பழிவாங்கப்பட்டுள்ள இலங்கை தோட்டத் தொழிலாளர்களை பாதுகாப்பதற்கான பிரசாரம் கணிசமான ஆதரவை வென்றுள்ளது

மஸ்கெலியா, சாமிமலை ஓல்டன் தோட்டத்தைச் சேர்ந்த 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகளை விலக்கிக்கொள்ளுமாறு சட்டமா அதிபரைக் கோரும் இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவின் மனுப் பிரச்சாரம் இலங்கையிலும் சர்வதேச அளவிலும் குறிப்பிடத்தக்க ஆதரவை வென்றுள்ளது.

2023 ஜூலையில் ஓல்டன் தோட்டத்தில் சோ.ச.க. உறுப்பினர் பிரச்சாரம் செய்கிறார்

ஜூலை 15 வரை ஐந்நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இணையவழி மனுவிலும் அச்சுப் பிரதியிலும் கையெழுத்திட்டுள்ளனர். இவர்களில் பெருந்தோட்டம், துறைமுகம், வங்கி, புகையிரதம், சுகாதாரம், சுதந்திர வர்த்தக வலயம், ஹோட்டல், கறுவா மற்றும் மீன்பிடித் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர்.

2021 ஏப்ரலில், ஓல்டன் தோட்ட முகாமையாளரை அடித்ததாகவும் அவரது வீடு சேதப்படுத்தப்பட்டதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதைத் தொடர்ந்து, ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பொலிசார் வழக்குப் பதிவு செய்தனர். வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைத் தொடர்ந்து துன்புறுத்தியதைக் கண்டித்து பெப்ரவரி 17 அன்று தொழிலாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்தே அவர் இந்த பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் இன்னும் குற்றச்சாட்டை தயாரிக்கவில்லை என்ற சாக்குப்போக்கில் இந்த வழக்குகள் ஏறக்குறைய இரண்டரை ஆண்டுகளாக விசாரணை செய்யாமல் இழுத்தடிக்கப்பட்டன. இந்த ஆண்டு ஜூன் 21 எடுக்கப்பட்ட வழக்கு மீண்டும் செப்டெம்பர் 20 வரை ஒத்திவைக்கப்பட்டது.

பிரதான தோட்ட தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் பெயர்களை பொலிசாருக்கு வழங்கியது. அவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டு இறுதியில் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் விடுவிக்கப்பட்டனர். ஓல்டன் தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரண பெருந்தோட்டக் கம்பனி, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எவ்வித விசாரணையும் நடத்தாமல் அதே பொய்யான குற்றச்சாட்டின் பேரில் 34 தொழிலாளர்களை உடனடியாக வேலை நீக்கம் செய்துள்ளது.

ஜனநாயக தொழிலாளர் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் உட்பட ஏனைய இலங்கை தோட்ட தொழிற்சங்கங்கள் இந்த அப்பட்டமான பழிவாங்கல் பற்றி மௌனம் காத்து, அதற்கு மறைமுகமாக ஆதரவளிக்கின்றன.

28 ஆகஸ்ட் 2022 அன்று எதிர்ப்பு மறியல் போராட்டத்திற்காக மஸ்கெலியாவில் சாமிமலையை நோக்கி அணிவகுத்துச் செல்லும் தொழிலாளர்கள்.

ஓல்டன் தோட்டத்தில் நிர்வாகத்தினதும் பொலிசினதும் அடக்குமுறையானது வறுமை மட்ட ஊதியம், கொடூரமான சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் முதுகு உடைக்கும் வேலைசுமைகளுக்கும் எதிராக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் எதிர்ப்பை நசுக்குவதன் பேரில் தோட்டக் கம்பனிகள் தொடுத்து வரும் பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.

2021 இல், தலவாக்கலையில் உள்ள கட்டுக்கலை தோட்டத்தில் 11 தொழிலாளர்கள் பழிவாங்கப்பட்ட வேலைநீக்கம் செய்யப்பட்டதுடன் ஹட்டனுக்கு அருகிலுள்ள வெலிஓயா தோட்டத்திலிருந்து மேலும் 10 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த தொழிலாளர்கள் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த அடக்குமுறைக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியும் இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவும் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகின்றன. மனுவானது ஓல்டன் தோட்ட நிர்வாகத்தின் வேட்டையாடலைக் கண்டிக்கும் அதே வேளை, அவர்களின் அனைத்து வழக்குகளையும் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்றும் வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலைக்கமர்த்த வேண்டும் என்றும் கோருகிறது.

மனுவில் கையொப்பமிடுவதோடு சட்டமா அதிபருக்கு மன்னஞ்சல்கள் மற்றும் கடிதங்ளை அனுப்பி இந்தப் பிரச்சாரத்திற்கு அளிக்குமாறு சர்வதேச அளவில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கேட்டுக்கொள்கிறோம். கடிதங்களின் பிரதிகளை எங்களுக்கும் அனுப்பி வையுங்கள். இது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.

பிரச்சாரத்தின் ஆதரவாளர்கள் தெரிவித்த சில கருத்துகள் மற்றும் எங்களுக்கு கிடைத்த சர்வதேச ஆதரவு கடிதங்களை கீழே வெளியிடுகிறோம்.

