இந்திய பாதுகாப்புப் படையினர் விவசாயிகள் போராட்டம் மூன்று வாரங்களை நெருங்குகையில் ஒருவரை சுட்டுக் கொன்றனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

இந்தியாவில் இலட்சக் கணக்கான விவசாயிகளின் போராட்டம் தொடங்கி மூன்றாவது வாரத்தின் முடிவை நெருங்குகையில், கொடூரமான அரசு ஒடுக்குமுறை அலைக்கு மத்தியில் குறைந்தபட்சம் ஒரு விவசாயி கொல்லப்பட்டுள்ளதோடு கிட்டத்தட்ட 200 பேர் காயமடைந்துள்ளனர். வட இந்தியாவில் உள்ள பல மாநில அரசாங்கங்களின் செயலூக்கமான ஆதரவுடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்தால் இந்த ஒடுக்குமுறை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

பெப்ரவரி 13 அன்று, பிரதானமாக வட மாநிலமான பஞ்சாபைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது “டெல்லி சலோ” (டெல்லிக்கு செல்வோம்) பேரணியைத் தொடங்கினர். பயிர்களுக்கு சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும். கிசான் மஸ்தூர் மோர்ச்சா (உழைக்கும் விவசாயிகள் முன்னணி) மற்றும் சம்யுக்தா கிசான் மோர்ச்சா அல்லது ஐக்கிய விவசாயிகள் முன்னணி (அரசியல் சாராதது) ஆகிய இரண்டு விவசாய விவசாயிகள் சங்கங்களால் இந்த எதிர்ப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்திய மற்றும் வெளிநாட்டு மூலதனத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டுள்ள ஒரு அரசியல் பிரதிநிதியாக, மோடி அரசாங்கம், டெல்லியில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் (125 மைல்கள்) தொலைவில் உள்ள ஷம்புவில் பஞ்சாப்-ஹரியானா மாநில எல்லைக் கடவையின் பஞ்சாப் பக்கத்தில் விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக கொடூரமான ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டதன் மூலம் பதிலிறுத்தது. பா.ஜ.க. அரசாங்கம், பல்லாயிரக்கணக்கான பொலிஸ் மற்றும் துணை இராணுவப் படைகளை அணிதிரட்டி விவசாயிகள் மீது போர் பிரகடனம் செய்துள்ளது; பாரிய சீமெந்துப் பாறை தடுப்புகள் மற்றும் முட்கம்பிகளுடன் பல அடுக்கு தடுப்புகளை அமைத்துள்ளது; இணையம் மற்றும் கைதொலைபேசி சேவைகளை சீர்குலைத்ததோடு விவசாயிகளின் போராட்டம் தொடர்பான பதிவுகளை இடும் ட்விட்டர் பாவனைகளை தணிக்கை செய்ய ட்விட்டர் நிர்வாகத்தை கோரும் அரச உத்தரவுகளை பிறப்பித்ததுடன் ஆளில்லா விமானங்களில் இருந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளைக் வீசி விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

புதன்கிழமை, 14 பெப்ரவரி 2024 அன்று, இந்தியாவின் புது தில்லியில் இருந்து கிட்டத்தட்ட 200 கிமீ (125 மைல்கள்) தொலைவில் வடக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைப் பிரிக்கும் ஷம்பு எல்லைக்கு அருகில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் கூடுகிறார்கள். அன்றைய தினம், பல்லாயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு உத்தரவாதமான பயிர் விலைகளைக் கோரி தலைநகர் புது தில்லிக்கு பேரணி செல்ல முயன்றபோது, ஆர்ப்பாட்டம் செய்த இந்திய விவசாயிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக போலீசாருடன் மோதினர். [AP Photo/Rajesh Sachar]

விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமான மோடி அரசாங்கத்தின் பதட்டமான பிரதிபலிப்பு, அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் மற்றும் வாஷிங்டன் உடனான சீன விரோத கூட்டணிக்கு எதிரான பரந்த சமூக எதிர்ப்பிற்கான ஒரு அணிதிரள்வு புள்ளியாக இந்தப் போராட்டம் மாறக்கூடும் என்ற அச்சத்தில் இருந்து தோன்றியதாகும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள பொது (மக்களவை) தேர்தல்களில் மோடியும் அவரது பா.ஜ.க.யும் இந்தியாவின் தேசிய அரசாங்கமாக மூன்றாவது முறையாக வெற்றி பெற முயற்சிக்கின்ற நிலையில், இந்த அச்சம் இன்னும் கூர்மையாக உள்ளது. 2014 மே முதல் அதிகாரத்தில் இருக்கும் மோடி, 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை “இரட்டிப்பாக்குவது” உட்பட, இந்தியாவின் உழைக்கும் மக்களுக்கு அளித்த பொய்யான தேர்தல் வாக்குறுதிகளில் எதையும் நிறைவேற்றத் தவறிவிட்டார். இந்தியாவின் பொருளாதாரம் விரிவடைந்துள்ள அதேவேளை, வருமானம் மற்றும் செல்வத்திலான வளர்ச்சயில் கிட்டத்தட்ட அனைத்துமே ஒரு சிறிய முதலாளித்துவ உயரடுக்கிற்கும் அவர்களின் உயர் மத்தியதர வர்க்க எடுபிடிகளுக்கும் சென்றுள்ள நிலையில், பெரும்பான்மையான மக்கள் வறுமை மற்றும் அதீத பொருளாதார பாதுகாப்பின்மையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொள்வதற்கான திட்டங்களை பெப்ரவரி 29 அன்று விவசாயிகள் சங்கங்கள் அறிவிக்க இருந்தன. எவ்வாறாயினும், அன்றைய தினம் சங்கங்கள் வெளியிட்ட ஒரு சுருக்கமான அறிக்கையில், பாதுகாப்புப் படைகளால் சுடப்பட்ட ஒரு இளம் விவசாயியான சுப்கரன் சிங்கின் மரணத்திற்கு “துக்கம் அனுஷ்டிப்பதாக” அறிவித்ததோடு மார்ச் 3 வரை அவற்றின் எதிர்காலத் திட்டங்களை அறிவிக்கப் போவதில்லை என்றும் கூறின. சுப்கரன் இறந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, அவரது சொந்த கிராமமான பலோவில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, விவசாயியின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்யும் வரை தகனம் செய்யப்படக்கூடாது என சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன.

சுப்கரன் மீதான மரியாதையை விடவும், அடுத்த நடவடிக்கைகளை அறிவிப்பதில் தொழிற்சங்கங்கள் மீண்டும் மீண்டும் தாமதப்படுத்துவதன் பின்னணியில் அதிகமான விடயம் உள்ளது. அரசாங்கமானது விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளை நிராகரித்து, டெல்லியை நோக்கி பேரணி செல்வதைத் தடுக்க பாரிய அரச வன்முறையைப் பயன்படுத்த தயாராக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள நிலைமைகளின் கீழ், சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நிச்சயமற்றவர்களாகவும் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து பிளவுபட்டும் உள்ளனர்.

பெப்ரவரி 21 மாலை ரப்பர் தோட்டா தாக்கியதில் சுப்கரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தி வயர் ஊடகத்திடம் பேசிய அவரது மாமனாரான பூட்டா சிங், விவசாயிகள் டெல்லியை நோக்கி அணிவகுத்துச் செல்வதைத் தடுப்பதன் மூலம் குழப்பத்தை உருவாக்கியதாக ஹரியானா மாநில அரசை குற்றம் சாட்டினார். “விவசாயிகளை அமைதியாக அணிவகுத்துச் செல்ல அனுமதித்திருந்தால் சுப் உயிருடன் இருந்திருப்பார்” என்று கூறினார். பூட்டாவின் கூற்றுப்படி, சுபாகரன் குடும்பம் பெரும் கடனில் இருப்பதுடன் 2.5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலத்தையே வைத்திருக்கிறது. “அவரது வயதான பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகளை கவனித்துக்கொள்வதற்கான ஒரே நம்பிக்கை ஷூப் மட்டுமே” என்று பூட்டா கூறினார்.

பெப்ரவரி 27, செவ்வாய்க்கிழமை, இந்தியாவின் விவசாயத் துறை உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று கோரி, “உலக வர்த்தக அமைப்பிலிருந்து வெளியேறு தினம்” என்னும் போராட்டங்களை ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) நடத்தியது. ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் படி, விவசாயிகள் தங்கள் ரக்டர்களை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் நிறுத்தி வைத்து நடத்தப்பட்ட இந்த போராட்டம் இந்தியா முழுவதும் 400 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நடைபெற்றது. “உலக வர்த்தக அமைப்புடனான இந்தியாவின் ஒப்பந்தங்கள் காரணமாக விவசாயத் துறைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை விவசாயிகள் உணர்ந்துள்ளனர்” என்று ஐக்கிய விவசாயிகள் முன்னணி தலைவர் தர்ஷன் பால் இந்தியன் எக்ஸ்பிரஸ் இடம் தெரிவித்தார்.

