இந்திய ஃபோர்டு ஆலையை மூடிய பிறகு தொழிற்சங்கமும் நிர்வாகமும் தொழிலாளர்களை இருட்டில் வைத்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தென் மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள சென்னை வாகனம் தயாரிக்கும் ஆலையை மூடும் ஃபோர்டின் திட்டத்திற்கு எதிராக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐந்து வார வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 2,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், சென்னை ஃபோர்டு ஊழியர் சங்கத்தால் (CFEU) முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர்.

பெரும்பாலும் இளைமையான போர்க்குணம் கொண்ட தொழிலாளர்கள் தங்கள் வேலைகளைப் பாதுகாக்க வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதுடன் ஆலையில் உள்ளிருப்பு செய்தனர். அதன் பங்கிற்கு, ஆலையை மூடுவதற்கான பூகோளரீதியான வாகன உற்பத்தியாளரின் முடிவை CFEU வெளிப்படையாக ஏற்றுக்கொண்டது மற்றும் சற்றே பெரிய தொழில் வெட்டு பொதிக்கு பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. தொழிலாளர்கள் இந்த சரணடைதலை நிராகரித்தனர் மற்றும் CFEU ஐ மீறி வேலைநிறுத்தம் செய்தனர்.

வேலைநிறுத்தம் செய்யும் சென்னை ஃபோர்டு தொழிலாளர்கள் சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்

பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகள், போராட்டத்தை தனிமைப்படுத்தியதுடன் ஜூலை 2 அன்று CFEU அதனை முடிவுக்கு கொண்டு வந்தது. CFEU அதிகாரிகள், ஆலை மூடப்படுவதற்கு முன்பு, நிர்வாகத்தின் முடிக்க வேண்டிய ஒதுக்கீட்டை பூர்த்தி செய்வதற்காக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் ஆலைக்குள் கொண்டு வந்தனர். ஜூலை 20 அன்று உற்பத்தி வரிசையில் கடைசி விளையாட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும் வாகனம் பூரணமாவதற்கு முன்பு நிர்வாகம் பெரும்பாலான தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததுடன் உற்பத்தியை முடிக்க குறைந்த எண்ணிக்கை தொழிலாளர்களை பயன்படுத்தியது. நிர்வாகம் சில உதிரிப் பாகங்களை தயாரிக்க ஒரு சில தொழிலாளர்களை கொண்டுவந்தது, அதன் பிறகு ஆலை நிரந்தரமாக “ஒழுங்கான முறையில் மூடப்படும்.”

சென்னை ஃபோர்டு ஆலையை மூடுவதானது பெருமளவிலான பணிநீக்கங்கள் மற்றும் ஆலை மூடல்களின் ஒரு பகுதியாகும். ஃபோர்டு மோட்டார் நிறுவன நிர்வாகம் அதன் பூகோளரீதியான மறுசீரமைப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக அவற்றை செயல்படுத்தி வருகிறது. ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ-சார்பு தொழிற்சங்கங்களின் உதவியுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட வாகன உற்பத்தி நிறுவனம், இலாபத்தை ஈட்டுவதற்கும், மின்சார வாகனங்களின் உற்பத்திக்கு மாறுவதற்கும் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்துகிறது. ஜேர்மனி மற்றும் ஸ்பெயினில் உள்ள தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை தூக்கி வீசிய ஏலப் போரும் இதில் அடங்கும். இதன் விளைவாக ஸ்பெயினின் வலென்சியாவில் உள்ள ஃபோர்டு தொழிலாளர்களுக்கு பெரும் ஊதியக் குறைப்புக்கள் மற்றும் நீண்ட வேலை நேரங்களும் திணிக்கப்பட்டதுடன் ஜெர்மனியில் ஃபோர்டின் சார்லூயிஸ் ஆலையை மூட திட்டமிடப்பட்டது.

ஆகஸ்ட் 31 வரை அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் கூறியது, ஆனால் நிர்வாகம் தி இந்து நாளிதழிடம் கூறியது போல், 'இது ஜூலை மற்றும் ஆகஸ்ட் முழுவதும் நிறுவனம்/மேற்பார்வையாளர்களுக்கு தேவைப்படும் போது, தொழிற்சங்கம் மற்றும் ஊழியர்களும் வழங்கும் தொடர்ச்சியான ஆதரவிற்கு உட்பட்டது. ஆகஸ்ட் காலக்கெடுவிற்கு முன்பே கொடுப்பனவுடன் பணி நீக்கம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிப்பதில் தொழிற்சங்கத்தின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.”

