மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
இலங்கையில், இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க) இந்தியாவின் தமிழ்நாடு மாநில ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) தலைவரான குப்புசாமி அண்ணாமலையை தமது மே தின கூட்டத்திற்கு அழைத்திருந்தது. நுவரெலியாவில் நடைபெற்ற இ.தொ.காவின் மே தினக் கூட்டத்தில் இந்தியாவின் இந்து மேலாதிக்க அரசாங்கத்தின் சிறப்புத் தூதராக அண்ணாமலை கலந்துகொண்டார்.
இ.தொ.கா.வின் மே தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பின்னர், அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) தலைவர்களை சந்திக்க வட இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்திற்குச் சென்றார். இலங்கையின் மில்லியன் கணக்கான சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் மீதான அதிகரித்த தாக்குதல்கள் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அண்ணாமலையின் விஜயம் நடந்துள்ளது.
இ.தொ.க. தலைவர்கள் இதனை மறைக்க முயற்சிக்கவில்லை. ஆனால், இந்தியாவின் பா.ஐ.க. பிரதம மந்திரி நரேந்திர மோடியுடனான தங்கள் உறவுகளை வெளிப்படுத்தினர். “’அண்ணாமலை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கட்சியான பா.ஐ.க.வின் பிரதிநிதியாகத்தான் இலங்கை வந்திருந்தார். அவர்களுடன் நற்புறவு பேணுவதன் வெளிப்பாடாகத்தான் நாம் அண்ணாமலையை இங்கு அழைத்தோம்” என்று இ.தொ.காவின் துணைத் தலைவர் பாரத் அருள்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இ.தொ.கா.வின் பி.ஜே.பி.க்கான அழைப்பு, இ.தொ.கா.வின் பிற்போக்கு அரசியலையும், இ.தொ.கா போன்ற தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பங்கையும் அம்பலப்படுத்துகிறது. இது இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) சரியான அரசியல் நிலைப்பாடுகளை உறுதிப்படுத்துகிறது. ஆளும் உயரடுக்கின் தொழிலாளர்கள் மீதான கொள்ளையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டல் மற்றும் அமைப்பு, தொழிற்சங்கங்களிலிருந்து சுயாதீனமாக ஒழுங்கமைக்கப்பட்ட, தேசிய எல்லைகளைக் கடந்து சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்களை ஒன்றிணைத்தல் ஆகியவை அவசியமான தேவைகளாகும்.
170 ஆண்டுகளாக சிறு குடிசைகளில் வறுமைக் கூலியில் வாழும் தமிழ் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவவே அண்ணாமலை இலங்கைக்கு விஜயம் செய்ததாகக் கூறுவது ஒரு அப்பட்டமான மோசடியாகும். அண்ணாமலை ஒரு முன்னாள் இந்திய போலீஸ் சேவையில் இருந்த (ஐபிஎஸ்) உயர் அதிகாரியாகவும் மற்றும் தற்போது தமிழக பா.ஜ.க. வின் ஒரு தலைவராகவும் உள்ளார். அதேவேளை, இந்தியாவில் இலங்கைத் தமிழ் அகதிகள் இழிந்த முகாம்களில் தடுத்து வைக்கப்படுவதை பா.ஜ.க. தொடர்ந்தும் மேற்பார்வையிடுகிறது. மில்லியன் கணக்கான இறப்புகளுக்கு வழிவகுக்கும் COVID-19 இலிருந்து தொழிலாளர்களைப் பாதுகாக்கும் விஞ்ஞான சுகாதாரக் கொள்கை முயற்சிகளையும் பா.ஜ.க. எதிர்க்கிறது. மேலும் சீனாவிற்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பினாமி இராணுவமாகவும் பா.ஜ.க. செயல்படுகிறது.
பிஜேபி அரசாங்கம், இந்தியத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டங்களை, வேலைநிறுத்தங்களை மிருகத்தனமாக நசுக்கி வருவதோடு, இந்திய முஸ்லீம்களைக் குறிவைத்து அப்பட்டமாக மேற்கொண்டுவரும் சட்ட ரீதியான பாகுபாடு கொள்கைகளையும் பின்பற்றுகிறது.