ஓய்வு பெற்ற ரயில் தொழிலாளி ஒருவர் கூறியதாவது: தோட்டத் தொழிலாளர்களின் சம்பள போராட்டம் நியாயமானது, ஏனென்றால் அவர்களுக்கு வாழ்வதற்கு ஏற்ப வருமானம் கிடைக்கவில்லை. நியாயமான சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அரசு முன்பு கூறியிருந்தது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமக்கு சம்பள உயர்வு கிடைக்காததாலேயே போராட்டத்தை ஆரம்பித்தனர். அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு, முதலாளிகளும் அரசாங்கமும் [தோட்டத் தொழிலாளர்களை] மிரட்ட முயற்சிக்கின்றனர்.

இந்த பழிவாங்கலைப் பற்றி பிரசுரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் தவிர்த்துக்கொண்டதை குறிப்பிட்ட அவர், “இந்த அடக்குமுறை நிலைமையை பற்றி உங்களிடமிருந்தும் உலக சோசலிச வலைத் தளத்தில் இருந்தும் மட்டுமே நான் அறிந்து கொண்டேன்” என்று அவர் கூறினார்.

ரயில் தொழிலாளர்கள் தங்கள் சமூக உரிமைகள் தொடர்பாக அதே பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என்று அவர் தொடர்ந்து பேசினார்: “எங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வருடாந்த சம்பள அதிகரிப்பை அரசாங்கம் நிறுத்தியுள்ளது, அது எங்கள் ஓய்வூதியத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். புகையிரத திணைக்களத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் தோட்டங்களில் உள்ள தொழிற்சங்கங்களிலிருந்து வேறுபட்டவை அல்ல. நமது உரிமைகளைப் பாதுகாக்க அவர்கள் போராடவில்லை.”

யாழ்ப்பாணத்தில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் எஸ். முல்லைத்தீவுயன், “நான் இந்தப் பிரச்சாரத்தை ஆதரிப்பதோடு அந்தத் தொழிலாளர்கள் மீதான வழக்குகளை விலக்கிக்கொண்டு அவர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் என்று கோரி இந்த மனுவில் கையெழுத்திடுகிறேன். தோட்டத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக அவதியுறும் சமூகமாக இருந்து வருவதால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உங்கள் போராட்டம் மிகவும் பாராட்டத்தக்கது.”

ஹட்டனில் தோட்ட இளைஞர்கள் பழிவாங்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திட்டனர், 23 ஜூன் 2023.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஏ. யாழினி கூறுகையில், “நானும் தோட்டப் பகுதியில் இருந்து வந்தவள். பல தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இருந்தாலும் தொழிலாளர்கள் இன்னும் கஸ்டப்படுகின்றனர்,” என்றார். “இந்த போலி வழக்குகளை தொழிலாளர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த வழக்குகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவும் வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்தவும் கேட்டுக்கொள்கிறேன்,” என அவர் மேலும் கூறினார்.

ஜூன் 24 அன்று, கண்டி தேசிய வைத்தியசாலையில் சுகாதார தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கான மனுப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானம் ஒன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் கூறியதாவது: “ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கலை நாங்கள் கண்டிக்கிறோம். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் துன்பங்களை அனுபவித்து வரும் தொழிலாளர்கள் மீது நம்பகமான குற்றச்சாட்டுகள் எதையும் பொலிசார் மற்றும் சட்டமா அதிபராலும் முன்வைக்க முடியவில்லை. அவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாக விலக்கிக்கொள்ளவும், வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் வேலையில் அமர்த்தவும் இந்த கூட்டம் கோருகிறது.”

உலக சோசலிச வலைத் தள வாசகர்கள் அனுப்பிய கடிதங்களின் நகல்களையும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு பெற்றுள்ளது.

நியூயோர்க் நகர கல்வி ஊழியர் ஒருவர் பின்வரும் கடிதத்தை இலங்கை சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பியுள்ளார்.

ஐயா: அனைத்து பொலிஸ் குற்றச்சாட்டுக்களையும் உடனடியாக வாபஸ் பெறுமாறும், ஆர்ப்பாட்டம் அல்லது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு பழிவாங்கப்பட்டுள்ள அனைவரையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துமாறும் இலங்கை தோட்ட நடவடிக்கைக் குழு விடுத்துள்ள அழைப்புக்கு ஆதரவாக நான் நியூயோர்க் நகரிலிருந்து எழுதுகின்றேன். வாழக்கூடிய சம்பளம், சிறந்த வேலை நிலைமைகள் மற்றும் உணவு நிவாரணம் கோரியே அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் அல்லது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காகவே அவர்கள் பழிவங்கப்பட்டுள்ளார்கள்..

