மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
வியாழனன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) கோவிட்-19 நோய்க்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது, இது நோய்தொற்றுக்கு ஆளான மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவது, தனிமைப்படுத்திக்கொள்வது மற்றும் பரிசோதனை செய்துகொள்வதற்கான பரிந்துரைகளை நீக்குகிறது அல்லது குறைக்கிறது. இந்த மாற்றங்கள், இந்த அமைப்பின் நீண்டகால விஞ்ஞான விரோதக் கொள்கைகளில் சமீபத்தியவையாகும். இவை, அமெரிக்க மக்கள் மீது கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ள பைடென் நிர்வாகத்தின் ‘என்றென்றும் கோவிட்’ கொள்கையின் தீவிரத்தைக் குறிக்கின்றன.
ஜூலையில் வெள்ளை மாளிகை அதிகாரிகளால் பாடப்பட்ட பல்லவியை எதிரொலிக்கும் வகையில், CDC அதிகாரியும் புதிய வழிகாட்டுதல்களின் இணை ஆசிரியருமான கிரெட்டா மாசெட்டி, ஒரு சுருக்கச் செய்தி கூட்டத்தில் 'கோவிட் -19 தங்குவதற்கு இங்கே உள்ளது' என்று கூறினார்.
இந்த மாற்றங்கள் நான்கு வெவ்வேறு ஓமிக்ரோன் துணைமாறுபாடுகளின் அலையின் பின்னணியில் நிகழ்கின்றன, மிகவும் ஆபத்தான, BA.5 இப்போது ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த மூன்று மாதங்களில், உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு நாளும் சராசரியாக 100,000 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், உண்மையான புள்ளிவிவரங்கள் ½ முதல் 1 மில்லியன் வரை உள்ளன. புதிய தினசரி இறப்புகளின் ஏழு நாள் சராசரி மீண்டும் 500 ஐ தாண்டியுள்ளது. அதே நேரத்தில், குரங்கம்மை நோயின் முன்னோடியில்லாத உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை, இது ஏற்கனவே குறைந்தது எட்டு குழந்தைகள் உட்பட 11,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை பாதித்துள்ளது.
CDC வழிகாட்டுதல்களின் நேரம், புதிய பள்ளி ஆண்டுடன் ஒத்துப்போவதையும், பரவலின் அளவைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளைத் திறந்து வைப்பதற்கு போலி-விஞ்ஞானப் பாதுகாப்பு வழங்குவதையும் தெளிவாக நோக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், ஜனவரி 2021 இல், பெரும்பாலான அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுவதற்கு முன்பே பள்ளிகளை மீண்டும் திறக்க வாதிடுவதற்காக, பொருளாதார நிபுணர் எமிலி ஒஸ்டருடன், பள்ளிகளை மீளத்திறக்கும் ஆர்வலர்களில் ஒருவரான மாசெட்டி டவுன் ஹால் நிகழ்வில் பங்கேற்றார். சில நாட்களுக்குப் பின்னர், கிரேட் பாரிங்டன் பிரகடனத்தின் இணை ஆசிரியர் ஜெய் பட்டாச்சார்யாவுடன் ஒஸ்டர் இதேபோன்ற நிகழ்வை நடத்தினார்.
CDC இப்போது, நோய்தொற்றுக்கு ஆளானவர்களை தனிமைப்படுத்த வேண்டாம், தொடர்பு தடமறிதல் நடத்தக்கூடாது மற்றும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கண்காணிப்பு சோதனைகளை செய்யக்கூடாது என்று பரிந்துரைக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான தன்னிச்சையான ஐந்து நாள் தனிமைப்படுத்தல் காலத்தை வழிகாட்டுதல்கள் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன. இதற்கு இணங்க, CDC அதன் ‘test to stay’ திட்டத்தையும் அகற்றியுள்ளது, இது நோய்க்கு ஆளான மாணவர்களுக்கு பரிசோதனை முடிவு எதிர்மறையாக வரும் வரை அவர்கள் பள்ளியில் தொடர்ந்து இருக்க ஊக்கப்படுத்தியது. இத்திட்டம் தொடங்குவதற்கு விஞ்ஞானபூர்வமற்றதாக இருந்தாலும், புதிய வழிகாட்டுதல்கள் நோய்க்கு ஆளான மாணவர்களை பரிசோதிப்பது மற்றும் தனிமைப்படுத்துவது இரண்டிற்கும் ஊக்கமளிக்கவில்லை. அதற்குப் பதிலாக, மாசெட்டியின் கூற்றுப்படி, நோய்க்கு ஆளானவர்கள் வெறுமனே முகக்கவசங்களை அணிய வேண்டும்.
