வேலைநிறுத்தம் செய்யும் இலங்கை தொழிலாளர்களுக்கான சோசலிச வேலைத்திட்டம்

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஒரு பொது வேலைநிறுத்தத்தில் இணையும் இலங்கை தொழிலாளர்கள் மத்தியில் பின்வரும் அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியால் (சோ.ச.க.) விநியோகிக்கப்படுகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க) கோட்டாபய இராஜபக்ஷவின் அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்களுடன் நிற்கிறது. ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவையும் அவரது அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி இலட்சக்கணக்கான வெகுஜனங்கள் முன்னெடுக்கும் பரந்த போராட்டத்தில் அவர்கள் இணைந்து கொண்டுள்ளனர். இன்றைய போராட்டத்தில் துறைமுகம், மின்சாரம், தபால், இரயில், பெட்ரோலியம், வங்கி மற்றும் அரசு நிர்வாக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொள்வார்கள்.

2022.ஏப்ரல் 20, 2022 அன்று கொழும்பில் அரச துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் (Photo: WSWS Media)

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தாங்க முடியாத அளவு அதிகரிப்பு மற்றும் அவற்றின் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள, தொழிலாளர்கள் மற்றும் விவசாய வெகுஜனங்கள் சமூகப் பேரழிவில் சிக்கித் தவிக்கின்றனர். இராஜபக்ஷ அரசாங்கம், மக்களின் வாழ்க்கையை முற்றிலுமாக அலட்சியம் செய்து நுகர்வோர் பொருட்களின் விலைகளை இரட்டிப்பாக்கியுள்ளதுடன் வெகுஜன எழுச்சிகளை நசுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை நிலைநிறுத்துகிறது. ரம்புக்கனையில் எரிபொருளைக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சமிந்த லக்ஷான் கொல்லப்பட்டமை, வெகுஜன இயக்கங்களை இரத்தத்தில் மூழ்கடிக்க அரசாங்கம் தயாராக இருப்பதையே காட்டுகிறது.

சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) பிணையெடுப்புக் கடனைப் பெற முயற்சிக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, அது பிறப்பித்த கட்டளைகளை அமுல்படுத்துவதற்காக, இராஜபக்ஷ, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அனைத்து கொடூரமான அதிகாரங்களுடனும், இந்த அடக்குமுறையை முன்னெடுத்துள்ளார். அரசு செலவினங்களைக் கடுமையாகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ள அரசாங்கம், எரிவாயு விலையை இரட்டிப்பாக்கியதை அடுத்து மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த கட்டளைகளின் கீழ், வரிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டி இருப்பதோடு விலைவாசிகள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும், மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட வேண்டும். இது வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஓய்வூதியங்களை வெட்டிக் குறைக்க வழிவகுக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள உலகப் பொருளாதார நெருக்கடி. இப்போது உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ பினாமி போரினால் தொடர்கிறது. இந்த நெருக்கடியின் தீவிர வெளிப்பாடே இலங்கையில் வெளிப்பட்டுள்ளது.

இன்று வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள், இந்தத் தாக்குதல்களைத் தோற்கடிப்பதற்கான அரசியல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். இதேவேளை, கடந்த மூன்று வாரங்களாக கொழும்பிலும், நாடு முழுவதிலும் காலி முகத்திடலில் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ள மக்கள், இதே பிரச்சினைகளையே எதிர்நோக்கியுள்ளனர்.

எவ்வாறெனினும், இன்று தொழிலாளர்களின் கரங்களுக்கு தொழிற்சங்கங்கள் கொடுத்திருக்கும் கோஷங்கள், “அடக்குமுறை அரசை விரட்டியடிப்போம்! வெகுஜன போராட்டத்தில் வெற்றி பெறுவோம்!' என்பவையாகும். அடுத்தது என்ன என்பதையிட்டு மரண மௌனத்தை கடைபிடிக்கும் இந்த தொழிற்சங்கங்கள், உண்மையில் 'இடைக்கால நிர்வாகத்தை' அமைத்து, அதன் பின்னர் நடைபெறும் தேர்தலில் அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபி) முன்வைக்கும் பிற்போக்கு வேலைத்திட்டத்திற்கே ஆதரவளிக்கின்றன.

போலி-இடது முன்நிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), அதன் தொழிற்சங்கங்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் இந்த தொழிற்சங்கங்களுடன் அணிசேர்ந்து நிற்கின்றன.

அனைத்து ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால ஆட்சியும் அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் அரசாங்கமும் என்னவாக இருக்கும்? அது முதலாளித்துவத்தைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்ட கொடூரமான சிக்கனத் திட்டத்தை அமுல்படுத்தும். இராஜபக்ஷ ஆட்சியைப் போன்று சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதைத் தவிர இத்தகைய நிர்வாகங்களுக்கு வேறு வழி கிடையாது.

