இலங்கை அரசாங்கம் கைதுகள் மற்றும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளை விரிவுபடுத்துகிறது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க-விரோத ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் தனது அடக்குமுறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

6 மே 2022 அன்று கொழும்பில் உள்ள பாராளுமன்ற வீதியில் குவிக்கப்பட்டிருந்த பொலிசார்

* அரசாங்கத்தின் அடக்குமுறை அத்தியாவசியப் பொதுச் சேவைகள் சட்டத்தை நீட்டித்து, புதன்கிழமை நள்ளிரவு வர்த்தமானி அறிவிப்பு ஒன்றை ஜனாதிபதி வெளியிட்டார். இதன் கீழ் மின்சார வழங்கல், பெட்ரோலியப் பொருட்களின் வழங்கல் மற்றும் விநியோகம் மற்றும் சுகாதாரத் துறையையும் அத்தியாவசிய சேவைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த கடுமையான சட்டத்தின்படி, இந்தத் துறைகளில் பணிபுரியும் வேலைக்கு வராத எந்தவொரு தொழிலாளியும் “ஒரு நீதவான் முன் சுருக்கமான விசாரணைக்குப் பிறகு தண்டனையை' எதிர்கொள்வதோடு “இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை' மற்றும்/அல்லது 2,000 முதல் 5,000 ரூபாய் ($5–13) வரை அபராதம் விதிக்கப்படுவார்கள்.

தண்டனை பெற்றவர்களின் 'அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள்' அரசால் கைப்பற்றப்படலாம் மற்றும் அவரது பெயர் 'தொழில் அல்லது தொழிலுக்காக பராமரிக்கப்படும் எந்தப் பதிவேட்டில் இருந்தும் நீக்கப்படும்.' எந்தவொரு நபரும் 'உடல் செயல் அல்லது எந்தவொரு பேச்சு அல்லது எழுத்து மூலம்' வேலைக்குச் செல்லாமல் இருக்க 'வேறு எந்த நபரையும் தூண்டுவது அல்லது ஊக்கப்படுத்துவது' ஒரு குற்றமாகும்.

சுகாதாரம், மின்சாரம் மற்றும் பெட்ரோலியத் துறைகளில் தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம், எதிர்ப்பாளர்கள் மீதான அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக ஆகஸ்ட் 9 அன்று ஒரு நாள் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் அமுலில் உள்ளன. சகிக்க முடியாத விலைவாசி உயர்வு மற்றும் கடுமையான தட்டுப்பாடு மற்றும் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் அதிகரித்து வரும் கோபத்தை திசை திருப்பவே தொழிற்சங்கங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

* புதன்கிழமை மாலை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை, சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் வைத்து பொலிஸ் கைது செய்தது. மே 28 அன்று பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்ட பேரணி நடத்துவதற்கு தடை விதித்த நீதிமன்ற உத்தரவை மீறியமைக்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தொழிற்சங்க தலைவரை ஆகஸ்ட் 12 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே நேற்று உத்தரவிட்டார்.

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின், இலங்கை வங்கிக் கிளையின் செயலாளர் தனஞ்சய சிறிவர்தன மற்றும் அதன் முன்னாள் கிளைத் தலைவர் பாலித அடம்பல ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர். ஜூலை 13 அன்று ஜனாதிபதி மாளிகைக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரு தொழிற்சங்க தலைவர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

* காலி முகத்திடலின் ஒரு மூலையில் இன்னமும் ஆக்கிரமித்துள்ள அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று மாலை 5 மணிக்கு முன்னதாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொலிஸ் நேற்று இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வாசிக்கப்பட்ட பொலிஸ் உத்தரவில், அவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியை ஆக்கிரமித்துள்ளதாகவும், அவர்கள் வெளியேறாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஊடக மாநாட்டில், போராட்டக்காரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று அறிவித்ததுடன் பொலிஸ் தங்களை வலுக்கட்டாயமாக அப்பகுதியை விட்டு அகற்றுவதைத் தடுக்க ஒரு தடை உத்தரவைக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

ஜூலை 22 அன்று, ஜனாதிபதி செயலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்துள்ள எதிர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்காக, நூற்றுக்கணக்கான பலத்த ஆயுதம் ஏந்திய பொலிஸாரும் இராணுவக் குழுவும் அதிகாலைத் தாக்குதலை நடத்தின. பலர் காயமடைந்ததுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் போராட்டக்காரர்கள் விக்கிரமசிங்க பதவி விலகும் வரை காலி முகத்திடலை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். அவர்கள் இப்போது காலி முகத்திடலில் உள்ள அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 'எதிர்ப்பு தளத்தில்' மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளியன்று போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சியின் (மு.சோ.க.) கொழும்பு அலுவலகத்தின் மீது இரண்டு பொலிஸ் குழுக்கள் நடத்திய சோதனைகளை அடுத்தே இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றித்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவைத் தேடுவதாகக் கூறிய பொலிஸ், மு.சோ.க. உறுப்பினர்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்தது.

