மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான குரங்கம்மை நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்துவிட்டது. ஜூலை 14 நிலவரப்படி, உலகளவில் மொத்தம் 11,042 குரங்கம்மை நோய்தொற்றுக்கள் உள்ளன, அவற்றில் 11,006 உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
ஏழு நாள் போக்கு சராசரியின் படி தினசரி நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஐரோப்பா உலகளாவிய குரங்கம்மை வெடிப்பு மையமாக தொடர்ந்து நீடிக்கிறது. ஆபிரிக்க கண்டத்தில் உள்ள 8 நாடுகள் உட்பட, இது நிரந்தர நோய்தொற்றாக இல்லாத 74 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கூட (மத்திய ஆபிரிக்க பகுதிக்கு வெளியே பல தசாப்தங்களாக குரங்கம்மை நோய்தொற்று இல்லை) இதுபோன்ற நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
ஸ்பெயின் உச்சபட்சமாக 2,447 குரங்கம்மை நோய்தொற்றுக்களைக் கொண்டுள்ளது. ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் முறையே 1790 மற்றும் 1,789 நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் நோய்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மற்றும் யுரேசிய நிலப்பரப்பில் அதன் முதல் உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றை ரஷ்யா சமீபத்தில் பதிவு செய்துள்ளது.
இலத்தீன் அமெரிக்காவை தொடர்ந்து, வட அமெரிக்காவில் குரங்கம்மை நோய்தொற்றுக்கள் விரைந்து அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா 1,049 குரங்கம்மை நோய்தொற்றுக்களைப் பதிவு செய்துள்ளது, போக்கு சராசரியின் படி தினமும் சுமார் 76 நோய்தொற்றுக்கள் அங்கு பதிவாகின்றன. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், நோய்தொற்றுக்கள் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
கலிபோர்னியா, நியூயோர்க், இல்லினோய் மற்றும் கொலம்பியா மாவட்டங்களில் அதிக தொற்று விகிதம் உள்ளது. நியூயோர்க் நகரம் மற்றும் சான் பிரான்சிஸ்கோவில், குரங்கம்மை தடுப்பூசிகள் தீர்ந்துவிட்டதாக சுகாதாரத் துறைகள் தெரிவித்துள்ளன, இது தடுப்பூசி வைரஸின் பலவீனமான விகாரத்திலிருந்து தயாரிக்கப்பட்டது.
கனடாவில் 484 குரங்கம்மை நோய்தொற்றுக்கள் பதிவாகி, ஜூலை 4 முதல் நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கியூபெக் உச்சபட்சமாக 284 நோய்தொற்றுக்களைக் கொண்டுள்ளது. ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியாவும் நோய்தொற்றுகளின் அதிகரிப்பை எதிர்கொள்கின்றன.
பிரேசில் தனது முதல் நோய்தொற்றை மீண்டும் ஜூன் 8 அன்று பதிவு செய்துள்ளது. ஜூன் இறுதியில் நோய்தொற்றுக்களின் திடீர் அதிகரிப்பு நிகழ்ந்ததற்கு முன்பு வரை அங்கு குறைந்த ஒற்றை இலக்கங்களில் தான் நோய்தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட்டு வந்தன. ஒரு நாளில் அதிகபட்சமாக ஜூலை 6 அன்று 36 உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்கள் பதிவாகின. மொத்தத்தில், நாட்டில் இப்போது 227 நோய்தொற்றுக்கள் உள்ளன. மேலும், கிட்டத்தட்ட பிரேசிலின் ஒவ்வொரு அண்டை நாட்டிலும் இதுபோன்ற நோய்தொற்றுக்கள் அந்தந்த பொது சுகாதாரத் துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. மெக்சிகோவும் சமீபத்தில் குரங்கம்மை நோய்தொற்றுக்களின் திடீர் எழுச்சியை எதிர்கொண்டது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குநர் டாக்டர். டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பில், குரங்கம்மை நோய்க்கான அவசரக் குழு கூடி, தொற்றுநோய்களின் சமீபத்திய போக்குகளையும் வைரஸூக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதில் நாடுகளின் பதிலையும் ஆராயும் என்பதை உறுதிப்படுத்தினார்.