இந்த முதலாளித்துவக் கட்சிகள் அனைத்தும், உழைக்கும் மக்களின் உரிமைகளை நசுக்கி, சர்வதேச நாணய நிதியத் திட்டங்களை செயல்படுத்துவதில் சாதனை படைத்தவை ஆகும்.

பல நாட்களாக மௌனமாக இருந்த தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தை அகற்றும் போராட்டத்தில் தாங்களும் ஈடுபடப் போவதாக அறிவித்து இன்றைய வேலைநிறுத்தம் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளன. தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு, பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அடக்குமுறைக்கும் எதிராகப் போராட வேண்டிய அவசியம் தொழிலாளர்கள் மத்தியில் தொடர்ந்து இருப்பதால், அந்த எதிர்ப்பை திசை திருப்பும் முயற்சியேலேய தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் அனைத்தும் முந்தைய ஆண்டில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை காட்டிக்கொடுத்து வந்துள்ளன. இந்த அனைத்து தொழிற்சங்கங்களின் பெயர் பட்டியலை வழங்குவதற்கு இந்த கட்டுரையில் போதுமான இடம் இல்லை.

ஏப்ரல் 20, 2022 அன்று வங்கி ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் (Photo: WSWS Media)

இங்கு, கடந்த ஆண்டு 100 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள் காட்டிக்கொடுப்பில் பேர் போனவை. மற்ற அனைத்து தொழிற்சங்கங்களும் அதற்கு ஆதரவு தெரிவித்தன. 'உறுப்பினர்களின் போர்க்குணத்தை நிர்வகிப்பதற்கு' வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுப்பதாக சுகாதார தொழில் வல்லுநர்களின் கூட்டமைப்பு (சு.தொ.வ.கூ.) கூறியது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உட்பட பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டங்களை பலமுறை காட்டிக்கொடுத்துள்ளன.

ஒரு இடைக்கால நிர்வாகம் என்ற மரணப் பொறியை தொழிலாள வர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. அது முற்றிலும் மாறுபட்ட மாற்று வேலைத் திட்டத்தைக் கொண்டுள்ளது. தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் முதலாளித்துவ அமைப்புக்குள் தீர்வுகள் கிடையாது.

சுமார் 3 வாரங்களாக காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களால், “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற கோஷத்தைத் தாண்டிச் செல்ல முடியவில்லை. அதற்குத் தலைமை தாங்கும் குழுக்களும் இடைக்கால அரசாங்கத்தைக் கோருகின்றன! போராட்டத்திற்கு வந்துள்ள தொழிலாளர்களே இவர்களுக்கும் தலைமை தாங்க வேண்டும்.

அதை எப்படி செய்வது? சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), தொழிலாளர்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமாக, தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றது. அத்தகைய குழுக்கள், நாட்டிலுள்ள ஒவ்வொரு தொழிற்சாலையிலும், வேலைத் தளத்திலும், தொழிலாள வர்க்க சுற்றுப்புறங்களிலும் கட்டியெழுப்பப்பட வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சி தனது முழுமையான ஒத்துழைப்பை அதற்கு வழங்கத் தயாராக உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, எதேச்சதிகார நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் மற்றும் பொது பாதுகாப்புச் சட்டம், அத்தியாவசிய சேவைகள் சட்டம் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்க வேண்டும் என்றும் கோருகிறது.

இராஜபக்ஷ அரசாங்கமும் எதிர்க் கட்சிகளும் முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கும் இரத்தம் தோய்ந்த சிக்கன வேலைத்திட்டத்திற்கு எதிராக, பெருவணிக முதலீட்டாளர்களின் பெரும் இலாபங்களை விட மனிதத் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வேலைத்திட்டத்தை நாங்கள் முன்வைக்கின்றோம்.

பின்வருவன இந்த வேலைத்திட்டத்தில் அடங்கும்:

* பொது வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஏனைய வளங்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்ளுங்கள்! வங்கிகள், பெருநிறுவனங்கள், பெருந்தோட்டங்கள் மற்றும் ஏனைய பிரதான பொருளாதார மையங்களை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்குங்கள்!

முதலாளித்துவ வர்க்கமானது அதன் உற்பத்தி மற்றும் விநியோகச் சாதனங்களின் உரிமையைப் பயன்படுத்தி பெரும் இலாபங்களைக் குவிக்கிறது. அத்தியாவசியத் தேவைகளை வழங்குவதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு உள்ள ஒரே வழி, தற்போதைய ஒடுக்குமுறை மற்றும் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, முதலாளிகளிடம் இருந்து அவற்றை கையகப்படுத்தி ஒருங்கிணைப்பதே ஆகும்.

* அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரி! சர்வதேச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சிக்கன கோரிக்கைகளை நிராகரிக்கவும்!