CDC இந்த வழிகாட்டுதல்களை வெளியிடப்பட்ட அதே நாளில், செனட்டர் பேர்னி சாண்டர்ஸ் வெள்ளை மாளிகையின் கோவிட்-19 தொடர்பான நடவடிக்கை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஆஷிஷ் ஜாவை பேட்டி கண்டார். அவர் பள்ளிகளை திறந்திருக்க கோரியதுடன், “ஒவ்வொரு குழந்தையும் ஆண்டு முழுவதுமாக பள்ளியில் நேரடியாக, முழு நேரம் கல்வி பயிலக்கூடிய ஒரு பள்ளி ஆண்டை நாம் எதிர்நோக்க வேண்டும். அதைச் செய்வதற்கான அனைத்து திறனும் நம்மிடம் உள்ளது என்றே நான் நினைக்கிறேன், மேலும் அது மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடிய தரமாக இருக்க வேண்டும்” என்று கூறினார். அப்போது, கோவிட்-19 ஆல் ‘குழந்தைகள் … இறக்கவில்லை’ என சாண்டர்ஸ் அபத்தமான கூற்றை முன்வைத்தபோது, ஜா அவரை திருத்தவில்லை.
உண்மையில், 2021-2022 பள்ளி ஆண்டில், ஜனநாயகக் கட்சி தலைமையிலான பள்ளி மாவட்டங்களில் சில, குறைந்த அளவிலான தணிப்பு நடவடிக்கைகள் மட்டுமே நடைமுறையில் இருந்தபோது, கோவிட்-19 ஆல் 1,000 க்கும் அதிகமான குழந்தை இறப்புக்கள் நிகழ்ந்ததை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் பதிவு செய்தது. இந்த கோடையில் மட்டும், 200 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸால் இறந்துள்ளது உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளது. பள்ளிகள் மீளத்திறக்கப்படுவதற்கு முன்பே, குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது கடந்த செப்டம்பரில் டெல்டா அலையின் உச்சத்தின் போது இருந்த அதே அளவை சமீபத்தில் எட்டியது.
CDC வழிகாட்டுதல்கள் தவறான தகவல், புறக்கணிப்பு மற்றும் மற்றும் பொய்களை அடிப்படையாகக் கொண்டவை. தீவிர நோய் மற்றும் இறப்பைத் தடுக்க 'கருவிகள்' இருப்பதால், பரவுவதை நிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட சுகாதார நடவடிக்கைகள் அவசியமில்லை என்பது வெள்ளை மாளிகையுடன் உடன்படும் அவர்களின் மைய வலியுறுத்தலாகும். ஆவணம் முழுவதும், தீவிரமான கடுமையான அல்லது கோவிட்-19 க்கு (நெடுங்கோவிட்) பிந்தைய நோய்கள் என வரையறுக்கப்பட்ட 'மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்த' நோய்களைத் தடுப்பதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
CDC இன் சொந்த தரவுகளிலிருந்து, எந்தவொரு நோய்தொற்றும் ‘மருத்துவ ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக’ கருதப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது. குழந்தைகள் மீதான கோவிட்-19 இன் விளைவுகள் குறித்த ஆய்வை அமைப்பு கடந்த வாரம் வெளியிட்டது, இது, ஏற்கனவே நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், கடுமையான நுரையீரல் அடைப்பு (acute pulmonary embolism), இதயத் தசை வீக்கம் (myocarditis) மற்றும் இதயத் தசை நோய் (Cardiomyopathy), சிரை இரத்த உறைவு நிகழ்வுகள் (venous thromboembolic events), கடுமையான சிறுநீரக செயலிழப்பு (acute renal failure) மற்றும் வகை 1 நீரிழிவு நோய், அத்துடன் வாசனை மற்றும் சுவை தொந்தரவுகள், இரத்த ஓட்ட பிரச்சினைகள், சோர்வு மற்றும் வலி போன்ற பலவீனப்படுத்தும் நோயறிகுறிகளும் உட்பட, பல உயிருக்கு ஆபத்தான நிலைமைகளால் கணிசமான ஆபத்தை எதிர்கொண்டதை கண்டறிந்தது.