ஊடகங்களின்படி, நூறுக்கும் மேற்பட்ட போராட்ட ஆர்வலர்கள் ஏற்கனவே பொலிஸ் மற்றும் இராணுவப் படைகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஆகஸ்ட் 3 அன்று பிரித்தானிய சமூக ஊடக ஆர்வலர் கெய்லி பிரேசரின் வீட்டிற்குள் நுழைந்து அவரது கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனர். அவர் தனது முகநூல் பக்கத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக பொலிஸ் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, 'அவர் விசா நிபந்தனைகளை மீறியுள்ளாரா என்பதை திணைக்களம் இன்னும் தீர்மானிக்கவில்லை' என்று அதிகாரிகள் அறிவித்தனர்.

தொழிற்சங்கத் தலைவர்கள், மு.சோ.க. மற்றும் போராட்ட அமைப்பாளர்களுடன் அடிப்படை அரசியல் வேறுபாடுகளை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) கொண்டிருந்தாலும், இந்தக் கைதுகள் மற்றும் பொலிஸ் நடவடிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம்.

விக்கிரமசிங்க ஆட்சியானது பாரிய கஷ்டங்களையும் துன்பங்களையும் தோற்றுவிக்கும் அதன் கடுமையான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களுக்கும் எதிராக ஒரு பரந்த அடக்குமுறைக்கு தயாராகிறது என சோசலிச சமத்துவக் கட்சி உழைக்கும் மக்களை எச்சரிக்கிறது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விலக்கிக்கொள்ளவும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவும் கோரிக்கை விடுக்க தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களுக்கு நாங்கள் அழைப்புவிடுக்கின்றோம்.

பொலிஸ் அடக்குமுறையையும் தற்போதைய அவசரகாலச் சட்டத்தையும் நிறுத்துமாறும், ரணில் விக்கிரமசிங்க மற்றும் அவரது அரசாங்கம் பதவி விலக வேண்டுமெனவும் கோரி ஆகஸ்ட் 3 அன்று காலி முகத்திடலில் ஒரு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்பு (TUMO) நேற்று ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஆர்ப்பாட்டத்தில், ஜோசப் ஸ்டாலினையும் ஏனைய தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்கக் கோரியது.

எவ்வாறாயினும், சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்த வேலைநிறுத்த இயக்கத்தை வேண்டுமென்றே மட்டுப்படுத்துவதன் மூலம் இந்த பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு கதவைத் திறந்துவிட்டமைக்கு தொழிற்சங்கங்களே அரசியல் ரீதியில் பொறுப்பு கூற வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், அவை ஆளும் வர்க்கத்திற்கு அதன் எதிர் தாக்குதலைத் தயார் செய்வதற்கு அவசியமான கால அவகாசத்தை வழங்கின.

ஜூலை 13 அன்று வெகுஜன எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவுக்கு எதிராக ஏப்ரல் 28, மே 6 மற்றும் பின்னர் மே 10 மற்றும் 11 ஆகிய திகதிகளில் மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களில் கலந்து கொண்டனர். தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளும் மற்றும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமும் வேலைநிறுத்தங்களின் எல்லையையும் கால அளவையும் மட்டுப்படுத்த தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தது மட்டுமல்லாமல், அந்த இயக்கத்தை பாராளுமன்ற சூழ்ச்சித்திட்டங்களின் முட்டுச்சந்தில் திசை திருப்பிவிட முயன்றன.

'இடைக்கால அரசாங்கத்திற்கான' அவர்களின் கோரிக்கையானது எதிர்க் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) ஆகியவற்றின் கோரிக்கையுடன் முழுமையாக ஒத்தவையாகும். எவ்வாறாயினும், முதலாளித்துவத்தின் ஆழமான பொருளாதார நெருக்கடிக்கு விலைகொடுக்க உழைக்கும் மக்களைக் கட்டாயப்படுத்தும் இராஜபக்ஷ மற்றும் இப்போதைய விக்கிரமசிங்க அரசாங்கத்தின் தொழிலாள வர்க்க விரோத திட்ட நிரலுடன், எந்தவொரு பாராளுமன்றக் கட்சிகளுக்கும் அடிப்படை கருத்து வேறுபாடுகள் கிடையாது.