ஜூன் 24 அன்று, அவசரநிலைக் குழு, வெடிப்பை இன்னும் ஒரு தொற்றுநோயாக அறிவிக்க வேண்டாம் என்றும், தொற்றுக்களின் பரிணாமம் மற்றும் புதிதாக பாதிக்கப்பட்ட புவியியல் பகுதிகள் பற்றிய கூடுதல் நுண்ணறிவை WHO சேகரிக்கும் போது அதிக நேரத்தை அனுமதிக்கவும் வாக்களித்தது. பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கை மற்றும் இருபால் மக்கள்தொகைக்கு வெளியே பரவிய தொற்று எண்கள் மற்றும் இறப்புகள், வைரஸின் வீரியத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் விலங்குகளின் எண்ணிக்கையில் வைரஸை செலுத்தி ஆராய்தல் உள்ளிட்ட பல அளவுகோல்களின் அடிப்படையில் குழுவின் மறுகூடல் தங்கியுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
WHO மற்றும் தேசிய சுகாதார அதிகாரிகள் அதிக ஆபத்துள்ள மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தினர். பெரும்பாலான நிகழ்வுகள் இன்னும் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் விடுதிகள் மற்றும் நீர் குளியல் உள்ள தொழிலாளர்களிடையே இதுபோன்ற பாலியல் செயல்பாடுகள் நிகழும். மேலும், நோய் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும், மற்றும் பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து, அவர்களை பரிசோதித்து சிகிச்சை அளிப்பதற்கான உள்கட்டமைப்பை தொடங்குவதற்கும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் ஆலோசனை நிபுணர்களுடன் இணைந்து செயல்பட சுகாதார நிறுவனங்களை அவசரக் குழு பரிந்துரைத்தது.
New England Complex Systems Institute இன் தலைவரும், உலக சுகாதார வலையமைப்பின் (WHN) இணை நிறுவனருமான பேராசிரியர் யானீர் பார்-யாம், குரங்கம்மை நோயை சர்வதேச கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவிப்பதில் தாமதப்படுத்தியதற்காக உலக சுகாதார அமைப்பை சரியாக விமர்சித்துள்ளார். ஆரம்ப அவசரக் குழு கூட்டத்திற்கு முன்னதாகவே, உலக சுகாதார அமைப்பிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், உலக சுகாதார வலையமைப்பு முன்கூட்டியே ஜூன் 22 அன்று குரங்கம்மை நோயை ஒரு தொற்றுநோயாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
2020 ஜனவரி பிற்பகுதியில் கோவிட்-19 இன் வேகமாக வளர்ந்து வரும் உலகளாவிய பரவலால் ஏற்படவுள்ள அச்சுறுத்தல் குறித்து உலகை எச்சரிப்பதில் உலக சுகாதார அமைப்பின் தாமதம் குறித்து கவலைகளை எழுப்பிய பார்-யாம், குரங்கம்மை நோய்தொற்று பற்றி விவாதிப்பதற்கான ஒரு சமீபத்திய இணையவழி கூட்டத்தின் போது, “குரங்கம்மை நோயை ஒரு தொற்றுநோயாக அறிவிப்பதற்கான காரணம், மேலும் நோய்தொற்றுக்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அனைவரையும் எச்சரிப்பதாகும். அதுவே முக்கியமான நோக்கமாகும். நீங்கள் [WHO] எல்லோரிடமும் எல்லாம் சரியாக இருப்பதாகச் சொன்னால், அனைவரும் தங்கள் வழமையான வேலைகளில் தான் ஈடுபடுவார்கள்” என்று கூறினார்.
