விக்டோரியா நூலாண்ட் பங்களாதேஷிற்கு பயணம், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுக்கு அதன் ஆதரவை கோருகிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 20 அன்று உயர்மட்ட அமெரிக்க இராஜதந்திரி விக்டோரியா நூலாண்ட் பங்களாதேஷுக்கு பயணம் செய்துள்ளார், அந்த பயணம் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுக்கு பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தை ஆதரவளிக்க கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஜன. 27, 2022 அன்று வாஷிங்டனில் உள்ள வெளியுறவுத்துறையில் நடந்த மாநாட்டின் போது அரசியல் விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை துணைச் செயலர் விக்டோரியா ஜே. நூலாண்ட் பேசுகிறார். (AP புகைப்படம்/சூசன் வால்ஷ், பூல்)

மார்ச் 19 முதல் 23 வரையிலான நூலாண்டின் மூன்று நாடுகளுக்கான - இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட - தெற்காசிய சுற்றுப்பயணம், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் பரந்த மூலோபாய தாக்குதலுக்கு இந்நாடுகளை நெருக்கமாக ஒருங்கிணைக்க முயன்றிருக்கிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறையின் கூற்றுப்படி, அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரின் பயணத்தின் நோக்கம் 'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பைப் பின்தொடர்வதற்கும், பொருளாதார ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதற்கும் மற்றும் உறவுகளை ஆழப்படுத்துவதற்கும்' ஆகும்.

இவ்வாறான இராஜதந்திர மொழி இருந்தபோதிலும், இந்த விடயத்தில் நூலாண்டின் தலையீடு கவனிக்க வைக்கிறது. உக்ரேனில் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய-சார்பு அரசாங்கத்தை தூக்கியெறிந்து, மேற்கத்திய சார்பு ஆட்சியை நிறுவிய 2014 பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பைத் தயாரிப்பதில் அவர் தனது பங்கினை வழங்கியதில் இழிவான முறையில் பிரபலமடைந்தவராவார்.

பங்களாதேஷில், நூலாண்ட், வங்கதேச வெளியுறவு மந்திரி அப்துல் மொமனுடன் எட்டாவது அமெரிக்க-பங்களாதேஷ் கூட்டு பங்காண்மை பேச்சுவார்த்தை என்று அழைக்கப்படும் ஒரு சந்திப்பை நடத்தியிருக்கிறார்.

கூட்டத்திற்குப் பின்னர், நூலாண்ட் செய்தியாளர்களிடம் கூறினார்: போரை முடிவுக்கு கொண்டு வர 'அனைத்து சுதந்திர நாடுகளும் மற்றும் அனைத்து சுதந்திர மக்களும் உக்ரேன் மக்களுடன் இணைந்து நிற்க வேண்டிய தருணம் இது' என்று மார்ச் 21 அன்று டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு அவரது அழைப்பு எதுவும் செய்யப்போவதில்லை. ஆனால் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோவின் மறைமுக போரின் பின்னால் நாடுகளை வரிசைப்படுத்துவதற்காக அவர் செயல்படுகிறார்.

நூலாண்டின் அழுத்தம் இருந்தபோதிலும், அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் சமநிலையை வைத்திருக்க பங்களாதேஷ் அரசாங்கத்தின் விருப்பத்தை மொமன் சுட்டிக்காட்டினார். பேச்சுவார்த்தியின் போது, 'வங்க தேசம் எப்போதும் அமைதியை விரும்புவதாகவும், [ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான] மோதலை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்றும் அடிக்கோடிட்டுக் காட்டினேன்' என்று அவர் கூறினார்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா மார்ச் 20 அன்று குறிப்பிட்டுள்ளதன்படி, இரு தரப்பும் இராணுவ தகவல் ஒப்பந்தத்தின் (General Security of Military Information Agreement - GSOMIA) பொதுப் பாதுகாப்பு வரைவுக்கு ஒப்புக்கொண்டன, அமெரிக்காவிற்கும் பங்களாதேஷ்க்கும் இடையே வளர்ந்து வரும் இராணுவ உறவுகளை இது எடுத்துக்காட்டுகிறது. GSOMIA 'பாதுகாப்பு முன்னணியில் அதிகமாக செயற்படக்கூடிய நுழைவாயில் இது' என்று நூலாண்ட் கூறினார்.

