மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கையில் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவானது சிறந்த சம்பளம் மற்றும் வேலை நிலைமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக பழிவாங்கப்பட்ட ஓல்டன், வெலிஓயா மற்றும் கட்டுகலை தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் வேட்டையாடலை தோற்கடிக்க எமது போராட்டத்தில் இணையுமாறு இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. சோடிக்கப்பட்ட வழக்குகளை விலக்கிக்கொள்ளுமாறும் இந்த தோட்டங்களில் வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் மீண்டும் வேலையில் அமர்த்துமாறும் நாங்கள் கோருகிறோம்.
5 பெப்ரவரி 2021 அன்று, சுமார் 500 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள், 1,000 ரூபா (US$2.75) நாளாந்த சம்பளம் கோரி, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். எவ்வாறாயினும், ஓல்டன் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகத்தின் ஆத்திரமூட்டல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேலும் 47 நாட்களுக்கு வேலைநிறுத்தம் செய்தனர். பெப்ரவரி 17 அன்று தொழிலாளர்கள் முகாமையாளரின் பங்களாவிற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தபோது, அவர்கள் தாக்குதல் மற்றும் சொத்து சேதங்களில் ஈடுபட்டதாக பொய்யாக தொழிலாளர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட இத்தொழிலாளர்கள் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளனர்.
21 ஏப்ரல் 2021 அன்று, மஸ்கெலியா, சாமிமலையில் உள்ள ஓல்டன் தோட்டத்தில் 28 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதுடன் அவர்களில் மேலும் 22 பேர் மீது போலிக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தோட்ட முகாமையாளர் சத்தியமூர்த்தி சுபாஷ் நாராயணன், துணை முகாமையாளர் அனுஷன் திருச்செல்வம் ஆகியோரை உடல் ரீதியாக தாக்கியதாகவும், முகாமையாளரின் வீட்டிற்கு சேதம் விளைவித்ததாகவும் 22 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஓல்டன் தோட்டம் ஹொரண பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமானதாகும்.
பொலிசாரால் எந்த ஒரு குற்றச்சாட்டையும் ஒப்புவிக்க முடியாமல் போனதால், அவர்களின் நீதிமன்ற வழக்கு பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இந்தத் தொழிலாளர்களை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு உத்தரவிடப்படும் ஒவ்வொரு முறையும், சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகையை அனுப்பவில்லை என்று பொலிசார் கூறுகின்றனர். ஜனவரி 11 அன்று நடந்த கடைசி விசாரணையும் மார்ச் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* 2021 ஜூனில், ஹட்டன் பெருந்தோட்டக் கம்பனியால் நடத்தப்படும், ஹட்டன், வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த பத்து தொழிலாளர்கள், நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த பத்து தொழிலாளர்கள், அதே தோட்டத்தில் வசிக்கும் ஒரு பாடசாலை ஆசிரியர், அரசுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து நடத்துனர் மற்றும் சமுர்த்தி (அரசு நலன்புரி) தொழிலாளியும் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
கோவிட்-19 முடக்க நடவடிக்கைகளின் போது, உணவு நிவாரணம் கோரி, தோட்ட அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தமையே அவர்கள் செய்த 'குற்றங்களாகும்'. தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தோட்ட தேயிலைத் தொழிற்சாலையை சேதப்படுத்தியமை, அதிகாரிகளை அச்சுறுத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களை அவர்கள் முற்றாக மறுக்கின்றனர். 10 தோட்டத் தொழிலாளர்களில் ஐந்து பேர் பின்னர் மீண்டும் வேலையில் அமர்த்தப்பட்டாலும், இந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் எதிரான நீதிமன்ற நடவடிக்கை இன்னும் நிலுவையில் உள்ளன. கடைசியாக கடந்த வருடம் டிசம்பர் 21 நடைபெறவிருந்த விசாரணை, வழக்கை தாக்கல் செய்த தோட்ட முகாமையாளர் வெளிநாடு சென்றுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