மேலும் அவர், “நோய்தொற்றுக்கள் பரவி வரும் நாடுகள், ஆண்களுடன் உறவு கொள்ளும் ஆண்கள் மற்றும் அந்த சமூகம் மற்றும் அறியப்பட்ட வெளிப்பாடுகளை கருத்தில் கொண்டு பரிசோதனைகளையும் தலையீடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. மற்ற நோய்தொற்றுக்களில் இருந்து நாம் அறிந்துகொண்டது போல, நோய்தொற்று பரவலின் குறைவான கணக்கீடும் மற்றும் தெளிவின்மையும் உள்ளது, மேலும் உண்மையான அளவை அறிவது எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது” என்றும் கூறினார்.
வாஷிங்டன் டி.சி. இல் உள்ள ஒரு குடும்ப மருத்துவரும், மற்றும் முன்னாள் ஒபாமா நிர்வாகத்தின் அரசு உள் விவகாரங்கள் மற்றும் பொது ஈடுபாட்டிற்கான வெள்ளை மாளிகை அலுவலகத்திற்கான கொள்கை இயக்குநருமான, விருந்தினர் பேச்சாளர் டாக்டர். கவிதா பட்டேல், குரங்கம்மை நோய்தொற்றுக்கள் பற்றி மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களிடையே போதிய அறிமுகம் இல்லாதது குறித்து பேசினார்.
“ஒரு நோயாளி தனக்கு ஏற்பட்டுள்ள ஒரு சொறி மற்றும் குரங்கம்மை நோய் பற்றி சுட்டிக்காட்டினால் தவிர, பெரும்பாலானவர்கள் நோயறிதலைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்,” என்று அவர் கூறினார். சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மட்டம் இரண்டிலும் “தற்போது கல்வியில் பல இடைவெளிகள் உள்ளன,” என்றார். மேலும், பரிசோதனை மற்றும் தடுப்பூசி மருத்துவ நிலையங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டிய குறிப்பிடத்தக்க தேவை உள்ளது என்றும் அவர் கூறினார்.
LabCorp நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, குரங்கம்மை நோயை கண்டறிவதற்கான PCR பரிசோதனைகளை செய்யக்கூடிய Aegis Science, LabCorp, Mayo Clinic Laboratories, Quest Diagnostic and Sonic Healthcare போன்ற ஐந்து அமெரிக்க வணிக ஆய்வகங்கள் இப்போது உள்ளன என்றும் டாக்டர். பட்டேல் கேட்போரிடம் கூறினார். ஆயினும் கூட, “வாரத்திற்கு 60,000 பரிசோதனைகளை மட்டும் செய்யும் அமெரிக்க திறன் போதுமானதாக இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த மாதிரிகள் குறித்த பரிசோதனையும் திடீர் மாற்றமும் கடினமானதாக இருக்கலாம், மேலும் மூன்று நாட்கள் வரை ஆகும் என்பதானது, நோயறிதலை தாமதப்படுத்துவதுடன் வைரஸ் தொடர்ந்து பரவுவதை சாத்தியப்படுத்தும் என்கிறார்.
டாக்டர். பட்டேல் மேலும் இவ்வாறு கூறினார், “குரங்கம்மை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும், வளையத் தடுப்பூசி உத்தியை, அதாவது ஒரு பிந்தைய நோய்தடுப்பு உத்தியை [நோயின் தீவிரத்தைக் குறைக்க நோய்க்கிருமி வெளிப்பட்டதன் பின்னர் தடுப்பூசிகள் கொடுக்கப்படுகின்றன] பயன்படுத்தவும் இது நமக்கு விரைவாகத் தேவைப்பட்டது. எங்களிடம் சிறந்த, மிகப் பரந்தளவில் கிடைக்கக்கூடிய பரிசோதனைகள் இருந்திருந்தால், எங்களுக்கு சிறந்த திறன் கிடைத்திருக்கும். இப்போது, நியூயோர்க் நகரம், டி.சி. மற்றும் சான் பிரான்சிஸ்கோவில், நாங்கள் ஜின்னியோஸை [Bavarian Nordic மருந்து உற்பத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட குரங்கம்மை தடுப்பூசி] விட்டு வெளியேறிவிட்டோம். நாங்கள் பெரியம்மை தடுப்பூசிக்கு திரும்பியுள்ளோம், ஆனால் அதன் பயங்கரமான பக்க விளைவுகள் காரணமாக அதைப் பயன்படுத்துவது மிகவும் கடினமாகும்.”
