மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
நியூசிலாந்தில், இதய நோய்க்கு சமமாக கோவிட்-19 நோய்தொற்று தற்போது இறப்புக்கான முக்கிய காரணமாக உள்ளது. ஆகஸ்ட் 7 அன்று New Zealand Herald செய்தித்தாள், ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நேரடியாக கோவிட்-19 இன் காரணமாக 120 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, இது மொத்த இறப்புக்களில் கிட்டத்தட்ட 15 சதவிகிதமாகும் என்று தெரிவித்தது. கோவிட் நோய்தொற்று பதிவுசெய்யப்பட்டு 28 நாட்களுக்குள் ஒட்டுமொத்த இறப்புக்களையும் சேர்த்தால் ஐந்து பேருக்கு ஒருவர் வீதம் இறந்திருப்பதாக இந்த எண்ணிக்கை உயரும்.
தொற்றுநோயியல் நிபுணரான மைக்கேல் பேக்கர், பரிசோதிக்கப்படாத சிலர் வைரஸ் தொற்றால் இறந்திருப்பார்கள் என்பதால், 15 சதவிகிதம் என்பது குறைவான எண்ணிக்கையாக இருக்கலாம் என்று கார்டியனுக்கு தெரிவித்தார். ‘உச்சபட்ச மரணத்தை நாம் காணும் கட்டத்தில், பொது நலனும் அக்கறையும் மிகக் குறைந்த மட்டத்திற்குக் குறைந்து வருவதைக் கண்டோம்’ என்று அவர் தனது கவலையைத் தெரிவித்தார்.
“நியூசிலாந்தில் மக்கள் இறப்பதற்கு கோவிட்-19 காரணமல்ல, ஆனால் உண்மையில் அதனால் உருவாகும் நிலைமைகளால் தான் மக்கள் இறப்பார்கள்” என்பதை New Zealand Herald செய்தித்தாளுக்கு பேக்கர் சுட்டிக்காட்டினார். 10 நோய்தொற்றாளர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று நெடுங்கோவிட் நோய்க்கு வழிவகுக்கிறது, இது நுரையீரல், இதயம், மூளை மற்றும் பிற உறுப்புக்களை கடுமையாக பாதிக்கும்.
ஆகஸ்ட் 9 நிலவரப்படி, கோவிட் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டு பதிவுசெய்யப்பட்ட 28 நாட்களுக்குள் மொத்தம் 2,475 பேர் இறந்துள்ளனர். சுகாதார அமைச்சகம் முன்னர் இதுபோன்ற அனைத்து இறப்புக்களையும் கோவிட் தொடர்பானவை என்று விவரித்திருந்தாலும், அதன் அறிக்கையிடல் வழிகாட்டுதல்கள் ஜூலை 19 அன்று மாற்றப்பட்டபோது நூற்றுக்கணக்கான இறப்புக்கள் குறைக்கப்பட்டன. அமைச்சகத்தின் கூற்றுப்படி, தற்போது 1,688 ‘உறுதிப்படுத்தப்பட்ட’ கோவிட் தொடர்பான இறப்புக்கள் நிகழ்ந்துள்ளன, இது நிச்சயமாக உண்மையான எண்ணிக்கையை குறைத்து மதிப்பிடுகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் கோவிட் நோய் 3,500 மக்களைக் கொன்றால், அது நியூசிலாந்தின் ஒட்டுமொத்த இறப்பு விகிதத்தில் மேலும் 10 சதவிகிதத்தை சேர்க்கும், மற்றும் ஆயுட்காலத்தை அளவிடக்கூடிய தாக்கத்தையும் அது ஏற்படுத்தும் என்று பேக்கர் முன்னரே குறிப்பிட்டுள்ளார்.
