முன்னோக்கு

12,000 வேலைகளை UPS பெருநிறுவனம் வெட்டுகிறது: ஆளும் வர்க்கமானது வெகுஜன வேலையின்மைக் கொள்கையை துரிதப்படுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.           

செப்டம்பர் 21, 2021 செவ்வாயன்று, UPS இன் வாகன ஓட்டுனரான ஜோ ஸ்பீலர் ஒரு விநியோகத்தில்  ஈடுபடுகிறார். [AP Photo/Gene J. Puskar]

புதன்கிழமையன்று UPS (யுனைடெட் பார்சல் சர்வீஸ்- ஐக்கிய பொதி சேவை) நிறுவனமானது $1 பில்லியன் டாலர்கள் செலவைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பாகமாக,  மாதச் சம்பளம் பெறும் 12,000 தொழிலாளர்களை —அதன் உலககெங்கிலுமுள்ள மேலாண்மைக் குழு ஊழியர்களில் 14 சதவீதம் பேர்களை - பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் இராட்சத விநியோக பெருநிறுவனத்தின் பெருமளவிலான பணிநீக்கங்களானது, வாகன உற்பத்தித்துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் பிற தொழிற்துறைகளில் வேலை-வெட்டுக்களின் வேகமான மற்றும் பூகோளரீதியான அலையின் ஒரு பாகமாக உள்ளது.

முதலீட்டாளர்களுடனான ஒரு கலந்துரையாடல் அழைப்பில், UPS இன் தலைமை நிறைவேற்று மேலாளரான (CEO) கரோல் பி.டோமே கூறுகையில், தனது நிறைவேற்று குழுவானது, நிறுவனத்தின் உலகளாவிய பணியாளர்களில், “COVID காலப் பகுதியில் தேவை உச்சத்தில் இருந்தபோது’ 540,000 இருந்து  இன்று 495,000 ஆகக் குறைத்துள்ளதாக பெருமையடித்துக் கொண்டார். வர்த்தகத்தின் அளவு அதிகரித்தாலும், மேலாளர்கள் மீண்டும் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

டீம்ஸ்டர்ஸ் (Teamsters) தொழிற்சங்கமானது இந்த வெட்டுக்கள் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தொழிலாளர்களைப் பாதிக்காது என்று கூறினாலும், மேலாண்மைப் பதவிகள் குறைக்கப்படுகின்றன, ஏனெனில் சேமிப்புக் கிடங்கு பணியாளர்களை விட மிகக் குறைவான டிரக்  ஓட்டுநர்கள் மற்றும் பொதி விநியோக  பணியாளர்களை வைத்து UPS ஆனது நிர்வகிக்க விரும்புகிறது. அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களுக்குள், பால்டிமோர் மையத்தில் உள்ள தொழிலாளர்கள் ஃபேஸ்புக்கில்  பகல்நேர ஷிப்ஃட் முடிவிற்கு வந்துவிட்டதாக அறிவித்தனர், இது சமீபத்திய வாரங்களில் பகல்நேர ஷிப்ஃடை இழக்கும் குறைந்தபட்சம் மூன்றாவது பெரிய மையமாக உள்ளது.

குறைவான தொழிலாளர்களிடம் இருந்து அதிக அளவு உழைப்பை பிழிந்தெடுக்க, உழைப்பு-சேமிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதை UPS ஆனது துரிதப்படுத்தும் என்று டோமே கூறினார். கென்டக்கியின் லூயிஸ்வில்லில் உள்ள புதிய UPS வேக வசதியை சுட்டிக்காட்டி, “தானியங்கி இயந்திரம் (robotics), தானியங்கி (automation), இயந்திர வழி கற்றல் (machine-learning) மற்றும் செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆகியவற்றை பூர்த்தி செய்யும் செயல்பாடுகளை மேம்படுத்துவதால், அதற்கு வேகம் என்று பெயரிட்டோம்” என்று கூறினார்.

நிறுவனமானது அதன் இறுதியாண்டு நிதிநிலை அறிக்கையை அறிவித்த உடனேயே வேலை வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டன, அமெரிக்காவில் $5.5 பில்லியன் உட்பட, வர்த்தக தொகுதி அளவு வீழ்ச்சியடைந்த போதிலும், இது 2023 இல் நிறுவனம் $9.9 பில்லியன் டாலர்கள் தொழிற்பாட்டு இலாபத்தை ஈட்டியது. பங்கு வாங்கிவிற்றல்கள் மூலமாகவும் மற்றும் பங்கு ஆதாயங்களை அதிகரித்ததன் மூலமாகவும் 7.6 பில்லியன் டாலர்கள் பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதாகவும் UPS அறிவித்தது. பெரிய முதலீட்டாளர்கள் இப் பெருமளவிலான தொகையை அறுவடை செய்த அதேவேளையில், டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கத்துடனான அதன் புதிய உடன்படிக்கையில் 12 சதவீத ஊதிய உயர்வை ஈடுகட்ட நிறுவனம் வேலை செய்த நிலையில், கடந்த காலாண்டில் தொழிலாளர்கள் அவர்களின் வேலை நேரம் கிட்டத்தட்ட 10 சதவீதம் குறைக்கப்பட்டதைக் கண்டனர்.