ஆம் ஆத்மி அல்லது சாமானிய மனிதன் கட்சியால் நடத்தப்படும் பஞ்சாப் மாநில அரசாங்கம், விவசாயிகளுக்கு எதிரான பா.ஜ.க. தலைமையிலான ஹரியானா அரசாங்கத்தின் கொடூரமான ஒடுக்குமுறையுடன் ஒத்துழைத்து வருகிறது. சுப்கரனின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று போராட்டக்காரர்கள் கருதும் ஹரியானாவைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் மீது எஃப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்ய அது மறுத்துவிட்டது. இது விவசாயிகளுக்கு அனுதாபம் காட்டுவதாக தோரணை காட்ட முனையும் ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தின் முதலீட்டாளர் சார்பு தன்மையை அம்பலப்படுத்துகிறது.

அந்த இளம் விவசாயியின் படுகொலை மீதான வெகுஜன கோபத்தைத் தணிக்க, ஆம் ஆத்மி கட்சியின் மாநில அரசாங்கம், சுப்கரனின் நெருங்கிய உறவினர்களுக்கு 10 மில்லியன் இந்திய ரூபாய் (120,000 அமெரிக்க டொலர்) கருணைத் தொகையையும் தொழில் வாய்ப்புகளையும் அறிவித்தது. இருப்பினும், சம்பந்தப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய மாநில அரசு மறுத்துவிட்டதை மேற்கோள் காட்டி, விவசாய சங்கத் தலைவர்கள் ஆரம்பத்தில் கருணைத் தொகையை நிராகரித்தனர்.

பொலிஸ் அடக்குமுறையின் போது குறைந்த பட்சம் ஒன்பது விவசாயிகள் கடுமையாக காயமடைந்ததுடன், சிலருக்கு பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. போராட்டம் தொடங்கியதில் இருந்து, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 180 ஆக உயர்ந்துள்ளது. பாட்டியாலா மாவட்ட சிவில் சத்திர சிகிச்சையாளர் ரமிந்தர் கவுர், தி வயர் இடம் கூறுகையில், பெரும்பாலான காயங்கள் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால் அல்லது ரப்பர் தோட்டாக்கள் சுடப்பட்டதால் ஏற்பட்டன என்றார். இது தவிர மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். போராட்டக் களத்தில் இரண்டு விவசாயிகள் மாரடைப்பால் இறந்தனர், மேலும் ஒருவர் துப்பாக்கி ரவையினால் ஏற்பட்ட காயத்தால் மரணமடைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது, என்றும் அவர் கூறினார்.

விவசாயிகளுக்கு எதிராக நடந்து வரும் அடக்குமுறையின் கொடூரத்தை சித்தரிக்கின்ற வகையில், ஹரியானா பொலிசார், சங்ரூரைச் சேர்ந்த மற்றொரு விவசாயியான 32 வயதான பிரித்பால் சிங்கை அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினர். அவர் “ஒரு சாக்கினுள் நுழைக்கப்பட்டார்.” அவர் தற்போது ஹரியானாவின் ரோஹ்தக்கில் உள்ள பி.ஜி.ஐ. மருத்துவமனையில் மூட்டு உடைவு மற்றும் பிற கடுமையான காயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். நியூஸ்லாண்ட்ரி வலைத்தளத்திடம் பேசிய பிரித்பாலின் மனைவி அமன்தீப் கவுர், “தாக்கப்பட்டதால் அவரது முகம் சிதைந்துவிட்டது. அவரது பற்கள் உடைந்துவிட்டன. இரண்டு நாட்களுக்குப் பிறகும், அவரது மூக்கில் இரத்தம் வடிகிறது. அவருக்கு தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது” என்றார். இத்தகைய இரக்கமற்ற பொலிஸ் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், மோடியும் இந்திய ஆளும் உயரடுக்கினரும் இந்தியாவின் ஏனைய பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்திற்கும், பா.ஜ.க. அரசாங்கம் அதன் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு விரோதமான எந்த எதிர்ப்பையும் பொறுத்துக் கொள்ளாது, என்ற தெளிவான செய்தியை அனுப்ப விரும்புகிறார்கள்.