அச்சுறுத்தும் வகையில், அரசாங்க ஆய்வாளர் ஸ்டூவர்ட் ஜோன்ஸ், நெடுங்கோவிட் பரவல் பற்றிய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் மதிப்பீடுகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஒரு கற்பனையான முன்கணிப்பு, தற்போதைய ‘என்றென்றும் கோவிட்’ பாரிய நோய்தொற்று கொள்கையின் கீழ் 20 முதல் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், 70-90 சதவிகித மக்கள் கடுமையான நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்களாக கருதப்படுவார்கள் எனக் கண்டறிந்தது.
வைரஸ் பரவும் அதே நேரத்தில் தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகள் போன்ற ‘கருவிகளை’ பயன்படுத்தி நோயை குணப்படுத்துவது சாத்தியம் என்று பைடென் நிர்வாகம் கூறுகிறது, ஆனால் பாரிய மறுதொற்றுக்கள், குறைந்து வரும் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வைரஸ் பரிணாமம் ஆகிவற்றை எதிர்கொள்கையில் மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு எதிராக இவை அதிகரித்தளவில் பயனற்றதாக உள்ளது. வைரஸ் தடுப்பு மருந்தான பாக்ஸ்லோவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக வைரஸ் பிறழ்வடைகிறது என்பதை ஆய்வுகள் ஏற்கனவே நிரூபித்துள்ளன, மேலும் விஞ்ஞானி எரிக் டோபோல் சமீபத்தில் மருந்துக்கு வைரஸ் எதிர்ப்பு ‘தவிர்க்க முடியாதது’ என்று கூறினார்.
ஜூலை மாதம் CDC ஆல் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு, ஓமிக்ரோனின் BA.1, BA.2 துணைமாறுபாடுகளால் முறையே கடந்த குளிர்காலம் மற்றும் வசந்தகாலத்தில் நிகழ்ந்த நோய்தொற்று அலைகளின் போது, மருத்துவமனை அனுமதிப்புகளுக்கு எதிராக தடுப்பூசி செயல்திறன் (vaccine efficacy-VE) விரைவாகக் குறைந்ததைக் கண்டறிந்தது. இரண்டு அளவு தடுப்பூசிகளைப் பெற்ற நபர்களைப் பொறுத்தவரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு எதிரான தடுப்பூசி செயல்திறனானது, BA.1 காலத்தில் 61 சதவிகிதமாக இருந்தது BA.2 காலத்தில் 24 சதவிகிதமாகக் குறைந்தது. 120 நாட்களுக்கு மேற்பட்ட காலத்திற்கு முன்னர் மூன்றாவது அளவு தடுப்பூசியைப் பெற்றவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி செயல்திறன் 85 சதவிகிதத்தில் இருந்து 52 சதவிகிதமாகக் குறைந்தது. இந்த ஆய்வு, CDC இன் சமீபத்திய வழிகாட்டுதல்கள் இரண்டு அளவு தடுப்பூசிகளை ஒரு முழு முதன்மை நோய் தடுப்பாக அமைவதாக கூறுவது மேலும் குற்றகரமானது என்கிறது.
அதிகம் பரவக்கூடிய, அதிக நோயெதிர்ப்பு எதிர்ப்புத்திறன் கொண்ட, அதிக வீரியமுள்ள, அல்லது இந்த மூன்றின் கலவையாக வளரும் மாறுபாடுகள் உட்பட, வைரஸ் பரிணாமத்தால் உருவாகும் பெரும் ஆபத்தானது நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் வெள்ளை மாளிகையால் நன்கு புரிந்து கொள்ளப்பட்டது.
