இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இராஜபக்ஷ ஆட்சியில் தொடங்கிய அரசாங்க - எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு எதிராக, இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொலிஸ் அடக்குமுறையை தீவிரப்படுத்தியுள்ளார். பொலிஸ் அறிக்கைகளின்படி, ஏப்ரலில் வெகுஜன போராட்டங்கள் தொடங்கியதில் இருந்து சுமார் 3,800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 1,400 பேர் இன்னும் விளக்கமறியலில் அல்லது தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
வியாழன் அன்று, மத்திய கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமித்து ஏப்ரல் மாதம் கோட்ட கோ கம [கோட்டா வீட்டுக்குப் போ] பிரச்சாரத்தை தொடங்கிய போராட்டக் குழுவின் ஒரு முன்னணி தலைவரான பிரபல தொடர்நாடக மற்றும் திரைப்பட நடிகை தமிதா அபேரத்னவை பொலிசார் கைது செய்தனர்.
அபேரத்ன, நடந்துவரும் அரச அடக்குமுறையை எதிர்க்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் வைத்து, நேரடியாக பொலிஸ் ஜீப்பில் பலாத்காரமாக ஏற்றிச் செல்லப்பட்டார். பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க நீதவான் அவரை செப்டம்பர் 14 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். வெகுஜன சீற்றத்திற்கு மத்தியில், நேற்று அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைந்தது மற்றும் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்தது போன்ற சோடிக்கப்பட்ட பொலிஸ் குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்.
வெள்ளியன்று, போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) முன்னணி அமைப்பான 'மாற்றத்திற்கான இளைஞர்கள்' அமைப்பின் செயலாளரான லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார். அவர் சனிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த மாத இறுதியில், விக்கிரமசிங்க, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் (அ.ப.மா.ஒ.) அழைப்பாளர் வசந்த முதலிகே உட்பட, அதன் மூன்று செயற்பாட்டாளர்களை 90 நாள் சிறையில் அடைப்பதற்கான பயங்கரவாதத் தடைச் சட்ட தடுப்புக்காவல் உத்தரவில் கையெழுத்திட்டார். கொழும்பில் இருந்து 180 கிலோமீற்றர் தெற்கே தங்காலையில் உள்ள தடுப்பு முகாமில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் மற்றும் கட்சிகளின் அரசியல் நோக்கங்களுடன் எமக்கு அடிப்படை வேறுபாடுகள் இருந்தபோதிலும், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த கொடூரமான பழிவாங்கல் வேட்டையை கண்டிப்பதுடன் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்குமாறும் மற்றும் அவர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளுமாறும் கோருகிறது.
இராஜபக்ஷவின் இராஜினாமாவையும், பிரமாண்டமான பணவீக்கம் மற்றும் நீண்டகால பொருட்களின் பற்றாக்குறைக்கு முடிவுகட்டுமாறும் கோரிய வெகுஜனப் போராட்டங்களில் முன்னணியில் இருந்த மு.சோ.க. மற்றும் பல்வேறு மத்தியதர வர்க்க செயற்பாட்டாளர்கள், உழைக்கும் மக்களை ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட நாட்டின் முதலாளித்துவ எதிர்க்கட்சிகளின் பிடிக்குள் சிக்கவைத்தனர். அனைத்துக் கட்சி இடைக்கால அரசாங்கமொன்றை ஊக்குவிப்பதில், அவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலைத் திணித்து, அரசியல் எதிர்ப்புகள் மீது பாய்ந்து விழும் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமித்தமைக்கான அரசியல் பொறுப்பை கொண்டுள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்தே இந்த முன்னோக்கை எதிர்த்து வந்த சோசலிச சமத்துவக் கட்சி, இந்த அமைப்புகள் தொழிலாளர்களையும், ஏழைகளையும் முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் சிக்க வைக்கின்றன என்று எச்சரித்தது. ஆரம்பத்தில் இருந்தே, ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கில் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்காக நாங்கள் பிரச்சாரம் செய்தோம்.
இராஜபக்ஷ பாரிய எதிர்ப்புக்கள் மற்றும் பொது வேலைநிறுத்தங்களின் விளைவாக நாட்டை விட்டு வெளியேறினார்.
