இலங்கை அரசாங்கம் அடக்குமுறை சமூக ஊடக சட்டங்களை திணிக்கின்றது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை அரசாங்கம் அதன் ஜனநாயக விரோத நிகழ்நிலை காப்பு மசோதாவை ஜனவரி மாத கடைசியில் பாராளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றியது. இணைய பாதுகாப்பு அல்லது இணைய குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் எந்த தொடர்பும் இல்லாத புதிய நடவடிக்கையானது, அனைத்து அரசாங்க எதிர்ப்பு மாற்றுக் கருத்துக்களையும் குறிப்பாக அதன் சோசலிச மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பாளர்களையும் நசுக்குவதற்காக இலக்கு வைக்கப்பட்ட பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.

4 பெப்ரவரி 2023 அன்று கொழும்பில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஆயுதப் படைகளின் தலைவர்களுடன். [Photo: Sri Lanka president’s media division]

புதிய ஊடகச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் மிகவும் அவசரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் இறுதிக் குழு நிலை விவாதங்களுக்குப் பிறகு, புதன்கிழமை வாக்கெடுப்பு இல்லாமல் மசோதா நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அன்றைய தினம் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களின் 108 வாக்குகளுடனும் எதிராக 62 வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டது. சபாநாயகர் கையெழுத்திட்டவுடன் புதிய நடவடிக்கை சட்டமாக மாறும்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலமானது, அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பை அடக்குவதற்கும், அதன் சட்டங்களை மீறியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக கடுமையான தண்டனை நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பரந்த அளவிலான அதிகாரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குகிறது. சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ளவாறு வேலைகள், ஊதியங்கள் மற்றும் சமூக நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு அனைத்து தொழிலாள வர்க்க எதிர்ப்பையும் நசுக்குவதையே இந்த நடவடிக்கைகள் தெளிவாக குறிவைத்துள்ளன.

விக்கிரமசிங்க, புதிய சட்டத்தின் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த ஐந்து பேர் கொண்ட நிகழ்நிலை பாதுகாப்புக் குழுவையும் அதன் தலைவரையும் நியமிப்பார். குழு உறுப்பினர்களையும் அதன் தலைவரையும் எந்த நேரத்திலும் நீக்கும் அதிகாரமும் அவருக்கு உண்டு. நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கைப் பிரஜைகளை - நாட்டிற்குள் அல்லது வெளியில் உள்ளவர்களை- சிறையில் அடைப்பதற்கு இந்தக் குழு நீதிமன்றங்களைக் கோரலாம். குற்றம் சாட்டப்பட்டவரின் சேவைகளை முடக்கவும் இணைய சேவை வழங்குநர்கள் அல்லது அவர்களின் இடைத்தரகர்களுக்கு உத்தரவிடலாம் மற்றும் எந்தவொரு நிதி உதவியையும் தடுக்கவும் முடியும்.

அடக்குமுறைச் சட்டங்களின் பரந்த மற்றும் ஜனநாயக விரோத நோக்கம் மசோதாவின் பகுதி 12 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: “ஒரு பொய்யான கருத்தை வெளியிடுவதன் மூலம், தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அல்லது பல்வேறு தரப்பு மக்களிடையே தவறான எண்ணம் மற்றும் குரோத உணர்வுகளை ஊக்குவிக்கும் எந்தவொரு நபரும், இலங்கைக்கு உள்ளேயோ அல்லது வெளியில் இருப்பவரோ, அவர் ஒரு குற்றத்தைச் செய்கின்றார்.”

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்ட அழைப்பு விடுக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவுபடுத்துகின்ற, அத்தகைய குற்றங்களுக்கான தண்டனை என்பது, ஐந்தாண்டு சிறைத் தண்டனை மற்றும் கடுமையான அபராதம் ஆகும். இரண்டாவது முறை அதே குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டால் தண்டனை மற்றும் அபராதம் இரட்டிப்பாகும்.

கடந்த ஆண்டு வர்த்தமானியில் இந்த மசோதா வெளியிடப்பட்டபோது, உத்தேச சட்டத்தை எதிர்த்து பல்வேறு சிவில் சமூகக் குழுக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் 45 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உத்தேச நடவடிக்கைகள் இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணானது மற்றும் அதன் குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் மிகவும் அப்பட்டமாக ஜனநாயக விரோதமானது என்பதை கூறிய உயர் நீதிமன்றம், உத்தேச மசோதாவில் 31 பகுதிகள் இலங்கையின் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாக கூறியதுடன் அது முன்மொழியப்பட்ட பல திருத்தங்களை முன்வைத்தது. இந்த திருத்தங்கள் மசோதாவின் இறுதி வடிவத்தில் சேர்க்கப்படாவிட்டால், அதற்கு ஒப்புதல் அளிக்க மூன்றில் இரண்டு பங்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்று அது கூறியது.

