மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
அமெரிக்காவிலும் உலகெங்கிலும், பெருநிறுவன நிறைவேற்று அதிகாரிகள் ஒரு சில தொழிலாளர்களிடம் இருந்து அதிக வேலையும் இலாபங்களும் பிழிந்தெடுக்கப்படும் என்று அவர்களின் பங்குதாரர்களுக்கு உறுதியளித்து வருவதுடன், வேலை வெட்டுக்கள் அன்றாடம் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
சமீபத்திய வருவாய் அழைப்புகள் பற்றிய மோர்கன் ஸ்டான்லி பகுப்பாய்வின் படி, “நிறுவனங்கள் செலவு ஒழுக்கத்தில் கவனம் செலுத்துவதால் மட்டுமன்றி, ‘செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்கால உற்பத்தித்திறனை இயக்கக்கூடிய தொழில்நுட்பங்களில்’ முதலீடு செய்வதால், இந்த வருவாய் பருவத்தில் அமெரிக்காவில் ‘தொழிற்பாட்டு செயல்திறன்’ முன்னெப்போதையும் விட மிகவும் உச்சத்தில் இருப்பதாக எழுத்துப்படி குறிப்புகள் காட்டுகின்றன.”
இந்த ஆய்வை வெளியிட்ட ப்ளூம்பெர்க், “செலவு குறைப்பு காரணமாக இந்த ஆண்டு இலாபம் குறைந்தது 20% அதிகரிக்கும் என்று வால்ட் டிஸ்னி நிறுவனம் தெரிவித்துள்ளது.” “செலவுகளைக் குறைப்பு” என்பது தொழில் அழிப்பையே அர்த்தப்படுத்துகிறது,” என மேலும் தெரிவித்துள்ளது.
ResumeBuilder நடத்திய ஒரு கணக்கெடுப்பில், “38 சதவீத வணிகத் தலைவர்கள் 2024 ஆம் ஆண்டில் வேலைநீக்கங்கள் நடக்கக்கூடும் என்று நினைப்பதுடன், சுமார் பாதி பேர் தங்கள் நிறுவனம் ஆட்சேர்ப்பை நிறுத்திவைக்கும் என்று கூறுகின்றனர்.” ஆய்வுக்கு பதிலளித்த 10 பேரில் நான்கு பேர், தாங்கள் தொழிலாளர்களை செயற்கை நுண்ணறிவைக் கொண்டு பிரதியீடு செய்வதாகக் கூறியதாக பிசினஸ் இன்சைடர் (Business Insider) எழுதியது. “ட்ரொப்பொக்ஸ், கூகிள் மற்றும் ஐ.பி.எம். போன்ற பிரதான தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிதாக செயற்கை நுண்ணறிவு மீது கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக வேலைநீக்கங்களை அறிவித்துள்ள நிலையில், இந்த போக்கு ஏற்கனவே தொடங்கியுள்ளது” என்று அது மேலும் கூறியது.
கடந்த சில நாட்களில் மட்டும், எஸ்டீ லாடர் (3,000 வரை), பாரமவுண்ட் குளோபல் (800), ஸ்னாப் (530), இன்ஸ்டாகார்ட் (250), பிளாக்பெர்ரி (200), சிரியஸ்எக்ஸ்எம் (160) ஆகியவற்றால் வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன. கடந்த ஆண்டு 58,560 வேலை வெட்டுக்களை அறிவித்த அமெரிக்க சுகாதாரதுறை முதலாளிகள், 2022 ஐ விட 91 சதவீதம் அதிகரித்து, தொடர்ந்து தொழிலாளர்களக் குறைத்து வருகின்றனர். One Medical மற்றும் Amazon Pharmacy நிறுவனத்தில் 400 பதிவிகளும், Pfizer நிறுவனத்தில் 52 பதவிகளும் குறைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாத இறுதியில், யு.பி.எஸ். 2024 இன் மத்தியில் 12,000 சம்பளம் பெறும் தொழிலாளர்களை வெறியேற்ற இருப்பதாவும், செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற உழைப்பு-சேமிப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை மும்மடங்காக்க இருப்பதாகவும் அறிவித்தது. பால்டிமோர், நியூ யோர்க் நகரம் மற்றும் பிற இடங்களில் வகைப்பிரித்தல் அகற்றப்பட்டுவிட்டதால் நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான, பண்டகசாலை தொழிலாளர்களின் வேலைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், யூ.பி.எஸ். நிர்வாகிகள், பங்குதாரர்களுக்கு 7.6 பில்லியன் டொலர்களை கடந்த ஆண்டு பங்கு திரும்பப் பெறுதல் மற்றும் அதிகரிக்கப்பட்ட பங்கு இலாபத்தின் வடிவில் அள்ளிக்கொடுத்ததாக அறிவித்தனர்.
