மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூ யோர்க் சிட்டி கல்லூரி, டார்ட்மவுத், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், போர்ட்லாந்து மாநில டென்னசி பல்கலைக்கழகம் மற்றும் பிற வளாகங்களில் சுமார் 300 மாணவர்கள் வியாழனன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க பொலிஸ் வன்முறைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் ஒப்புதல் அளித்ததன் தாக்கம் வெள்ளிக்கிழமை தொடர்ந்து பரவியது.
வியாழக்கிழமை பிற்பகல் பைடெனின் மூன்று நிமிட உரையைத் தொடர்ந்து அந்தப் பள்ளிகள் மீது பாரிய போலிஸ் சோதனைகள் நடத்தப்பட்டன, பைடெனின் அந்த உரையானது அமைதியான போராட்டங்களை 'வன்முறையானவை' மற்றும் 'யூத-எதிர்ப்பு' என்று அறிவித்ததுடன், 'ஒழுங்குமுறை மேலோங்க வேண்டும்' என்றார்.
பைடென் பேசுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸும் கலிபோர்னியா மாநில துருப்புகளும் யுசிஎல்ஏ (UCLA) வளாகத்தில் இறங்கி, காஸா இனப்படுகொலைக்கு எதிரான முகாமை கிழித்தெறிந்து, 137 பேரைக் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து புதன்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது சியோனிச பாசிஸ்ட்டுக்களால் காரணமற்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பொலிஸ் அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை.
வெள்ளியன்று, பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஜனநாயகக் கட்சி மேயர் (மற்றும் முன்னாள் போலீஸ்காரர்) எரிக் ஆடம்ஸின் உத்தரவின் பேரில், நியூ யோர்க் பொலிஸ் துறை (New York Police Department - NPYD) மீண்டும் நடவடிக்கைக்குத் திரும்பியது, நியூ ஸ்கூல் (The New School) மற்றும் நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் போராட்ட முகாம்களை தகர்த்தது. நியூ ஸ்கூல் இல் 43 பேரையும், நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் 13 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில், கொலம்பியாவின் ஹாமில்டன் மண்டபத்தை அமைதியாக ஆக்கிரமித்த மாணவர்கள் மீதான தாக்குதலின் போது, அதில் ஈடுபட்ட கலகத் தடுப்பு பொலிஸ் அதிகாரிகளில் ஒருவர் தனது துப்பாக்கியை 'தவறுதலாக கையாண்டார்' என்று NYPD ஆனது ஒப்புக் கொண்டது. ஆயுதம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக பொலிஸ் பேச்சாளர் மூன்று நாள் மௌனத்திற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
எவ்வாறாயினும், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் போராட்டக்காரர்களை 'ஹமாஸ் பயங்கரவாதிகள்' மற்றும் 'வெளிப்புற கிளர்ச்சியாளர்கள்' என்று அழைப்பதன் மூலம் சேறு பூசுவதற்கான முயற்சிகளின் தீவிரத்திற்கு இணங்க, வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள், மாணவர்கள் என்பதை ஒப்புக் கொண்ட பின்னர் NYPD நடவடிக்கைகளுக்கான துணை ஆணையர் காஸ் டௌட்ரி (Kaz Daughtry) பின்வருமாறு கூறினார்:
இந்த இயக்கத்தின் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள்... இதற்கு யாரோ நிதியுதவி செய்கிறார்கள். எங்கள் மாணவர்களை தீவிரமயமாக்கும் ஒருவர் இருக்கிறார், எங்கள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு துணை ஆணையர் அது யார் என்பதைக் கண்டுபிடிப்பார், நாங்கள் அவ்வாறு செய்யும்போது அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கப் போகிறோம்.
இந்த வழிகளில், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸால் நடத்தப்பட்ட தாக்குதலில் இலக்கு வைக்கப்பட்ட இஸ்ரேலியர்களால், பாலஸ்தீனத்திற்கான அமெரிக்க முஸ்லிம்கள் (American Muslims for Palestine), பாலஸ்தீனத்தில் நீதிக்கான தேசிய மாணவர்கள் (National Students for Justice in Palestine) மற்றும் அவைகளுடன் 'இணைந்த குழுக்கள்' ஆகிவற்றிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தனர், அவைகள் ஒரு பயங்கரவாத அமைப்பான ஹமாஸின் முகமைகளாக செயல்படுவதாக குற்றம் சாட்டினர்.
வெள்ளியன்றும், சேப்பல் ஹில்லில் (Chapel Hill) உள்ள வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் (University of North Carolina) பல நூறு பேர் பங்கேற்ற ஒரு பேரணியை பொலிசார் கலைத்தனர், அது இனப்படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும், பல்கலைக்கழகமானது இஸ்ரேலில் இருந்து விலகிக் கொள்ளக் கோரியும் போக்குவரத்தை நிறுத்தியது. போலீசார் குறைந்தது 30 பேரை அதில் கைது செய்தனர்.