சுப்கரன் சிங்கின் மரணத்தில் முடிந்த பெப்ரவரி 21 மோதலைத் தொடர்ந்து, பா.ஜ.க, தலைமையிலான ஹரியானா மாநில அரசாங்கம், தேசிய பாதுகாப்புச் சட்டம் 1980 ஐ செயல்படுத்தப் போவதாக விவசாய சங்கத் தலைவர்களை அச்சுறுத்தியது. தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ஒரு நபர் “தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் ஒரு செயலில்” ஈடுபடுகிறார் என்று நம்புவதற்கு காரணம் இருந்தால், ஒரு மாநில அல்லது மத்திய அரசாங்கத்திற்கு ஒரு வருடம் அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்திற்கு அவரை தடுப்புக்காவலில் வைக்க அதிகாரம் உள்ளது. இந்த எச்சரிக்கைக்கு எதிராக விவசாயிகள் மத்தியில் கடும் விமர்சனங்களும் ஆத்திரமும் அதிகரித்து வந்த நிலையில், பின்வாங்கிய அரசாங்க அதிகாரிகள் தங்கள் அச்சுறுத்தலை விலக்கிக்கொள்ளத் தள்ளப்பட்டனர். அத்துடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 16 விவசாய தலைவர்களையும் ஆர்வலர்களையும் விடுவிக்கத் தள்ளப்பட்டனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ஹரியானா அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், தேசிய பாதுகாப்பு சட்டத்தை பயன்படுத்துவது பற்றி தலைகீழாக மாறியதற்கான காரணம், அது “விவசாயிகளிடம் இருந்து மட்டுமன்றி, சமூகத்தின் ஏனைய பிரிவுகளிடம் இருந்தும் சீற்றத்தை தூண்டிவிடும்” என்பது நிரூபணமாகியிருக்கும் என ஒப்புக் கொண்டார்.

அரசாங்கம் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்துவதற்காக சில அற்ப சலுகைகளை வழங்குவதுடன் தனது கொடூரமான ஒடுக்குமுறையையும் இணைத்துக் கொண்டுள்ளது.

பெப்ரவரி 18 அன்று விவசாயிகள் சங்க தலைவர்களுக்கும் அரசாங்க அமைச்சர்களுக்கும் இடையே நடந்த நான்காவது சுற்று பேச்சுவார்த்தைகளின் போது, பா.ஜ.க. மத்திய அரசானது பருப்பு வகைகளான அர்ச்சார், துவரை, உளுந்து, சோளம் மற்றும் பருத்தி ஆகிய ஐந்து பயிர்களை பல்வேறு அரசு முகமைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கும் என்று ஒப்பந்த அடிப்படையிலான “உத்தரவாதங்களை” வழங்கியது. போராடும் விவசாயிகள் அவர்களின் கோரிக்கைகளுக்கு மிகவும் குறைவாக இருக்கும் இதுபோன்ற “உத்தரவாதங்களை” கோபத்துடன் நிராகரிப்பார்கள் என்பதை நன்கு அறிந்திருந்த ஐக்கிய விவசாயிகள் முன்னணி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் விரைவில் பின்வாங்கக் கூடிய இந்த முன்மொழிவை “முற்றிலுமாக நிராகரித்தது”. குறைந்தபட்ச பயிர் விலைக்கு உத்தரவாதம் அளிப்பதற்கு பதிலாக, பா.ஜ.க. விவசாய அமைச்சர், முன்மொழிவில் அடங்கியுள்ளதாக கூறப்படும் ஐந்து பயிர்களும் “ஒப்பந்த அடிப்படையில்” கொள்முதல் செய்யப்படும் என்று கூறினார். இதன் மூலம் அரசாங்கத்தின் “உண்மையான நோக்கம்” “அம்பலப்படுத்தப்பட்டது” என்று விவசாயகள் தொழிலாளர் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பாந்தர் கூறினார்.

அரசு நியமித்த சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையான குறைந்தபட்ச ஆதரவு விலையை முழுமையாக அமல்படுத்துவதை விட குறைவான எதையும் ஏற்க மாட்டோம் என்று விவசாயிகள் சூளுரைத்துள்ளனர். பல வருட விவாதங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலை எடையிடப்பட்ட சராசரி உற்பத்தி செலவில் குறைந்தபட்சம் 150 சதவீதமாக இருக்க வேண்டும் என்று ஆணையம் முன்மொழிந்தது. அனைத்து உள்ளீடுகளின் செலவையும், உழவனுக்கு சொந்தமான நிலங்களின் விஷயத்தில் கூட, நிலத்தை வாடகைக்கு விடுவதற்கான “செலவையும்” இந்தச் சுட்டெண்ணில் சேர்க்க வேண்டும் என்றும் அது கூறியது. 2020-21 ஆம் ஆண்டில் முதல் டெல்லி சலோவின் போது பா.ஜ.க. அரசு அளித்த பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதால், இந்த முறை பா.ஜ.க. அளித்த “வாக்குறுதிகள்” குறித்து விவசாயிகள் சரியாக சந்தேகிக்கிறார்கள்.