நியூ யோர்க் டைம்ஸின் கோவிட் கண்காணிப்பு தரவின்படி, நியூசிலாந்தின் இறப்பு விகிதம் உலகிலேயே ஆறாவது மிக உயர்ந்த அளவாகும், அதாவது 100,000 பேருக்கு 0.36 இறப்புக்கள் என்ற விகிதத்தை அது கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 20 க்கும் மேற்பட்ட இறப்புக்களும், 6,000 புதிய நோய்தொற்றுக்களும் பதிவாகி வருகின்றன, மேலும் 600 க்கும் அதிகமானோர் வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த மாதம் பதிவான 10,000 க்கும் மேற்பட்ட நோய்தொற்றுக்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது போன்ற உச்சத்திலிருந்து சற்று குறைந்துள்ளது.
மொத்தத்தில், இதுவரை கிட்டத்தட்ட 1.7 மில்லியன் கோவிட் நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, அதாவது நியூசிலாந்தின் 5 மில்லியன் மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் உள்ளன. அங்கு 26,000 க்கும் அதிகமான மறுதொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மேலும் தடுப்பூசி மூலம் மக்கள் பெற்ற நோயெதிர்ப்பு சக்தி குறைந்து வருவதால், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
எவ்வாறாயினும், தொழிற் கட்சி தலைமையிலான அரசாங்கமும் ஊடகங்களும் உச்சபட்ச மனநிறைவை ஊக்குவித்து, நோய்தொற்றுக்கள் விரைவில் ‘நிர்வகிக்கக்கூடிய’ நிலைக்கு வரும் என்ற மாயையை ஊக்குவிக்கின்றன.
ஆகஸ்ட் 4 அன்று வெளியான New Zealand Herald தலையங்கம், பொது சுகாதாரக் கட்டுப்பாடுகள் ‘பல சூழ்நிலைகளில் அரிதாகவே காண முடிகின்றன’ மற்றும் ‘முகக்கவசப் பயன்பாடு, பூஸ்டர் தடுப்பூசிகள், பரிசோதனை, அறிக்கையிடல், அல்லது தனிமைப்படுத்துதல் போன்றவற்றில் கிட்டத்தட்ட முழுமையாக பரவவிடும் சூழல் தான் நிலவுகிறது என்று குறிப்பிட்டது. தொற்றுநோய் ‘முடியவில்லை’ என்பதை கவனித்த அதேவேளை, தலையங்கம் மாற்றத்தை வரவேற்றது, ‘நாம் சுயமாக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்’ என்று அது கூறியது.
ஆகஸ்ட் 9 அன்று, கோவிட்-19 தொடர்புபட்ட நடவடிக்கைக்கான நியூசிலாந்தின் அமைச்சர் ஆயிஷா வெரால், அரசாங்கம் தற்போதைய, முற்றிலும் போதாத, பொது சுகாதார அமைப்புக்களை பராமரிக்கும் என்று அறிவித்தார். மேலும், பள்ளிகளில் முகக்கவச கட்டுப்பாடுகளையும் பிற தணிப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றுவதற்கான நிபுணர்களின் அழைப்புக்களை மீண்டும் நிராகரிப்பதாகவும் அவர் கூறினார்.
‘சுகாதார அமைப்பு மீதான கணிசமான அழுத்தம்’ உள்ளபோதிலும், நியூசிலாந்து ‘சரியான திசையில் செல்கிறது, நோய்தொற்றுக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது’ என்று வெரால் அறிவித்தார்.
பிரதம மந்திரி ஜெசிந்தா ஆர்டெர்ன் ஊடகங்களிடம், பல உள்ளக அமைப்புக்களில் இன்னும் முகக்கவசங்கள் அணிய வேண்டும், மற்றும் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். எவ்வாறாயினும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்தால், அரசாங்கம் இந்த கட்டுப்பாடுகளை கூட நீக்கக்கூடும் என்பதை அவர் சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறு கூறினார்: “நிச்சயமாக நாங்கள் அவற்றை தொடர்வோம் என்று நம்புகிறோம்… அதனால் நமது சுகாதார அமைப்பின் மீதான தாக்கம் குறைவதைக் காணலாம், அதாவது அமைப்புக்களை கருத்தில் கொள்வதில் எங்களுக்கு இது ஒரு முக்கிய காரணியாகும்.”