பெருகிவரும் வேலைநீக்க அலை என்பது ஒரு பரந்த நிகழ்முறையின் பாகமாகும். இதில் நிறுவனங்களின் செலவுகள் சாத்தியமான மிகக் குறைந்த தொகைக்கு குறைக்கப்படுகின்ற அதேவேளை, பெரும் செல்வந்தர்கள் மற்றும் ஒட்டுண்ணித்தனமான நிதியியல் உயர்குடியினரக்கு அதிக வளங்களை பெருக்கெடுக்கச் செய்யப்படுகிறது. சீக்கிங் ஆல்பா, “பங்கு மீளப்பெறல் காய்ச்சல்” என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில், மெட்டா (50 பில்லியன் டொலர்), அலிபாபா (25 பில்லியன் டொலர்), டிஸ்னி (3 பில்லியன் டொலர்) மற்றும் ஏனைய கம்பனிகளும் பிரமாண்ட பங்குமறுகொள்முதல் திட்டங்களை அறிவித்துள்ளதுடன் பாரிய வேலைநீக்கங்களை அறிவித்துள்ளன.
வியாழக்கிழமை, உலகின் மூன்றாவது பெரிய வாகன உற்பத்தியாளரான ஸ்டெல்லாண்டிஸ், 2023 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டொலருக்கும் அதிகமான இலாபங்களையும் கிட்டத்தட்ட 2 பில்லியன் டொலர் பங்கு மீள்கொள்வனவையும் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனம் தற்போது 2,100 தற்காலிக தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து வருவதுடன், உலகளாவிய மறுசீரமைப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மிச்சிகன், ஓகையோ மற்றும் இண்டியானாவில் பாரிய வேலைநீக்கங்களையும் செய்து வருகிறது. கடந்த வாரம் இத்தாலிய ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர்கள் இத்தாலியில் டூரினில் உள்ள Mirafiori ஆலையில் 2,455 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராகவும், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலையை மூடப்போவதாக அச்சுறுத்தியதற்கும் எதிராக மூன்று நாட்கள் திடீர் வேலைநிறுத்தங்களை நடத்தினர்.
தொழிற்சங்க எந்திரம் இந்த ஆளும் வர்க்க தாக்குதலுக்கு உதவியாக உள்ளது. வாகனத் தொழில்துறை, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி மற்றும் யு.பி.எஸ். இல் வேலை வெட்டுக்களின் அலையானது, சென்ற ஆண்டில் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள், SAG-AFTRA, எழுத்தாளர்கள் சங்கம் மற்றும் டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கங்களால் கையெழுத்திடப்பட்ட “வரலாற்று” தொழிலாளர் உடன்படிக்கைகள் என்று சொல்லப்படுவனவற்றைப் பின்பற்றுகிறது. உண்மையில், பைடன் நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்ட இந்த ஒப்பந்தங்கள், பாரிய வேலை வெட்டுக்களுக்கு கதவைத் திறந்துவிட்டுள்ளன.
தொழிற்சங்க எந்திரம் வேலைநிறுத்தங்களை தடுத்துள்ளது அல்லது அவற்றை விற்றுத்தள்ளியுள்ளதுடன், பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வின் முழு செலவுகளையும் தொழிலாளர்களே ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ பணவீக்க விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்ட போதிலும், 2019 ஐ விட அடிப்படை பொருட்களுக்கு 19.6 சதவீதம் அதிகமாகவும், மளிகை பொருட்களுக்கு 25 சதவீதம் அதிகமாகவும் தொழிலாளர்கள் இன்னும் செலுத்துகின்றனர்.
தொழிலாளர் புள்ளிவிபர சபையின் புதிய புள்ளிவிவரங்களின்படி, தொழிற்சங்கமயமாக்கப்பட்ட தொழிலாளர்களின் ஊதியங்கள் டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த 12 மாதங்களில் 5.4 சதவீதமும், உற்பத்தித் துறையில் 4 சதவீதமும் மட்டுமே உயர்ந்தன. இது தொழிற்சங்கம் சாராத தொழிலாளர்கள் பெற்ற 4.2 சதவீத உயர்வு மற்றும் தொழிற்சங்கம் சாராத உற்பத்தி தொழிலாளர்கள் பெற்ற 3.9 சதவீத உயர்வை விட சற்றே அதிகமாகும். சுரங்கம், கட்டுமானம் மற்றும் உற்பத்தி உட்பட பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழில்களில், தொழிற்சங்கத்தில் இல்லாத தொழிலாளர்கள் பெற்ற 4.1 சதவீதத்துடன் ஒப்பிடும்போது உண்மையில் தொழிற்சங்கங்களில் உள்ள தொழிலாளர்கள் 3.9 சதவீத குறைவான ஊதிய உயர்வையே பெற்றுள்ளனர்.