குரங்கம்மை தடுப்பூசி உற்பத்தி நிறுவனம் தற்போது அதன் ஆலைகளின் அமைப்பு மாற்றங்களைச் செய்து வருகிறது, மேலும் தடுப்பூசிகளின் உற்பத்தி அடுத்த பல காலாண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்படும். குரங்கம்மை வைரஸ் நோய்தொற்றுக்களை மாதிரியாக்குவதானது, 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 60,000 குரங்கம்மை நோய்தொற்றுக்களை அமெரிக்கா எதிர்பார்க்கலாம் என்றும், செப்டம்பர் இறுதிக்குள் உலகளவில் அரை மில்லியன் அல்லது அதற்கு அதிகமாக நோய்தொற்றுக்கள் பரவக்கூடும் என்றும் மதிப்பிடுகிறது.
தொற்றுநோயியல் நிபுணரும் உலக சுகாதார வலையமைப்பின் (WHN) இணை நிறுவனருமான டாக்டர். எரிக் ஃபீகல்-டிங், நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அது வாரத்திற்கு 40 முதல் 50 சதவிகிதம் அல்லது ஆறு வாரங்களில் 10 மடங்கு வளர்ச்சி காணும் என்று எச்சரித்தார். மேலும் அவர், “ஏழு நாள் சராசரியாக ஒரு வாரத்திற்கு நாளாந்தம் 300 முதல் 400 வரை நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா 1,000 தடைகளை உடைத்து நோய்தொற்றுக்களின் பரவலைத் துரிதப்படுத்துகின்றன” என்றும் கூறினார்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் (CDC) தன்னிச்சையான மற்றும் இயந்திரகதியான ஆபத்தான வகைப்படுத்துதலை அவர் விமர்சித்தார், இது முகக்கவசம் அணியாமல் ஆறு மணிநேரத்திற்கு மேலாக குரங்கம்மை நோயாளியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள எவரையும் இடைநிலை ஆபத்தை உருவாக்குபவராக குறித்தது. அனைத்து பரிமாற்ற வழிகளும் சாத்தியமானவை என்பதையும், குரங்கம்மை வைரஸை ஒத்த வைரஸ் குடும்பத்தால் உருவாகும் மற்றும் காற்றுவழி பரவக்கூடியதுமான பெரியம்மை நோய் குறித்து விழிப்பாக இருக்கவும் கேட்போரை குழு வலியுறுத்தியது.
பார்-யாம் மேலும், “முகக்கவசம் அணிவது ஒரு நல்ல யோசனை தான், ஆனால் அதற்கான சரியான வழிகாட்டுதல் இல்லை. முகக்கவசம் அணிவது முக்கியம், மேலும் இது ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் அவர்கள் பரிந்துரை செய்வதில் போட்டியிடும் பிரிவுகள் இருப்பதாகத் தெரிகிறது. குழப்பம் ஆபத்தானது, தெளிவான வழிகாட்டுதல் தேவை” என்றும் கூறினார். உலக சுகாதார வலையமைப்பு அமைத்த குழு அனைவரையும் முகக்கவசம் அணியுமாறு தீவிரமாக வலியுறுத்தியது, மேலும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முன்பு குரங்கம்மை நோய்க்கு முகக்கவசப் பயன்பாட்டை அங்கீகரித்தது பற்றி குறிப்பிட்டது.
ஃபீக்ல்-டிங் தனது அறிமுகக் குறிப்புகளை முடிக்கையில், இந்த இலையுதிர்காலத்தில் சமூகம் மற்றும் பள்ளிகளில் குரங்கம்மை நோய்தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், குழந்தைகளிடையே இந்த நோய்த்தொற்றுகள் பரவுவதற்கான வாய்ப்புகள் ஒரு பெரிய கவலையாக உள்ளன, ஏனெனில் இந்த வைரஸ் இளையவர்களுக்கு மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்தார். கூடுதலாக, குழந்தைகள் பெரியம்மைக்கு எதிராக தடுப்பூசி போடப்படவில்லை, எனவே அவர்கள் வைரஸுக்கு நோயெதிர்ப்பு ரீதியாக அப்பாவியாக இருக்கிறார்கள் மற்றும் அதற்கு எதிராக எந்த பாதுகாப்பும் இல்லை.