நியூசிலாந்தின் கோவிட் இறப்பு எண்ணிக்கையானது வேண்டுமென்ற மற்றும் குற்றவியல் கொள்கை முடிவுகளின் விளைவாகும். பெரும்பாலான நோய்தொற்றுக்களுக்கு அரசாங்கம் ஒரு ஒழிப்புக் கொள்கையைக் கொண்டிருந்தது: அதாவது, பள்ளிகள் மற்றும் வணிகங்களை தற்காலிகமாக மூடுதல், அத்துடன் நாட்டை வைரஸிலிருந்து முற்றிலும் விடுவிப்பதற்காக எல்லை தனிமைப்படுத்தல் மற்றும் பிற நடவடிக்கைகளை அது பயன்படுத்தியது.
இருப்பினும், அக்டோபர் 4, 2021 அன்று, ஆர்டெர்ன் திடீரென்று கோவிட் நோயைக் கட்டுப்படுத்த முடியாது, ஒழிப்புக் கொள்கை கைவிடப்படும் என்று அறிவித்தார். தடுப்பூசிகள் கிடைப்பதால், இனி நோய் ஒழிப்பு உத்தி தேவையில்லை என்று ஆர்டெர்ன் தவறான முறையில் கூறினார், ஆனால் தடுப்பூசிகள் அனைத்து இறப்புக்களையும் கடுமையான நோய்களையும் தடுக்காது என்பதுடன், நோய்தொற்று பரவலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில், நியூசிலாந்து ஒட்டுமொத்த தொற்றுநோய் காலத்தில் சுமார் 30 இறப்புக்களை மட்டுமே பதிவு செய்துள்ளது.
பெருவணிகத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, அரசாங்கம் சீனாவைத் தவிர சர்வதேச அளவில் திணிக்கப்பட்ட அதே பாரிய தொற்றுக் கொள்கையை ஏற்றுக்கொண்டது, இது 20 மில்லியனுக்கும் அதிகமான இறப்புக்களுக்கு வழிவகுத்தது. இந்த ஆண்டு மிகுந்த தொற்றும் தன்மையுள்ள ஓமிக்ரோன் மாறுபாட்டால் நாடு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளும் பணியிடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பெருவணிகம் மற்றும் அரசாங்கத்தின் முகவர்களாக தொழிற்சங்கங்கள் செயல்படுகின்றன, அவை பள்ளிகளும் பணியிடங்களும் மீண்டும் திறக்கப்படுவதில் தவிர்க்க முடியாத பங்கைக் கொண்டிருந்தன.
தொற்றுநோய்க்கு முன்னர் ஏற்கனவே பணியாளர் பற்றாக்குறையுடனும் குறைந்த செயல்பாட்டுடனும் இருந்த மருத்துவமனைகள், தற்போது முன்னோடியில்லாத நெருக்கடியை எதிர்கொள்கின்றன, அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழிகின்றன, மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து கோவிட் நோயால் பாதிக்கப்படுகின்றனர். Herald செய்தியிதழ் ஆகஸ்ட் 3 அன்று இவ்வாறு செய்தி வெளியிட்டது: “ஒரு பெண் தனது சிறுநீரில் நனைந்த மருத்துவமனை படுக்கையில் 14 மணிநேரம் வரை கிடந்துள்ளார், மற்றொரு நோயாளி ஆக்லாந்து மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் எட்டு மணிநேரம் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.”