நிர்வாகத்தின் நிதிப் பதிவேடுகளைப் பார்க்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைக்கு அவர்கள் மறுப்பு தெரிவித்த பின்னர், விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகமானது (University of Wisconsin-Madison, UW-Madison)), அடுத்த வாரம் இறுதித் தேர்வுகளுக்கு முன்னர் முகாமிட்டிருப்பதை முடிவிற்கு கொண்டுவருமாறு மாணவர்களிடம் கூறியது. மாணவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக திங்களன்று ஆசிரியர்கள் வெளிநடப்பு செய்யப் போவதாக UW-Madison இல் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
சிகாகோ பல்கலைக்கழக துணைவேந்தர் போல் அலிவிசடோஸ் (Paul Alivisatos) ஏப்ரல் 29 அன்று மாணவர்கள் அமைத்திருந்த முகாமை முடிவிற்குக் கொண்டுவரப்போவதாக அச்சுறுத்தினார். அனைத்து வகையான உத்தியோகபூர்வ அறிக்கைகளில் இருந்தும் வெளிப்படும் பாசாங்குத்தனம் மற்றும் ஆணவத்தின் மாதிரியான ஒரு அறிக்கையில், அலிவிசடோஸ் இவ்வாறு எழுதினார்:
திங்களன்று, பேச்சுச் சுதந்திரத்தின் ஒரு பயிற்சியாக இருக்கக்கூடிய ஒன்று மற்றவர்களின் கற்றல் அல்லது வெளிப்பாட்டைத் தடுத்தால் அல்லது பல்கலைக்கழகத்தின் செயல்பாடு அல்லது பாதுகாப்பை கணிசமாக சீர்குலைத்தால் மட்டுமே நாங்கள் தலையிடுவோம் என்று நான் கூறினேன். முகாமை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு இல்லாத நிலையில், நாங்கள் இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளோம்.
பென்சில்வேனியா பல்கலைக்கழக நிர்வாகமானது வெள்ளியன்று ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது, ஏப்ரல் 25 முதல் கல்லூரி புல்வெளி வளாகத்தில் நடைமுறையில் இருந்த ஒரு எதிர்ப்பு முகாம் விரைவில் மூடப்படும் என்று கூறியது. இதைத் தொடர்ந்து வியாழனன்று சியோனிஸ்டுகள் 3,000 கையெழுத்துக்கள் அடங்கிய மனுவை பள்ளி அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
பேச்சுச் சுதந்திரம் மற்றும் அரசியல் வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் மீதான இந்தப் படுமோசமான மீறல்களுக்கு எதிரான ஒரு சட்டபூர்வ சவாலின் பாகமாக, பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த பின்னர் இந்தியானா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட மூன்று நபர்கள் சார்பாக, அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் (American Civil Liberties Union - ACLU) வெள்ளியன்று இண்டியானாவின் புளூமிங்டனில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. பேராசிரியர் பெஞ்சமின் ராபின்சன் (Benjamin Robinson), பட்டதாரி மாணவர் மேடலின் மெல்ட்ரம் (Madeleine Meldrum) மற்றும் ப்ளூமிங்டனில் வசிக்கும் ஜாஸ்பர் விர்ட்ஷாஃப்டர் (Jasper Wirtshafter) ஆகிய மூவரும் ஆர்ப்பாட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட வளாகம் இருந்த 20 ஏக்கர் இடமான Dunn Meadow இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அவர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பைடென் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கட்சிகளின் முழு ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்ற காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான பாரிய படுகொலையை எதிர்ப்பவர்கள் மீது நடைமுறையளவில் முன்னொருபோதும் இல்லாத இந்தப் பொலிஸ் அரசுத் தாக்குதல், எவ்வாறிருப்பினும், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களின் தைரியமான நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை. 'இஸ்ரேலிய இனவெறியிலிருந்து பிரின்ஸ்டன் விலகல்' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக (Princeton University) மாணவர்கள் காஸா போருக்கு எதிராக வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
கொலம்பியா, கலிபோர்னியா பல்கலைக்கழகம் (UCLA) மற்றும் பிற அமெரிக்க வளாகங்களில் மாணவர்கள் எடுத்த நிலைப்பாட்டால் ஈர்க்கப்பட்ட மாணவர் எதிர்ப்பு முகாம்கள் உலகெங்கிலும் பரவத் தொடங்கியுள்ளன. லண்டன், பாரிஸ், ரோம், சிட்னி, டோக்கியோ, பெய்ரூட் ஆகிய நகரங்களில் அவை வெடித்துள்ளன. பாரிஸில், அரசியல் ஆய்வுகள் பயிலகத்தில் இருந்து எதிர்ப்பாளர்களை அகற்ற பிரெஞ்சு பொலிஸ் ஏற்கனவே தலையீடு செய்துள்ளது.
மேலும் படிக்க
- நியூ யோர்க் பொலிஸ் பாரிய கைதுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் அதிகாரிகள் UCLA இனப்படுகொலை எதிர்ப்பு முகாமுக்கு எதிராக வலதுசாரி வெறியாட்டத்தை தூண்டுகின்றனர்
- கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 2,200க்கும் மேற்பட்ட இனப்படுகொலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் அமெரிக்க வளாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்
- காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்திய முகாமை பேர்லின் பொலிசார் வன்முறையில் கலைத்தனர்