இருப்பினும், விலைவாசி உயர்வுகள் இந்த பெயரளவு உயர்வுகளை பெருமளவில் விழுங்கிவிட்டது. அமெரிக்க கருவூலத்தின்படி, பணவீக்கத்தைக் கணக்கிடும்போது சராசரி வார ஊதியம் 2019 மற்றும் 2023 க்கு இடையில் 1.7% மட்டுமே அதிகரித்துள்ளது. மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் தாக்கம் பெருகிவரும் கடன், வறுமை, பசி மற்றும் உயிர்வாழ்வதற்கான தொடர்ச்சியான போராட்டமாக இருக்கின்றது.
ஆளும் வர்க்கத்தின் வேலை-வெட்டு பிரச்சாரத்தின் நோக்கம் வெறுமனே ஊதியங்களை ஒடுக்குவது மட்டுமல்ல, மாறாக வர்க்க உறவுகளை இன்னும் பரந்த அளவில் மறுசீரமைப்பதாகும். கோவிட்-19 தொற்றுநோயை எதிர்கொள்கையில், மனித உயிர்களை விட இலாபங்களுக்கு குற்றகரமான முன்னுரிமை அளிப்பதானது அமெரிக்காவில் மட்டும் 1.2 மில்லியன் மக்களின் உயிரிழப்புக்கும், மில்லியன் கணக்கானவர்கள் பலவீனப்படுவதற்கும், தொழிலாளர் சக்தியின் பங்களிப்பில் ஒரு கூர்மையான வீழ்ச்சிக்கும் இட்டுச் சென்றது. ஜனாதிபதி ட்ரம்ப், இரு கட்சிகளும் சேர்ந்து, வோல் ஸ்ட்ரீட்டின் பல டிரில்லியன் டாலர் பிணையெடுத்ததை மேற்பார்வையிட்டதோடு பைடென் நிர்வாகம் அதற்கு தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க வைக்கும் பணியை ஏற்றுக்கொண்டுள்ளது.
ஆனால் “தொழிலாளர் பற்றாக்குறையானது” ஒப்பீட்டளவில் சிறந்த ஊதியம் அல்லது சிறந்த நிலைமைகளை வழங்கும் வேலைகளைக் கண்டுபிடிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மை உட்பட தொழிலாளர்களுக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. பெடரல் ரிசர்வின் துரிதமான வட்டி விகித அதிகரிப்பின் நோக்கம், வேலைவாய்ப்பின்மையை அதிகரிப்பதன் மூலமாகவும் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்க அச்சுறுத்துவதன் மூலமாகவும் இந்த குறைந்தபட்ச சலுகைகளையும் கூட அழிப்பதாக இருந்து வந்திருக்கிறது.
பங்குச் சந்தையின் சாதனையளவிலான உயர்வு மற்றும் நிதியியல் செல்வந்த தட்டுக்களின் செல்வக் கொழிப்புக்கு மையமாக கிட்டத்தட்ட இலவச பணம் இருந்தபோதிலும் கூட, பெடரல் தலைவர் ஜெரோம் பவல் வட்டி விகிதங்களை வெட்டுவதை தாமதப்படுத்தும் அளவுக்கு இந்த கொள்கை மிகவும் முக்கியமானது. வேலைவாய்ப்பு அறிக்கையானது இன்னமும் வேலைக்கமர்த்தல் வேலைநீக்கங்களை விட அதிகமாக இருப்பதைக் காட்டிய போதிலும், எதிர்கால விகித வெட்டுக்கள், “தொழிலாளர் சந்தையில்” போதுமான “பலவீனம் ஏற்படுவதை” சார்ந்துள்ளது என்று பவல் சுட்டிக்காட்டினார்.
