முன்னோக்கு

48,000 கலிபோர்னியா கல்வித் தொழிலாளர்கள் போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக, வேலைநிறுத்தம் செய்ய வாக்களித்த பிறகு முன்னோக்கி செல்லும் வழி

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பத்து வளாக அமைப்பில், வேலைநிறுத்த நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்து, கல்வியாளர்கள் வாக்களித்தது என்பது, காஸா இனப்படுகொலை மற்றும் போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய படியாகும். போருக்கு எதிரான ஒரு அடிப்படை அரசியல் சக்தியாக தொழிலாள வர்க்கம் போராட்டத்தில் நுழைவதை இது முன்வைக்கிறது.

மே 9, 2024 வியாழன் அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பள்ளி வளாகத்தில் UCLA ஆசிரிய மற்றும் பணியாளர்கள் அணிவகுத்துச் செல்கின்றனர். [AP Photo/Jae C. Hong]

இந்த வேலைநிறுத்த வாக்கெடுப்புக்கான உந்துதல், ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்தின் (UAW) உள்ளூர் 4811 இன் 48,000 சாமானிய உறுப்பினர்களிடமிருந்து வந்ததே ஒழிய, UAW தொழிற்சங்க அதிகாரத்துவத்திடம் இருந்து வந்தது அல்ல. UAW தொழிற்சங்க அதிகாரத்துவமானது, “ஜோ” பைடெனின் இனப்படுகொலைக்கு ஒப்புதல் அளித்ததோடு, வாக்களிப்பதை முடிந்தவரை தாமதப்படுத்தியது. நாடு முழுவதும் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டு மேலும் பலர் தாக்கப்பட்டுள்ள அதே நேரத்தில், ஊடகங்களும் அரசியல் ஸ்தாபனமும் அவர்களை “யூத எதிர்ப்பாளர்கள்” என்று முத்திரை குத்தி, தேசிய காவலர்களுக்கு அழைப்பு விடுத்தன.

இந்த வாக்கெடுப்பானது, ஒரு அரசியல் வேலைநிறுத்தத்திற்கான அழைப்பாகும். – அதாவது, அரச அடக்குமுறையையும், அமெரிக்க ஆதரவு இனப்படுகொலையையும் முடிவுக்கு கொண்டுவர தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டும். தொழிலாள வர்க்கம் பைடென் நிர்வாகம் மற்றும் இரு பெருநிறுவனக் கட்சிகளுடன் வெளிப்படையான அரசியல் மோதலுக்கு இழுக்கப்படுகிறது.

வாக்கெடுப்பின் போது தாக்குதல்கள் தீவிரமடைந்திருந்தன.  செவ்வாயன்று, இர்வின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு முகாமை பொலிசார் தாக்கினர். போராட்டம் நடத்தும் மாணவர்களின் முயற்சிக்கு நிர்வாகிகளின் பதிலடியாக, பேச்சுவார்த்தை நடத்தும் குழு முழுவதையும் இடைநீக்கம் செய்தனர்.

கடந்த வியாழன் அன்று, நிர்வாகிகள் அனைத்து உள்ளூர் 4811 உறுப்பினர்களுக்கும் ஒரு குறிப்பை அனுப்பி, வேலைநிறுத்தம் நடந்தால் “சரியான நடவடிக்கை எடுப்போம்” என்று அச்சுறுத்தினர். இதில் பெருமளவிலான பணிநீக்கங்கள் மட்டுமின்றி, பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சட்ட நடவடிக்கைகளும் அடங்கும். “விடுப்பைத் துல்லியமாகப் புகாரளிக்கத் தவறுவது  கடுமையான மீறல்” என்று கடிதம் எச்சரித்தது.

