மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
« காஸா ஒற்றுமை முகாமை » ஸ்தாபித்ததற்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 108 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கும் குறைவான காலத்திற்குப் பின்னர், அமெரிக்காவில் 2,500 க்கும் அதிகமானவர்கள், இதேபோன்ற சிவில் ஒத்துழையாமை நடவடிக்கைகளில் பங்கெடுத்ததற்காக கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பல சந்தர்ப்பங்களில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புல்தரையில் உட்கார்ந்ததற்காக அல்லது வளாக கட்டிடங்களை ஆக்கிரமித்ததற்காக « அத்துமீறியதாக » குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அதேவேளையில், மாணவர்கள் கைது செய்யப்படுவதை படம் பிடித்த பத்திரிகையாளர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை எழுதிக் கொண்டிருக்கையில், மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக ஆசிரியர்களையும் மாணவர்களையும் பொலிஸ் கைது செய்து கொண்டிருக்கிறது. பாலஸ்தீனத்திற்கான நீதிக்கான மாணவர்கள் (SJP) மற்றும் பாலஸ்தீன ஒற்றுமைக் குழு (PSC) ஆகியவற்றின் உள்ளூர் கிளையானது, செவ்வாய்க்கிழமை இரவு அதன் முகாமில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவித்தன. ஆரஞ்சு நிற பாதுகாப்பு அங்கி அணிந்த பலர் கைவிலங்கிடப்பட்டிருப்பதைக் காட்டும் ஒரு படத்தையும் அந்த அறிக்கை உள்ளடக்கிருந்தது.
பாலஸ்தீனத்திற்கான நீதிக்கான மாணவர்கள் மற்றும் பாலஸ்தீன ஒற்றுமைக் குழு ஆகிய இரண்டும் கலகம் அடக்கும் பொலீசார் முகாமை சுற்றி வளைத்துள்ளதாக தெரிவித்தன. மேலும், « நீங்கள் ஏன் கலகத் தடுப்பு உடையில் இருக்கிறீர்கள்? இங்கு எந்த கலவரத்தையும் நாங்கள் காணவில்லை » என்று அதிகரித்துவந்த கூட்டத்திலிருந்து குரல்கள் எழுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டன.
நியூ யோர்க் நகரில், ஜனநாயகக் கட்சி மேயர் எரிக் ஆடம்ஸ் 500 க்கும் அதிகமானவர்களை கைது செய்வதை மேற்பார்வையிட்டுள்ளார். செவ்வாய் இரவு, நியூ யோர்க் நகர பொலிசார் (NYPD) மீண்டும் எதிர்ப்பு போராட்டக்காரர்களை தாக்கி பாரியளவில் கைது செய்தனர். « ரஃபாவுக்கு ஆதரவாக முழுப் பங்கேற்புடன் » பேரணியின் ஒரு பகுதியாக 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் தெருக்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
போராட்டக்காரர்களில் பலர் நியூயோர்க் பொது நூலகத்தின் படிக்கட்டுகளை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். பின்னர் மாலையில், ஒரு பொதுப் பல்கலைக்கழகம் மற்றும் நகரின் கடைசிப் பள்ளியான ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (FIT), உள்ள காஸா முகாமில் போராட்டக்காரர்களின் குழுக்கள் ஒன்று சேர்ந்தன.
இக்கட்டுரை எழுதப்படும் நேரத்தில், பொலீசார் முகாமை தரைமட்டமாக்க தயாராகி வருகின்றனர். நியூ யோர்க்கை தளமாகக் கொண்ட சுயாதீன நிருபர் கேட்டி ஸ்மித், இரவு 10:00 மணிக்குப் பின்னர் « முகாமிலும் அதைச் சுற்றியும் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் நிறுத்தப்பட்டிருந்தனர் » என்று ஆவணப்படுத்தினார்.
