லெபனானுக்கு எதிரான "தீவிர நடவடிக்கைக்கு" இஸ்ரேல் தயாராக இருப்பதாக நெதன்யாகு கூறுகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

ரஃபாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் விரிவுபடுத்தி வரும் நிலையில், பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு புதனன்று இஸ்ரேலிய இராணுவம் லெபனான் எல்லையில் 'மிகவும் தீவிரமான நடவடிக்கைக்கு தயாராக உள்ளது' என்று கூறினார்.

லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் கடந்த இரு வாரங்களாக தீவிரமடைந்துள்ளன. இதில் மருத்துவத் தொழிலாளர்களை இலக்கு வைக்கும் தாக்குதல்களும் அடங்கும். மே 27 அன்று, தெற்கு நகரமான பின்ட் ஜெபிலில் ஒரு மோட்டார் சைக்கிள் இலக்கு வைக்கப்பட்டதுடன், அது மருத்துவமனை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து தாக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்பு காவலர் இருவரும் கொல்லப்பட்டனர், அருகிலிருந்த பல பொதுமக்கள் காயமடைந்தனர் மற்றும் மருத்துவமனைக்கு குறிப்பிடத்தக்க சேதத்தையும் இது ஏற்படுத்தியது.

மோட்டார் சைக்கிள் ஓட்டியவர் லெபனான் ஷியா போராளிக் குழுவான ஹெஸ்புல்லாவின் உறுப்பினர் என்று இஸ்ரேல் கூறியது. இது சமீபத்தில் 'இரும்பு குவிமாடம் ' என்று அழைக்கப்படும் இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புக்கு எதிராக ட்ரோன் ஏவுகணை தாக்குதலை நடத்தியதாகக் கூறியது. மொத்தத்தில், இஸ்ரேலிய தாக்குதல்கள் லெபனானில் 400க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றுள்ளன. இதில் 70 சாதாரண குடிமக்கள் மற்றும் போரில் ஈடுபடாதவர்களும் அடங்குவர்.

அக்டோபர் 2023 முதல் தெற்கு லெபனானின் 17 பகுதிகளில் இஸ்ரேலிய படைகள் வெள்ளை பாஸ்பரஸ் வெடிமருந்துகளைப் பயன்படுத்தியுள்ளன. அவை 'வாழ்நாள் முழுவதும் துன்பத்தை விளைவிக்கும் மரணம் அல்லது கொடூரமான காயங்களை ஏற்படுத்துகின்றன' என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் புதன்கிழமையன்று தெரிவித்துள்ளது. இதில் 'மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் [மேலே] வான்வழி வெடிகுண்டுகள் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்ட 5 நகராட்சிகளும்' உள்ளடங்கும். 'பொதுமக்கள் செறிவாக உள்ள இடங்களுக்கு' எதிராக வெள்ளை பாஸ்பரஸைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் வழக்கமான ஆயுதங்கள் மீதான ஐ.நா.வின் நெறிமுறை III ஐ மீறுகிறது.

அக்டோபர் 7ம் தேதி காஸாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அதன் இனப்படுகொலை தாக்குதல் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலின் நிகழ்ச்சிநிரலில் லெபனானிலும் அதன் குற்றம் சார்ந்த போர் நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது. ஒரு பெரிய தாக்குதல் திட்டமிடப்படுகிறது, 'ஏதாவதொரு வழியில் நாங்கள் வடக்கில் பாதுகாப்பை மீட்போம்' என்று நெதன்யாகுவிடம் இருந்து வரும் சமீபத்திய அறிக்கைகள் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதல் தவிர்க்க முடியாதது என்பதைத்தான் குறிக்கின்றன.

திங்களன்று, இஸ்ரேலிய இராணுவம் அதன் காலாட் படையினர் சமீபத்திய வாரங்களில் 'லெபனானில் தரைப்படை நடவடிக்கைகளை உருவகப்படுத்தும் ஒரு டிவிஷன்-மட்ட மற்றும் பிரிகேட்-மட்ட பயிற்சியை நடத்தியதாக' அறிவித்தது. இதற்கிடையே, செவ்வாயன்று, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் (IDF) தலைமை தளபதி ஹெர்ஸி ஹலேவி கூறுகையில், 'வடக்கில் ஒரு தாக்குதலுக்கு நகர்வதற்கு —ஒரு இராணுவ ஒத்திகை மட்டம் வரையில்— ஒரு மிகச் சிறந்த பயிற்சியின் பின்னர் நாங்கள் தயாராக இருக்கிறோம்,' என்றார்.