சர்வதேச வங்கிகளின் கஜானாக்களுக்குப் போய் சேரும் 7 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்துவதற்குப் பதிலாக, அந்த பணம் உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசியமான உணவு, எரிபொருள், மருந்து மற்றும் பிற பொருட்களுக்காக செலவழிக்கப்பட வேண்டும்.

* பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரமாண்டமான சொத்துக்களை கைப்பற்றுங்கள்!

உலக சமத்துவமின்மை தரவுத்தளத்தின்படி, இலங்கை சமூகத்தில் உள்ள செல்வந்தர்களான 10 சதவீதத்தினர், தீவின் செல்வத்தில் 63.8 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ள அதே சமயம், கீழே உள்ள 50 சதவீத மக்கள் வெறும் 4.3 சதவீதத்தை மட்டுமே பங்கிட்டுக்கொள்கின்றனர். தொழிலாள வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த மாபெரும் செல்வம், கைப்பற்றப்பட்டு சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக விநியோகிக்கப்பட வேண்டும்.

* ஏழைகள், மிகவும் வறிய விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் அனைத்து கடன்களையும் இரத்து செய்! விவசாயிகளுக்கு உர மானியம் உள்ளிட்ட அனைத்து மானியங்களையும் மீண்டும் வழங்கு!

தங்களின் நசுக்கிக்கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகளில் இருந்து வெளியேற ஒரு வழியை வழங்குவதன் மூலம், தொழிலாள வர்க்கமானது ஒடுக்கப்பட்ட கிராமப்புற மக்களுக்கும், அதிக கடன், அதிக விலையிலான உள்ளீடுகள் மற்றும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத விலைகளால் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் சிறு வியாபாரங்களை நடத்துபவர்களுக்கும் ஒரு ஈர்ப்பு துருவமாக மாறும்.

* கண்ணியமான மற்றும் பாதுகாப்பான வேலைச் சூழலுடன் அனைவருக்கும் வேலை உத்தரவாதம் வேண்டும்! வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ப ஊதியம் வேண்டும்!

சர்வதேச நாணய நிதியம் மற்றும் சர்வதேச வங்கியாளர்கள் அவர்களின் வழியில் செயற்பட்டால், மழை போல் வேலை அழிப்பு நடக்கும். பணவீக்கம் ஏற்கனவே அபரிமிதமாக அதிகரித்து, ஊதியத்தை அபகரித்துவிட்டது. தொழிற்சங்கங்களின் கைகளில் விடப்பட்டால், வேலைகள், ஊதியங்கள் மற்றும் நிலைமைகள் பல ஆண்டுகளாக நடந்தது போல் மேலும் பேரம் பேசி விற்கப்படும்.

இந்த வேலைத் திட்டத்திற்கான போராட்டம் முன்னோக்கி செல்லும் வழியை வழங்குவதுடன் தொழிலாள வர்க்கத்தை அதன் பலனில் நம்பிக்கையை வைக்கவும், கிராமப்புற மக்களைத் தன் பக்கம் இழுக்கவும், நடவடிக்கை குழுக்களின் கூட்டணியின் வளர்ச்சியின் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றி, சமூகத்தை சோசலிச வழியில் மறுசீரமைப்பதை தொடங்க, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கு தொழிலாள வர்க்கத்திற்கு அமைப்பு ரீதியான அடிப்படைகளை வழங்கும்.

தொழிலாளர்களும் ஏழைகளும் சர்வதேச நெருக்கடியால் உருவாக்கப்பட்ட பேரழிவை எதிர்கொண்டுள்ளனர். அதற்கு எதிரான போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்களின் நண்பன், இதே போன்ற தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டுள்ள சர்வதேச தொழிலாள வர்க்கம் ஆகும். இந்தப் போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்களின் நெருங்கிய கூட்டாளி இந்தியா மற்றும் தெற்காசியாவில் உள்ள தொழிலாளர்களே ஆவர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் (ICFI) ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் இணைவதன் மூலம், இலங்கைத் தொழிலாளர்களின் போராட்டமானது, உலகளாவிய பெருநிறுவனங்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான சர்வதேச ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டமாக அபிவிருத்தி செய்யப்பட முடியும்.

இந்த வேலைத் திட்டத்துக்காகப் போராடுவதற்கு சோசலிச சமத்துவக் கட்சியுடன் சேர, இந்த இலக்கத்துடன் 0773562327 தொடர்பு கொள்ளவும் அல்லது குறுந்தகவல் அனுப்பவும்.

ஏகாதிபத்தியப் போர், உலகளாவிய தொற்றுநோய் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்காக, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இணையவழி மே தினக் கூட்டத்தில் பங்குபற்ற கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்துகொள்ளுங்கள் (கூட்டம் இலங்கை நேரப்படி மே 2 திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு இடம்பெறும்)

https://www.wsws.org/en/special/pages/international-mayday-online-rally-2022.html

Loading