முன்னோக்கு

ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) நிறுவனத்தில் பாரிய வேலைநீக்கங்களையும் வேலைகள் மீது தீவிரமடைந்து வரும் தாக்குதலையும் எதிர்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஷிப்ட் மாற்றங்கள் ஸ்டெல்லாண்டிஸ் வாரன் டிரக் அசெம்பிளி ஆலை, டிசம்பர் 15, 2023

அமெரிக்காவின் ஸ்டெல்லாண்டிஸில் நூற்றுக்கணக்கான துணை (தற்காலிக) தொழிலாளர்கள் திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம், வாகனத் துறையிலும் உலகெங்கிலும் வேகமாக அதிகரித்து வரும் வேலைகளின் அழிப்பானது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, கடந்த வாரம் இண்டியானாவின் மெட்ரோ டெட்ராய்ட் மற்றும் கோகோமோவில் 539 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் அவர்களின் காப்பீடு இம்மாத இறுதிக்குள் துண்டிக்கப்படும் என்று கூறப்பட்டது. கோகோமோவிலுள்ள இண்டியானா டிரான்ஸ்மிஷன் ஆலையின் துணை (தற்காலிக) ஊழியர் (SE) ஒருவர் செவ்வாயன்று 100 துணை (தற்காலிக) ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

“குறுகிய காலத்தில் இல்லாவிட்டாலும், அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 1,600 துணை (தற்காலிக) ஊழியர்கள் கணிசமாகக் குறைக்கப்படுவார்கள்” என்று உள்ளூர் அதிகாரிகளுக்கு ஜனவரி 13 அன்று எழுதிய கடிதத்தில், ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கம் (UAW)

இதை ஒப்புக்கொண்டிருந்தது.

உண்மையில், நவம்பரில் புதிய UAW-ஸ்டெல்லாண்டிஸ் தொழிலாளர் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியவர்களில் 5,300 துணை (தற்காலிக) ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதியளவானவர்களை வேலைநீக்கம் செய்ய UAW ஆனது நிறுவனத்திற்கு பச்சைக்கொடி காட்டியிருந்தது. இது கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டெல்லாண்டிஸில் முன்னர் அறிவிக்கப்பட்ட 3,700 வேலைநீக்கங்களையும், ஜெனரல் மோட்டார்ஸ் (GM) மற்றும் ஃபோர்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான வேலைநீக்கங்களையும் விட அதிகமாகும்.

பாரிய வேலைநீக்கங்கள் UAW தொழிற்சங்க இயந்திரத்தின் காட்டிக்கொடுப்பு மற்றும் துரோகத்தனங்களின் அளவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இது கடந்த இலையுதிர்காலத்தில் அதன் போலியான வரையறுக்கப்பட்ட” வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் இந்த ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந்த வேலைநீக்கங்கள், UAW தங்களிடம் பொய் சொல்வதாக கண்டனம் செய்ததோடு, ஆலைகளிலுள்ள தொழிலாளர்கள் அடுத்த இலக்குகளாக இருப்பார்கள் என்று கூறி, துணை (தற்காலிக) ஊழியர்கள் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிரான போராட்டத்தில் இணையுமாறு முழுநேரத் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வேலைநீக்கங்கள் தோற்கடிக்கப்பட வேண்டுமானால், தொழிலாளர்கள் விவகாரங்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். சாமானியக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) ஒவ்வொரு வாகன ஆலையிலும், UAW தொழிற்சங்க இயந்திரத்திலிருந்து சுயாதீனமான சாமானியர் குழுக்களை அமைக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது, இது தகவல்களைப் பகிர்வதற்கும், வேலை வெட்டுக்களை நிறுத்துவதற்கு வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற போராட்டங்களை தயாரிப்பது உட்பட பொதுவான நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்குமாகும்.

“ஒருவருக்கு இழைக்கப்படும் அநீதி நம் அனைவரையும் பாதிக்கிறது!” என்ற பழைய தொழிலாளர் முழக்கத்தை தொழிலாளர்கள் புதுப்பிக்க வேண்டும். ஆட்குறைப்புகள் நிறுத்தப்படாவிட்டால், இப்போது பெருநிறுவன உரிமையாளர்கள் பெருமளவிலான வேலைகளை அழிக்கவும், எஞ்சியுள்ள தொழிலாளர்களை பயமுறுத்தவும் நடவடிக்கை எடுப்பார்கள். சமூகப் பேரழிவு, வீடற்ற நிலை, போதை பொருளுக்கு அடிமையாதல், தற்கொலைகள் மற்றும் பிற சமூகப் அவலங்களுக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள்.