நிகழ்நிலை பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பதற்கும் நீக்குவதற்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பது, உயர் நீதிமன்றத்தின் குறித்த ஆட்சேபனைகளில் ஒன்று ஆகும். தற்போதுள்ள ஆனால் ஏற்கனவே அரசியல் ரீதியாக சமரசம் செய்து கொண்டுள்ள பத்து உறுப்பினர்களைக் கொண்ட அரசியலமைப்புச் சபையால் குழு உறுப்பினர்களை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அது அழைப்பு விடுத்துள்ளது.

உயர் நீதிமன்றத்தின் பல முன்மொழிவுகளை அரசாங்கம் புறக்கணித்தது மட்டுமல்லாமல், மசோதா மீதான இறுதி நாள் விவாதத்தின் போது புதிய விதிகளை அறிமுகப்படுத்தியதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

புதிய சமூக ஊடகச் சட்டத்தின் இறுதி வடிவம் குறித்து இலங்கைத் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இருட்டில் வைக்கப்பட்டுள்ளனர், சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் சட்டமா அதிபரால் நடைமுறைப்படுத்துவதற்குத் தயாரிக்கப்பட்ட பின்னரே அதனை அணுக முடியும்.

மெட்டா, கூகுள், அமஸோன், அப்பல் மற்றும் ட்விட்டர் போன்ற உலகளாவிய இணையத் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டணியான ஆசிய இணையக் கூட்டு (AIC) நிகழ்நிலைப் காப்புச் சட்டத்தை எதிர்த்துள்ளது. இது கவலைக்குரிய 13 புள்ளிகளைக் எடுத்துக் காட்டியுள்ளது. இந்த பூகோள இராட்சத நிறுவனங்களின் எதிர்ப்புக்கும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லாத போதிலும் அவர்களது வணிக இலாபங்களின் மீதான அதன் தாக்கத்தைப் பற்றிய கவலைகளை இது பிரதிபலிக்கிறது.

சட்டமூலத்தை அறிமுகப்படுத்திய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், எதிர்காலத்தில் தனியான திருத்தத்தில் அவர்களின் நலன்களுக்கு இடமளிப்பதாக AIC க்கு உறுதியளித்து பதிலளித்தார்.

விக்கிரமசிங்க அரசாங்கம் அதன் கொடூரமான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை (ATB) ஜனவரி 10 அன்று சமர்பித்ததைத் தொடர்ந்தே இந்த வாரம் இந்த ஈவிரக்கமற்ற நிகழ்நிலை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

1979 ஆம் ஆண்டு நாட்டின் மோசமான பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பதிலீடு செய்யும் இந்த மசோதா, மேலும் அடக்குமுறையானதாகும். இது, எந்தவொரு அரசாங்க எதிர்ப்பு நடவடிக்கை, அரசியல் கருத்து வேறுபாடு அல்லது எதிர்ப்பையும் பயங்கரவாதத்திற்குள் உள்ளடக்கி விரிவுபடுத்துகிறது.

“பொதுமக்களையோ அல்லது பொதுமக்களின் ஒரு பிரிவினரையோ அச்சுறுத்துவது,” அத்துடன் “இலங்கை அரசாங்கத்தையோ அல்லது வேறு எந்த அரசாங்கத்தையோ அல்லது ஒரு சர்வதேச நிறுவனத்தையோ, ஏதாவதொரு செயலை செய்ய வேண்டும் அல்லது செய்ய வேண்டாம் என தவறான முறையில் அல்லது சட்டவிரோதமான முறையில் கட்டாயப்படுத்துவது பயங்கரவாதக் குற்றமாகும்,” என அது கூறுகிறது.

“இது பொதுமக்களில் சிலரால் அல்லது அனைத்து உறுப்பினர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களுக்குப் பயங்கரவாதக் குற்றத்தைச் செய்வதற்கு, தயார்படுத்துவதற்கு அல்லது தூண்டுவதற்கு ஒரு ஊக்கமாக அல்லது தூண்டுதலாகப் புரிந்து கொள்ளப்படும் வகையில்,.ஒரு அறிக்கையை வெளியிடும் அல்லது வெளியிடுவதற்கு காரணமான, அல்லது ஏதேனும் வார்த்தை அல்லது வார்த்தைகளை பேசும், அல்லது புரிந்துகொள்ளக்கூடிய சமிக்ஞைகளை அல்லது புலப்படும் அடையாளங்களை உருவாக்கும் எவரையும் குறிவைக்கிறது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் “பயங்கரவாதம்” என்பதன் பரந்த வரையறையின் அர்த்தம், தங்களின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை அதிகரித்து வரும் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதற்கு அழைப்பு விடுக்கும் எந்தவொரு தனிநபர் அல்லது அமைப்புக்கு எதிராகவும் இலங்கையின் முதலாளித்துவ அரசு எந்திரம், இந்த சட்டத்தை கட்டவிழ்த்துவிட முடியும் என்பதாகும். பயங்கரவாத குற்றஞ்சாட்டுக்கு உட்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனையும், பயங்கரவாதத்தை “நேரடியாக அல்லது மறைமுகமாக ஊக்குவித்ததாக” குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடுமையான அபராதத்துடன் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மற்றும் பரந்த தமிழ் சிறுபான்மையினர் உட்பட, குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான 26 ஆண்டுகால யுத்தத்தின் போது, அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கொழும்பு அரசாங்கங்களால் பயங்கரவாத தடைச்சட்டம் ஈவிரக்கமின்றி பயன்படுத்தப்பட்டது.

