எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பங்களதேஷ் முழுவதும் தெருமுனைப் போராட்டங்கள் வெடிக்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பங்களாதேஷ் வரலாற்றிலேயே மிக அதிகமாக, ஆகஸ்ட் 5 இல் அறிவிக்கப்பட்ட முன்னெப்போதும் இல்லாத அளவிலான எரிபொருள் விலை உயர்வு, அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளின் நாடு தழுவிய போராட்டங்களைத் தூண்டியுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 86 டாகாவில் இருந்து (91 அமெரிக்கச் சென்ட்) 130 டாகா (1.37 அமெரிக்க டாலர்) வரை கிட்டத்தட்ட 52 சதவீதம் அதிகரிக்கப்பட்டது, டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் 42.5 சதவீதம் அதிகரிக்கப்பட்டன.

இந்த விலை உயர்வுகள், ஏனைய பல நாடுகளைப் போலவே, உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமிப் போர் மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பின் நேரடி விளைவாகும், அதே வேளையில் தொழிலாளர்களும் ஏழைகளும் வீழ்ச்சியடைந்து வரும் வாழ்க்கை நிலைமைகளைச் சமாளிக்க ஏற்கனவே போராடி கொண்டிருக்கிறார்கள்.

ஏப்ரல் 16, 2020, வியாழன், பங்களாதேஷின் டாக்காவில் நடந்த போராட்டத்தின் போது, பங்களாதேஷ் ஆடைத் தொழிலாளர்கள், தங்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தைக் கோரி சாலையை மறித்துள்ளனர். (AP Photo/Al-emrun Garjon)

ஊடகச் செய்திகளின்படி, இந்த விலை உயர்வுகளுக்கு அடுத்த நாள் தொடங்கி, தேசிய தலைநகரான டாக்கா மற்றும் பிற முக்கிய நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. மோட்டார் சைக்கிள் பயன்படுத்துபவர்களும் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களும் பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி, வீதி ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுடன், அவர் அரசாங்கம் விலையைக் குறைக்க வேண்டுமெனக் கோரி வருகின்றனர்.

காய்கறிகள் வினியோகிக்கும் ட்ரக் டிரைவர் மொஹம்மத் நூருல் இஸ்லாம், பெட்ரோலுக்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது பிபிசி ஊடகத்திடம் பேசினார். 'நான் சந்தைக்குச் செல்லும் போது, என்னால் என் குடும்பத்திற்குப் போதுமான உணவை வாங்க முடியவில்லை. எரிபொருள் விலை இப்படியே அதிகரித்துக் கொண்டிருந்தால் என்னால் என் பெற்றோரைக் கவனிக்கவோ அல்லது பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ முடியாது. நான் வேலை இழந்து விட்டால், நான் வீதியில் பிச்சை எடுக்க வேண்டியது தான்,” என்றார்.

வேன்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு போராட்டக்காரர் ஹோமம்மது ஷாஜஹான் அல் ஜஜீராவுக்குக் கூறுகையில், “வேன்களின் வாடகைச் செலவு அதிகமாகி விட்டதால் இப்போது யாரும் எங்கள் வேன்களை வாடகைக்கு எடுப்பதில்லை. உண்மையிலேயே மிகவும் கஷ்டமாக உள்ளது. பாருங்கள் ஓட்டுனர்கள் எல்லோரும் சும்மா உட்கார்ந்திருக்கிறார்கள். அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று தெரியவில்லை,” என்றார்.

எரிபொருள் விலை ஏற்றங்களால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும், அத்துடன் பேருந்து கட்டணம் மற்றும் இதர போக்குவரத்துக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 13 இல் 26 அடிப்படை பொருட்களில் 25 இன் விலைகள் அதிகரித்து வருவதைக் குறித்து செய்தி வெளியிட்டது. கடந்த மாதம் அரிசி விலை 22 சதவீதமும், பண்ணைக் கோழிகள் விலை 45 சதவீதமும், வெங்காயம் 43 சதவீதமும், முட்டை விலை 20 சதவீதமும், மீன் விலை 10 சதவீதமும் உயர்ந்துள்ளது.

ஆறு பேர் கொண்ட குடும்பத்துடன் டாக்காவில் வசிக்கும் ஓர் அலுவலகக் காவலாளி மமுனூர் ரஷீத் அந்தப் பத்திரிகைக்குக் கூறுகையில் முன்னர் அவர் வாரத்திற்கு மூன்று முறை மீன் உணவு சாப்பிட முடிந்ததாகவும், ஆனால் 'இப்போது ஒரு முறை மட்டுமே சாப்பிட முடிகிறது,” என்றார்.