பேர்னி சாண்டர்ஸ் உடனான அதே நேர்காணலில், டாக்டர் ஜா, ‘ஒவ்வொரு சில மாதங்களில் உருவெடுக்கும் துணைமாறுபாடுகள், ஒவ்வொரு 6-9 மாதங்களில் உருவெடுக்கும் முக்கிய மாறுபாடுகள்’ உடன் ‘வைரஸ் இப்போது மிக வேகமாக பரிணமித்து வருகிறது’ என்பதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர், “நாங்கள் எங்கள் தடுப்பூசிகளைப் புதுப்பித்து வருகிறோம், இந்த இலையுதிர் காலத்தில் நாங்கள் முற்றிலும் புதிய தலைமுறை தடுப்பூசிகளைப் பெறப் போகிறோம், அவை இப்போது உள்ள மாறுபாட்டிற்கு மிகவும் குறிப்பிட்டதாக இருக்கும். … இப்போது, மிகக் கடுமையான, மிகுந்த தொற்றும் தன்மையுள்ள ஒரு கடினமான எதிர்பாராத வைரஸை நாம் எதிர்கொள்ளலாம்… ஆனால், நம்மிடம் உள்ள கருவிகளை நாம் புதுப்பித்துக் கொண்டேயிருக்கிறோம், சிறந்த சிகிச்சைகளைப் பெறுகிறோம் என்ற நிலையில், இந்த வைரஸை விட நாம் முன்னேறிச் செல்ல முடியும் என்று நீண்டகாலமாக நான் நம்புகிறேன்.
புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகள் மூலம் ‘இந்த வைரஸை விட முன்னேறிச் செல்ல’ முடியும் என்ற அரசாங்கத்தின் கூற்று, வைரஸ் ‘மிக வேகமாக பரிணமிக்கிறது’ என்ற உண்மைக்கு முற்றிலும் முரண்படுகிறது. தற்போதைய மாறுபாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட தடுப்பூசிகள், விநியோகிக்கப்படும் போது எந்த புதிய மாறுபாடு ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதற்கு எதிராக தடுப்பூசி செயல்திறன் குறைவானதாக இருக்கும். இதற்கிடையில், வேகமான மற்றும் பரந்தளவிலான நோய் பரவலை உருவாக்கியதான நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் பைடென் நிர்வாகத்தின் அதிகாரிகளால் ஊக்குவிக்கப்பட்ட நடவடிக்கைகள், விரைவில் அல்லது பின்னர் 'கடினமான எதிர்பாராத' வடிவிலான வைரஸை உருவாக்கும் வைரஸ் பரிணாமத்தின் செயல்முறையை மட்டுமே துரிதப்படுத்துகிறது.
முழு அரசியல் ஸ்தாபகமும் பெருநிறுவன ஊடகங்களும் புதிய வழிகாட்டுதல்களைப் பாராட்டியுள்ளன. அமெரிக்க ஆசிரியர்களின் கூட்டமைப்பின் (AFT) தலைவர் ராண்டி வைன்கார்டென் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டு, “இந்த வழிகாட்டுதல்களை நாங்கள் வரவேற்கிறோம். … கோவிட்-19 உம் பிற வைரஸ்களும் இன்னும் நம்மிடம் உள்ளன, என்றாலும் பல தடுப்பு மருந்துகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான வாய்ப்புகள் நம்மிடம் இருப்பதால், இப்போது புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான நேரம் இதுவல்ல” என்று கூறினார்.
வழிகாட்டுதல்கள், பொதுக் கருத்தையும் தற்போதுள்ள நடத்தைகளையும் ஆதரிக்கின்றன என்று முதலாளித்துவ வர்ணனையாளர்கள் கூறுகின்றனர், ஆனால் நோய்களின் 'கட்டுப்பாடு மற்றும் தடுப்பு' அடிப்படையில் விஞ்ஞான பரிந்துரைகளை வழங்க வேண்டிய பொறுப்பு ஒரு சுகாதார நிறுவனத்திற்கு உள்ளது, ஆனால் கூறப்படும் பொதுக் கருத்தின் அடிப்படையில் அல்ல.