அண்மைய எதிர்ப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களில் காணப்படுவது போல், இன்று இலங்கை அரசாங்கம் அதன் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளுக்கு விரோதமாக பாரிய தொழிலாள வர்க்க எதிர்ப்பை முகங்கொடுத்துள்ளது.

விக்கிரமசிங்க ஆட்சியானது, தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கும், அரசியல்ரீதியாக திசைதிருப்புவதற்கும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சார்ந்திருக்கும் அதேவேளை, தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்குவதற்கு அதன் அரச அதிகாரத்தை வலுப்படுத்துவதில் உறுதியாக உள்ளது. அரசுக்கு சொந்தமான கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்குவதை எதிர்த்து மூன்று நாள் போராட்டத்தை நடத்திய இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு எதிராக அது தற்போது ஒரு மோசமான வேட்டையாடலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

அரசாங்கம், அரசு எந்திரம் மற்றும் எதிர்க் கட்சிகளுக்கும் எதிராக குரல் கொடுப்பதற்கு மட்டுமல்லாமல், தங்கள் போராட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும் ஒழுங்கமைப்பதற்கும் இணையம் மற்றும் சமூக ஊடக தளங்களின் பயன்பாட்டை அதிகரித்து வருவதைப் பற்றி இலங்கை ஆளும் வர்க்கமும் அதன் அரசாங்கமும் கடுமையாக அஞ்சுகின்றனர். 2022 ஏப்ரல்-ஜூலையில் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ மற்றும் அவரது அரசாங்கத்திற்கு எதிரான வெகுஜன எழுச்சியின் போது இந்த தொழில்நுட்பம் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தப்பட்டது.

பெரும் வல்லரசுகள் முதல் ‘பின்தங்கிய’ நாடுகள் வரை ஒவ்வொரு அரசாங்கமும் சமூக ஊடகங்கள், இணையத் தளங்கள் மற்றும் பிற இணைய வசதிகளை மௌனிக்க வைப்பதன் மூலம் கருத்துச் சுதந்திரத்தின் மீதான தங்கள் தாக்குதல்களை முடுக்கிவிடுகின்றன,.

செப்டம்பரில் ஜனாதிபதித் தேர்தல்களும் 2025 ஜனவரியில் தேசியத் தேர்தல்களும் நடைபெறும் என இம்மாத தொடக்கத்தில் ஜனாதிபதி விக்கிரமசிங்க அறிவித்தார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அதன் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை, அரசாங்கம் அதன் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தினாலும், அவற்றின் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி./தேசிய மக்கள் சக்தியும் நிகழ்நிலை காப்புச் மசோதாவை விமர்சித்தாலும், அவை இரண்டும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்காமல் சமூக ஊடகங்கள் மீதான அரசாங்க கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாம் என்று வலியுறுத்துகின்றனர். இந்தக் கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலுக்கு ஆதரவளிக்க உறுதிபூண்டுள்ளதுடன் வாய்ப்பு கிடைத்தால் இந்தக் கொள்கைகளைத் திணிப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டால், அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது அவை இரக்கமின்றி தாக்குதல் நடத்தும்.

நிகழ்நிலை காப்பு மசோதா மீதான விவாதத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறிய போதிலும், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மக்கள் அவதூறாகப் பேசப்படாமல் இருக்க “நடவடிக்கைகள் அவசியம்” என்று வலியுறுத்தினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இதையே எதிரொலித்தபோது, “வெறுக்கத்தக்க அறிக்கைகள், தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பல செய்திகள் மற்றும் தகவல்களும் சட்ட நடைமுறைகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும். பொய்களை அடிப்படையாகக் கொண்ட நற்பெயரை அழித்தலும் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த முதலாளித்துவ கட்சிகள் எதிலும் தொழிலாள வர்க்கம் மற்றும் பரந்த வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளை பாதுகாக்கும் எந்த ஒரு தொகுதியும் இல்லை.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டம் மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு எதிரான போராட்டமும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்துடனும் ஒரு சோசலிச முன்னோக்குக்கான போராட்டத்துடனும் ஒருங்கிணைந்து பிணைந்துள்ளது.

இலங்கையில் இது, விக்கிரமசிங்க அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான அரசியல் மற்றும் தொழில்துறை போராட்டத்தில் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களை அணிதிரட்டுவதையும் சர்வதேச அளவில் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக சோசலிச கொள்கைகளை அமுல்படுத்த தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஒன்றுக்கான போராட்டத்தை அர்த்தப்படுத்துகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் இந்த வேலைத் திட்டத்துக்காகவே போராடுகின்றன.

Loading