இலங்கை: நிர்வாகமும் தொழிற்சங்கமும் பொலிசும் சோ.ச.க./தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் பாதுகாப்பு பிரச்சாரத்தை நிறுத்த முயற்சிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பழிவாங்கப்பட்ட 22 தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக, தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) முன்னெடுக்கும் பிரச்சாரத்தை நிறுத்துவதற்கு ஓல்டன் தோட்ட நிர்வாகம் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உடன் சேர்ந்து சதியில் ஈடுபடுகின்றது என நம்பகமான தகவல்கள் சோ.க.க. மற்றும் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவுக்கும் கிடைத்துள்ளன.

சோ.ச.க. உறுப்பினர்கள் 23 ஜூன் 2023 அன்று பழிவாங்கப்பட்ட ஓல்டன் தொழிலாளர்களுக்காக கொழும்பு துறைமுக தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆதரவை வென்றனர்.

ஜூன் தொடக்கத்தில், நிர்வாகம் அதன் உள்ளுர் கைக்கூலிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை கூடியதாக சோ.ச.க.க்குத் தெரிவிக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோ.ச.க.யும் முன்னெடுக்கும் வேலைகளால் உலக சந்தையில் கம்பனியின் தேயிலை விற்பனை பாதிக்கப்படும் என்றும், இது தொழிலாளர்களை மோசமாகப் பாதிக்கும் என்றும் தோட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் தெரிவித்தனர். தோட்ட முகாமைத்துவமானது, இந்தப் பிரச்சாரத்தைத் தடுக்க அதில் பங்கேற்றவர்களின் ஆதரவைக் கோரியது.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆதரவுடன், மே 30 அன்று தொடங்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவின் கையெழுத்து மனுவுக்கான பிரதிபலிப்பாகவே நிர்வாகம் இந்தத் தலையீட்டைச் செய்துள்ளது. இலங்கை சட்டமா அதிபருக்கு முகவரியிடப்பட்டுள்ள இந்த மனுவில், தோட்டத்தை நிர்வகிக்கும் ஹொரன பெருந்தோட்டக் கம்பனியால் வேலை நீக்கம் செய்யப்பட்டு, நீதி மன்ற விசாரனையை எதிர்கொள்ளும் 34 தொழிலாளர்கள் மீதான பொய்க் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளுமாறும் அவர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்தக் கையெழுத்து மனுப் பிரச்சாரத்தை தடுக்க, நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தின் கூட்டு முயற்சிகளுக்கு பொலிஸ் ஆதரவளிப்பதை சமீபத்திய பல சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

* ஜூன் 4 அன்று, தோட்ட மருந்தகத்தில் சண்முகம் என்று அழைக்கப்படும் சந்தனம் பழனியாண்டி, நடவடிக்கை குழுவினரும் சோ.ச.க. உறுப்பினர்களும் முன்னெடுத்த கையெழுத்து பிரச்சாரத்தை குழப்புவதற்கு முயன்றார். தன்னை ஓல்டன் தோட்ட பொலிஸ் கண்காணிப்பு குழுவின் உறுப்பினர் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர், மனு பிரசாரத்தை தொடர அனுமதித்தமைக்காக தோட்ட நிர்வாகமும் பொலிசும் தன்னை ”குற்றம் சாட்டியதாக“ கூறினார்.

* ஜூன் 20 அன்று, மஸ்கெலியா பகுதி இ.தொ.கா. தலைவர் பிச்சமுத்து, இ.தொ.கா. ஒல்டன் தோட்ட கிளைத் தலைவர் டி. தனராஜ் ஆகியோர், சோ.ச.க. உறுப்பினர் கே. காண்டீபனை அவர் வசிக்கும் கிளனுகி தோட்டத்தில் சந்தித்து, இ.தொ.க.வின் நடவடிக்ககைகளையும் ஏனைய தொழிற்சங்கங்களையும் விமர்சிப்பதற்காக அவரைக் கண்டித்தனர்.