இந்த விரிவாக்கம், முழு தொழிலாள வர்க்கமும் மாணவர்களைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கலிபோர்னிய பல்கலைக்கழக வளாகங்களின் உள்ளூர் 4811ல் உள்ள அனைத்து 48,000ம் உறுப்பினர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தாமதமின்றி தொடங்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், 150,000 வாகனத் தொழிலாளர்கள் உட்பட முழு UAW உறுப்பினர்களும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதில், கலிபோர்னிய பல்கலைக்கழக மருத்துவ அமைப்பில் பணிபுரிபவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் UAW உறுப்பினர்களாக உள்ள ஆயுத ஆலைகள் உட்பட தொழிலாள வர்க்கத்தின் பிற முக்கிய பிரிவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

பல்கலைக்கழக நிர்வாகமானது, இந்த வேலைநிறுத்தம் அதன் அரசியல் தன்மை காரணமாக அனுமதிக்கப்பட முடியாதது என்றும், இது “எந்தவிதமான வேலைப் பிரச்சினைகளுடன்” தொடர்புடையது அல்ல என்றும் கூறுகிறது. என்ன சிடுமூஞ்சித்தனம்! மாணவர்களுக்கு எதிரான அரசியல் தாக்குதலுக்கு, ஆளும் வர்க்கத்தின் சார்பாக இருக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் உதவியது மற்றும் ஒத்துழைத்து வருகிறது.

பல்கலைக்கழக நிர்வாகிகளுக்குப் பின்னால் பைடென் வெள்ளை மாளிகை உட்பட அரசாங்கத்தின் உயர் மட்டங்களில் இரு கட்சிகளும் உள்ளன. ஜனநாயகக் கட்சியினர், உண்மையான பாசிஸ்டுகள் உட்பட, குடியரசுக் கட்சியினருடன் இணைந்து போலீஸ் தாக்குதல்களை ஏற்பாடு செய்தனர்.

கடந்த வியாழன் அன்று, டூபோல் பல்கலைக்கழகத்தில் (DePaul University) இருந்த ஒரு முகாமை சிக்காகோ போலீசார் தாக்கி கிழித்தெறிந்தனர். சிக்காகோவின் மேயரான பிராண்டன் ஜோன்சன், சிக்காகோ ஆசிரியர் சங்கத்தில் இருந்து வெளிவந்த அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளால் ஆதரிக்கப்படுகிறார். UAW மற்றும் பல தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் போலி-இடதுகள் எவ்வாறு ஒடுக்குமுறையில் முழுப் பங்காளிகளாக உள்ளனர் என்பதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மே 2024 அன்று, சிக்காகோ மேயர் பிராண்டன் ஜோன்சன் பொலிஸ்காரர்களை கௌரவிக்கிறார். [Photo: Brandon Johnson]

வளர்ச்சியடைந்து வரும் மூன்றாம் உலகப் போரில் இனப்படுகொலை என்பது ஒரு போர்முன்னரங்கு மட்டுமே. மற்றொரு பெரிய போர் முன்னரங்கு உக்ரேனில் உள்ளது. அங்கு, நவ-நாசிக்களால் நிறைந்துள்ள, ஊழல் பிடித்த உக்ரேனிய அரசாங்கத்துடன் அமெரிக்கா கூட்டணி வைத்துள்ளது. இந்த அரசாங்கம் இராணுவச் சட்டத்தால் தேர்தல்கள் மற்றும் விதிகளை நிறுத்தி வைத்துள்ளது.