இதை எழுதும் வரை, CFEU தலைமை, நிர்வாகத்துடன் எதையாவது கலந்துரையாடி இருக்கிறதா என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. CFEU, நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திற்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் கொடுப்பனவுடனான பணி நீக்க பொதியின் அதே தொகையை நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பெறுவார்களா என்பது கூட தெளிவாகத் தெரியவில்லை.

சாமானிய தொழிலாளர்களின் நடவடிக்கைக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) உதவியுடன் ஜேர்மனி மற்றும் அமெரிக்க தொழிலாளர்களுடன் இணைழவழி அழைப்பில் பங்கேற்ற ஒரு சென்னை தொழிலாளியான ரமேஷ், WSWS இடம் கூறியதாவது: “இதுவரை தொழிற்சங்க தலைவர்களிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை. . எல்லாம் நம்மிடமிருந்து மறைக்கப்படுகிறது. நாங்கள் முற்றிலும் இருட்டில் இருக்கிறோம். தற்போது தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத் தலைவர்கள் எங்கள் மீது திணிக்கும் எந்த மாற்றங்கள் அல்லது முடிவுகள் குறித்தும் ஒருபோதும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை அல்லது கலந்துரையாடவில்லை.”

ஃபோர்டு செப்டம்பர் 2021 இல் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்துவதாகவும், சென்னை மற்றும் குஜராத்தின் சனந்த் ஆகிய இரண்டு ஆலைகளை மூடுவதாகவும் செய்த அறிவிப்பு தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது, அவர்களில் பலர் தங்கள் குடும்பங்களுக்காக சம்பாதிக்கும் ஒரே ஒருவராக இருக்கிறார்கள். அப்போது, ஆலையில் 21 ஆண்டுகளாக பணியாற்றிய 43 வயதான முருகன், தி நியூஸ் மினிட் இணையதளத்திடம் இவ்வாறு கூறினார்: “எங்கள் ஆலையில் (தொழிலாளர்கள்) சராசரி வயது 35. இங்கு பணிபுரியும் பெரும்பாலான ஆண்களுக்கு உயர் பள்ளிகளில் (11வது, 12வது) படிக்கும் பிள்ளைகள் மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் சிறுவர்கள் மற்றும் குடும்பப் பெண்களும் உள்ளனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையை ஃபோர்டு மற்றும் இந்த ஆலைக்காக அர்ப்பணித்திருந்தனர், இப்போது அவர்கள் கைவிடப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.”

சென்னை ஆலை மூடல் 4,000 வேலைகளை நேரடியாகவும், 40,000 துணைத் தொழில்களையும் அழிக்கும். சென்னை ஆலை மூடப்படவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள சனந்த் ஆலை டாடா மோட்டார்ஸுக்கு விற்கப்பட்டது, அந்த ஆலையில் மின்சார வாகனங்களை தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் மேக் ட்ரக்ஸ் தொழிலாளியும், ஐக்கிய வாகன தொழிலாளர்களின் (UAW) சோசலிச வேட்பாளருமான வில் லெஹ்மன், ஆலை மூடப்படுவதைக் கண்டித்து, வேலைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் ஃபோர்டு தொழிலாளர்களை ஒன்றுபடுமாறு அழைப்பு விடுத்தார். அவர் உலக சோசலிச வலைத் தளத்திடம், “இங்கு அமெரிக்காவில் உள்ள ஃபோர்டு தொழிலாளர்கள், நமது இந்திய சகோதரர்கள் மீதான தாக்குதலை தொழிலாள வர்க்கத்தில் உள்ள நம் அனைவரின் மீதான தாக்குதலாக புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் போராடுவதற்கான தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தினர், மேலும் அவர்களது தொழிற்சங்கம், UAW அல்லது உலகெங்கிலும் உள்ள வேறு எந்த தொழிற்சங்கத்தையும் விட வேறுபட்ட பாணியில் இல்லாமல், நிறுவனத்துக்கு துணை போவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியது.

'மிச்சிகன், ஓஹியோ, கென்டக்கி மற்றும் வர்ஜீனியாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எனது சமீபத்திய சுற்றுப்பயணத்தில், GM மற்றும் ஃபோர்டு போன்ற உலகளாவிய நிறுவனங்கள் தொழிற்சாலைகளை மூடுவதன் மூலம் ஏற்படும் சமூக சீரழிவுகளை நான் கண்டேன். சுற்றுப்புறங்கள் அழிக்கப்படுகின்றன, பள்ளி அமைப்புகள் சரிகின்றன, மற்றும் உயிர்கள் இழக்கப்படுகின்றன - இவை அனைத்தும் பெருவணிகத்தின் இலாபங்களுக்காகவே.