* 29 செப்டம்பர் 2021 அன்று கட்டுகலை தோட்டத் தொழிலாளர்கள் பி. பொன்னீர்செல்வியை நிர்வாகம் பழிவாங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தேயிலை தோட்டத் தொழிற்சாலைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களுக்கும் தோட்ட அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, 11 தொழிலாளர்களை கைது செய்த பொலிசார் பின்னர் அவர்களை நிபந்தனை பிணையில் விடுவித்து வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த தொழிலாளர்கள் அதிகரித்து வரும் வேலைச்சுமைக்கு எதிராகவும், தினசரி ஊதியம் ரூ 1,000 கோரியும் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர். ஏறக்குறைய ஒரு வருடம் கடந்தும் தலவாக்கலை பொலிஸாரால் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. கடைசியாக டிசம்பர் 27 நடைபெற இருந்த விசாரணை பெப்ரவரி 7ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்டையாடல், தோட்டத் தொழிலாளர்கள் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஊதியங்கள், வேலை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
உலகளாவிய சந்தைகளில் கேள்வி வீழ்ச்சி மற்றும் கென்யா, சீனா மற்றும் இந்தியா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளுடன் அதிகரித்து வரும் போட்டி காரணமாக இலங்கையின் தேயிலைத் தொழில் நெருக்கடியில் மூழ்கியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஏற்றுமதியாளர்கள், ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளினால் அதன் முக்கிய சந்தைகளில் ஒன்றான ரஷ்யாவிற்கு தேயிலையை அனுப்புவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர்.
தோட்டக் கம்பனிகள் இரக்கமற்ற முறையில், சம்பளத்தை வெட்டுவதன் மூலமும், வேலைச் சுமையை மேலும் அதிகரிப்பதன் மூலமும் தோட்டத் தொழிலாளர்கள் மீது இந்த நெருக்கடியை திணிக்க முயல்கின்றன. உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருவாய் பகிர்வு முறைகளையும் அவை தொழிலாளர்கள் மீது திணிக்கின்றன. இது தொழிலாளர்களின் கடினமான உழைப்பால் பெற்ற ஓய்வூதிய நிதி உட்பட, சமூக நலன்களை அழித்து, அவர்களை குத்தகை விவசாயிகளாக மாற்றுகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் 2016 ஆம் ஆண்டு முதல் 1,000 ரூபா நாள் சம்பளம் மற்றும் தோட்ட உற்பத்தி அதிகரிப்பை எதிர்த்து அடிக்கடி போராடி வருகின்றனர். தோட்ட நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டும் அதே வேளை, தொழிலாளர்களின் கோரிக்கைகளை அவை நிராகரித்துள்ளன.
தற்போதைய விக்கிரமசிங்க நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள், தோட்டக் கம்பனிகளின் அடக்குமுறை நடவடிக்கைகள் மற்றும் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலைச் சுமையை திணிக்க கம்பனிகளுக்கு ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளன.
தோட்டத் தொழிற்சங்கங்களின் வகிபாகம்
ஓல்டன், வெலிஓயா மற்றும் கட்டுகலை தொழிலாளர்கள் மீதான பழிவாங்களை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க.ஆ), தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணியும் அங்கீகரித்துள்ளன. இவையும் மற்ற அனைத்து தோட்டத் தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான எந்தவொரு போராட்டத்தையும் நிராகரித்துள்ளன.
மாறாக, இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை வேட்டையாடுவதில் நிர்வாகம் மற்றும் பொலிசுடன் ஒத்துழைத்தன. ஓல்டன் ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது. உள்ளூர் இ.தொ.கா. தலைவர்கள் கைது செய்யப்பட வேண்டிய தொழிலாளர்களின் பட்டியலை கம்பனிக்கும் பொலிசுக்கும் வழங்கினர். பிரதிவாதிகளில் சிலரைக்கூட பொலிஸில் சரணடையுமாறு தொழிற்சங்கம் கூறியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் வேலைச்சுமைகளை அதிகரிக்கவும், சம்பளத்தை குறைக்கவும், உற்பத்தித்திறன் அடிப்படையில் வருமானப் பகிர்வு முறைகளை திணிக்கவும் கம்பனிகளுடன் இணைந்து திட்டமிட்டு வேலை செய்துள்ளன. 2016, 2018 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தங்கள் உட்பட தோட்டத் தொழிலாளர்களின் ஒவ்வொரு போராட்டத்தையும் அவர்கள் காட்டிக் கொடுத்துள்ளனர். ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து, இந்த தொழிற்சங்கங்கள் தோட்டக் கம்பனிகளுக்கும் அரசாங்கத்திற்கும் தொழிற்துறை பொலிஸாகச் செயற்படுகின்றன.
