மிருகத்தனமான சர்வாதிகாரங்களில் மட்டுமே நாம் அனுபவிக்கும் காட்சிகள் சனிக்கிழமையன்று ஜேர்மன் பாராளுமன்றம் முன் நடந்தன. காஸாவில் இனப்படுகொலைக்கு எதிரான அமைதியான போராட்ட முகாமைக் கலைப்பதற்காக, பொலிசார் பாரிய பலத்தைப் பயன்படுத்தி, தன்னிச்சையான எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய டசின் கணக்கான பங்கேற்பாளர்களைக் கைது செய்தனர்.
சுமார் இரண்டு டசின் கூடாரங்கள், கள சமையலறைகள் மற்றும் தகவல் நிலையங்களை உள்ளடக்கிய இந்த எதிர்ப்பு முகாம் ஏப்ரல் தொடக்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கைகளில் காஸா ஆக்கிரமிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும், இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் மற்றும் பாலஸ்தீனத்திற்கான ஒற்றுமை வெளிப்பாடுகளை குற்றமாக்குவதை நிறுத்த வேண்டும் ஆகியவை அடங்கும். ஒரு வாரத்திற்குப் பின்னர், பேர்லினில் நடந்த ஒரு சர்வதேச பாலஸ்தீனிய மாநாட்டை போலீசார் அச்சுறுத்தி தடை செய்தனர்.
இன்று எதிர்ப்பு முகாம் வன்முறையில் கலைக்கப்பட்டமை, ஜேர்மனியில் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களின் அதிகரித்து வரும் அலையின் மற்றொரு உச்சக்கட்டத்தைக் குறிக்கிறது. இது உண்மையில் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், முகாமுக்கான அனுமதியின் நிபந்தனைகள் மீறப்பட்டுள்ளதாக பொலிசார் இப்போது கூறினர். ஆனால், அதற்கான ஆதாரத்தை பல பத்திரிகையாளர்களுக்கு வழங்க மறுத்துவிட்டனர்.
இந்த பொய்யான சாக்குப்போக்கில், பொலிசார் மிகவும் கொடூரமாக செயல்பட்டனர். 10 பொலீஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுக்கள் கூட்டத்திலிருந்த பங்கேற்பாளர்களைப் பிடித்து, வலுக்கட்டாயமாகத் தங்கள் தோழர்களிடமிருந்து பிரித்து, மூச்சுக் குழாயை அடைத்து அவர்களை தரையில் வீசினர். அல்லது குத்துகள், உதைகள் மற்றும் வலிமிகுந்த முறையில் அவர்களைப் பிடித்தனர். ஒரு ஆர்ப்பாட்டக்காரர் தனிமைப்படுத்தப்பட்டு அடக்கப்பட்டவுடன், அவர் அல்லது அவள் ஒவ்வொருவராக பொலிஸ் அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்த வன்முறைக்கு எதிராக தன்னெழுச்சியான போராட்டம் உருவானபோது, பொலிஸ் உடனடியாக அதை ஒரு வேறொன்றுக்கான கூட்டமாக அறிவித்ததுடன், வன்முறை நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதிலிருந்து வலுக்கட்டாயமாகத் தடுக்க, கலவரத் தடுப்புக் காவலில் டசின் கணக்கான போலீஸார் நிறுத்தப்பட்டிருந்தனர். பின்னர் இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை பல மணி நேரம் சுற்றி வளைத்த பொலீசார் அவர்களை அழைத்துச் செல்ல தனித்தனியாக தேர்ந்தெடுத்தனர்.
காஸா பகுதியில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக பேர்லின் செனட் (அரசு நிர்வாகம்) அமைதியான நிகழ்வுகளையும் பேரணிகளையும் கலைக்கும் அதேவேளையில், அது கலை நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் ஜேர்மனியின் போர்-ஆதரவு கொள்கையுடன் அணிவகுக்க நிர்பந்திக்கவும் முயற்சிக்கிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் சமீபத்தில் பேர்லின் பல்கலைக்கழகங்களில் அரசியல் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். புதனன்று, ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர் நாடாளுமன்றம் அதற்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.
இந்த சம்பவங்கள், காஸாவில் நேட்டோ-ஆதரவிலான படுகொலைக்கு எதிராக நாடெங்கிலுமான பல்கலைக்கழகங்களில் பாரிய போராட்டங்களை ஒடுக்க அமெரிக்க அரசு எந்திரத்தால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வன்முறை நடவடிக்கைகளுடன் பொருந்தி உள்ளன.
பேர்லினில், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei - SGP) ஐரோப்பிய தேர்தல்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பொலிஸ் பயங்கரவாதத்தை கண்டனம் செய்ததுடன், அதனை ஆவணப்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாக்கவும், காஸா படுகொலைக்கு எதிராக ஒட்டுமொத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டவும் அவர்கள் அழைப்புவிடுத்தனர். இந்த சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கே மே 4 அன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்துள்ள இணையவழி மே தின பேரணியின் மையமாக இருக்கும்.