உண்மையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வேலைநீக்கங்கள், நூறாயிரக்கணக்கான வேலைகளை உள்ளடக்கிய அரை நூற்றாண்டின் வாகனத் தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வேலைநீக்க அலையின் ஈட்டியின் நுனி மட்டுமே ஆகும். நிறுவனங்கள் வளர்ந்து வரும் மின்சார வாகன (EV) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தொழிலாளர்களின் முழு பிரிவுகளையும் அகற்றுகின்றன.

மறுசீரமைப்பு திட்டத் தாக்குதலுக்கு வரவிருப்பது இயந்திர (engine) மற்றும் உந்துவிசை அமைப்பு தொழில்நுட்ப (powertrain) தொழிலாளர்கள் ஆவர். இவர்களுக்கு பதிலாக மின்கல (battery) உற்பத்தித் தொழிலாளர்களால் பிரதியீடு செய்யப்பட உள்ளனர். இவர்கள் அவர்களின் தற்போதைய ஊதியங்களில் கணிசமாக குறைந்த பகுதியையே பெறுவார்கள். புதிய ஜெனரல் மோட்டர்ஸ் (GM) ஒப்பந்தத்தின் கீழ் GM-க்கு சொந்தமான மின்கல உற்பத்தியாளரான அல்டியத்தின் தொடக்க ஊதியம் நிலையான ஊதியத்தில் இருந்து 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சின்க்ரியான் (Syncreon), போர்க் வார்னர் (Borg Warner) போன்ற நிறுவனங்களில் ஏற்கனவே வாகன உதிரிபாகத் தொழிலாளர்கள் மத்தியில் வேலைநீக்கங்கள் குவிந்து வருகின்றன.

வேலைநீக்கம் மற்றும் ஆட்குறைப்பு சர்வதேச அளவில் உள்ளன. ஸ்டெல்லாண்டிஸானது இத்தாலியிலுள்ள அதன் ஃபியட் மற்றும் மசெராட்டி பிரிவுகளில் 2,250 வேலை வெட்டுக்களை அறிவித்தது. ஸ்பெயினில் அமைந்துள்ள அதன் ஆலைக்கு சாதகமாக, புதிய மின்சார வாகன (EV) திட்டங்களுக்கான போட்டி ஏலப் போரின் விளைவாக, ஜேர்மனியின் சார்லூயிஸில் உள்ள அதன் ஆலையை மூட ஃபோர்டு முடிவு செய்துள்ளது. ஜேர்மன் உதிரிபாகத் தயாரிப்பு நிறுவனங்களான கான்டினென்டல் மற்றும் போஷ் நிறுவனங்களும் சமீபத்திய வாரங்களில் வேலைநீக்கங்களை அறிவித்துள்ளன. ஐரோப்பாவில் மட்டும் 500,000 வேலைகளை வெட்டுவதற்கு, மின்சார வாகன (EV) உற்பத்திக்கு மாறுதல் பயன்படுத்தப்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மற்ற தொழில்களும் பெரும் வேலைநீக்கங்களை மேற்கொள்கின்றன. விநியோக நிறுவனமானது இந்த ஆண்டு முழுவதும் ரோபோடிக்ஸ் பயன்பாட்டை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதால் UPS நிறுவனமானது நூற்றுக்கணக்கான பணித் தளங்களில் வேலைகளை குறைத்தது. சமீபத்திய ஒரு கணக்கெடுப்பில், 10 வணிகத் தலைவர்களில் நான்கு பேர் இந்த ஆண்டு ஆட்குறைப்புக்களை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதே எண்ணிக்கையிலான தானியங்கி தொழில்நுட்பமும் (automation) ஒரு முக்கிய காரணமாக இதற்கு இருக்கிறது.

தொழிலாள வர்க்கமானது இந்தப் பூகோளரீதியான வேலை அழிப்பிற்கு அவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்காக ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதல் மூலம் பதிலிறுக்க வேண்டும். சாமானியர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC), வேலை வெட்டுக்களை நிறுத்துவதற்கும் மாற்றியமைப்பதற்கும் கட்டாயப்படுத்துவதற்காகவும், முழு தொழில்துறையிலும் உள்ள தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தி, விநியோகத்துறைகள் மற்றும் பிற துறைகளிலுள்ள தொழிலாளர்களை உள்ளீர்த்து, ஒரு சர்வதேச இயக்கத்தை கட்டியெழுப்ப அழைப்பு விடுக்கிறது.

தொழிற்சங்க இயந்திரத்தின் பங்கு

ஒட்டுமொத்த தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக ஒரு கிளர்ச்சி அவசியமாகும். தொழிற்சங்கத் தலைவர் ஷான் ஃபைனின் புதிய UAW நிர்வாகமானது கூட்டாட்சி அரசாங்கத்தை உள்ளடக்கிய ஒரு சூழ்ச்சியாக நிறுவப்பட்டது. மோசடியால் சிதைக்கப்பட்ட தேர்தலில், உண்மையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமான தொழிலாளர்கள் வாக்குகளைப் பெறவில்லை, இதனால் வேலைகள் மீதான தாக்குதலின் அடுத்த கட்டத்தை மறைக்க நேர்மையற்ற சொற்றொடர்களைத்தான் ஷான் ஃபைனினால் பயன்படுத்த முடியும்.

