உலகளாவிய குரங்கம்மை நோய்தொற்று வெடிப்பும் அதன் தாக்கங்களும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு அமைப்பு (UK Health Security Agency-UKHSA) மே 7, 2022 அன்று, நைஜீரியாவில் இருந்து திரும்பிய ஒரு பிரிட்டிஷ் குடிமகனுக்கு குரங்கம்மை நோய்தொற்று இருப்பதை முதன்முதலாக உறுதிசெய்ததில் இருந்து, ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஓசியானியாவின் பல நாடுகளில் இத்தொற்று விரைந்து பரவி சமூகத்தில் நூற்றுக்கணக்கில் அதிகரித்துள்ளது.

மே 21, 2022 ஆம் தேதி வரை, 12 நாடுகளில் 92 ஆய்வக உறுதிப்படுத்தப்பட்ட நோய்தொற்றுக்களும், 28 சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்களும் இருப்பதாக உலக சுகாதார அமைப்புக்கு (WHO) தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 24, 2022 தேதிக்குள், குரங்கம்மை நோயின் புவியியல் விஸ்தரிப்பு குறைந்தது 20 நோய்தொற்று இல்லாத நாடுகளுக்கு அதிகரித்து, குறைந்தது 300 உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகத்திற்கிடமான நோய்தொற்றுக்கள் உருவாகியுள்ளன. தற்போதைய தொற்றுநோய், துணை-சஹாரா ஆபிரிக்காவிற்கு வெளியே முன்னெப்போதும் பதிவு செய்யப்படாத வைரஸின் மிகப்பெரிய வெடிப்பாகும். அதிர்ஷ்டவசமாக, இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.

1970 ஆம் ஆண்டில் காங்கோ ஜனநாயகக் குடியரசில் ஒரு சிறுவனுக்கு முதல் மனித தொற்று பதிவானதில் இருந்து குரங்கம்மை வைரஸ் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்க பகுதிகளில் மட்டும் தான் பரவி வந்துள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டில் டென்மார்க்கின் கோபன்ஹேகனில் உள்ள வைராலஜிஸ்ட் ப்ரீபென் வான் மேக்னஸால் (Preben Von Magnus) ஆய்வக விலங்குகளாகப் பயன்படுத்தப்பட்ட மக்காக் குரங்குகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது.

பெரியம்மை நோயை உண்டாக்கும் வைரஸான வேரியோலா (variola) வைரஸை உள்ளடக்கிய நான்கு மனித எலும்பியல் வைரஸ்களில் ஒன்றான இரட்டை இழைகள் கொண்ட DNA குரங்கம்மை வைரஸானது, பெனின், கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கேபன், ஐவரி கோஸ்ட், லைபீரியா, நைஜீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் மற்றும் தெற்கு சூடான் ஆகிய 11 ஆபிரிக்க நாடுகளில் மட்டும் பரவி வந்தது.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற இந்த 2003 எலக்ட்ரான் நுண்ணோக்கிப் படம், 2003 புல்வெளி நாய் நோய்தொற்று வெடிப்புடன் தொடர்புடைய மனித தோலின் மாதிரியிலிருந்து பெறப்பட்ட முதிர்ந்த, நீள்வட்ட வடிவ குரங்கம்மை விரியன்களையும் (இடது), முதிர்ச்சியடையாத, கோள வடிவ விரியன்களையும் காட்டுகிறது. [AP Photo/Cynthia S. Goldsmith, Russell Regner/CDC] [AP Photo/Cynthia S. Goldsmith, Russell Regner/CDC]

கடந்த பல மாதங்களில், கேமரூன், மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் நைஜீரியாவில் 10 க்கும் குறைவான இறப்புக்கள் உட்பட, 77 நோய்தொற்றுக்கள் பற்றி உலக சுகாதார அமைப்பு ஆவணப்படுத்தியுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை, 57 இறப்புக்கள் உட்பட 1,238 குரங்கம்மை நோய்தொற்றுக்கள் பரவியிருந்தன, அங்கு குரங்கம்மை வைரஸின் மிகவும் கொடிய காங்கோ பள்ளத்தாக்கு பொது வம்சாவளி (மரபணு வம்சாவளியை அடிப்படையாகக் கொண்ட உட்பிரிவு) வைரஸ் குழுக்கள் உள்ளன. தொற்று இல்லாத நாடுகளில் தற்போது பரவி வரும் நோய்தொற்றுக்களானது, உள்ளூர் பகுதிகளில் பொதுவாக மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவுவது போலல்லாமல், பாதிக்கப்பட்ட காட்டு கொறித்துண்ணிகள் மற்றும் விலங்குகளிடமிருந்து மக்களிடையே பரவுகின்றன.