* ஜூன் 21 அன்று, நீதிமன்றத்தில் போலி வழக்கை எதிர்கொள்ளும் பெண் தொழிலாளர்களில் ஒருவரை வழியல் சந்தித்த பிச்சமுத்து, நடவடிக்கை குழுவின் கலந்துரையாடல்களில் பங்கேற்க வேண்டாம் என எச்சரித்தார். முதல்நாள் மாலையும் நீதிமன்ற விசாரனையின் பின்னரும், அவரும் ஏனைய ஒன்பது பேரும் நடவடிக்கை குழுவின் கலந்துரையாடல்களில் பங்கேற்றதுடன் அதன் பிரச்சாரத்தைப் பலப்படுத்த உடன்பட்பட்டனர்.

* ஜூன் 25 அன்று, சோ.ச.க. உறுப்பினர்களான கே. காண்டீபன் மற்றும் எம். தேவராஜா இருவரிடமும், ஒல்டன் தோட்டத்தில் உள்ள நடவடிக்கை குழு உறுப்பினர்களை சந்திக்க வேண்டாம் எனவும் தொழிற்சங்கங்களை விமர்சிக்க வேண்டாம் எனவும் இ.தொ.கா. கிளை அலுவலர் எம். சாந்தகுமார் கூறினார். அவர்கள் தோட்டத்துக்கு சென்று வந்த பின்னரே சந்திரகுமார் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

* ஜூன் 30 அன்று, சண்முகம் என அழைக்கப்படும் சந்தனம் பழனியாண்டி செய்த முறைப்பாடு தொடர்பாக மஸ்கெலியா பொலிசார் காண்டீபனை வரவழைத்தனர். காண்டிபன் தன்னைக் அவதூறு செய்யும் வகையில் தோட்டத்தில் சுவரொட்டியை ஒட்டியாதாக அவர் பொய் குற்றம் சாட்டினார். அவரது கூற்றுக்கு மாறாக, “பழிவாங்கப்பட்ட இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பதை குழப்பும் முயற்சியை எதிர்த்திடு” என்றத் தலைப்பில் ஜூன் 12 அன்று உலச சோசலிச வலைத் தளத்தில் வெளியான அறிக்கையையே காண்டீபன் அங்கு ஒட்டியிருந்தார்.

பொலிஸ் விசாரணையில் காண்டீபனும் தேவராஜாவும் பழனியாண்டியின் கூற்றுக்களை எதிர்த்தனர். காண்டீபனுக்கு எதிரான தனது புகார் பொய்யானது என ஒப்புக்ககொண்ட அவர், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்குமாறு பொலிசாரை கேட்டுக்கொள்ள மாட்டேன் என்றார்.

சோ.ச.க.யை பயமுறுத்த முடியாது. தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு மீதும் கம்பனியால் வேட்டையாடப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எமது போராட்டத்தின் மீதும் கைவைக்காதே! என அது வலியுறுத்துகிறது. அதே நேரம், பொய் வழக்கை விலக்கிக்கொள்ளுமாறும் சகல தொழிலாளர்களையும் மீண்டும் வேலைக்கு அமர்த்துமாறும் கோரி நாம் முன்னெடுக்கும் கையொப்ப பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு பெருந்தோட்டங்களிலும் ஏனைய வேலைத் தளங்களிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறோம்.

ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொய் குற்றச்சாட்டுகளை விலக்கிக்கொள்ளக் கோரி 23 ஜூன் 2023 அன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மனுவில் கையெழுத்திட்டனர்

தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கம் மற்றும் பொலிசினதும் கூட்டு முயற்சிகள், இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாளர்களிடம் இருந்து கிடைக்கும் உற்சாகமான ஆதரவு சம்பந்தமான பிரதிபலிப்பு ஆகும். இணையத்திலும் அச்சு வடிவத்திலும் வெளியிட்பட்ட இந்த மனுவானது துறைமுகம், தொலைத்தொடர்பு மற்றும் புகையிரதம் போன்ற முக்கிய தொழிற்துறைகளில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

2021 பெப்ரவரி 21 அன்று நடந்த போராட்டத்தின் போது தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை தாக்கியதாவும் முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் விளைவித்ததாகவும் பொய்யாகக் குற்றம் சாட்டிய பின்னர் ஓல்டன் தோட்டத்தில் 22 தொழிலாளர்களையும் இரு இளைஞர்களையும் பொலிஸ் கைது செய்தது. பின்னர் கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இதில் ஈடுபட்டதாக கூறப்படும் தொழிலாளர்களின் பெயர்களை பொலிஸாருக்கு வழங்கி இ.தொ.கா. இந்த வேட்டையாடலில் பங்கேற்றது. தோட்டத்தில் உள்ள ஏனைய தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி ஆகிய இரண்டும் இந்த அப்பட்டமான பழிவாங்கலுக்கு எதிராக ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை.