காஸா இனப்படுகொலையை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வரும் ஹமாஸ் குறித்த அறிக்கைகளை எதிரொலிக்கும் வகையில், அதிவலது இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இட்டாமர் பென் க்விர் கூறுகையில், 'வெறுமனே ஹெஸ்பொல்லாவை அழிப்பதே' IDF இன் வேலை என்றார். டெலிகிராமில் பதிவிட்ட பாசிசவாதி பென் க்விர், 'எங்கள் நிலம் குறிவைக்கப்பட்டு பாதிக்கப்படுவதாக இருக்க முடியாது, இங்குள்ள மக்கள் வெளியேறிவிட்டனர். ஹிஸ்புல்லாவின் கோட்டைகள் அனைத்தும் எரிக்கப்பட வேண்டும், அழிக்கப்பட வேண்டும். இது போர்!' என்று குறிப்பிட்டார்.

இஸ்ரேலிய அச்சுறுத்தல்களுக்கு விடையிறுக்கும் வகையில், துணை ஹெஸ்பொல்லா தலைவர் ஷேக் நயீம் காசிம் செவ்வாயன்று அல் ஜசீராவிடம் போராளிகள் ஒரு பரந்த போரை நாடவில்லை, ஆனால் அது அதன் மீது சுமத்தப்பட்டால் அது சண்டையிடும் என்றார். மோதலை விரிவுபடுத்துவதற்கான இஸ்ரேலிய நடவடிக்கை இஸ்ரேலில் 'பேரழிவு மற்றும் இடப்பெயர்வு' ஆகியவற்றை சந்திக்கும் என்று அவர் கூறினார். காஸா போர் நிறுத்தப்படும் வரை லெபனான் போர்முனை ஓயாது என்றும் காசிம் கூறினார்.

ஈரானின் ஆதரவுடன், ஹெஸ்பொல்லா மத்திய கிழக்கில் மிகவும் சக்திவாய்ந்த துணை இராணுவக் குழுக்களில் ஒன்றாக உள்ளது. சில இராணுவ வல்லுனர்கள் ஹெஸ்பொல்லாவிடம் 150,000 ராக்கெட்டுகள் உள்ளன என்றும், அவை இஸ்ரேலின் வான் பாதுகாப்பை ஒரு முழு அளவிலான மோதலில் மூழ்கடிக்கக்கூடும் என்றும் கூறுகின்றனர். இந்த சாத்தியக்கூறு அதனுடன் அமெரிக்காவின் நேரடி தலையீட்டைக் கொண்டுவருவதுடன், தெஹ்ரானுக்கும் வாஷிங்டன் டி.சி.க்கும் இடையிலான நேரடி இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறை எழுப்புகிறது, இது ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கி மேலும் தள்ளுகிறது.

பாரிஸில் உள்ள சர்வதேச மற்றும் மூலோபாய விவகாரங்களுக்கான நிறுவனத்தின் இணை ஆராய்ச்சியாளர் கரீம் பித்தார், இஸ்ரேலுக்கும் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையிலான மோதல் அபாயம் 'கணிசமாக அதிகரித்துள்ளது' என்று அல் ஜசீராவிடம் கூறினார். பித்தார் கூறுகையில், 'ஒரு பரந்த தீவிரப்பாட்டைக் காண்பது எவருடைய நலனுக்கும் உகந்ததாக இல்லை என்றாலும், பல ஈடுபாட்டாளர்கள் இனியும் பகுத்தறிவாளர்களாக இல்லை என்றே தோன்றுகிறது,' என்பதையும் சேர்த்துக் கொண்டார். 'உணர்ச்சிகள் மிக அதிகமாக ஓடிக் கொண்டிருக்கின்றன, எந்தவொரு தவறான கணக்கீடும் ஒரு பரந்த மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும்,' என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

எவ்வாறாயினும், 'ஹமாஸை விட ஹிஸ்புல்லா கணிசமாக வலிமையானது, கடந்த சில மாதங்களின் நிகழ்வுகள் இஸ்ரேலால் ஹமாஸை ஒழிக்க முடியவில்லை என்பதைக் காட்டுகின்றன. இஸ்ரேல் தாக்கினால், அது லெபனானுக்கு பேரழிவு தரும் அடியாக இருக்கும்; ஆனால் அது இஸ்ரேலுக்கு எதிர் விளைவைத்தான் கொடுக்கும்' என்று பித்தார் எச்சரித்தார்.