மே 25, புதன்கிழமை நிலவரப்படி, பின்வரும் நாடுகள் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட குரங்கம்மை நோய்தொற்றுக்களை பதிவு செய்துள்ளன: ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா (23), செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல் (37), ஸ்காட்லாந்து, சுலோவேனியா, ஸ்பெயின் (101), சுவீடன், சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), இங்கிலாந்து (57) மற்றும் அமெரிக்கா (7). ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கண்டறியப்பட்ட நோய்தொற்று மேற்கு ஆபிரிக்காவுக்கு பயணம் செய்த ஒரு பெண்ணிடம் இருந்து பரவியதாகும்.

ஆர்ஜென்டினாவில் ஒரு சந்தேகத்திற்கிடமான நோய்தொற்று உள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தானின் தேசிய சுகாதார நிறுவனம், அங்கு இரண்டு குரங்கம்மை நோய்தொற்றுக்கள் இருப்பதாக எக்னாமிஸ்ட் பத்திரிகை குறிப்பிட்டாலும், நாட்டில் குரங்கம்மை நோயால் எந்த பாதிப்பும் இல்லை என தெளிவுபடுத்தியது. அங்கு சந்தேகத்திற்கிடமான நோய்தொற்று உள்ளதா என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், சுகாதார அதிகாரிகள் சுகாதார ஆலோசனைகளை வழங்கினர்.

மே 19, 2022 அன்று, பாதிக்கப்பட்ட நோயாளியிடமிருந்து குரங்கம்மை வைரஸின் முதல் பகுதி வரிசையை போர்ச்சுகல் வெளியிட்டது, அடுத்த நாள் பெல்ஜியம் முழு வரிசையையும் வெளியிட்டது. தோல் புண்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட வைரஸ் DNA இன் பகுப்பாய்வின் அடிப்படையில் பார்த்தால், தற்போதைய தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ், நைஜீரியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நோய்தொற்றுக்களுடன் இணைக்கப்பட்ட இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் இஸ்ரேலில் இருந்து 2018 இல் வரிசைப்படுத்தப்பட்ட வைரஸின் மரபணுவை ஒத்ததாகத் தெரிகிறது.

இந்த வைரஸ் மேற்கு ஆபிரிக்க வம்சாவளி வைரஸ் குழுவை சேர்ந்தது என்பதையும் இந்த பகுப்பாய்வு உறுதிப்படுத்துகிறது, பத்து சதவிகிதம் இறப்பு விகிதத்தைக் கொண்ட காங்கோ பள்ளத்தாக்கின் மிகுந்த வீரியமுள்ள வம்சாவளி வைரஸ் குழுவுடன் ஒப்பிடுகையில், இது ஒரு சதவிகித அளவிற்கு மிகக் குறைவான இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.

New Scientist இதழ் இந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கை, “இந்த வைரஸிடம் மனிதர்களில் அதிகமாகப் பரவக்கூடிய மாற்றங்கள் ஏதேனும் உள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, அதாவது தற்போதைய வெடிப்பு ஏன் மிகவும் பரவலாக உள்ளது மற்றும் குரங்குகளில் மட்டும் வைரஸ் பரவும் மத்திய மற்றும் மேற்கு ஆபிரிக்காவிற்கு வெளியே இவ்வளவு அதிக வைரஸ் பரவல் ஏன் நிகழ்ந்தது என்பதை இது விளக்கும். ஆனால், குரங்கம்மை வைரஸ் ஒரு பெரிய சிக்கலான மரபணுவைக் கொண்டிருப்பதால், இந்த விபரங்களை அறிய சிறிது காலம் பிடிக்கலாம்” என்று கூறியது.

SARS-CoV-2 இன் 30,000 RNA எழுத்துக்களுடன் ஒப்பிடுகையில், குரங்கம்மை வைரஸ் மரபணு 200,000 DNA எழுத்துக்கள் நீளமானதாகும்.