கடந்த இலையுதிர்காலத்தில் ஃபைனின் “வரையறுக்கப்பட்ட” வேலைநிறுத்தம், இலாபங்களை உருவாக்கும் வேலையில் பெரும்பான்மையான தொழிலாளர்களை வைத்திருப்பதை உள்ளடக்கி இருந்த்து. அதே நேரத்தில் அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மறியல் போராட்ட வரிசையில் நிறுத்தப்பட்டனர். தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு முன்பே வேலைநிறுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது, UAW ஆனது “ஆம்” வாக்குகளை அறிவித்தபோது பல தொழிலாளர்கள் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினர்.

ஆதரவாக வாக்களிக்க துணை (தற்காலிக) ஊழியர் உறுப்பினர்களைப் பெறுவதற்காக, அவர்கள் முழுநேர வேலை நிலைக்கு “உள்வாங்கப்படுவார்கள்” என்று UAW ஆனது அந்த நேரத்தில் உறுதியளித்தது. இப்போது அவை தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டதால், அவைகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.

ஜனநாயகத்திற்கான அனைத்து தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தும் (Unite All Workers for Democracy) குழு மற்றும் ஃபைனை ஊக்குவித்த அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) போன்ற குழுக்கள் இப்போது அதிகாரத்துவத்திற்குள்ளேயே உயர் பதவிகளை வகிக்கின்றன மற்றும் 1980 களில் இருந்து ஆழமான வேலைநீக்கங்களை செயல்படுத்த உதவுவதற்கு நேரடி பொறுப்புடையவைகளாக இருக்கின்றன. இதற்கிடையில், பெருநிறுவன தன்னலக்குழுவுக்கு வழங்கிய சேவைகளுக்காக வணிக பத்திரிகைகளில் ஃபெய்ன் “ஆண்டின் சிறந்த தொழிலாளர் தலைவர்“ என்று பாராட்டப்படுகிறார்.

இதேபோன்ற சூழ்ச்சிகள் மற்ற தொழிற்சங்கங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அங்கு பல தசாப்தங்களாக காட்டிக்கொடுப்புகள் அதிகாரத்துவத்தின் முகத்தை காட்டியுள்ளன. இதில் டீம்ஸ்டர்களும் அடங்கும், அங்கு பொதுத் தலைவர் சீன் ஓ பிரையனின் நிர்வாகமானது UPS ஆனது அதன் சொந்த வேலைநீக்கங்களை மேற்கொள்ள உதவுகிறது.

தொழிலாளர்களின் சார்பாக செயற்படுமாறு தொழிற்சங்க இயந்திரத்திற்கு “அழுத்தம்” கொடுப்பது பணி அல்ல, மாறாக தொழிலாளர்கள் உண்மையில் கட்டுப்படுத்தும் சாமானிய குழுக்களை அமைப்பதும் அதற்குப் பதிலாக இவைகளை மாற்றீடு செய்வதும் அவசியமாகும். தொழிலாளர்களுக்கு எதிரான அதிகாரத்துவத்தின் குரோதம் அதன் சமூக நலன்களால் தீர்மானிக்கப்படுகிறது. மின்சார வாகனத்திற்கு மாறுதலைப் பொறுத்தவரை, அதன் ஒரே கவலை என்னவென்றால், அவர்களின் ஆறு இலக்க சம்பளம் மற்றும் விலையுயர்ந்த விடுமுறைகளுக்கு நிதியளிப்பதற்காக தொழிலாளர்களின் சந்தாத் தொகையை அவர்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதாகும்.

பாரிய வேலைநீக்கங்களின் ஆளும் வர்க்கக் கொள்கை

UAW இன் பெருநிறுவன-சார்பு தொழிற்சங்க இயந்திரம் ஆளும் வர்க்கத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தி வருகிறது, இது முழு அரசியல் அமைப்புமுறை மற்றும் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளால் பாதுகாக்கப்படுகிறது.

ஆட்குறைப்பு என்பது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ கொள்கையாகும். பெடரல் ரிசர்வ் (மத்திய வங்கி) கடந்த இரண்டு ஆண்டுகளாக பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியங்களுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக போராடுவதற்காக, வேலை வெட்டுக்களை அதிகரிப்பதற்கும் ஊதியங்களை குறைப்பதற்கும் வெளிப்படையாக வட்டி விகிதங்களை உயர்த்துவதில் செலவிட்டுள்ளது. பைடென் நிர்வாகமும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மூலம் இந்த கொள்கையை செயல்படுத்தியுள்ளது. இதுதான் அவர் “அமெரிக்க வரலாற்றில் மிகவும் தொழிலாளர் சார்பு ஜனாதிபதி” என்ற கூற்றின் உண்மையான அர்த்தமாகும்.