பெப்ரவரி 17 போராட்டமானது சுமார் 500 தொழிலாளர்களால் இரு வாரங்களுக்கு முன்னர் பெப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட வேலை நிறுத்தத்தின் ஒரு பாகம் ஆகும். அவர்கள் ரூபா 1,000 (3.13 டொலர்) நாளாந்த சம்பளத்தைக் கோரினார்கள். பெப்ரவரி ஐந்தாம் திகதி இதே கோரிக்கைகள் மீது இ.தொ.கா. அழைப்பு விடுத்து, இலட்சக் கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் பங்குபற்றிய நாடளாவிய வேலை நிறுத்த நடவடிக்கையில் அவர்கள் இணைந்துகொண்டனர்.

வேலை நிறுத்தம் செய்யும் தொிலாளர்களை தண்டிக்க தீர்மானித்த ஹொரன பெருந்தோட்ட நிர்வாகம், குற்றச்சாட்டுகள் மீதான எந்தவொரு விசாரனையும் இன்றி ஏப்ரல் 21 அன்று 34 தொழிலாளர்களை உடனடியாக வேலையில் இருந்து நீக்கியது.

இந்த வேலை நீக்கங்களைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 24 தொழிலாளர்களுக்கு எதிராக பொலிஸ் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தது. தொடர்சியாக ஒத்திவைக்கப்படும் இந்த வழக்கு, மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னமும் விசாரனைக்கு எடுக்கப்படவில்லை. இறுதியாக ஜூன் 21 அன்று திகதி குறிக்கப்பட்டாலும் அது செப்ரம்பர் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதற்கு பதிலிறுப்பாக, சோ.ச.க. பிரச்சாரமானது, இந்த பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான அதன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியது. இந்தத் தாக்குதலின் அரசியல் அர்த்தம் மற்றும் அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் ஒரு தொழிற்துறை பொலிசாக தொழிற்சங்கங்களின் கீழ்த்தரமான பாத்திரத்தை விளக்கி, உலக சோசலிச வலைத் தளத்தில் கட்சியின் பல அறிக்ககைகள் மற்றும் கட்டுரைகள் வெளியிடப்பட்டன.

தோட்டத் தொழிலாளர்களின் பரந்த தட்டினர் மத்தியில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் சோ.ச.க.யும் பெற்றுள்ள ஆதரவு பற்றி தோட்ட கம்பனிகளும் தொழிற்சங்கங்களும் மிகவும் பதட்டமடைந்துள்ளன.

சோ.ச.க., தோட்டக் கம்பனிகளால் அதிகரிக்ப்பட்ட வேலைச் சுமைகளை எதிர்ப்பதோடு கண்ணியமான ஊதியங்கள், முன்னேற்றமான ஓய்வூதியம், வீடு, சுகாதாரம் மற்றும் கல்வி வசதிகளுக்காக போராடுகின்றது. தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவானது வெலிஓயா மற்றும் கொட்டகலை தோட்டத் தொழிலாளர்களையும் பாதுகாக்கின்றது. 2021 இல் அவர்களின் வேலை நிறுத்தங்கள் கம்பனிகளால் ஒடுக்கபட்டதோடு டசின் கணக்கான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.

ஒல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக அதிகரிக்கப்படுகின்ற வேட்டையாடலானது இலங்கையில் உள்ள சகல தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கை மட்டுமன்றி, இது ஊதியங்கள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தினதும் பெரும் நிறுவனங்களினதும் கொடூரமான தாக்குதல்களின் ஒரு பாகம் ஆகும்.