உலகளாவிய நோய்தொற்று இடர்கால தயார்நிலைக்கான (Global Infectious Hazard Preparedness) உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் சில்வி ப்ரியன்ட் (Sylvie Briand), சமீபத்தில் உலக சுகாதார சபையில், டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இரண்டாவது முறையாக WHO பொது இயக்குநராவதற்கு வாக்களித்து பேசுகையில், இந்த வைரஸ் பிறழ்வு கண்டிருக்க வாய்ப்பில்லை என்று பத்திரிகைகளுக்கு உறுதியளித்தார். அதற்கு மாறாக, தற்போதைய பரிமாற்ற இயக்கி ‘மனித நடத்தையுடன்’ இணைக்கப்பட்டுள்ளது. வேறு வார்த்தைகளில் கூறினால், மக்கள் மிகவும் பரவலாக பழகுவதற்கு அனுமதித்த அனைத்து சமூக கட்டுப்பாடுகளையும் முற்றிலும் நீக்குவது குரங்கம்மை தொற்று பரவ பெரிதும் பங்களித்தது.

அமெரிக்க தொற்றுநோயியல் நிபுணரும் மற்றும் London School of Hygiene and Tropical Medicine இன் பேராசிரியருமான டேவிட் ஹெய்மன் (David Heymann), இங்கிலாந்து அல்லது ஐரோப்பாவில் குரங்கம்மை வைரஸ் பல ஆண்டுகளாக குறைந்த அளவில் இருந்திருக்கலாம் என ஊகித்தார்.

அவர், “கடந்த சில ஆண்டுகளில் உலகில் என்ன நடந்தது என்று நீங்கள் பார்த்தால், மேலும் இப்போது என்ன நடக்கிறது என்று நீங்கள் பார்த்தால், இந்த வைரஸ் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னரே இங்கிலாந்தில் நுழைந்திருந்தா என்று நீங்கள் எளிதாக ஆச்சரியப்படலாம், இது கண்காணிப்பு திரைக்கு கீழே, மிக மெதுவாக பரவுகிறது. அதன் பின்னர் திடீரென்று அனைத்தும் திறக்கப்பட்டது மற்றும் மக்கள் பயணம் செய்யவும், கூட்டமாக சந்திக்கவும் தொடங்கினர்” என்று கூறினார்.

‘முன்னணி தத்துவம்’ ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட பெரும் விருந்துக் கூட்டங்களினால் ஏற்பட்ட நோய்தொற்று வெடிப்புடன் தொடர்புடையது, அதாவது அங்கு மக்களிடையேயான நெருக்கமான தொடர்பு தற்போதைய நோய்தொற்று பரவலுக்கு வழிவகுத்தது என்று ஹெய்மன் விளக்கினார். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளும் ஆண்களாக இருப்பதை பலர் அவதானித்துள்ளனர். இருப்பினும், குரங்கம்மை தொற்று பாலியல் ரீதியாக பரவும் நோயாக அங்கீகரிக்கப்படவில்லை, அதாவது பாதிக்கப்பட்ட நபர்களின் உடைகள் அல்லது படுக்கைகள் போன்றவற்றை பயன்படுத்துவது உட்பட, அவர்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருப்பதன் மூலம் இந்த தொற்று பரவலாம்.

குரங்கம்மை வைரஸ் “ஓரினச்சேர்க்கையாளர்களிடம் மட்டுமே பரவுகிறது” என்று தீவிர பழமைவாத மற்றும் பிற்போக்குவாத சமூக மற்றும் பொருளாதார ஆராய்ச்சிக்கான பிரவுன்ஸ்டோன் நிறுவனம் எழுதுவதை இது தடுக்கவில்லை. இளம் மற்றும் ஆரோக்கியமான மக்கள் மீதான மற்றும் மக்கள்தொகையின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கத்தை ஊக்குவிக்கக்கூடிய அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு அழைப்பு விடுத்துள்ள, கிரேட் பாரிங்டன் பிரகடனத்தை வெளியிட்ட குழுவுடன் பிரவுன்ஸ்டோன் நிறுவனம் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது. இத்தகைய அறிக்கைகள் வெறுக்கத்தக்கவை மற்றும் முற்றிலும் ஆதாரமற்றவையாகும், மேலும் அரசியல் நோக்கங்களுக்காக ஒரு குறிப்பிட்ட குழுவை களங்கப்படுத்த முயற்சிக்கின்றன.