350,000 தொழிலாளர்களின் ஏகமனதாக வேலைநிறுத்த வாக்கெடுப்பை மீறி தொழிற்சங்கமானது ஒரு “வரலாற்று” ஒப்பந்தத்தை வென்றதாகக் கூறிகொண்டு, டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கத் தலைவர் சீன் ஓ’பிரைன் மற்றும் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்ட் (DSA) அமைப்பின் மக்கள் தொடர்பு செயற்பாட்டாளர்களாலும் பரப்பப்பட்ட பொய்களானது வேலை வெட்டுக்கள் மூலம் அம்பலப்படுத்துகின்றன. டீம்ஸ்டர்ஸ் அதிகாரத்துவமானது வேலை வெட்டுக்கள் வரப்போகிறது என்பதைக் குறித்து முன்கூட்டியே அறிந்திருந்தது மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதில் அதன் ஒத்துழைப்பை வழங்கியது.

UPS இன் வேலைக் வெட்டுக்களைப் பற்றி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் இவ்வாறு எழுதியது, “பல அமெரிக்க நிறுவனங்கள் மக்களை பணிநீக்கம் செய்கின்றன, அதேசமயம் நிறைவேற்று மேலாளர்கள் செலவுகளைக் குறைப்பது பற்றி தீர்மானிக்கும்போது தேவையற்ற பதவிகளை அகற்றவும் மற்றும் முடிவெடுப்பதை விரைவுபடுத்தவும் விரும்புகின்றனர், நிதியாண்டின் தொடக்கத்தில் அடிக்கடி நிகழும் பட்ஜெட் இறுக்கத்திற்கு அப்பால், நிறைவேற்று மேலாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர், அதாவது வேலைகளைக் குறைக்கும் பணிகள் இன்னும் முடிந்துவிடவில்லை என்ற உணர்வு அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

இந்த வெட்டுக்கள் பொருளாதாரத்தின் பரந்த பிரிவுகளில் பரவியுள்ளன. கடந்த ஆண்டு 260,000 தொழில்நுட்பத்துறை வேலைகள் அகற்றப்பட்ட பிறகு, 2024 முதல் மாதத்தில் மேலும் 24,000 தொழில்நுட்பத்துறை வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்துறை பணிநீக்கங்களில் PayPal (2,500 வேலைகள்), மைக்ரோசாப்ட் வீடியோ கேம் பிரிவு (1,900), யூனிட்டி மென்பொருள் (1,800, Unity Software), Google (1,000) ஆகியவைகள் அடங்குகின்றதோடு, ஈபே (1,000, EBay), சேல்ஸ்ஃபோர்ஸ் (700, Salesforce), செய்தியிடல் தளமான டிஸ்கார்ட் (170, Discord) மற்றும் அமேசானின் பிரைம் வீடியோ, எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ட்விட்ச் லைவ்ஸ்ட்ரீமிங் (Twitch livestreaming) பிரிவுகளில் நூற்றுக்கணக்கான வேலைகளும் வெட்டப்பட்டுள்ளன. 

புதன்கிழமையன்று, COVID-19 தடுப்பூசி தயாரிப்பாளரான Novavax அதன் பணியாளர்களில் கூடுதலாக 12 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்தது, இது கடந்த மே மாதம் திட்டமிடுவதாக முன்னர் கூறிய 25 சதவீதத்திற்கு மேலானது, அது தீவிரமாக செலவுகளைக் குறைக்க நகருகையில் இவ்வாறு செய்கிறது.

மற்றைய இடங்களில், பிரிண்ட்மேக்கர் ஜெராக்ஸ் 3,000 க்கும் மேற்பட்ட வேலைகளை குறைக்கிறது. Macy’s 2,350 வேலைகளையும், இணையவழி சில்லறை விற்பனையாளரான Wayfair 1,650 வேலைகளையும் குறைக்கிறது. சிட்டிகுரூப் 2026 இறுதிக்குள் 20,000 வேலைகளை குறைக்கிறது, மேலும் பிளாக்ராக் (Blackrock) 600 வேலை வெட்டுக்களை அறிவித்துள்ளது. சிஎன்என், என்பிசி நியூஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், நியூயார்க் டெய்லி நியூஸ், ஃபோர்ப்ஸ், ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் மற்றும் பிற செய்தி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் வேலைகளை இழக்கின்றனர்.