நாடெங்கிலும் பெரும்பாலும் இளைஞர்கள் மற்றும் அவர்களின் பேராசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களின் பாரிய கைதுகள் வெள்ளை மாளிகையில் இருந்து இயக்கப்படுகின்றன. நாஜிக்களின் யூத இனப்படுகொலை நினைவு (Holocaust Remembrance Day) தினத்தன்று காங்கிரஸ் கட்டிடத்தில் செவ்வாய்க்கிழமை ஆற்றிய உரை உட்பட பல அறிக்கைகளில், ஜனாதிபதி ஜோ பைடென், பாலஸ்தீன மக்கள் மீதான சியோனிச இனப்படுகொலைக்கு எதிர்ப்பு என்பது யூத-எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடு என்ற பெரிய பொய்யைத் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
போர்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான இருகட்சிகளின் தாக்குதலைக் குறித்து கருத்துரைக்கையில், அமெரிக்க ஜனாதிபதிக்கான சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு எழுதினார்:
அவரும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் அமைதியான போராட்டங்கள் மீதான மிருகத்தனமான பொலிஸ் ஒடுக்குமுறையை ஆதரிக்கின்ற நிலையிலும் கூட, பைடென் மீண்டும் போராட்டக்காரர்களை « யூத-விரோதிகள் » மற்றும் « வன்முறையாளர்கள் » என்றும் அவதூறு செய்து வருகிறார்.
நாஜிக்களின் யூத இனப்படுகொலை (ஹோலோகாஸ்ட்) நினைவு நிகழ்வில் உரையாற்றிய சபாநாயகர் மைக் ஜோன்சன், « இனப்படுகொலையை எதிர்க்கும் மாணவர்களை நாஜிக்களுடன் ஒப்பிட்டார் » என்று கிஷோர் குறிப்பிட்டார்.
கிஷோர் பின்வருமாறு தொடர்ந்தார்:
... அரசு மற்றும் ஆளும் வர்க்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஜேர்மன் பல்கலைக்கழகங்களில் நாஜி சித்தாந்தம் வளர்த்தெடுக்கப்படுவதை, கொடூரமான பொலிஸ் ஒடுக்குமுறையால் எதிர்கொண்டு வருகின்ற பாலஸ்தீனியர்கள் மீதான தற்போதைய படுகொலைக்கு எதிரான போராட்டங்களுடன் மூர்க்கத்தனமாக ஒப்பிடுகிறார்.
பைடென் மற்றும் ஜோன்சன் இருவருமே பல்கலைக்கழகங்கள் யூத மாணவர்களுக்கு விரோதமான சூழல்களாக மாறிவிட்டன என்று அறிவித்தனர். உண்மையில், எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுப்பவர்களில் பலர் யூதர்கள். யூத மாணவர்கள் எதிர்ப்பு போராட்டக்காரர்களால் அச்சுறுத்தப்படவில்லை, மாறாக கைது செய்யப்பட்டு பொலிசாரால் தாக்கப்படுகின்றனர்.
இனப்படுகொலை-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை « யூத-எதிர்ப்பாளர்கள் » மற்றும் « பயங்கரவாதிகள் » என்று அவதூறு செய்வது, முஸ்லீம்-விரோத மற்றும் அரபு-விரோத வன்முறை என்பன துன்புறுத்தலின் ஒரு வெடிப்புக்கு இட்டுச் சென்றுள்ளது. செவ்வாயன்று, அமெரிக்க-இஸ்லாமிய உறவுகளுக்கான கவுன்சில் (CAIR), அரிசோனாவில் ஒரு சியோனிச பேராசிரியர், அவரிடமிருந்து விலகிச் செல்ல முயற்சிக்கும் ஒரு முஸ்லீம் பெண்ணை அச்சுறுத்துவதைக் காட்டும் வீடியோ வெளிவந்ததை அடுத்து, அவரை கைது செய்து பதவி நீக்கம் செய்ய அழைப்பு விடுத்தது.