இதற்கிடையில், ஜனாதிபதி ஜோ பைடென், பெரியம்மை தடுப்பூசிகள் கடுமையான நோய்தொற்றுக்களைத் தடுக்கும் திறன் கொண்டவை என நிரூபிக்கப்பட்டுள்ளதால், மேலதிக தீவிர நடவடிக்கைகள் எதுவும் தேவையில்லை என்று சுட்டிக்காட்டி உலகளாவிய குரங்கம்மை வெடிப்பைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, வாரத்தின் முற்பகுதியில் டோக்கியோவில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் 21 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்களா என்ற கேட்கப்பட்டது. அதற்கு அவர், “இல்லை, நான் அப்படி நினைக்கவில்லை. ஏற்கனவே உள்ள கோவிட்-19 நோய்தொற்று குறித்து கவலைப்படும் அளவிற்கு இந்த நோய்தொற்றுக்கள் அதிகரிக்காது என்றே நான் நினைக்கிறேன், ஏனென்றால் பெரியம்மை தடுப்பூசிகள் இந்நோயைத் தடுக்க நன்கு வேலை செய்கிறது. என்றாலும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என தனிநபர்கள் தான் அதைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் மழுப்பலாகப் பதில் கூறினார்.

பெரியம்மைக்கு காரணமான வேரியோலா வைரஸூடன் இது ஒத்திருப்பதால், பெரியம்மைக்கு எதிரான தடுப்பூசிகள், ஆபிரிக்காவின் அவதானிப்புத் தரவுகளின் அடிப்படையில், கடுமையான குரங்கம்மை தொற்றுக்களுக்கு எதிராக சுமார் 85 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும். 1980 ஆம் ஆண்டில் பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டதால், மக்கள்தொகையில் கணிசமான விகிதத்தினரிடையே நோயெதிர்ப்பிகள் இல்லை. காரணம், 40 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தை பருவத்தில் பெரியம்மை தடுப்பூசியைப் பெற்றவர்கள் தங்கள் முந்தைய நோய் எதிர்ப்பு சக்தியில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துவிட்டதாகக் கருதலாம்.

நாடுகள் தங்கள் பெரியம்மை தடுப்பூசி இருப்புக்களை மறுமதிப்பீடு செய்யத் தொடங்கும் நிலையில், அமெரிக்க அவசரகால கையிருப்பு, அசல் தடுப்பூசியின் 100 மில்லியன் அளவுகளை கொண்டுள்ளது. இருப்பினும், இந்த தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் மற்றும் நோயெதிர்ப்பு-சமரசம் கொண்ட நபர்களுக்கு அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் அபாயங்கள் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால், குரங்கம்மை வைரஸை முற்றிலும் ஒழிக்கும் வகையில் அந்த நோயாளிகளுடன் உறுதியாக தொடர்பில் இருந்தவர்களுக்கு தடுப்பூசிகள் வளைய தடுப்பூசி அணுகுமுறையில் நியாயமான முறையில் பயன்படுத்தப்பட வேண்டும்.

2010 ஆம் ஆண்டு முதல், டேனிஷ் மருந்து நிறுவனமான பவேரியன் நோர்டிக், உறைந்த திரவ நிலை MVA-BN பெரியம்மை மற்றும் குரங்கம்மை தடுப்பூசியை நேரடியான, வலுவிழக்கச் செய்யக்கூடிய தடுப்பூசி வைரஸ் (வேரியோலா மற்றும் பசுவம்மை வைரஸ்களின் கலப்பினத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கருதப்படுகிறது) அடிப்படையில் தயாரித்து வருகிறது. 2019 ஆம் ஆண்டில், பெரியம்மை மற்றும் குரங்கம்மை நோய்களை தடுப்பதற்காக, Jynneos என்ற வியாபார குறியீட்டுப் பெயரில் தடுப்பூசிக்கு FDA ஒப்புதல் அளித்தது.

மே 18, 2022 அன்று, அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் ஒரு பிரிவான BARDA, 2017 இல் வழங்கப்பட்ட பத்து வருட ஒப்பந்தத்தின் கீழ் முதல் தெரிவுகளை (110 மில்லியன் அளவுகளை) பயன்படுத்தியதாக நிறுவனம் கூறியது. CDC துணை இயக்குநர் Dr. Jennifer McQuiston இன் கருத்துப்படி, தற்போது 1,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசி அளவுகள் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளன. “வரவிருக்கும் வாரங்களில் அந்த நிலை மிக விரைவாக அதிகரிக்கும் என்று நாங்கள் எதிர்பார்ப்பதால், நிறுவனம் எங்களுக்கு அதிக அளவு தடுப்பூசிகளை வழங்குகிறது” என்று அவர் நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.

குரங்கம்மை வைரஸ், தொடர்பு மற்றும் சுவாசத் துளிகள் மூலம் (காற்றுவழி பரவக்கூடிய தத்துவார்த்த ரீதியிலான அபாயம் உட்பட) பரவுவது பற்றி குறிப்பிட்டு, முன்னெப்போதும் நிகழாத வகையில் உலகளவில் தொற்றுநோய் இப்போது பரவியிருந்தாலும், அது மட்டுப்படுத்தக்கூடியது மற்றும் விரைவாக கட்டுப்படுத்தக்கூடியது என்று சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளனர்.