அடுத்த வாரம், ஓஹியோவின் டோலிடோ மற்றும் மிச்சிகனில் டெட்ராய்டில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் ஆலைகளில் கிட்டத்தட்ட 4,000 வாகனத்துறை தொழிலாளர்கள் பணிநீக்கங்களை எதிர்கொள்ளுகின்றனர், நூற்றுக்கணக்கான துணை (தற்காலிக) பணியாளர்கள் (SEs) திடீரென பணிநீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர் இது நிகழ்கின்றது. ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டர்ஸ் (GM) ஆகியவையும் ஆயிரக்கணக்கானவர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. வாகன உற்பத்தியாளர்கள் உலகளாவிய மறுசீரமைப்பை மேற்கொண்டு, செலவுகளையும் வேலைகளையும் குறைத்து, மின்சார வாகன சந்தையில் ஒரு முன்னணி நிலையைப் பின்தொடர முயல்கின்றனர். ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில், Stellantis, VW, Bosch, Continental, ZF இன்னும் பிற வாகன, உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்களால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

தொழிலாளர்களின் வேலைகளை அழிப்பது என்பது உலகெங்கிலுமான முதலாளித்துவ அரசாங்கங்களால் ஆதரிக்கப்படும் ஒரு திட்டமிட்ட வர்க்க கொள்கையாகும். பெருந்தொற்று நோய்க்கான அவர்களின் குற்றவியல் எதிர்வினை உலகளவில் கிட்டத்தட்ட 30 மில்லியன் இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளது, அதே நேரத்தில் சொல்லப்படாத மில்லியன் கணக்கானவர்கள் நெடும் கோவிட் காரணமாக தொழிலாளர் சக்தியிலிருந்து வெளியேறியுள்ளனர். ‘தொழிலாளர் பற்றாக்குறை’ ஆனது பல தசாப்தங்களாக குறைந்து அல்லது தேக்கமடைந்த வருமானங்களைத் தொடர்ந்து, ஊதியத்தில் சிறிது அதிகரிப்புக்கு வழிவகுத்தது, இது ஆளும் வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது.

“ஊதிய பணவீக்கத்தை” எதிர்த்துப் போராடுவது என்று பெயரிடுகையில், வேலைவாய்ப்பின்மையைக் கூர்மையாக அதிகரிக்கவும், பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் ஊதிய உயர்வுகளுக்கான தொழிலாளர்களின் கோரிக்கைகளை முறியடிக்கவும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் 22 ஆண்டுகளுக்கும் அதிகமாக அவற்றின் அதிகபட்ச மட்டத்திற்கு வட்டி விகிதங்களை உயர்த்தியது. பெடரலின் விகித உயர்வுகள் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் பின்பற்றப்பட்டுள்ளன.

டிசம்பர் 2023 வேலைப் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி, வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செவ்வாயன்று திருப்தியுடன் குறிப்பிட்டது, அதாவது  கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொழிலாளர்கள் தங்கள் வேலையை விட்டு வெளியேறிய விகிதம் பெருந்தொற்று நோய் தொடங்குவதற்கு சற்று முன்னான வேகத்தை விட வீழ்ச்சியடைந்தது. எவ்வாறிருந்த போதிலும், வேலையின்மையின் மட்டத்தில் திருப்தியடையாத பெடரல் ரிசர்வ் புதனன்று வட்டி விகிதங்களை சீராக வைத்திருந்து, தொழிலாள வர்க்கத்தின் கழுத்தில் அதன் காலை வைத்தது. “தொழிலாளர் சந்தையில் எதிர்பாராத சரிவை நாம் கண்டால், அது நம்மை விரைவில் விகிதங்களைக் குறைக்கச் செய்யும்” என்று பெடரல் தலைவர் ஜெரோம் பவல் அறிவித்தார்.

அமெரிக்க ஆளும் வர்க்கம் இரண்டு முனைகளில் போரை நடத்தி வருகிறது. அது காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலையை ஆதரித்து வருகிறது, மத்திய கிழக்கில் அதன் இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வருகிறது, அத்துடன் உலகம் முழுவதும் அதன் ஆதார வளங்கள் மற்றும் மலிவு உழைப்புத் தளங்கள் மீது அதன் மேலாதிக்கத்தை மீண்டும் நிலைநாட்ட ரஷ்யா மற்றும் சீனாவுடன் நேரடி மோதலுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. அதேநேரத்தில், அது உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை வேண்டுமென்றே வறுமையில் ஆழ்த்தி, தொழிற்சாலைகள் மற்றும் வேலையிடங்களில் மூன்றாம் உலகப் போரை நடத்த அவசியமான சுரண்டல் மற்றும் சர்வாதிகார நிலைமைகளைத் திணித்து வருகிறது.