பல தசாப்தங்களாக, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி அல்லது பல்வேறு சாதி மற்றும் இன-பிராந்தியவாத கட்சிகள் தலைமையிலான இந்திய அரசாங்கங்கள், விவசாயத் துறையை வணிகமயமாக்க வேலை செய்துள்ள அதே நேரம், உரம் மற்றும் பிற முக்கிய உள்ளீடுகளுக்கான மானியங்கள் உட்பட சிறு விவசாயிகளுக்கான ஆதரவை வெட்டிக்குறைத்து வருகின்றன.

ஏனைய விவசாயிகளையும் தொழிற்சங்கங்களையும் அணிதிரட்டுவதன் மூலம் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக விவசாய சங்கத் தலைவர்கள் கூறினாலும், இந்த நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு அதன் போக்கை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற திவாலான முன்னோக்கை அடிப்படையாகக் கொண்டவை ஆகும். உண்மையில், மோடி அரசாங்கம் விவசாயிகளுக்கு எந்த அக்கறையான சலுகைகளையும் வழங்காது. ஏனென்றால் அவ்வாறு செய்வது அதன் முதலீட்டாளர் சார்பு கொள்கைகளுக்கு அது குறுக்கே நிற்பதோடு பரந்த சமூக எதிர்ப்பை, எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பரந்த சமூக எதிர்ப்பை ஒன்றுதிரட்டும் ஆற்றலை அது கொடுக்கும்.

காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சி.பி.எம். உட்பட எதிர்க்கட்சி அரசியல் கட்சிகள், இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி (இந்தியா) எனப்படும் தேர்தல் அணியின் அதிர்ஷ்டத்தை உயர்த்துவதற்கு இந்த போராட்டத்தை சுரண்டிக்கொள்ளும் நோக்கத்துடன் விவசாயிகளின் ஆதரவாளர்களாக காட்டிக் கொள்கின்றன. சமீப காலம் வரை தேசிய அரசாங்கத்திற்கான இந்திய ஆளும் வர்க்கத்தின் விருப்பமான கட்சியாக இருந்த பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான இந்தியா கூட்டணியானது மோடியின் பா.ஜ.க.வுக்கு ஒரு வலதுசாரி முதலாளித்துவ மாற்று அரசாங்கத்தை வழங்குகிறது. “முதலீட்டாளர் சார்பு” சீர்திருத்தம் மற்றும் இந்திய-அமெரிக்க இராணுவ-பாதுகாப்பு கூட்டணியை முன்நகர்த்துவதில் பா.ஜ.க.வை விட காங்கிரஸ் இரண்டாம் பட்சமானதல்ல.

ஆண்டு முழுவதும் நீடித்த 2020-21 விவசாயிகள் போராட்டத்தின் போது, சிபிஎம், விவசாயிகளுக்கு ஆதரவாக பாசாங்கு செய்யும் அதேவேளை, தொழிலாள வர்க்கத்தை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்திருக்க செயற்பட்டு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, மோடி ஆட்சிக்கும் ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் எதிராக, விவசாயிகளையும் அனைத்து கிராமப்புற உழைப்பாளிகளையும், எல்லாவற்றிற்கும் மேலாக விவசாயத் தொழிலாளர்களை ஒரு வெகுஜன இயக்கத்தில் அணிதிரட்டி, சோசலிச கொள்கைகளுக்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு தொழிலாளர் அரசாங்கத்திற்காகப் போராடுவதன் பேரில் தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான சக்தியாக தலையீடு செய்வதை தடுப்பதற்கு ஸ்ராலினிஸ்டுகள் முயல்கின்றனர். இது, குறிப்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி மற்றும் சி.பி.எம். உடன் இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (சி.ஐ.டி.யு.) தலைமையிலான மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டும் சேர்ந்து அழைப்பு விடுத்த பெப்ரவரி 16 அன்று நடந்த கிராமீன் பந்தின் (கிராமப்புற அடைப்பு) போது எடுத்துக்காட்டப்பட்டது. தொழிலாள வர்க்கத்தை இந்தியா கூட்டணிக்கு அடிபணியச் செய்யும் ஸ்ராலினிஸ்டுகளின் முன்னோக்கை அடிக்கோடிட்டுக் காட்டிய சி.ஐ.டி.யு. தலைவர் கே. ஹேமந்தா, “2024 தேர்தல்களில் பா.ஜ.க. அரசாங்கத்தை தோற்கடிப்பதே” பந்தின் நோக்கம் என்றார்.