புதனன்று செய்தி ஆதாரங்கள் இஸ்ரேல் அதன் தரைவழிப் படையெடுப்பை எகிப்தின் எல்லையில் உள்ள காஸாவில் உள்ள ரஃபா நகரத்தின் மீது விரிவுபடுத்தியுள்ளது என்றும் அது ஒரு மாதமாக முற்றுகையின் கீழ் உள்ளது என்றும் தகவல் கொடுத்துள்ளது., 'இஸ்ரேலிய இராணுவம் புதன்கிழமை காஸா பகுதியின் தெற்கு [பிராந்தியத்தில்] உள்ள ரஃபா மீது அதன் ஊடுருவலை விரிவுபடுத்தியது, அத்துடன் அப்பகுதியின் மையத்தில் உள்ள புரெய்ஜ் மற்றும் மகஜி அகதிகள் முகாம்களின் கிழக்குப் பகுதிகளை நோக்கி முன்னேறியுள்ளது' என்று அனடோலு செய்தி நிறுவனம் அறிவித்தது.

'ஒரு அனடோலு நிருபர் இஸ்ரேலிய இராணுவ வாகனங்கள் 'கிழக்கு கேரேஜ்' பகுதியை நோக்கியும், மத்திய ரஃபாவில் உள்ள அல்-அவ்தா மசூதிக்கு அருகிலும் முன்னேறியதை உறுதிப்படுத்திய நேரில் கண்ட சாட்சிகளை மேற்கோள் காட்டினார். ரஃபா மீது இஸ்ரேலிய பீரங்கி குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் இஸ்ரேலிய இராணுவத்தின் முன்னேற்றம் வந்துள்ளது என்று சாட்சிகள் மேலும் தெரிவித்தனர்.'

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான உடனடி போர் விரிவாக்கம் மற்றும் காஸாவில் தரைவழித் தாக்குதலை தீவிரப்படுத்தல் ஆகிய இரண்டுடன், ஜனாதிபதி பைடெனின் போர்நிறுத்த திட்டம் முற்றிலும் ஏமாற்றுத்தனம் என்பதை மேலும் அம்பலப்படுத்துகின்றன. இஸ்ரேலிய அரசாங்கமோ அல்லது ஹமாஸோ எந்த போர்நிறுத்த திட்டத்தையும் ஆதரிக்காத போது எந்த உடன்பாடும் இல்லை என்பதும் தெளிவாகியது.

வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் கூறியது போல், மத்தியஸ்தர்கள் இன்னும் ஹமாஸிடமிருந்து பதிலுக்காக காத்திருக்கின்றனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது, இந்த முன்மொழிவில் என்ன இருக்கிறது என்பதை 'எங்கள் விவரங்களை பகிரங்கமாக வைப்பது முக்கியம்' என்று பைடென் நினைத்தார், அதே நேரத்தில் யாரும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.

வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்றாசிரியர் தோமஸ் ஆலன் ஸ்வார்ட்ஸ் ராய்ட்டர்ஸிடம் கூறியதைப் போல, 'அவ்வாறு செய்கையில், பைடென் ஒரு அரசியல்வாதியாக அவரது தசாப்தங்களில் முன்னர் பயன்படுத்திய ஒரு தந்திரோபாயத்தைப் பயன்படுத்துகிறார்: அதாவது எந்த உடன்பாடும் ஒருபோதும் இருந்ததில்லை என்றாலும் கூட, கட்சிகளை முன்னோக்கி நகர்த்தும் நம்பிக்கையில் ஒரு ஒப்பந்தம் குறித்து ஒரு பொது அறிவிப்பை வெளியிடுவதாகும்.

Loading