சோசலிச சர்வதேசியத்தின் அடிப்படையில், உக்ரேனிய மற்றும் ரஷ்ய ஆட்சிகளுக்கு கொள்கை ரீதியிலான எதிர்ப்பிற்காக உக்ரேனிய பினாமி ஆட்சியால் கைது செய்யப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் மாணவர்களின் எதிர்ப்பிற்கான உரிமைகளின் பாதுகாப்பு இணைக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக வளாகங்கள் இராணுவ-தொழில்துறை வளாகத்துடன் முற்றிலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இந்த வார தொடக்கத்தில், பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள், இஸ்ரேலிய நிறுவனங்களில் $32 பில்லியனுக்கும் அதிகமான முதலீடுகளை கொண்டிருப்பதாகவும், இவற்றின் பங்குகளை விலக்குவதற்காக எதிர்ப்பாளர்களால் இலக்கு வைக்கப்பட்டதாகவும் கலிபோர்னிய பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் கூட, வளாகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் மீது பெருநிறுவன தன்னலக்குழுவின் பாரிய நிதி மற்றும் நிறுவன கட்டுப்பாட்டுடன் ஒப்பிடுகையில் இது மங்கலாக உள்ளது. வியாழனன்று வெளியிடப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை, கொலம்பியா பல்கலைக்கழகத்தில் போலீசார் மேற்கொண்ட தாக்குதலானது, “பில்லியனர்கள் மற்றும் வணிக டைட்டன்களின் குழுவினரைக்” கொண்ட ஒரு தனியார் WhatsApp அரட்டை மூலம் நடத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் தலைவிதியும் ஆபத்தில் உள்ளது. உலகத் தொழிலாளர்கள்தான் போர்களில் கொல்லப்பட்டு வருகிறார்கள். மேலும், போர்களில் கொல்லப்பட்டு வரும் தொழிலாளர்கள், வேலைகள், ஊதியங்கள், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற பொதுச் சேவைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய வெட்டுக்கள் மூலம் விலை கொடுக்கத் தள்ளப்படுகிறார்கள்.

ஆளும் வர்க்கத்தை பயமுறுத்துகின்ற தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராக, பொலிஸ் அரச ஆட்சி முறைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, சமத்துவமின்மை மற்றும் வறுமையின் மீதான பிரமாண்டமான கோபம், போருக்கான பரவலான எதிர்ப்புடன் ஒன்றிணைந்து முதலாளித்துவத்திற்கு எதிரான அரசியல் இயக்கமாக மாறக்கூடும் என்று அவர்கள் அச்சமடைகிறார்கள். 1917 ரஷ்யப் புரட்சியில், முதலாம் உலகப் போருக்கான எதிர்ப்பு எப்படி முக்கிய காரணியாக இருந்தது என்பதை, அவர்கள் நன்றாக நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அமைதியாக இடம்பெற்றுவரும் பல்கலைக்கழக வளாகப் போராட்டங்களுக்கு வெறித்தனமான பதிலுக்கு இதுவே காரணமாகும். தொழிலாள வர்க்கத்தின் பதில், ஆளும் வர்க்கம் மிகவும் அஞ்சும் அரசியல் இயக்கத்திலேயே அதன் மகத்தான சமூக சக்தியைப் பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கத்தின் தாக்குதல் என்பது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நாசவேலைக்கு எதிரான சாமானிய தொழிலாளர்களின் போராட்டத்துடன் முற்றிலும் இணைக்கப்பட்டுள்ளது. முதலாளித்துவ அரசுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஆழமான உறவுகள் மற்றும் ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக அதன் சமூக செயல்பாடு என்பது, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் தொழிலாளர்களை விட, எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கும் கலகத் தடுப்புப் பொலிஸாருக்கு சார்பாக இருக்கிறது. கார்ப்பரேட் தன்னலக்குழுவிற்கு சவால் விடக்கூடிய எந்தவொரு தொழிலாளர் எதிர்ப்பையும் சீர்குலைப்பது, தனிமைப்படுத்துவது மற்றும் தடுப்பது அதன் செயல்பாடு ஆகும்.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் ஒரு “பொருளாதார” வேலைநிறுத்தத்தை ஒரு நாளுக்கும் குறைவான காலத்திற்குள் முடிவுக்கு கொண்டு வர, சாமானிய தொழிலாளர்களிடமிருந்து எந்த உள்ளீடும் இல்லாமல் UAW எடுத்த முடிவானது, ஒரு தீவிரமான எச்சரிக்கையாகும். இது கலிபோர்னிய பல்கலைக் கழக பட்டதாரி மாணவர்களை தனிமைப்படுத்த வேண்டுமென்றே செய்யப்பட்டது.

வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு எதிராக பழிவாங்கும் அதிகாரத்தை கலிபோர்னிய பல்கலைக் கழக நிர்வாகிகள் ஒப்பந்தத்தில் “வேலைநிறுத்தம் செய்யக்கூடாது” என்ற விதியை மேற்கோள் காட்டுவது மிகவும் குறிப்பிடத்தக்கது. 2022 கலிபோர்னிய பல்கலைக் கழக பட்டதாரி மாணவர் வேலைநிறுத்தத்தை பரந்த சாமானிய தொழிலாளர்களின் எதிர்ப்பிற்கு எதிராக UAW காட்டிக்கொடுக்க பயன்படுத்திய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தொழிலாளர் விரோத மொழி இருந்தது.

இரண்டு முக்கியமான வாரங்களுக்கு வேலைநிறுத்த வாக்கெடுப்பை தாமதப்படுத்திய UAW, “சூழ்நிலைகள் நியாயப்படுத்தினால்” வேலைநிறுத்தம் பற்றி விவாதிக்க வெள்ளிக்கிழமை கூடுவதற்கு உள்ளூர் நிர்வாகக் குழு இன்னும் இரண்டு நாட்கள் காத்திருக்கிறது. இந்த “சூழ்நிலைகள்” வாரக்கணக்கில் நடவடிக்கையை “நியாயப்படுத்தவில்லை” போல!

UAW ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தால், அதை தனது உறுப்பினர்களில் ஒரு பகுதியினரை மட்டுமே உள்ளடக்கிய “தனிமைப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தம்” என்று மட்டுப்படுத்துவதற்கு முயற்சிக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்த வேலைநிறுத்தத்திற்கான முன்மாதிரி, கடந்த இலையுதிர்கால வாகனத் தொழிற்துறை வேலைநிறுத்தம், தொடக்கம் முதல் இறுதி வரை வெள்ளை மாளிகையால் கட்டுப்படுத்தப்பட்டது. இது ஒரு சிறிய அளவிலான தொழிற்சாலைகளில் மட்டுமே அழைக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான காஸா எதிர்ப்பு எதிர்ப்பாளர்களுக்கு எதிரே, பைடெனுடன், UAW தலைவர் ஷான் ஃபெயின் மேடையில் தோன்றிய பேரணியில் முடிந்தது. ஃபெயினும் UAW தொழிற்சங்க அதிகாரத்துவமும் வெள்ளை மாளிகையுடன் இன்னும் நெருக்கமான கூட்டணிக்கு நகரும் அதே வேளையில், ஒப்பந்த “வெற்றி” என்று கூறப்படுவது இப்போது ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

ஆளும் வர்க்கமானது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களை அடிபணியச் செய்ய முயன்று வருகிறது. ஆனால், வர்க்கப் போராட்டத்தின் புறநிலை வளர்ச்சி இந்தப் பாத்திரத்தை வகிக்கும் அதன் திறனைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இருப்பினும், இது சுயாதீன அமைப்பின் வளர்ச்சியின் அளவைப் பொறுத்தது.

கல்வித் தொழிலாளர்கள் இப்போதே, அவர்களின் ஜனநாயக விருப்பத்தைத் திணிப்பதற்கு, சாமானிய தொழிலாளர்களின் வேலைநிறுத்தக் குழுக்களை உருவாக்குவதன் மூலம், உடனடி, முறையான வேலை நிறுத்தங்களுக்கு அணிதிரட்ட வேண்டும். தங்கள் போராட்டத்தை மட்டுப்படுத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முயற்சிகளுக்கு எதிராக, அவர்கள் கூட்டு நடவடிக்கைகளுக்குத் தயார்படுத்துவதற்கு தகவல்தொடர்பு வழிகளை நிறுவி, வாகனத் தொழிலாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் பக்கம் திரும்ப வேண்டும்.

ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கமும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்வர வேண்டும். தொழிலாளர்கள் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், இனப்படுகொலையை நிறுத்துவதற்கும், மற்றும் உலகெங்கிலும் சுழன்று கொண்டிருக்கும், ஏகாதிபத்தியப் போர்கள் மற்றும் அதற்கு காரணமான திவாலான முதலாளித்துவ அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் தொழிற்துறை நடவடிக்கையை ஒழுங்கமைக்க வேண்டும்.