இந்தக் கொள்கையைப் பின்தொடர்வதில், வேலைநிறுத்தங்களை நசுக்க அல்லது வேலைநிறுத்தங்கள் நடந்தால் அவற்றை விற்றுத் தள்ளுவதற்கு பைடென் நிர்வாகம், தொழிற்சங்கங்களை நடத்தும் அதிகாரத்துவங்களை நம்பியுள்ளது. டீம்ஸ்டர்ஸ் தொழிற்சங்கத்தைப் போலவே, SAG-AFTRA, எழுத்தாளர்கள் சங்கம் (Writers Guild) மற்றும் ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) சங்கங்களானது கையெழுத்திட்டதாகக் கூறப்படும் “வரலாற்று” ஒப்பந்தங்களானது வேலைகள் மீதான ஒரு பாரிய தாக்குதலுக்கு பாதை வகுத்துள்ளன. தொழிலாளர் அதிகாரத்துவங்கள் அவற்றின் சேவைகளுக்கு நன்கு ஈடுகட்டப்பட்டுள்ளன என்பதோடு, வெளிநாடுகளில் போர் மற்றும் உள்நாட்டில் காட்டுமிராண்டித்தனமான சிக்கன நடவடிக்கைகளுக்கான பைடெனின் திட்டங்களுடன் மேலும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

கடந்த வாரம், ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் (UAW) சங்க இயந்திரமானது உத்தியோகபூர்வமாக பைடெனை ஜனாதிபதி வேட்பாளராக வழிமொழிந்தது, போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்ட போராட்டக்காரர்கள் மாநாட்டில் இருந்து இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஃபெயின் “இனப்படுகொலை ஜோ” உடன் கைகோர்த்தார். இந்த மாத தொடக்கத்தில் ஓ’பிரையன் மற்றும் ட்ரம்ப் இடையேயான ஒரு சந்திப்பைத் தொடர்ந்து, அந்த தொழிற்சங்க இயந்திரம் புதன்கிழமை ட்ரம்பை சந்தித்த போதிலும், டீம்ஸ்டர்ஸ் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. ஜனநாயகக் கட்சியினரை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி அல்லது குடியரசுக் கட்சியை ஆதரிப்பதாக இருந்தாலும் சரி, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பை ஒடுக்கி, ஆளும் வர்க்கத்தின் கருவிகளாக செயல்படுகின்றன.

தொழிலாள வர்க்கம் வறுமையை ஏற்க முடியாது மற்றும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது. வேலைகள் மீதான தாக்குதலுக்கு எதிரான எதிர்த்தாக்குதல் தொடங்கப்பட வேண்டும். ஆனால், ஒரு உண்மையான போராட்டமானது தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து முறித்து சுயாதீனமாக நடத்தப்பட்டு, தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து, தேசிய எல்லைகளைக் கடந்தும் ஒழுங்கமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே நடத்த முடியும். அத்தகைய போராட்டத்திற்கு சாமானியக் குழுக்களின் வலையமைப்பையும் மற்றும் சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியையும் விரிவாக்குவது அவசியமாகும்.

வேலை வெட்டுக்கள் மற்றும் முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிரான போராட்டமானது, ஆளும் வர்க்கம், அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் உட்பட- அதன் பெருநிறுவன கட்டுப்பாட்டில் உள்ள கட்சிகள்- மற்றும் அவர்களின் போர்க் கொள்கைகள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சர்வாதிகார கொள்கைகளுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சக்திவாய்ந்த அரசியல் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதுடன் இணைக்கப்பட வேண்டும். 

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியங்கி இயந்திரம் (ரோபாட்டிக்ஸ்) போன்ற தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மனித குலத்தின் உற்பத்தித்திறனை பெரிதும் அதிகரிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த உழைப்பைச் சேமித்து மிச்சப்படுத்தும் தொழில்நுட்பங்கள் தொழிலாள வர்க்கத்தை வறுமைக்குள் தள்ளாமல் வார வேலை நேரத்தைக் குறைப்பதன் மூலமும் வாழ்க்கைத் தரங்களை அதிகரிப்பதன் மூலமும் சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமானால், பின்னர் இந்த மிகப்பெரும் பெருநிறுவனங்களானது திட்டமிட்ட சோசலிச உலகப் பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் பாகமாக, தொழிலாள வர்க்கத்தால் கூட்டுடமையாக்கப்பட்டு, ஜனநாயகரீதியில் கட்டுப்படுத்தப்படும் பொது பயன்பாடுகளாக மாற்றப்பட வேண்டும்.