குழந்தைகளில் நோயின் தீவிரத்தன்மைக்கான சான்றுகள் குரங்கம்மை நிரந்தர தொற்றுநோயாக இருக்கும் ஆபிரிக்காவில் உள்ள மருத்துவ அனுபவத்திலிருந்து தெரிய வருகிறது என்று பார்-யாம் விளக்கினார். குரங்கம்மை நோய் பற்றிய மக்கள்தொகை அடிப்படையிலான ஆய்வுகள், மருத்துவமனைகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICUs) அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் குழந்தை நோயாளிகள் என்பதைக் காட்டுகின்றன. நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு குரங்கம்மை நோய்தொற்றின் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
குழு உறுப்பினர்கள் ஜின்னியோஸ் தடுப்பூசி பற்றி பின்வரும் எச்சரிக்கைகளையும் எழுப்பினர். நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நோயாளிகளுக்கு இது பாதுகாப்பானது என்றாலும், கர்ப்பிணி அல்லது பாலூட்டும் பெண்களிடம் ஆய்வு செய்யப்படவில்லை, மேலும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரான 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு வழங்க இது அங்கீகரிக்கப்படவில்லை.
குரங்கம்மை நோய்தொற்று பரவலின் முக்கிய மையங்களாக சுகாதார அமைப்புக்கள் மாறுமா என்ற பார்வையாளர்களின் கேள்விக்கு, இந்த பிரச்சினை குறித்து, தான் மிகுந்த கவலையுடன் இருப்பதாக டாக்டர். பட்டேல் கூறினார். குரங்கம்மை நோயின் அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் குறித்து பெரும்பாலான சுகாதார நிறுவனங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததையும், பரிசோதனை முடிவுகளுக்கு மெதுவாகத் திரும்புவதையும் கருத்தில் கொண்டால், இது நோய்தொற்று பரவுவதற்கான உண்மையான சாத்தியத்தை கொண்டுள்ளது என்று கூறினார். மருத்துவமனைகள் குரங்கம்மை நோய் காற்றுவழி பரவுவதற்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார். மேலும், “நோயாளிகளுக்கு கோவிட் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால், சுகாதாரப் பாதுகாப்பு வழங்குநர்கள் வழமையான நடைமுறைகளை கைவிடுவார்கள்” என்று டாக்டர். பட்டேல் கூறினார். மேலும், சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புகளில் முன்னணியில் இருப்பவர்கள் தங்களையும் நோயாளிகளையும் பாதுகாக்க குரங்கம்மை தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பார்-யாம் சுருக்கமாக, “இதை உலக சுகாதார அமைப்பு (WHO) தொற்றுநோயாக அறிவிப்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கும். ஆனால் அங்கு தலைமைத்துவ வெற்றிடம் உள்ளது ...” என்று கூறினார். மேலும் அவர், “நான் சமீபத்தில் உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவர்கள் முகக்கவசப் பயன்பாடு அல்லது நகரும் பரிசோதனைக்கு முன்வரவில்லை. இந்த தொற்று வெறும் பாலியல் பரவல் அல்ல என்றும், இது எவருக்கும் ஏற்படலாம் என்றும் அவர்கள் கூறியிருந்தாலும், இதை ஒரு அவசர செய்தியாக அவர்கள் தெரிவிக்கவில்லை. நோய்தொற்றுக்களை விரைவாகக் கண்டறிவதற்கான தேவை பற்றி சரியாகத் தெரிவிக்கப்படவில்லை. அமைதியாக இருக்கவே விருப்பம் உள்ளது. இருப்பினும், இது அவசர பிரச்சினை இல்லை என்பதாகவே விளக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தீர்க்க, நாம் முதலில் அவசரமாக [செயல்பட] வேண்டியதன் அவசியத்தை தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.