மேலும், மக்களிடையே ஏற்கனவே நிலவும் குழப்பம் மற்றும் ‘தொற்றுநோய் சோர்வு’ ஆகியவை ஊடகங்களின் இடைவிடாத பிரச்சாரம் மற்றும் CDC இன் தொடர் பேரழிவுக் கொள்கைகளின் நேரடி விளைபொருளாகும். இவற்றில், பெருநிறுவனங்களின் தொழிலாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தனிமைப்படுத்தப்படும் நேரத்தைக் குறைத்தல், பரவல் விகிதங்களைக் குறைத்துக் காட்ட சமூக முகக்கவச வழிகாட்டுதல் வரைபடத்தைக் கையாளுதல் மற்றும் பொதுப் போக்குவரத்திற்கான முகக்கவச ஆணைகளை காலாவதியாக அனுமதித்தல் ஆகிய சிலவற்றைக் குறிப்பிடலாம்.
ஜனநாயகக் கட்சி மற்றும் பைடென் நிர்வாகத்துடன் இணைந்த ஆளும் வர்க்கத்தின் அரசியல் கருவியாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் முற்றிலும் மதிப்பிழந்து நிற்கிறது. அதன் வழிகாட்டுதல்கள் மற்றும் செய்தி அறிக்கைகளின் மொழியானது, மனித ஆரோக்கியத்தை விட இடைக்கால தேர்தல் வாக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் Impact Research வாக்கெடுப்பு நிறுவனத்திலிருந்து ஜனநாயகக் கட்சி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட மக்கள் தொடர்பு ஆணையிலிருந்து நேரடியாகப் பெறப்படுகிறது.
கடந்த குளிர்காலத்தில் ஓமிக்ரான் அலைக்குப் பின்னர், பைடென் நிர்வாகம் அதன் பாசிச முன்னோடி டொனால்ட் ட்ரம்பால் பாதுகாக்கப்பட்ட 'சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்' மூலோபாயத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள அதன் தணிப்பு அணுகுமுறையையும் பெருகிய முறையில் வெட்கமின்றி கைவிட்டுள்ளது. முதலாளித்துவ வர்க்கம் தனது ஆட்சியை எவ்வாறு சிறப்பாகப் பராமரிப்பது என்பதில் தந்திரோபாய வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், நிரந்தரமான பாரிய நோய்தொற்று மற்றும் சமூகக் கொலைக் கொள்கையில் முற்றிலும் அது ஒன்றுபட்டுள்ளது. உலகளவில், சீனாவிற்கு வெளியே கிட்டத்தட்ட அனைத்து அரசாங்கங்களும் தொற்றுநோய் குறித்து ஒரே மாதிரியான கொலைகாரக் கொள்கைகளையே ஏற்றுக்கொண்டன.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் மற்றும் வெள்ளை மாளிகையின் அதிகாரிகள் உட்பட, இந்த முடிவுகளை எடுப்பவர்கள், பொது சுகாதாரத்தை ஆணையிடும் உரிமை தங்களுக்கு இல்லை என்பதை நிரூபித்துள்ளனர். ‘என்றென்றும் கோவிட்’க்கான கோரிக்கையானது ‘என்றென்றும் குரங்கம்மை நோய்க்கான’ முன்னோடியாகும், மேலும் அடுத்து தோன்றக்கூடிய எந்த நோய்க்கிருமியானாலும் இதுதான் கொள்கையாக இருக்கும். இது தனி நபர்களை மாற்றுவது அல்ல, மாறாக எந்த வர்க்கம் சமூகத்தை இயக்குகிறது என்பதை மாற்றுவதாகும்.
ஒரு புரட்சிகர சோசலிச முன்னோக்கில் ஆயுதபாணியான தொழிலாள வர்க்கம் மட்டுமே இந்தக் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைச் செய்ய, தேவையான அரசியல் படிப்பினைகளை வரைய வேண்டியது அவசியம், முதலில், ஜனநாயகக் கட்சியை எதிர்த்தும், பெருநிறுவன சார்பு தொழிற்சங்க எந்திரங்களின் கட்டுப்பாட்டிற்கு வெளியேயும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன இயக்கத்தை உருவாக்க வேண்டிய அவசர தேவை முன்வைக்கிறது.
மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும், அதன் சொந்த நலன்களுக்கு ஏற்ப சமூகத்தை மறுசீரமைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான அடித்தளங்களை அமைப்பதற்காக, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees-IWA-RFC) ஒவ்வொரு பணியிடத்திற்கும், பிராந்தியத்திற்கும், நாட்டிற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.