இ.தொ.கா. தனது நிகழ்வுகளுக்கு பி.ஜே.பி அதிகாரிகளை அழைக்கிறது ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போலவே, அதுவும் இலங்கையில் தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் எழுச்சியால் தத்தளித்து பீதியடைந்துள்ளது. இந்த எழுச்சி இயக்கத்தின் கழுத்தை நெரிக்கவும், இராஜபக்ஷ ஆட்சியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு கீழ் தொழிலாள வர்க்கத்தை கட்டிவைக்கவும் இ.தொ.கா உறுதியாக உள்ளது.
மே தினத்திற்காக நுவரெலியாவில் அண்ணாமலையை வரவேற்ற சில தினங்களுக்கு பின்னர், 1983-2009 இனவாதப் போரின் முடிவில் தமிழ்ப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்காக போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ஜனாதிபதி கோட்டபாய இராஜபக்ஷவுக்கு இ.தொ.கா. வழங்கிய ஆதரவைப் பற்றி அருள்சாமி பெருமையடித்துக் கொண்டார். “கோட்டபாய இராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு எங்களது மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஆதரவு கொடுத்தார். அத்தோடு, தொண்டமான், 2005 ல் மகிந்த இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு முழுமையான ஆதரவை வழங்கியிருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை கோட்டபாய அரசாங்கத்துக்கு நாம் ஆதரவு வழங்கினோம்” என்று அருள்சாமி பெருமிதம் கொண்டார்:
இ.தொ.கா. உத்தியோகபூர்வமாக தொழிலாள வர்க்கத்தை அதன் கட்சியின் பெயரில் குறிப்பிடும் அதே வேளையில், அடிப்படையில் இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் கருங்காலி தொழிற்சங்கமாக இயங்கிவரும் ஒரு முதலாளித்துவ அரசியல் கட்சியாகவும் இருக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தில் தேயிலை ஏற்றுமதியின் மையப் பங்கைக் கருத்தில் கொண்டு இ.தொ.கா ஆற்றும் பங்கு, தொழிலாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்திற்கு அதிக தேயிலை சேகரிப்பதை உறுதி செய்வதாகும். இ.தொ.கா. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுக்கும் இழிவான வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், இன்று இலங்கையில் உள்ள அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களைப் போலவே அதுவும் ஆழமாக மதிப்பிழந்துள்ளது.
இலங்கையில் வெடித்துள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் வர்க்கப் போராட்டத்தின் உலகளாவிய எழுச்சியின் ஒரு பாகமாகும். பேரழிவை விளைவிக்கும் COVID-19 தொற்றுநோயை அதிகாரப்பூர்வமாக தவறாகக் கையாண்டதன் காரணமாக பல்லாயிரக்கணக்கான இறப்புகள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் முறிவு, ஏகாதிபத்திய போரின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச ரீதியாக பொருட்களின் விலை உயர்வு ஆகியவை உலகளவில் பாரிய கோபத்தை தூண்டி வருகின்றன.
இந்திய துணைக்கண்டம் முழுவதும், அரசியல் எதிர்ப்புகளும் வேலைநிறுத்தங்களும் அதிகரித்து வருகின்றன. பிரதம மந்திரி இம்ரான் கானை அமெரிக்க ஆதரவுடன் நீக்கியதற்கு மத்தியில் பாக்கிஸ்தானில் போராட்டங்கள் தொடரும் அதே வேளையில், மோடியின் பா.ஐ.க. அரசாங்கம், விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் இந்தியாவில் நூற்றுக்கணக்கான மில்லியன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள், முஸ்லீம்-விரோத சட்ட நடவடிக்கைகளுக்கு எதிரான பாரிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது.
இ.தொ.காவின் பா.ஐ.க.வுடனான கூட்டு, தோட்டத் தொழிலாளர்கள் உட்பட இலங்கையில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் தொழிலாளர்களுக்கும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கும் ஒரு எச்சரிக்கையாகும். முன்னாள் உயர் பொலிஸ் அதிகாரியும், தற்போது பா.ஐ.கவின் ஒரு தலைவருமான ஒருவரை அழைக்கும் இ.தொ.கா.வின் முடிவு, இலங்கை தொழிலாளர்களின் போராட்டங்களை இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்களுடன் ஐக்கியப்படுத்த முயலவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. மாறாக, இந்த தொழிற்சங்கம் மிகவும் பிற்போக்கான அரசியல் சக்திகளுடன் இணைந்து தொழிலாள வர்க்கத்தை தேசிய மற்றும் இன அடிப்படையில் பிளவுபடுத்த முயற்சிக்கிறது.