இந்த மனு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு என்று கருத முடியாது, ஏனெனில் எனக்கும் தேயிலை வர்த்தகத்தின் சர்வதேச நுகர்வோருக்கும் தேயிலை உற்பத்தி செய்பவர்களின் நலன் மட்டுமல்ல, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளின் பாதுகாப்பு, அனைத்து தொழிலாளர்களுக்கும் மிகவும் முக்கியமானது. நான் உலக வரலாற்றைக் கற்பித்த ஒரு கல்வித் தொழிலாளி, உலகில் எப்போதும் அதிகரித்து வரும் தொழிலாளர்களைப் போலவே, ஒரு பகுதியில் தொழிலாளர்கள் மீதான தாக்குதலின் தாக்கங்கள் இப்போது விரைவாகப் பரவி, மற்ற இடங்களிலும் முதலாளித்துவத்தின் கீழ் இலாபத்திற்கான போட்டியல் பிரதிபலிக்கின்றன.

மஸ்கெலியா சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டம், ஹட்டனில் உள்ள வெலிஓயா தோட்டம் மற்றும் கட்டுக்கலைத் தோட்டத்தில் தொழிலாளர்கள் மீது அவதூறுகள் சுமத்தப்பட்டுள்ளன. தங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் நல்வாழ்வை எதிர்பார்க்கும் தொழிலாளர்களுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை கூட தயார் செய்யப்படாத நிலையில், வழக்குத் திகதிகள் ஒத்தி வைக்கப்பட்டு, நீதிமன்றத்தில் நீதியை நிலைநாட்டும் உரிமை மறுக்கப்பட்டுள்ளமை தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டையின் தன்மையை எடுத்துக் காட்டுகிறது. மேலும், இந்தத் துன்புறுத்தல்கள், பணவீக்கம், ஊதிய வெட்டு, சமூக நலன் வெட்டு மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் வேலைச் சுமை அதிகரிப்புக்கும் எதிராக தொழிலாளர்களை பொது வேலை நிறுத்தங்களுக்கு செல்ல நிர்ப்பந்திக்கின்றது. இது சர்வதேச நாணய நிதியத்தின் தொழிலாள விரோத கட்டளைகளை தொழிலாளர்களின் முதுகில் சுமத்துவதற்கு செயல்படும் அனைத்து பாராளுமன்ற கட்சிகளுக்கும் சவாலாக இருக்கின்றது.

இலங்கையிலும் உலகளாவிய ரீதியிலும் தேயிலை தொழிற்துறையின் நெருக்கடி நிலைக்கு அல்லது முதலாளித்துவ நெருக்கடிக்கு தொழிலாளர்கள் பொறுப்பல்ல. உலகின் கண்களுக்கு வெளிப்படையாகவே போலியானவையாக அம்பலப்பட்டுள்ள சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை விலக்கிக்கொள்ளவும், வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்தவும், தொழிலாளர்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் நீதி கோருகிறோம்.

பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு தொழிலாளி அனுப்பியுள்ள மற்றொரு கடிதம் கூறுவதாவது:

“பிலிப்பைன்ஸில் ஒரு தொழிலாளியான நான், ஓல்டன், வெலிஓயா மற்றும் கட்டுகலையில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலுவாக ஆதரிப்பதோடு அதனுடன் இணைந்துகொள்கின்றேன். அவர்களுக்கு மட்டுமல்ல, தோட்டங்களில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் சிறந்த ஊதியம் மற்றும் சிறந்த வேலை நிலைமைகளை சரியாகக் கோரும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. அவர்களின் போராட்டம் பிலிப்பைன்ஸ் மற்றும் அனைத்து நாடுகளிலும் உள்ள தொழிலாளர்களினதும் போராட்டமாகும். இங்குள்ள தொழிலாளர்கள் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துள்ளதுடன், அதனை அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் வலியையும் வேதனையையும் நாங்களும் உணர்கிறோம். அவர்களின் தைரியம் மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டினால் நாங்கள் ஈர்க்கப்பட்டுள்ளோம்

இங்கனம்,

டான்டே பஸ்ரானா.

இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவாக மனுவில் கையொப்பமிட்டு, பின்வரும் அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவதுடன், அதன் பிரதியை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவுக்கும் அனுப்பி வையுங்கள்.

* சஞ்சய் ராஜரத்தினம், சட்டாமா அதிபர்

இலக்கம் 159, புதுக்கடை, கொழும்பு 12

மின்னஞ்சல்: administration@attorneygeneral.gov.lk

* பி.வி. குணதிலக்க, செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு.

மின்னஞ்சல்: civilsecurity@defence.lk

* சி.டி. விக்கிரமரத்ன, பொலிஸ் மா அதிபர்

மின்னஞ்சல்: telligp@police.lk

இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு

மின்னஞ்சல்: plantationacsl@gmail.com

ஜனநாயகத்திற்கும் சோசலிசத்திற்குமான இலங்கை தொழிலாளர்களினதும் கிராமப்புற வெகுஜனங்களினதும் மாநாட்டிற்காக!

வேலை நீக்கம் செய்யப்பட்ட சக ஊழியர்களை மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரி இலங்கை தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்

இலங்கை: நிர்வாகமும் தொழிற்சங்கமும் பொலிசும் சோ.../தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் பாதுகாப்பு பிரச்சாரத்தை நிறுத்த முயற்சிக்கின்றன

இலங்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறு! வேலை நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்து!

Loading