பங்களாதேஷ் அரசாங்கம் புதிய "அத்தியாவசிய சேவைகள்" என்ற வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டங்களை முன்வைக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

ஏப்ரல் 6 அன்று, வங்காளதேஷ் அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்ட அத்தியாவசிய சேவைகள் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இது பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி எந்தத் துறையையும் அத்தியாவசிய சேவையாகவும் அறிவிக்கவும், அனைத்து தொழில்துறை நடவடிக்கைகளையும் சட்டத்திற்கு விரோதமானது என்று அறிவிக்கவும்  அனுமதிக்கிறது. அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தின் மத்தியில் இந்த அடக்குமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் காலிதா ஜியா தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் ஆதரவாளர்கள், வங்காளதேசத்தின் டாக்காவில், 10.12.2022 அன்று, பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகவும், புதிய தேர்தலை நடத்தவும் கோரி பேரணி நடத்தினர். [AP Photo/Mahmud Hossain Opu]

இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, அது  30 நாட்களுக்குள் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களுடன் அறிக்கையை திரும்ப சமர்ப்பிக்கும். அது நிறைவேற்றப்பட்டால், அந்த புதிய சட்டம் அரசாங்கம் அவசியமாகக் கருதும் எந்தவொரு சேவையையும் 'அத்தியாவசியமானது' என்று அறிவிக்க அனுமதி அளிக்கும், வேலைநிறுத்தங்களைத் தடைசெய்து, 'சட்டவிரோத வேலைநிறுத்தங்களில்' ஈடுபடும் எவருக்கும் ஆறு மாத சிறைத்தண்டனை மற்றும் 50,000 டாக்காக்கள் ($US470) அபராதம் விதிக்கப்படும்.

இந்த மசோதா ஏற்கனவே இருக்கும் அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் நீட்டிப்பு மற்றும் அரசாங்கத்தின் எதேச்சதிகார அதிகாரங்களை விரிவுபடுத்துவதற்கான மற்றொரு நடவடிக்கையாகும். 2018 ஆம் ஆண்டில், ஹசீனா அரசாங்கம் டிஜிட்டல் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றியது, இது கருத்துச் சுதந்திரத்தைத் தடுக்கிறது மற்றும் வங்காளதேச எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சிறையில் அடைப்பது தொடர்பான போராட்டங்களை அடக்குவதற்குப் பயன்படுத்தப்பட்டது.

தற்போதைய அத்தியாவசிய சேவைகள் சட்டம் ஏற்கனவே மின் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான நடவடிக்கைகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு, இ-காமர்ஸ், இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகள், ரயில்வே மற்றும் நீர், சாலை, காற்று மற்றும் அனைத்து சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்து ஆகியவற்றில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களை தடை செய்கிறது. 

ஊடக அறிக்கைகளின்படி, புதிய மசோதா தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தையும் மற்றும் துறைமுகம் அல்லது துறைமுகம் தொடர்பான சேவைகள், மற்றும் ஆயுதப்படைகள் தொடர்பான சேவைகள் மற்றும் வணிகங்களையும் உள்ளடக்கியது. மேலும் மற்ற துறைகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள், நீர் வழங்கல் அல்லது கழிவுநீர் அமைப்புகள் மற்றும் மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள் மற்றும் மருந்தகங்கள் போன்ற தொடர்புடைய சுகாதார சேவைகள் ஆகியவை அடங்கும்.

அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் நீட்டிப்பு, நடப்பிலுள்ள கோவிட்-19 பெரும் தொற்றுநோய் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போரினால் மோசமடைந்து சீரழிந்து வரும் சமூக நிலைமைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் வெடிப்பு பற்றிய வங்காளதேச ஆளும் வர்க்கத்தின் அச்சங்களினால் உந்தப்படுகிறது.

கடந்த ஆகஸ்டில், முன்னெப்போதும் இல்லாத வகையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில் அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளின் நாடு தழுவிய போராட்டங்கள் வெடித்தன -இது பங்களாதேஷ் வரலாற்றில் மிக அதிகமானதாக இருந்தது.

ஜனவரி மாதம், சர்வதேச நாணய நிதியம் (IMF) ஹசீனா அரசாங்கத்திற்கு 4.7 பில்லியன் டாலர் கடனை வழங்கியது. பிசினஸ் ஸ்டாண்டர்டின் கூற்றுப்படி, இதில் 'எரிபொருள் விலைகளை மாற்றியமைத்தல் - அதாவது எண்ணெய் விலை அதிகரிப்பு, அரசுக்கு சொந்தமான வங்கிகளின் உள்நாட்டு கடன் தொகையை 10 சதவீதமாகக் குறைத்தல், கடனைத் திருப்பி எடுக்க சொத்து மேலாண்மை நிறுவனங்களை நிறுவுதல் மற்றும் நாணய மாற்று விகிதத்தை  சந்தைக்கே விட்டு விடுதல் ஆகியவை அடங்கும் – அதாவது நாணய மாற்று விகிதத்தை சந்தை சக்திகளுக்கு கீழ்ப்படுத்தல் ஆகும்.  

IMF கடன் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பே, அரசாங்க மானியங்களைக் குறைக்க வேண்டும் என்ற வங்கியின் கோரிக்கைகளுக்கு இணங்க அரசாங்கம் எரிவாயு மற்றும் மின்சார கட்டணங்களை உயர்த்தியது.