நூலாண்டின் வருகையின் மூலம் கொடுக்கப்பட்ட வாஷிங்டனின் அழுத்தம் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தியது. மார்ச் 24 அன்று ஐநா பொதுச் சபையின் சிறப்பு அமர்வின் போது, பங்களாதேஷ் மற்ற 139 நாடுகளுடன் சேர்ந்து, 'உக்ரேனூக்கு உதவி செய்தல் மற்றும் அக்குடிமக்களின் பாதுகாப்பைக் கோரும்' தீர்மானத்திற்கு வாக்களித்தது மற்றும் உக்ரேனில் 'மோசமான மனிதாபிமான சூழ்நிலையை' ரஷ்யா உருவாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.

பங்களாதேஷ் தனது வாக்கை 'மனிதாபிமான சூழ்நிலை' என்ற சாக்குப்போக்கு கூறி நியாயப்படுத்தியது. இது, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா உட்பட 34 நாடுகளில் இருந்த அதன் முந்தைய நிலைப்பாட்டில் இருந்து ஏற்பட்ட மாற்றம் ஆகும், அவைகள் ரஷ்யாவை கண்டித்து உடனடியாக அதன் இராணுவப் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிய மார்ச் 2 அன்று ஐ.நா. கொண்டுவந்த தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை. .

ஹசீனாவின் அவாமி லீக் அரசாங்கம் அமெரிக்க-நேட்டோ கூட்டணிக்கும் ரஷ்யா-சீனாவுக்கும் இடையில் சமநிலையைப் பேணி வருகின்றது, ஏனெனில் நாடு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடு ஆகியவற்றிற்கு இரு தரப்பினரையும் சார்ந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதியில் பெரும் பங்கு அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் செல்கிறது. பங்களாதேஷ் கப்பல் முவர்கள் சங்கத்தின் (Bangladesh Shipping Agents Association) கூற்றுப்படி, ஏறக்குறைய 51 சதவிகித ஏற்றுமதி ஐரோப்பாவிற்கும், 25 சதவிகிதம் அமெரிக்காவிற்கும், 4 சதவிகிதம் கனடாவிற்கும் செல்கிறது என்று ஹெலனிக் ஷிப்பிங் நியூஸ் இணையதளம் ஜனவரி 31 அன்று தெரிவித்துள்ளது.

மறுபுறம், கோதுமை, உரம், இயந்திரங்கள், புதிய மற்றும் உலர்ந்த பழங்களை வழங்கும் ரஷ்யாவுடனான உறவைத் தளர்த்த அவாமி லீக் அரசாங்கம் தயங்குகிறது. ஆடைகள், சணல், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தேயிலை மற்றும் தோல் ஆகியவற்றை ரஷ்யாவிற்கு பங்களாதேஷ் ஏற்றுமதி செய்கிறது. இருவழி வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு $1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு மேல் இருக்கிறது.

“தடைகள் வழக்கமான வர்த்தகத்தை சீர்குலைத்துள்ளன. பல துறைமுக அதிகாரிகள் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட கப்பல்களில் இருந்து வங்கதேச ஏற்றுமதி பொருட்களை கைவிட்டனர் என்று பெனார் செய்தி ஊடகத்திடம் வங்காளதேச வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு தலைவர் எம்.டி. ஜாஷிம் உடின் கூறியுள்ளார்.

பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையமான மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையத்தை 13.48 பில்லியன் டாலர் மதிப்பில் ரஷ்யா கட்டிக்கொண்டிருக்கிறது. 2,400 மெகாவாட் திறன் கொண்ட இந்த ஆலை, நாட்டின் மின்சாரத் தேவையில் 9 சதவீதத்திற்கும் மேலாக பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவிட்-19 பெரும்தொற்றுநோயால் தூண்டிவிடப்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், முதலீடு, ஏற்றுமதி வருவாய் மற்றும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி நிதி உதவிகளை நாடு இழக்க நேரிடும் என்று அஞ்சும் அரசாங்கம், அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியத்துடன் தலையீடுகளை தவிர்க்க விரும்புகிறது ஆனால் அதன் தண்டனை நடவடிக்கைகளை முகங்கொடுக்க நேரிடும்.