அவர் வெளியேறியதால் விக்கிரமசிங்க இடைக்கால ஜனாதிபதியானார். விக்கிரமசிங்கவுக்கு எந்த சட்டபூர்வத்தன்மையும் இல்லாததோடு நீடித்த மற்றும் இரத்தக் களரி தமிழர்-விரோத இனவாதப் போரை நடத்திய அரசாங்கங்களிலும், 1987-1990 இல் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராக ஒரு அரச பயங்கரவாத பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டு குறைந்தது 60,000 பேரைக் கொன்ற அரசாங்கங்களிலும் சிரேஷ்ட அமைச்சராக இருந்தமையால் அவர் பரவலாக வெறுக்கப்படுகிறார்,.
மதிப்பிழந்த பாராளுமன்றத்தால் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள், ஜனாதிபதி செயலகத்தை ஆக்கிரமித்திருந்த எதிர்ப்பாளர்களை இராணுவ - பொலிஸைக் கொண்டு வன்முறைரீதியில் வெளியேற்றுமாறு விக்கிரமசிங்க உத்தரவிட்டார். இந்த தாக்குதலில் ஒன்பது பிரச்சாரகர்கள் கைது செய்யப்பட்டதுடன் டசின் கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர் போராட்டத் தலைவர்களை 'பாசிஸவாதிகள்' என்றும் 'பயங்கரவாதிகள்' என்றும் கண்டனம் செய்தார்.
ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதியினதும், பிரதமரினிதும் இல்லங்களுக்குள் பிரவேசித்தமை மற்றும் இந்தக் கட்டிடங்களில் உள்ள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை போன்ற அற்பமான குற்றச்சாட்டுக்களை பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக புனைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் இராணுவ உளவுத்துறையினர் சிசிடிவி மற்றும் ஊடக ஒளிப்படங்களை சோதனை செய்து, மேலும் சிலரை கைது செய்து வருகின்றனர். இராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வழங்கிய 'ஆதாரங்களின்' அடிப்படையில் மட்டுமே சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 3 அன்று பொலிஸ் முன் உரையாற்றிய விக்கிரமசிங்க, அவர்களின் அடக்குமுறையை ஜனநாயகத்தின் பாதுகாப்பு என்று பாராட்டினார். “அரசியலமைப்புச் சட்டத்தின்படி நாம் செயல்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர்கள் செயல்படவில்லை என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... இந்த நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டுமானால், நாட்டின் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் அறிவித்தார்.
இந்தக் கோரிக்கைகளின் உள்ளர்த்தங்கள் என்ன? தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க அல்லது நாட்டின் முற்றிலும் ஜனநாயக விரோத அரசியலமைப்பை, அரசு மற்றும் முதலாளித்துவ அமைப்பை எதிர்ப்பதற்காக எடுக்கும் எந்த நடவடிக்கையும் சட்டவிரோதமானது என்று அர்த்தமாகும்!
தங்கள் நலன்களுக்காகப் போராடுவதில், தொழிலாள வர்க்கமும் ஏழைகளும் விக்கிரமசிங்க மற்றும் ஆளும் உயரடுக்கின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம் இல்லை. இலங்கை முதலாளித்துவ வர்க்கம், உலகெங்கிலும் உள்ள அதன் சமதரப்பினரைப் போலவே, மில்லியன் கணக்கானவர்களுக்கு ஒரு சமூகப் பேரழிவை உருவாக்கி, ஆழமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியின் சுமையை வெகுஜனங்களின் மீது சுமத்தியுள்ளது.
மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் செயலூக்கமான ஆதரவை வென்ற, ஏப்ரலில் தொடங்கிய மக்கள் எழுச்சி, இலங்கை ஆளும் வர்க்கத்தின் ஆணிவேரை உலுக்கியதுடன் சர்வதேச தலைநகரங்களில் எச்சரிக்கையை எழுப்பியது. சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளை உழைக்கும் மக்கள் மீது திணிக்கும்போது, இந்த வெகுஜன எதிர்ப்பு மீண்டும் வெடிக்கும் என்பதை விக்கிரமசிங்க அறிவார்.
விக்கிரமசிங்கவின் பயங்கரவாதப் பிரச்சாரமும், நடந்து கொண்டிருக்கும் கைதுகளும் முழு வர்க்கப் போருக்கான தயாரிப்பு ஆகும். தொழிலாள வர்க்கம் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு அதன் சொந்த எதிர் தாக்குதலுக்கு தயாராக வேண்டும்.
பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐ.ம.ச. விக்கிரமசிங்கவின் அரச அடக்குமுறை பற்றி பலவீனமான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது. அதன் வெற்று வாய்ச்சவடால்களின் நோக்கம், அரசாங்க தாக்குதல்கள் மீதான வெகுஜன கோபத்தை சுரண்டிக்கொள்வதும் அதை தடம்புரளச் செய்வதுமாகும்.
வெகுஜன எதிர்ப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க தொழிற்சங்கங்களுக்கு உதவிய ஜே.வி.பி., கொடூரமான அடுத்த சுற்று சமூகத் தாக்குதல்களை சிறப்பாக செயல்படுத்த, 'புதிய மக்கள் ஆணையுடன்' ஒரு அரசாங்கத்தை அமைக்க பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கிறது. ஐ.ம.ச., ஜே.வி.பி. இரண்டும், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்ட நிரலை ஆதரிப்பதுடன், அதை நடைமுறைப்படுத்துவதில் விக்கிரமசிங்கவைப் போலவே இரக்கமற்ற மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கையில் இறங்கும்.
ஜே.வி.பி, முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும் ஆதரிக்கப்படும் தொழிற்சங்கங்கள், அரச அடக்குமுறையை எதிர்ப்பது என்ற போர்வையில் ஒன்று சேர்ந்துள்ளன. பல முஸ்லீம் மற்றும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுடனும் பிரதான ஏகாதிபத்திய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஐ.ம.ச. கலந்துகொண்ட சமீபத்திய கருத்தரங்கில், அரச அடக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவர விக்கிரமசிங்க ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பது சாத்தியம் என்று அவர்கள் கூறினர்.
அரச அடக்குமுறையை எதிர்ப்பதற்கும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அனைத்து ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதைத் தடுப்பதே .தொழிற்சங்கங்களதும் போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியினதும் மோசமான வகிபாகம் ஆகும்.
இந்த அனைத்து முதலாளித்துவ சார்பு கட்சிகளுக்கும் எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளுக்காக போராடுமாறு தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறது:
அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்!
பயங்கரவாத தடைச் சட்டம், அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டம், பொது மக்கள் பாதுகாப்பு அவசர காலச் சட்டம் உட்பட அனைத்து அடக்குமுறைச் சட்டங்களையும் இரத்துச் செய்!
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அரச அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவதற்கு ஆளும் வர்க்கத்தின் மூலோபாய இயந்திரமாக இருக்கும் எதேச்சதிகார நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான தீவிர பிரச்சாரத்திற்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.
இந்தக் கோரிக்கைகளுக்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் பரந்த சமூக சக்தியை சுயாதீனமாக அணிதிரட்டுவது அவசியமாகும். தொழிலாளர்கள் தங்கள் வேலைத் தளங்களிலும் சுற்றுப்புறங்களிலும் நடவடிக்கை குழுக்களை உருவாக்குவதோடு கிராமப்புற ஏழைகள் தங்கள் சொந்த நடவடிக்கை குழுக்களை உருவாக்க உதவ வேண்டும். இவை தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் சுயாதீனமானதாக இருக்க வேண்டும்.
கொழும்பின் அதிகரித்து வரும் அரச அடக்குமுறையின் மூலக் காரணம், முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடியிலும் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் பாசிச மற்றும் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்வதிலும் பிரதிபலிக்கின்றது.
விக்கிரமசிங்கவின் ஜனநாயக-விரோத தாக்குதலுக்கு எதிரான போராட்டத்தை முதலாளித்துவத்திற்கு எதிரான, சர்வதேசவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்திற்குமான போராட்டத்துடன் இணைக்குமாறு தொழிலாளர்களை சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்துகிறது. அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிராகரித்தல் மற்றும் வங்கிகள், பெரிய நிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தொழிலாளர்களின் ஜனநாயக கட்டுப்பாட்டில் தேசியமயமாக்குதல் உட்பட, உழைக்கும் மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான தொடர் கோரிக்கைகளை நாங்கள் முன்வைக்கிறோம்.
சமூகத்தின் சோசலிச மறுசீரமைப்பிற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கான போராட்டத்தை முன்னெடுக்க, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் நடவடிக்கைக் குழுக்களின் பிரதிநிதிகளை அடிப்படையாகக் கொண்ட, தொழிலாளர்களதும் கிராமப்புற வெகுஜனங்களதும் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்காக சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரம் செய்கிறது.