அதிகரித்து வரும் வெகுஜன எதிர்ப்புக்கு அஞ்சி, ஆளும் 14 கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்களதேஷ் தொழிலாளர் கட்சி, எரிபொருள் விலையை உயர்த்தும் அரசாங்கத்தின் முடிவு தற்கொலைக்குச் சமமானது என்று எச்சரித்தது.

விலைவாசி உயர்வுக்கு எதிராக மாணவர் அமைப்புகளும், பல்வேறு ஸ்ராலினிசக் கட்சிகளும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன.

பல்வேறு ஸ்ராலினிசக் குழுக்கள் உட்பட எட்டு அரசியல் கட்சிகளின் ஒரு கூட்டணியான இடது ஜனநாயகக் கூட்டணி மற்றும் பங்களதேஷ் கம்யூனிஸ்ட் கட்சி, எரிபொருள் விலை உயர்வுகளைத் திரும்பப் பெறக் கோரி ஆகஸ்ட் 6 இல் டாக்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தின.

ஆகஸ்ட் 7 இல், டாக்காவின் முக்கிய அண்டைப் பகுதியான ஷாபாக் சந்திப்பில் மாணவ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தியது, பின்னர் டஜன் கணக்கான மாணவத் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் மீது குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது. நான்கு நாட்களுக்குப் பின்னர் ஆகஸ்ட் 11 இல், அவர்களை விடுவிக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

வெகுஜன கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள முற்படும் வகையில், நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான வலதுசாரி பங்களதேஷ் தேசியவாத கட்சி (BNP) ஆகஸ்ட் 11 இல் டாக்காவின் அண்டைப் பகுதியான நயா பல்தானில் விலைவாசி உயர்வு தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான அரசாங்கத்தைப் போலவே பங்களதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கமும் அது அதிகாரத்தில் இருந்த போது தொழிலாள வர்க்கம் மற்றும் ஏழைகளின் சமூக உரிமைகளைத் தாக்கியது.

இந்த மாத எரிபொருள் விலை உயர்வுகளுக்கு முன்னதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலைககள் முன்னரும் உயர்த்தப்பட்டன. இயற்கை எரிவாயு விலையில் 23 சதவீதம் உயர்த்தப்பட்டதை அடுத்து, டாக்கா முழுவதும் வெகுஜன போராட்டங்கள் வெடித்தன, ஜூன் 4 இல் அந்நகரின் சில பகுதிகள் மணிக் கணக்கில் முடக்கப்பட்டன. நாட்டின் எரிசக்தி தேவையில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக இயற்கை எரிவாயு உள்ளது.

ஸ்னொடெக்ஸ் அப்பேரல்ஸ், (Snowtex Apparels), MBM கார்மென்ட், விஷன் கார்மென்ட் (Vision Garment), IDS குழுமம், கொல்கா கார்மென்ட் (Kolka Garment) மற்றும் டிமொக்ஸ் (Dmox) ஆகிய நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான ஆடை உற்பத்தித் தொழிலாளர்கள் டாக்காவின் மிர்பூரில் விலைகளைக் குறைக்கவோ அல்லது இந்த அதிகரிப்பை அவர்களின் சம்பளங்களில் ஈடு செய்யவோ கோரி நான்கு நாள் வேலைநிறுத்தம் நடத்தினர். வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஸ்னொடெக்ஸ் அப்பேரல்ஸ் தொழிலாளி மமுனூர் ரஹ்மான் ஊடகங்களுக்குக் கூறுகையில், ஆடை உற்பத்தித் தொழிலாளர்களுக்கு வேறு வழியில்லை என்றார். 'அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் அதேவேளையில் எங்களின் சம்பளம் நீண்ட காலமாக அதிகரிக்கப்பட வில்லை,” என்றார்.

பங்களதேஷ் புள்ளிவிபரத் துறை ஆணைய தகவல்படி, ஜூன் மாதத்தின் ஒட்டுமொத்த ஆண்டு பணவீக்க விகிதம் 7.56 சதவீதமாக இருந்தது, இது ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். உணவுப் பொருட்களின் பணவீக்கம் இன்னும் அதிகமாக 8.37 சதவீதமாக இருந்தது.

உலகச் சந்தையில் பொருட்களின் விலை அதிகரித்து வருவது பங்களதேஷைப் பாதித்து வருகிறது, இது நாட்டின் வரலாற்றிலேயே படுமோசமான இருப்புநிலைக் கணக்கு பற்றாக்குறை நெருக்கடி இட்டுச் செல்வதுடன், அதன் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு கடுமையாக குறைத்து வருவதாக bdnews24.com குறிப்பிடுகிறது.