ஹட்டனில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்கள் 23 ஜூன் 2023 அன்று பாதிக்கப்பட்ட ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மனுவில் கையெழுத்திட்டனர்

கடந்த ஆண்டு ஜனாதிபதி கோடாபய இராஜபக்ஷ மற்றும் அவரது அராங்கத்தை பதவியில் இருந்து இறக்கிய கடந்த ஏப்ரல் ஜூலை மாதங்கங்களில் இடம்பெற்ற வெகுஜன இயக்கத்தில் தோட்டத் தொழிலாளர்களும் இணைந்துகொண்டனர் என்பதை பெருந்தோட்ட கம்பனிகள், விக்கிரமசிங்க அரசாங்கம் மற்றும் தொழிற் சங்கங்களும் நன்கு அறியும்.

இந்த அதிகரிக்கும் தீவிரமயமாதலானது சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கல் அல்லது மறுசீரமைத்தல் சம்பந்தமாக அதிகரித்துவரும் எதிர்ப்புகளால் மேலும் அதிகரிக்கும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இலங்கை பெருந்தோட்டங்கள் பெரும் நிறுவனங்களால் 99 ஆண்டு கால குத்தகைக்கு எடுக்கப்பட்ட போதிலும் அரசாங்கம் சகல தோட்டங்களையும் விற்க முயற்சிப்பதாகவே தெரிகின்றது.

ஜூன் 20 அன்று, பெருந்தோட்ட தொழிற்துறை இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த, சில தோட்டங்களில் வன்முறைகளை நிறுத்தவும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்ததாக டெய்லி நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவர், தவறு செய்பவர்களுக்கு எதிராக கடுமைான ஒழுக்காற்று நடவடிக்க எடுக்கப்படும் என கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான இந்த பழிவாங்கலானது ஏனைய தொழிற்துறைகளிலும் இதே போன்ற அடக்குமுறையின் வழியிலானதாகும். தனியார்மயமாக்கலுக்கு எதிராக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு பழிவாங்கும் வகையில், 20 தொழிற்சங்கத் தலைவர்கள் மற்றும் அதன் செயற்பாட்டாளர்கள் வேலை இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபன ஊழியர்கள் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம் செய்ததால் அரசாங்கம் சுமார் 50 ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பியும் இரண்டு தொழிற்சங்க அதிகாரிகளுக்கு கட்டாய இடம்மாற்றத்தை திணித்தும் பதிலிறுத்துள்ளது.

தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு / சோ.ச.க., வேட்டையாடப்பட்ட சகல தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான அதன் பிரச்சாரத்தையும் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சகல ஜனநாயக-விரோத நடவடிக்ககைகளுக்கு எதிரான பிரச்சாரத்தைம் தீவிரப்படுத்தும். தமது தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்கவும் சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன நடவடிக்ககைகளுக்கும் முதலாளிகளின் தாக்குதல்களுக்கும் எதிராக போராடுவதற்கு, தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை வேலைத் தளங்களில் அமைக்குமாறு சோ.ச.க. சகல தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது. சோ.ச.க.யின் முன்னோக்கானது, சோசலிச கொள்கைகள் மற்றும் சோசலிச அனைத்துலகவாதத்திற்கான போராட்டத்தின் ஒரு பாகமாக, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை அணிதிரட்டுவதை அடிப்படையாக கொண்டுள்ளது.

இந்த முக்கியமான அரசியல் பிரச்சினைகளை பற்றி கலந்துறையாட இந்த வாரம் ஜூலை 6 அன்று நடைபெற இருக்கும் பகிரங்க கூட்டத்தில் பங்கேற்குமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கின்றோம். “இலங்கை அரசாங்கம் அரச நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை எதிர்த்திடு! வேலைகள் மற்றும் ஊதியங்களுக்காகப் போராட தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பு” எனும் தொணிப்பொருளில் இந்தக் கூட்டம் கொழும்பில் உள்ள பொது நுாலக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான சோடிக்கப்பட்ட வழக்கு மூன்றாம் ஆண்டை எட்டியுள்ளது

பழிவாங்கப்பட்ட தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை குழப்பும் முயற்சியை எதிர்த்திடுவோம் 

இலங்கையில் ஹேலிஸ் பெருந்தோட்டக் கம்பனி வேலைச் சுமையை அதிகரிக்க கொழுந்து பறிக்கும் போட்டியைப் பயன்படுத்துகிறது

Loading