டாக்டர். ஸ்காட் காட்லீப் (Dr. Scott Gottlieb), CNBC இல் பேசுகையில், “கோவிட்-19 தொற்றுநோயை நாங்கள் பொறுத்துக்கொண்டது போல் இதுவும் ஒரு கட்டுப்பாடற்ற நோய் பரவலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது இது சமூகத்தில் வந்திருக்க வாய்ப்பு உள்ளது, ஒருவேளை உண்மையில் நாம் இப்போது அளவிடுவதை விட இது மிகவும் பரவலாக இருந்தால், அதை அகற்றுவது கடினம்” என்று மிக வெளிப்படையாகக் கூறினார்.

ஆயினும்கூட, குரங்கம்மை வைரஸின் தற்போதைய வெடிப்பின் தாக்கங்கள் என்ன என்று சிலர் கேட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலரும் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியருமான, ஜோன் வைடல், உலகளவில் பரவியுள்ள கோவிட் மற்றும் எச்.ஐ.வி. வைரஸ்களுடன், பல விலங்கு தொற்றுநோய்களும் இணையாக நிகழ்வதைக் கவனித்தார்.

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் உலகப் பன்றிகளை பரவலாக தொடர்ந்து பாதிக்கிறது. பறவைக் காய்ச்சலின் பல வெடிப்புகள் நூற்றுக்கணக்கான மில்லியன் கோழிகளை அழிக்க வழிவகுத்தன. ஆஸ்திரேலியாவில் கடல்வாழ் உயிரினங்களிடையே பூஞ்சை நோய் காணப்படுகிறது. “பிற உயிரினங்களில் பரவும் ஆயிரக்கணக்கான ஆபத்தான வைரஸ்களுடன் நாம் சிரமத்துடன் வாழ்கிறோம், ஆனால் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இன்று மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்கள் பற்றி 70 ஆண்டுகளுக்கு முன்னர் எதுவும் அறியப்படவில்லை. புதிய நோய்க்கிருமிகள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு அடிக்கடி பரவுவது மட்டுமல்லாமல், நோய்தொற்றுக்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கை உலகளாவிய மற்றும் உள்ளூர் சூழலில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.

குரங்கம்மை நோயின் உலகளாவிய திடீர் வெடிப்பு இந்த கவலைகளின் புறநிலை சரிபார்ப்பாகும். இது கோவிட்-19 ஐ விட குறைவான ஆபத்துள்ளது மற்றும் மிக மெதுவாக பரவக்கூடியது என்றாலும், பெருநிறுவன தன்னலக்குழுக்கள் கவனத்தில் கொள்ளாத உலகமயமாக்கலின் தாக்கம் பற்றிய எச்சரிக்கைக் குறிப்பாக இது பார்க்கப்பட வேண்டும்.

வைடல், “கோவிட், மற்றும் இப்போது குரங்கம்மை ஆகிய நோய்களிலிருந்து நாம் பெற்றுள்ள பெரும் படிப்பினை, பல தொற்றுநோய்கள் அதன் வேர்களை சூழல் மாற்றத்தில் கொண்டுள்ளன என்பதே. இதன் பொருள், கிரகம் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியமானது விலங்குகளின் ஆரோக்கியத்துடன் ஒருங்கே கவனிக்கப்பட வேண்டும். மேலும் இதன் பொருள், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும், முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது சுகாதாரத்தில் முதலீடு செய்யப்பட வேண்டும், காடுகளை வெட்டுவதை நிறுத்த வேண்டும், காலநிலை மாற்றத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும், மற்றும் தீவிர விவசாயத்தை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்பதாகும். ஆரோக்கியம் குறித்து ஒரு ‘ஒரே ஆரோக்கிய’ கிரக அணுகுமுறை தான் சிறந்தது என்பதுடன், அதுவே நமது ஒரே சாத்தியமுள்ள நம்பிக்கையாகும்.” என்று எச்சரிக்கிறார். மனித நாகரிகத்திற்கான இவற்றின் ஈர்ப்பு விசை பற்றி விஞ்ஞானிகளால் பல தசாப்தங்களாக போதுமான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள போதிலும், முதலாளித்துவம் தீர்வுக்கான இந்த வடிவமைப்பில் துல்லியமாக தீர்வு காண முடியாது.