இவ்வாறான கசப்பான அனுபவங்களின் விளைவாக தோட்டத் தொழிலாளர்கள் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை இந்த அமைப்புகள் மூலம் பாதுகாக்க முடியாது என்பதை நாம் உணர்ந்துள்ளோம். அதனாலேயே, எங்கள் உரிமைகளுக்காகப் போராட, தொழிற்சங்கங்களைச் சாராமல், எங்களுடைய சொந்த நடவடிக்கைக் குழுவை உருவாக்க நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம்.
முதலாளித்துவ நெருக்கடியின் விளைபொருளான தேயிலை தொழில்துறையின் இக்கட்டான பொருளாதார நிலைக்கு நாங்கள் பொறுப்பல்ல. சமூக அவலங்களை எதிர்கொண்டு தலைமுறை தலைமுறையாக உழைத்து, தேயிலை கம்பனிகள் குவிக்கும் பாரிய இலாபத்தின் உண்மையான உற்பத்தியாளர்கள் நாங்களே. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் பேரில் தற்போதைய விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கைகளின் விளைவாக எமது வாழ்க்கை நிலைமைகள் மேலும் மோசமடைந்துள்ளன.
நம்மில் பெரும்பாலோர் பிரித்தானிய காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட சிறிய வரிசை அறைகளிலேயே இன்னும் வசிக்கிறோம். சுத்தமான குடிதண்ணீர், கழிவறைகள் மற்றும் நமது பிள்ளைகளுக்கு முறையான கல்வி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் நாம் வாழ்கிறோம்.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக ஓல்டன், வெலிஓயா மற்றும் கட்டுகலை தோட்டங்களில் உள்ள எமது சகாக்களைப் பாதுகாப்பதற்கான தீவிர பிரச்சாரத்தை முன்னெடுக்க தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு தீர்மானித்துள்ளது.
அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளவும் வேலைநீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் உடனடியாக மீண்டும் வேலையில் அமர்த்துவதற்குமான எங்களது பிரச்சாரம், ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதுடன் பிரிக்க முடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோரியும், பொலிஸ் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் விலக்கிக்கொள்ளக் கோரியும், கீழேயுள்ள முகவரிக்கு கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் இந்த பாதுகாப்புப் பிரச்சாரத்தைக் கட்டியெழுப்புமாறு அனைத்துத் தொழிலாளர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் கடிதங்கள் மற்றும் மின்னஞ்சல்களின் நகல்களை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழுவுக்கும் அனுப்பி, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல எங்களைத் தொடர்பு கொள்ளவும். இந்த பிரச்சாரத்திற்கான ஆதரவை கட்டியெழுப்புவதற்காக பெருந்தோட்டங்களிலும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் பிரதான கூட்டங்களை நடத்த நாம் திட்டமிட்டுள்ளோம்.
சட்டமா அதிபர்,
திரு. சன்ஜய் இராஜரட்னம்
இலக்கம் 159, ஹல்ஸ்டொப், கொழும்பு 12
Email: administration@attorneygeneral.gov.lk
செயலாளர், பொது பாதுகாப்பு அமைச்சு
திரு. பி.வி. குணதிலகே
Email: civilsecurity@defence.lk
பொலிஸ் மா அதிபர்
திரு. சி. டி. விக்ரமசிங்க
Email: telligp@police.lk
தோட்டத் தொழிலாளர் நடவடிக்கை குழு
Email: plantationacsl@gmail.com
மஸ்கெலியா-சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிரான வேட்டை தொடர்கிறது
வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை தொழிலாளர்களுக்கான சோசலிச வேலைத்திட்டம்