புதன்கிழமை பாராளுமன்றத்தில் தனது கொள்கை அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்ட கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை சுமத்துவதற்கான தனது உறுதிப்பாட்டை விக்கிரமசிங்க மீண்டும் வலியுறுத்தினார். அவசரகால நிலையைத் திணித்து, பொலிஸ் வலைவீச்சை முடுக்கிவிட்டுள்ள அதே நேரம், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இடங்களில் 'அமைதியான போராட்டங்களை' நடத்த அரசாங்கம் அனுமதிக்கும் என்றும், எதிர்ப்பாளர்கள் தங்கள் குறைகளை அவரிடம் தெரிவிக்க 'ஹொட்லைன்' ஒன்றைத் திறக்கும் என்றும் அவர் கபடத்தனமாக அறிவித்தார்.

இது பொலிஸ்-அரசு அடக்குமுறைக்கான ஒரு வெளிப்படையான முகமூடியே அன்றி வேறில்லை. விக்கிரமசிங்க ஆட்சியானது அனைத்து எதிர்ப்பின் மீதும் முழு அளவிலான அடக்குமுறையைத் கட்டவிழ்த்துவிடவில்லை. ஏனெனில், அது தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளின் பரந்த எதிர்ப்பின் வெடிப்பிற்கு வழியமைக்கும் என்பதையிட்டு ஆளும் வர்க்கம் மிகுந்த பீதியுடன் இருப்பதாலேயே ஆகும். விக்கிரமசிங்க நிலைமைகளை பரிசோதித்து வருவதோடு போர்க்குணமிக்க எதிர்ப்பாளர்களை 'பாசிஸ்டுகள்' என்று கண்டனம் செய்து அவர்களைக் கைது செய்கிறார்.

அனைத்து 'எதிர்க்கட்சிகள்' உட்பட முழு அரசியல் ஸ்தாபனமும் ஜனநாயக ரீதியாக செயல்படுத்த முடியாத சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டத்தை ஆதரிக்கின்றது. தொழிலாளர்கள் தேவையான முடிவை எடுக்க வேண்டும்: ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான போராட்டம் ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் முதலாளித்துவத்தை ஒழிப்பதற்கான போராட்டத்துடன் முற்றிலும் பிணைந்துள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றது:

அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் கைதான அனைவரையும் விடுதலை செய்!

அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தை விலக்கிக்கொள்!

அவசரகாலச் சட்டத்தை இரத்துச் செய்!

இந்தக் கோரிக்கைகளுக்காகப் போராடுவதற்கு, அனைத்து முதலாளித்துவக் கட்சிகள், அவற்றின் தொழிற்சங்க மற்றும் போலி-இடது முகவர்களிடமிருந்து முற்றிலும் சுயாதீனமான, தங்களது சொந்த நடவடிக்கைக் குழுக்களை, ஒவ்வொரு வேலைத் தளத்திலும், பெருந்தோட்டங்களிலும், நகரம் மற்றும் புறநகர்ப்பகுதிகளிலும், மற்றும் கிராமப்புறத்திலும் அமைக்குமாறு தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற உழைப்பாளர்களுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி 'தொழிலாளர் மற்றும் கிராமப்புற வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சோசலிச மாநாட்டிற்காக' இந்த நடவடிக்கைக் குழுக்களின் அடிப்படையில் பிரச்சாரம் செய்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் உரிமைகளுக்காகப் போராடுகிறது.

ஆளும் வர்க்கம் தனது சொத்து மற்றும் இலாபங்களை பாதுகாக்க உழைக்கும் மக்களைத் தியாகம் செய்யக் கோருகிறது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி மற்றும் விநியோகத்தின் மீதான தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாடு, ஜனநாயக பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் வங்கிகள், பெரிய பெருநிறுவனங்கள் மற்றும் பெருந்தோட்டங்களை தேசியமயமாக்குதல், அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரித்தல் மற்றும் பில்லியனர்களதும் பெருநிறுவனங்களதும் பிரமாண்டமான சொத்துக்களைக் கைப்பற்றுதல் உட்பட, வெகுஜனங்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை சோசலிச சமத்துவக் கட்சி கோருகிறது.

இந்த அவசியமான நடவடிக்கைகளுக்கான போராட்டத்தை இணைக்குமாறும், அதே நேரத்தில் ஜனநாயக உரிமைகள் மீதான விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பெருகிவரும் தாக்குதல்களை எதிர்க்குமாறும் நடவடிக்கை குழுக்களை நாங்கள் வலியுறுத்துகிறோம். ஒரு ஜனநாயக மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில், தொழிலாள வர்க்கம் கிராமப்புற மக்களைத் தன் பக்கம் அணிதிரட்டி, சர்வதேச அளவில் சோசலிசத்திற்கான போராட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக, சோசலிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்கு அடித்தளம் அமைக்க முடியும்.

Loading