அழுத்தம் கொடுப்பதற்காக, பங்களாதேஷில் உள்ள மிகவேக அதிரடி படை குழு (Rapid Action Battalion - RAB) செய்த மனித உரிமை மீறல்களை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. RAB மற்றும் அதன் சில அதிகாரிகளுக்கு எதிராக 'சட்டத்திற்கு புறம்பான கொலைகள் உள்ளிட்ட அனைத்து மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்' போன்வற்றிற்காக அமெரிக்கா டிசம்பரில் பொருளாதாரத் தடைகளை விதித்தது என மார்ச் 20 அன்று நியூ ஏஜ் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்ய படையெடுப்பிற்கு முன்னதாகவே இது நன்கு கணக்கிடப்பட்டது. இந்தப் பிரச்சினைகளில் அமெரிக்கா ஒருபோதும் மௌனமாக இருக்கப் போவதில்லை என்று நூலாண்ட் அறிவித்துள்ளார்.

இந்த தடைகளால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. மார்ச் 28 அன்று, RAB இன் 18வது ஆண்டு விழாவில் பேசிய ஹசீனா, பொருளாதாரத் தடைகள் 'ஒரு அருவருப்பான செயல்' என்று கூறினார், 'அமெரிக்க அரசாங்கம் அவர்களின் குற்றச் செயல்களுக்காக தங்கள் படைகளின் எந்த உறுப்பினர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காது' என்றும் கூறினார்.

RAB என்பது ஒரு இழிபுகழ் பெற்ற துணை ராணுவப் படையாகும், இது சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் உரிமை ஆர்வலர்கள் மீதான அடக்குமுறையை நடத்துகிறது. எவ்வாறாயினும், அதன் துஷ்பிரயோகங்கள் பற்றிய அமெரிக்காவின் கவலை பாசாங்குத்தனமானது ஏனெனில் விக்கிலீக்ஸ் கூற்றுபடி RAB படைகளுக்கு அவர்கள்தான் பயிற்சியளித்துள்ளார்கள்.

மேலும், அமெரிக்க இராணுவப் படைகள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் உட்பட உலகம் முழுவதும் தங்கள் சொந்த போர்க்குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களுக்காக இழிவான முறையில் பிரபலமடைந்திருக்கின்றது. சவூதி அரேபியா போன்ற அதன் நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளின் மோசடிகளுக்கு வாஷிங்டன் கண்மூடித்தனமாக உள்ளது. வாஷிங்டனின் உண்மையான கவலை பங்களாதேஷ் அரசாங்கத்தை சீனாவில் இருந்து தூர விலகி இருக்க அழுத்தம் கொடுப்பதாகும்.

தொழிலாளர்களின் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்கு RAB படையை பயன்படுத்தியபோது அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மௌனமாகவோ அல்லது வரையறுக்கப்பட்ட மேலோட்டமான விமர்சனங்களையோ செய்து கொண்டிருக்கின்றனர். மே 2018 இல் ஹசீனாவின் அரசாங்கம் 'போதைக்கு எதிரான' நடவடிக்கை என்ற சாக்குப்போக்கை கூறிக்கொண்டு ஒரு மிருகத்தனமான அடக்குமுறையைக் கட்டவிழ்த்து, 150 க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றிருக்கிறது மற்றும் சுமார் 21,000 பேரைக் கைது செய்துள்ளது. 'அதன் மனித உரிமைக் கடமைகளை முழுமையாகச் சந்திக்க' சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை விசாரிக்குமாறு அரசாங்கத்தை மிகசாதாரன முறையில் அமெரிக்க வெளியுறவுத்துறை வலியுறுத்தியது.

RAB தடைகளை நீக்குவதற்கு டாக்கா மிகவும் விரும்புகிறது. நூலாண்டுடனான கலந்துரையாடல்களில், அதன்மீதான தடைகளை முடிவுக்கு கொண்டுவர மொமன் பரிந்துரைத்தார். RAB இன் 'மனித உரிமைகள் நடவடிக்கைகளை' மேம்படுத்த அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த ஆவணம் நூலாண்டிடம் வழங்கப்பட்டது. நூலாண்ட் கடந்த மூன்று மாதங்களில் RAB இன் 'முன்னேற்றத்தை' குறிப்பிட்டார்-வேறு எதுவும் கிடையாது..

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், 'பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள்' பற்றி விவாதிக்க ஏப்ரல் 4 ஆம் தேதி வாஷிங்டனில் மோமனை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு 1972 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து பிரிந்த பின்னர் அமெரிக்கா பங்களாதேஷை முறையாக அங்கீகரித்தபோது நிறுவப்பட்ட 50 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளையும் குறித்து நிற்கிறது.

Loading