ஜூலை 27 நிலவரப்படி, பங்களதேஷ் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு 39.48 பில்லியன் டாலராக இருந்தது, இது ஓராண்டுக்கு முந்தைய 45.7 பில்லியன் டாலரை விட குறைவாகும். இது ஐந்து மாத இறக்குமதிக்குப் பணம் செலுத்த போதுமானதாக செய்திகள் குறிப்பிடுகின்ற அதேவேளையில், எண்ணெய் மற்றும் ஏனைய அடிப்படை பண்டங்களின் விலை இன்னும் கூடுதலாக உயர்வது கையிருப்பை இன்னும் வேகமாக கரைத்து விட வழி வகுக்கும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.

இதை ஈடு செய்ய, அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து 4.5 பில்லியன் டாலர் கடனும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் (ADB) இருந்து மற்றொரு 2 பில்லியன் டாலரும் கோரியுள்ளது.

2021 இல் பங்களதேஷின் மொத்த வெளிநாட்டுக் கடன்கள் 62 பில்லியன் டாலராக இருந்தது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவிக்கின்ற அதேவேளையில், 2024-25 நிதியாண்டுடன் பல்வேறு வெளிநாட்டுக் கடன்களை வழங்குவதற்கான சலுகை காலம் முடிவடையும் என்று கொள்கை பேச்சுவார்த்தைக்கான மையம் (Centre for Policy Dialogue) எச்சரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில், மே 2012 முதல் மே 2022 வரை, பங்களதேஷ் நாணயம் டாகா அமெரிக்க டாலருக்கு எதிராக 63 சதவீதம் மதிப்பிழந்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போல பங்களதேஷூம் அதே வகையான கடுமையான அரசியல் நெருக்கடிக்குள் விழுமா என்று வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு அரசியல் விமர்சகர்கள் கவலை எழுப்பி வருகின்றனர்.

கட்டுக்கடங்கா பணவீக்கம், மின் வெட்டுக்கள் மற்றும் எரிபொருள், உணவுப் பொருட்கள், மருந்துகளின் பரந்த பற்றாக்குறை மீது ஏப்ரலில் தொடங்கிய போராட்டங்கள், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக ஒரு வெகுஜன எழுச்சியாக மற்றும் வேலைநிறுத்தங்களாக அபிவிருத்தி அடைந்து, ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்ஷ இராஜினாமா செய்து ஜூலை 13 இல் அவர் அந்நாட்டை விட்டே தப்பியோட நிர்பந்திக்கப்பட்டார்.

டாக்காவைத் தளமாகக் கொண்ட Daily Star இல் ஐ.நா. வளர்ச்சித் திட்டப் பொருளாதார நிபுணர் நசீன் அகமது எழுதிய ஒரு சமீபத்திய கட்டுரை, 'பங்களதேஷ் [இலங்கையப் போலவே] அதே போன்ற ஒரு தவிர்க்கவியலாத நிகழ்வை எதிர்கொள்ளும் பாதையில் இருக்கலாம்' என்று எச்சரித்தார்.

2015-16 மற்றும் 2018-19 இல் முறையே 7 சதவீதம் மற்றும் 8.15 சதவீத வளர்ச்சி விகிதங்களை மேற்கோளிட்டு, ஹசீனா அரசாங்கமும் உலக வங்கியும் முன்னர் கூறுகையில், 2031 வாக்கில் பங்களதேஷ் ஓர் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்று வாதிட்டன. பண்டங்களின் அதிகரித்து வரும் விலை உயர்வுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியால் இந்த மாயை சிதைந்து போயுள்ளது.

பங்களதேஷில் வெடித்துள்ள வெகுஜன போராட்டங்களின் அலை, அதிகரித்து வரும் பணவீக்கம், வேலை மற்றும் கூலி வெட்டுக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் பரவி வரும் வர்க்கப் போராட்டங்களின் பாகமாக உள்ளன. எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்னும் கூடுதலாக உயர்த்துவதே ஹசீனா அரசாங்கத்தின் விடையிறுப்பாக உள்ளது, அதேவேளையில் அது பொலிஸை அணித்திரட்டி அரசு ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து விடுகிறது, இந்த நடவடிக்கைகள் வெகுஜன எதிர்ப்பை இன்னும் கூடுதலாக அதிகரிக்கும்.

Loading