் மூலம் எதிர்கொள்ளப்படுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் வெள்ளிக்கிழமை எழுதியது போல், “இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் ஒரு இயக்கத்தின் வளர்ச்சி தேவைப்படுகிறது. இது போருக்கு எதிரான போராட்டத்தை சுரண்டலுக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான போராட்டத்துடன் இணைப்பது பற்றிய, வெகுஜனப் போராட்டத்தின் கேள்வியாகும்“.

இந்த வளர்ச்சி ஏற்கனவே இனப்படுகொலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கல்வித் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசியல் வேலைநிறுத்தத்தில் முதல் வெளிப்பாட்டைக் கண்டுள்ளது. ஆனால், இந்த வேலைநிறுத்தத்தின் அனுபவம் ஏற்கனவே நிரூபித்தது போல், தொழிலாள வர்க்கமானது, எதிர்ப்பு அரசியலின் குறுகிய கட்டமைப்பிலிருந்தும், அடக்குமுறையிலும் இனப்படுகொலையிலும் முழுமையாக ஈடுபட்டுள்ள ஜனநாயகக் கட்சிக்கு வேண்டுகோள் விடுப்பதிலிருந்தும், நனவுடன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும்.

நெதன்யாகு, பைடென் மற்றும் அவர்களது கூட்டாளிகளை நிறுத்த வேண்டும் என்றால், அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தால், அதன் சொந்த சுயாதீன தலைமை, அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் வழிமுறைகள் மற்றும் உற்பத்தியை நிறுத்துவதற்கான பாரிய வேலைநிறுத்தங்கள் உட்பட, பொருளாதாரத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரம் சவால் செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க

Loading