“ஃபோர்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக வெற்றிகரமான போராட்டத்தை நடத்தப் போகிறோம் என்றால், சர்வதேச அளவில் நாம் அணிதிரள வேண்டும். அந்த உண்மையை உணர்ந்து, ஒவ்வொரு வேலைத் தளத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்கி செயல்படுவது நம் அனைவரின் கைகளில் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், தொழிலாளர்கள் தங்கள் போராட்டங்களை சாமானிய குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் கட்டமைப்பின் மூலம் ஒருங்கிணைக்க வேண்டும்.

ஃபோர்டின் 'பூகோள மறுவரைவு' திட்டத்தின் கீழ், இந்த நிறுவனம் இந்தியா, பிரேசில் மற்றும் ரஷ்யாவில் அசெம்பிளி நடவடிக்கைகளை நிறுத்திவிடுவதில் ஈடுபட்டுள்ளது. இது ஏற்கனவே 12,000 வேலைகளை குறைத்துள்ளதுடன் பரந்தளவிலான பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளில் அமைந்துள்ள ஆறு ஆலைகளை விற்றுள்ளது அல்லது மூடியுள்ளது.

சென்னை ஆலை மூடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, தமிழ்ப் பேரினவாத திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், ஆலை மூடலுக்கு எதிராக ஃபோர்டு தொழிலாளர்களின் கூட்டு எதிர்ப்பு போராட்டங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அத்தகைய நடவடிக்கையை அடக்குவதற்கு அழைப்பு விடுத்து அந்த கடிதம் பின்வருமாறு கூறியது: 'ஃபோர்டு நிறுவனத்தின் இளைய தொழிலாளர்கள் (1500) கொடுப்பனவுடனான பணி நீக்க பொதியால் ஏமாற்றமடைந்துள்ளனர். அவர்கள் வேலை மட்டும் கோரி போராட்டத்தைத் தொடரலாம். ஜூலை 31 ஆம் தேதிக்குள் நிறுவனம் மூடப்பட உள்ளதால், தொழிலாளர்களின் இந்த போராட்டங்களால் சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கலாம். ... இந்த சம்பவங்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை விழிப்புடன் எடுக்க வேண்டும்.”

ஸ்ராலினிச சிபிஎம் உடன் கூட்டணி வைத்து, தொழிலாள வர்க்கத்தின் நண்பனாக ஊக்குவித்துக்கொள்ளும் திமுக, 'சாமானி மனிதர்களுக்காக' முன்நிற்பதாக பகட்டாக காட்டிக்கொண்டாலும், ஆலை மூடலுக்கு எதிரான எந்த தொழிலாளர் போராட்டத்தையும் இரக்கமின்றி நசுக்கும் என்ற அப்பட்டமான யதார்த்தத்தை இந்தக் கடிதம் பிரதிபலிக்கிறது.. காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் உட்பட முழு அரசாங்க எந்திரமும் தன் பக்கம் இருப்பது குறித்து ஃபோர்டு நிர்வாகத்திற்கு தெரியும். ஜூன் மாதம், வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் தங்கள் உள்ளிருப்பை முடித்துவிட்டு பணிக்கு திரும்பவில்லை என்றால், அவர்களின் வேலைநிறுத்தம் 'சட்டவிரோதமானது' என்று அறிவிக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரித்தது.

திமுக அரசாங்கமும் ஃபோர்டு நிர்வாகமும் CFEUவின் துரோகத்தால் மட்டுமல்ல, அதைவிட முக்கியமாக, ஸ்ராலினிச CITU (இந்திய தொழிற்சங்கங்களின் மையம்) மற்றும் AITUC (அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ்) மற்றும் மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் உள்ள LTUC தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் ஆகியவற்றின் துரோகத்தினால் தைரியமாக இருப்பதாக உணர்கிறது. நகர் தொழில்துறை மண்டலத்தில் அவர்கள் கணிசமான இருப்பை கொண்டிருந்தாலும், இரண்டு ஸ்ராலினிச தொழிற்சங்க கூட்டமைப்புகளும் ஃபோர்டு தொழிலாளர்களின் போராட்டத்தை வேண்டுமென்றே தனிமைப்படுத்தியுள்ளன.

முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்களுக்கு எதிராக சாமானியதொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைக்க வேண்டியிருப்பதோடு பூகோள ரீதியாக தொழிலாள வர்க்கத்தின் எதிர்த்தாக்குதலுக்காகப் போராட வேண்டும் என்பதை இந்த கசப்பான அனுபவம், வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற, உலக சோசலிச வலைத் தளத்துடன் கலந்துரையாடிய பல தொழிலாளர்களை உணர வைத்துள்ளது.

Loading