கடந்த வாரம் ஒரு கட்டுரையில் ஆளும் வர்க்கத்தின் கண்ணோட்டத்தை கொண்டாட்டத்துடன் வெளிப்படுத்திய ஃபைனான்சியல் டைம்ஸ்,, இதை “அதிகார சமநிலை தொழிலாளரிடமிருந்து முதலாளிக்கு மாறியுள்ளது” என்று கூறியது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாக எப்போதும் விரிவடைந்து வரும் உலகை வெல்லும் போருக்காக தொழிலாள வர்க்கத்தை விலை கொடுக்க கட்டாயப்படுத்தும் சமூக சேவை வெட்டுக்கள் மற்றும் ஏனைய தாக்குதல்கள் அடங்கிய ஒரு காட்டுமிராண்டித்தனமான சிக்கன திட்டத்தை திணிக்க பைடென் நிர்வாகம் தயாரிப்பு செய்து வருகின்ற நிலையில், தொழிற்சங்க எந்திரத்தால் செயல்படுத்தப்படும் இந்த மாற்றம் இன்றியமையாததாகும். காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை முழுமையாக ஆதரிக்கும் வெள்ளை மாளிகை, தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்கவும், ஈரான், ரஷ்யா மற்றும் சீனாவுக்கு எதிரான போர்களை விரிவாக்க அவசியமான முறையில், ஆலைகளில் தொழிலாளர் ஒழுக்கத்தையும் கொடூரமான சுரண்டலையும் சுமத்துவதற்கும் தொழிற்சங்க எந்திரத்தை மீண்டும் எதிர்பார்க்கிறது.
ஆனால் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் பாரிய வேலைவாய்ப்பின்மை மற்றும் வறிய நிலையை பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. ஏற்கனவே இத்தாலிய ஸ்டெலண்டிஸ் தொழிலாளர்களிடம் இருந்து வறிய ஊதியங்களுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்யும் மெக்சிக்கன் அவுடி தொழிலாளர்கள் வரையிலும், VW, Ford, Bosch, BASF, Continental, Michelin, Goodyear மற்றும் இன்னும் பிற பெருநிறுவனங்களில் தொழில் மீதான வரலாற்றுத் தாக்குதல்களை முகங்கொடுக்கும் ஜேர்மனிய தொழிலாளர்களின் பெருகிய இயக்கம் வரையிலும் தொழிலாள வர்க்கத்தின் இயக்கம் பெருகி உள்ளது.
அமெரிக்காவில் வேலைநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக ஊழியர்களும் முழு-நேர வாகனத்துறை தொழிலாளர்களும் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்க(UAW) அதிகாரத்துவத்தின் கூட்டுச்சதிக்கு எதிராக, வேலை வெட்டுக்களை எதிர்த்துப் போராட, சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுவை உருவாக்கியுள்ளனர்.
வேலை-வெட்டுக்கு எதிரான போராட்டமானது, முதலாளித்துவ-ஆதரவு மற்றும் போர்-ஆதரவு தொழிலாளர் அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட வேண்டியிருப்பதோடு, சாமானிய தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை விரிவுபடுத்துவதன் மூலமாக எல்லைகளைக் கடந்து ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.
ஆளும் வர்க்கத்தின் வெளிநாட்டில் போர் மற்றும் உள்நாட்டில் போர் என்ற திட்டநிரலின் ஒருங்கிணைந்த ஒரு வர்க்கக் கொள்கையை தொழிலாளர்கள் எதிர்கொள்வதால், தொழிலாள வர்க்கத்தின் தரப்பில் ஒரு அரசியல் எதிர்-தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.. இந்த எதிர்-தாக்குதலானது முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை போருக்கும் எதிரான போராட்டத்துடன் இணைப்பதோடு, தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அதன் நோக்கமாகக் கொள்ள வேண்டும்.
மிகவும் பகுத்தறிவார்ந்த முறையில் ஒழுங்கமைக்கப்பட்ட, அதாவது ஒரு சோசலிச சமூகத்தில், மனிதகுலத்தின் உற்பத்தி ஆற்றலை அதிகரிக்கும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள், வேலை வாரத்தைக் குறைக்கவும், தொழிலாளர்கள் மீதான சரீரரீதியான பாதிப்புகளைக் குறைக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரங்களை பெரிதும் உயர்த்தவும் பயன்படுத்தப்படும். தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தை அதன் சொந்தக் கரங்களில் எடுத்துக்கொண்டால் மட்டுமே, காலாவதியான மற்றும் கொடூரமான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரம்மாண்டமான தொழில்துறைகளை தொழிலாள வர்க்கத்தின் கரங்களில் ஒப்படைத்து, உலகப் பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்காக அல்லாமல் மனிதயின தேவையின் அடிப்படையில் மறுஒழுங்கு செய்வதும் சாத்தியமாகும்.
மேலும் படிக்க
- இத்தாலிய வாகனத் தொழிலாளர்கள் ஸ்டெல்லாண்டிஸ் மிராஃபியோரி ஆலையில் மூன்றாவது நாளாக வெளிநடப்பு செய்தனர்
- ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனத்தில் பாரிய வேலைநீக்கங்களையும் வேலைகள் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதலையும் எதிர்!
- 12,000 வேலைகளை UPS பெருநிறுவனம் வெட்டுகிறது: ஆளும் வர்க்கமானது வெகுஜன வேலையின்மைக் கொள்கையை துரிதப்படுத்துகிறது