டிசம்பர் 10 அன்று, அரசாங்கத்தை ராஜினாமா செய்யக் கோரியும், பணவீக்கம், எரிபொருள் அதிகரிப்பு மற்றும் போலிசாரின் வன்முறைத்  தாக்குதல்கள் தொடர்பாக புதிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP)  அழைப்பு விடுத்த போராட்டங்களில் பத்தாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 5 அன்று, தலைநகர் டாக்காவில் உள்ள ஆடைத் தொழிலாளர்கள் குறைந்த பட்ச மாத ஊதியத்தை 8,000 டாக்காவிலிருந்து ($US75) 23,000 டாக்காக்களாக ($215) உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பங்களாதேஷ் தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின் புதிய அத்தியாவசிய சேவைகள் மசோதாவை விமர்சித்தபோதிலும்  அதிகரித்து வரும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்க்கின்றனர்.

பங்களாதேஷ் நௌஜன் ஸ்ராமிக் கூட்டமைப்பு, நீர்ப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம், 'பாராளுமன்றத்தில் மசோதாவை முன்வைக்கும் முன் பங்குதாரர்களுடன்'-அதாவது தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் எந்த விவாதமும் நடத்தாததற்காக அரசாங்கத்தை விமர்சித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது மற்றும் எதிர்கால எதிர்ப்புகள் குறித்து ஒரு தெளிவற்ற அச்சுறுத்தலை விடுத்தது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 'மிகவும் சரியான' கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தினர். 'அத்தியாவசிய சேவைகளை பராமரிப்பது என்ற பெயரில் போராட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமையை தடை செய்வதை அனுமதிக்கப்படக்கூடாது' என்று தொழிற்சங்கம் கூறியது. எதிர்ப்பு தெரிவிப்பதற்கான, அரசியலமைப்பு உரிமையை மீறும் சட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்தியது.

இதேபோன்ற அறிக்கைகள் மற்றும் அரசாங்கத்தின் முந்தைய மறு செய்கைகளுக்கு எதிராக தொழிற்சங்கங்களால் விடுக்கப்பட்ட  பாதிப்பில்லாத எதிர்ப்புக்கள் பயனற்றவையாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 2022 இல், ஹசீனா அரசாங்கம் அதன் முந்தைய அத்தியாவசிய சேவைகள் சட்ட வடிவத்தை நிறைவேற்றியது, நாட்டின் மிகப்பெரிய தொழிற்சங்க கூட்டமைப்பான ஸ்ராமிக் கர்மாச்சாரி ஓக்யா பரிஷத்தின் (தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் ஐக்கிய முன்னணி) எதிர்ப்புகளைப் புறக்கணித்தது. அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்குப் பதிலாக, கூட்டமைப்பு மசோதாவை ரத்து செய்யக் கோரி இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்தது, 'தற்போதுள்ள சட்டத்தில் வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது' என்று அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியது.

அதன் மிகவும் பாராட்டப்பட்ட 'பொருளாதார முன்னேற்றம்' சரிந்து வரும் நிலையில் பங்களாதேஷ் இப்போது மோசமாகி வரும் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது. உலக வங்கி 2022-23 நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 6.7 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாகக் குறைத்துள்ளது, அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் பணவீக்கம் 9.33 சதவீதத்தை எட்டியது மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பு 31.14 பில்லியன் டாலராக குறைந்தது, இது ஆறு ஆண்டுகளில் மிக குறைவாக உள்ளது.

பங்களாதேஷில் வளர்ந்து வரும் சமூக சமத்துவமின்மை பற்றி கவலை தெரிவித்து, நியூ ஏஜின் ஏப்ரல் 10 தலையங்கம் இவ்வாறு எழுதியது: 'கடந்த காலத்தில், வங்காளதேசத்தில் அதிக பணக்காரர்களின் தொகை மற்ற நாடுகளை விட வேகமாக வளர்ந்தது' ஆனால் 35 மில்லியன் பங்களாதேசியர்கள் அல்லது  மக்கள் தொகையில் 20 சதவிகிதத்தினர் தற்போது வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என்று எச்சரித்துள்ளது.  

பங்களாதேஷ் மீதான பூகோள பொருளாதார நெருக்கடியின் தாக்கம், இப்போது வீழ்ச்சியடைந்து வரும் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் மற்றும் அதிகரித்து வரும் சமூக பதட்டங்களை எதிர்கொள்கிறது. இலங்கைக்கு இணையான நிதியச் சரிவுகளை அது கொண்டுள்ளது, கடந்த ஆண்டு மிகப்பெரிய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் வெடிப்பு ஆகியவை ஜனாதிபதி இராஜபக்ஷவையும் அவரது ஆட்சியையும் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தியது. 

IMF இன் கட்டளையின்படி 'கொடூரமான பரிசோதனையை' திணிக்கின்றபோது, விக்கிரமசிங்க ஆட்சியால் நடைமுறைப்படுத்தப்படும் அதே வகையான அடக்குமுறை அத்தியாவசிய சேவை வேலைநிறுத்த எதிர்ப்புத் தடைகள் மற்றும் பிற ஜனநாயக விரோத தாக்குதல்களை ஹசீனா அரசாங்கமும்  செய்கிறது. அது சந்தேகத்திற்கு இடமின்றி பிரான்சில் வெடிக்கும் சூழ்நிலையை பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது, அங்கே முதியோர் ஓய்வூதியம் மீதான ஜனாதிபதி மக்ரோனின் தாக்குதலுக்கு எதிராக மில்லியன்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் மூன்று மாதங்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.  

Loading