செவ்வாயன்று ஒரு செய்திக் குறிப்பில், அந்த பேராசிரியர் ஜொனாதன் யூடெல்மேனின் நடவடிக்கைகள் « இஸ்ரேல் சார்பு, இனப்படுகொலை சார்பு தீவிரவாதிகளால் ஆயுதபாணியாக்கப்பட்ட இஸ்லாமிய வெறுப்பு மற்றும் மத சகிப்பின்மையின் ஒரு பரந்த வடிவத்தின் » ஒரு பகுதியாகும் என்று CAIR -அரிசோனா நிர்வாக இயக்குனர் அஸ்ஸா அபுசிஃப் எழுதினார்.
100 க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்புகளின் கொலம்பியா பல்கலைக்கழக நிறவெறி எதிர்ப்புக் கூட்டணி, செவ்வாயன்று சியோனிஸ்ட் டிரைவர் ஒருவர் வேண்டுமென்றே தனது காரை, எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் மீது மோதியதாக அறிவித்தது. இந்த சம்பவத்தில், ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
நியூயோர்க் பொலிஸ் துறையின் (NYPD) செய்தித் தொடர்பாளர் டெய்லி பீஸ்ட்டிடம் வாகனத்தின் ஓட்டுநர் 57 வயதான ரூவன் கஹானே என்பதை உறுதிப்படுத்தினார். கஹானே மீது இரண்டாம் நிலை தாக்குதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக நியூயோர்க் போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
கஹானேவைத் தவிர, கார் மோதியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதான மேரிலென் நோவாக் மற்றும் 63 வயதான ஜான் ரோசெண்டால் ஆகியோரையும் NYPD கைது செய்ததாக டெய்லி பீஸ்ட் உறுதிப்படுத்தியது. நோவாக் மீது, தவறான நடத்தை மற்றும் சட்டவிரோதமாகக் கூடியமை ஆகிய கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அதே நேரத்தில், ரோஸெண்டால் மீது முன்பு குற்றம் சாட்டப்பட்ட நிலையில், இருவருமே போராட்ட ஒழுங்கமைப்பாளர்களால் « பதட்டத்தைத் தணிப்பதற்கு » நியமிக்கப்பட்டனர்.
ரூவன் கஹானே யூத பாதுகாப்பு லீக் (JDL) என்ற பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் Meir Kahane இன் உறவினர் ஆவார். இனப்படுகொலைக்கு ஆதரவான குண்டர்கள், மாணவர்களின் முகாமைத் தாக்குவதற்கு 48 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்திற்கு முன்னர் UCLA வளாகத்தில் JDL இன் கொடியின் புகைப்படம் எடுக்கப்பட்டது.
சாட்சிகளின் கூற்றுப்படி, பணக்கார கொலம்பியா மற்றும் பேர்னார்ட் அறங்காவலர்களின் வீடுகளுக்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதை கஹானே கவனித்தார் மற்றும் ஒரு எதிர்ப்பாளரிடமிருந்து ஒரு துண்டுப் பிரசுரத்தைக் கேட்டார், அந்த நேரத்தில் அவர் அந்த நபரின் கையைப் பிடித்தார். போராட்டக்காரர் விலகிச் சென்ற பின்னர், காரை ஓட்டிச் சென்ற கஹானே, பின்னர் தனது காரில் மீண்டும் வட்டமிட்டார். பின்னர் அவர் நடைபாதையிலும் எதிர்ப்பாளர்களிடமும் காரை ஓட்டிச் சென்றதாக சாட்சிகள் கூறுகின்றன.
சுயாதீன பத்திரிகையாளர் தாலியா ஜேன், இந்தக் கைது குறித்த இன்னும் வெளியிடப்படாத காணொளியை மேற்கோள் காட்டி, பொலிசார் « போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மீது அவதூறான அறிக்கைகளை வழங்கியதையும், அவர்களை f*cking முட்டாள்கள் என்று அழைத்ததையும், நீங்கள் வயது வந்தவராக இருக்கும்போது விளைவுகள் உள்ளன என்று அவர்களிடம் கூறுவதையும் » கண்டார். இதற்கிடையில், பொலீசார் சிரிப்பதையும், கஹானேவுடன் « நட்புறவுடன் » பழகுவதையும் நேரில் பார்த்தவர்கள் கவனித்தனர்.