இது, நிதிய அமைப்புமுறையின் இலாபங்களை அதிகரிக்க வளங்களை விடுவிப்பது, மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் வேகமாக உக்கிரமடைந்து வரும் போர்களுக்கு நிதியளிப்பதே இதன் நோக்கமாகும். வாஷிங்டனின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற விரும்பும் மின்சார விநியோகச் சங்கிலிகளில் தற்போது ஆதிக்கம் செலுத்தும் சீனாவுக்கு எதிரான வெளிப்படையான போருக்கான தயாரிப்புகளில் வாகனத் தொழில்துறை குறிப்பாக முக்கியமானது.

இந்த வேலைநீக்கங்கள் சோசலிஷ்ட் வாகனத்துறை தொழிலாளரான வில் லேமனின் UAW தலைவருக்கான தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகின்றன. அவரது பிரச்சாரம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை உடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது, சீர்திருத்தம் செய்ய அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்துடன் இந்த சாமானியர்களின் கிளர்ச்சியை அவர் இணைத்தார்.

முதலாளித்துவத்தின் கீழ், தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் எப்போதும் தொழிலாள வர்க்கத்தின் சுரண்டல் வீதத்தை பரந்த அளவில் அதிகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வேலையை எளிதாகவும், மிகவும் திறமையாகவும் மாற்றும் அதே தொழில்நுட்பம், வாழ்க்கையின் சுமைகளைக் குறைக்கவும், வறுமை, வீடற்ற தன்மை மற்றும் பிற சமூக பிரச்சினைகளை அகற்ற பயன்படுத்தக்கூடிய வளங்களை விடுவிக்கவும் பயன்படுத்தப்பட முடியும்.

இந்த தொழில்நுட்பத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் அடிப்படை பிரச்சினை ஆகும். முதலாளித்துவ செல்வந்த தட்டுக்கள் போருக்குள் மூழ்குகின்ற அதேவேளையில், தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் தங்களை செழிப்பாக்கிக் கொள்ள மின்சார வாகனங்கள் மற்றும் தானியங்கிமயமாக்கலைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுமா அல்லது தொழிலாள வர்க்கம் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சமூகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமா?

தொழிலாளர்கள் இப்போதே எதிர்த்தாக்குதலுக்கான கட்டமைப்பை கீழிருந்து தொடங்க வேண்டும். தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்குத் தேவையானதாகக் கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் தயாரிப்பதற்கும், வேலை நடவடிக்கைகள் உட்பட தங்களுக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன என்பதை அவர்கள் வலியுறுத்த வேண்டும். இதற்கு ஐக்கிய வாகனத் தொழிலாளர் (UAW) தொழிற்சங்க அதிகாரத்துவத்திலிருந்து சுயாதீனமாகவும் எதிராகவும் ஒவ்வொரு ஆலையிலும் சாமானியர் வேலையிட நடவடிக்கைக் குழுக்களின் வலையமைப்பை அபிவிருத்தி செய்வது அவசியமாகிறது.

IWA-RFC ஆனது பின்வருவனவற்றிக்கு அழைப்புவிடுக்கிறது:

  • அனைத்து வேலை வெட்டுக்களுக்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும்!
  • ஊதிய அதிகரிப்புடன், வேலை நாளின் நேர அளவைக் குறைப்பது, மின்சார வாகனங்களைத் தயாரிக்கத் தேவையான குறைவான மணிநேரங்களைக் கணக்கிடுவது, அத்துடன் பல தசாப்தங்களாக தேக்கமடைந்துள்ள ஊதியங்களை ஈடுசெய்வது!
  • உலகளவில் வேலைவாய்ப்பு அழிப்பை எதிர்த்துப் போராட எல்லைகளைக் கடந்து ஒன்றிணையுங்கள்!
  • தொழிலாளர்களின் ஜனநாயகத் கட்டுப்பாட்டிற்குள் வாகனத் தொழிற்துறையை சமூக உடைமையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்!

உங்கள் ஆலையில் இந்த போராட்டத்தை நடத்த ஒரு சாமானியர் குழுவை உருவாக்குங்கள். உதவிக்காக உலக சோசலிச வலைத் தளத்தைத் தொடர்பு கொள்ளவும், வாகனத் துறையிலும் அதற்கு அப்பாலுமுள்ள பிற சாமானியக் குழுக்களுடன் தொடர்பு கொள்ளவும் கீழேயுள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.