ஆயிரக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றன, பெரும்பாலும் நோயாளிகள் நாள்பட்ட வலியுடன் காத்திருக்கிறார்கள், அதிலும் சிலர் புற்று நோய் மற்றும் இதய நிலைமைகள் உட்பட கடுமையான சிரமத்தில் உள்ளனர். “8,000 க்கும் மேற்பட்ட ஆக்லாந்து பெண்கள் தற்போது மகளிர் மருத்துவ நிபுணரின் சந்திப்புக்காக காத்திருக்கின்றனர், மேலும் சிலர் பராமரிப்பிற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் காத்திருக்கின்றனர்” என்று ஜூலை 30 அன்று Stuff செய்தி ஊடகம் தெரிவித்தது.
இச்சூழ்நிலையில், கோவிட் நோயாளிகளும் அத்தியாவசிய மருத்துவ சேவையை இழக்க நேரிடலாம். மார்ச் முதல், கோவிட் நோயால் 87 பேர் தங்கள் வீடுகளில் வாரத்திற்கு சராசரியாக நான்கு பேர் வீதம் இறந்துள்ளனர் என்று NZ வானொலி தெரிவித்துள்ளது. இவர்களில் எத்தனை பேர் ஏதேனும் மருத்துவமனை சிகிச்சை பெற்றனர் என்பதையோ, அல்லது அவர்களுக்கு வைரஸ் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டதா இல்லையா என்பதையோ சுகாதார அமைச்சகம் தெரிவிக்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவினரான மாவோரி மற்றும் பசிபிக் தீவுவாசிகள் இந்த இறப்புக்களில் 37 சதவிகிதத்தை கொண்டுள்ளனர்.
இதற்கிடையில், ஒரு புதிய உலகளாவிய தொற்றுநோயாக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் குரங்கம்மை நோயை எதிர்கொள்ள நியூசிலாந்து முற்றிலும் தயாராக இல்லை. அங்கு இதுவரை, மூன்று நோய்தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது சமூகப் பரவல் இல்லை என்று அதிகாரிகள் உறுதிபடக் கூறினர். இருப்பினும், மிகச் சிலரே பரிசோதிக்கப்படுகிறார்கள், மேலும் நாட்டில் தடுப்பூசிகளும் இல்லை.
பர்னெட் அறக்கட்டளை (முன்னாள் எய்ட்ஸ் அறக்கட்டளை), பாலியல் சுகாதார சங்கம் மற்றும் ஆக்லாந்து பல்கலைக்கழக நிபுணர் பீட்டர் சாக்ஸ்டன் ஆகியோர் ஆகஸ்ட் 3 அன்று ஆர்டெர்னுக்கு ஒரு தடுப்பூசித் திட்டம் உட்பட உடனடி பதிலைக் கோரி கடிதம் எழுதியுள்ளனர். “குரங்கம்மை நோயை நிவர்த்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை நியாயப்படுத்த நாங்கள் ஒரு பரவலான வெடிப்புக்காக காத்திருக்க முடியாது” ஏனென்றால் அது “ஏற்கனவே நெருக்கடியிலுள்ள நமது சுகாதார அமைப்பை அது மேலும் மூழ்கடிக்கும்” என்று அவர்கள் கூறியுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, 10 சதவிகித நோயாளிகளுக்கு உள் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படுகிறது.
உலகளவில் 31,000 க்கும் மேற்பட்ட குரங்கம்மை நோய்தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. இது தற்போது ஓரினச்சேர்க்கையாளர்கள், மற்றும் இருபாலின உறவாளர்கள் மத்தியில் பரவலாகப் பரவி வந்தாலும், இந்த வைரஸ் பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல, மாறாக உடல் தொடர்பு, மேற்பரப்புகள், ஆடைகள் மற்றும் காற்றின் மூலமாக இது பரவுகிறது. உண்மை என்னவென்றால், நியூசிலாந்து உட்பட, சர்வதேச அளவில் அரசாங்கங்களும் பொது சுகாதார அதிகாரிகளும் இந்த நோயின் அபாயங்களை குறைத்து மதிப்பிட முற்படுவதால், அதன் தீவிரம் முற்றிலும் மூடிமறைக்கப்படுகிறது.