பா.ஜ.க. குறித்து கடுமையான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டும். இராஜபக்ஷ கும்பலுக்கு எதிரான இலங்கைத் தொழிலாளர்களின் அதிகரித்து வரும் போர்க்குணமிக்க மற்றும் அரசியல்மயமான போராட்டத்தை மோடி அரசாங்கம் மிகவும் பதட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தொழிலாள வர்க்கத்தில் ஒரு கிளர்ச்சி இயக்கத்தை எதிர்கொள்ள பா.ஐ.க. பீதியடைவதால், காலவரையின்றி அத்தகைய போராட்டத்தை அது பொறுத்துக் கொள்ளாது.
ஜூலை 1987ல், ராஜீவ் காந்தியின் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசாங்கம், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, பின்னர் வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை எவ்வாறு படுகொலை செய்ய உதவியது என்பதை இலங்கையில் உள்ள தொழிலாளர்கள் ஒருபோதும் மறக்கக்கூடாது.
'அமைதிப் படைகள்' என்ற பேரில், இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடபகுதிக்கு சில அற்ப நிவாரணப் பொருட்களுடன் இந்தியப் படைகள் வந்து இறங்கின. இருந்தபோதிலும், அவர்கள் சிறிது காலத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவிக்கத் தொடங்கினர். அதுவரை, வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் தேசியவாத குழுக்களுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வந்த இலங்கை இராணுவம், தெற்கில் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அனுப்பப்பட்டது. அங்கு 60,000க்கும் மேற்பட்ட சிங்கள மக்களை அவர்கள் படுகொலை செய்தனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போலவே இ.தொ.கா.வும் இலங்கையில் ஒரு புதிய இந்தியத் தலையீட்டிற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்கிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. குறிப்பிடத்தக்க வகையில், 1983 இல் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ்-சிறுபான்மை மக்களுக்கு எதிரான இனவாத யுத்தத்தை ஆதரித்த இ.தொ.கா., 1987 இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும் ஆதரித்தது. மேலும், 1983-2009 இனவாதப் போரின் போது தோட்டத் தொழிலாளர் இளைஞர்கள் மீதான அரச ஒடுக்குமுறையில் அது நேரடியாக ஈடுபட்டது.
பிராந்தியம் முழுவதும் முதலாளித்துவ அரசாங்கங்களால் திணிக்கப்பட்டுள்ள பசி, பட்டினி, பாரிய தொற்றுநோய்கள் மற்றும் போர் அச்சுறுத்தலுக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒன்றிணைப்பதுதான், இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் முக்கிய கேள்வியாகும். இதற்கு இ.தொ.க. போன்ற முதலாளித்துவ அமைப்புகளுடன் முறித்துக் கொண்டு, சுயாதீனமான சாமானியக் குழுக்களைக் கட்டியெழுப்புதல் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் அனைத்து இன மற்றும் மதப் பின்னணியில் உள்ள இலங்கை மற்றும் இந்தியத் தொழிலாளர்களை ஒன்றிணைத்தல் ஆகியவை, அவசியமானதாகும்.
1950 களின் முற்பகுதியில் இருந்து சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா., அதன் தலைமையகத்தை கொழும்பு 7ல், பெரும் செல்வந்தர்கள் நிறைந்த பகுதியில் அமைத்துள்ளது. இவரது கொள்ளுப் பேரன் ஜீவன் தொண்டமான் தற்போதைய இ.தொ.கா.வின் பொதுச் செயலாளராக உள்ளார். இ.தொ.கா தலைமையானது இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் பெரும் சொத்துக்களை குவித்த தொண்டமானின் வாரிசுகளால் நியமிக்கப்படுகிறது.
ஏனைய தோட்ட தொழிற்சங்கங்களான, பி. திகாம்பரத்தின் தேசிய தொழிலாளர் சங்கம், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜேவிபி) இணைந்த அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவையும் சிறந்ததாக இல்லை. இவர்கள் அனைவரும், அரசின் தொழில்துறை அமலாக்கக்காரர்கள், முடிந்தவரை ஏற்றுமதி டாலர்களைப் பெற முயல்கிறார்கள், அதே நேரத்தில் தொழிலாளர்களை மிகக் குறைந்த ஊதியத்துடன் கைவிட்டுவிடுகிறார்கள். அத்தோடு, இராஜபக்ஷவின் வீழ்ச்சி, தமது சொந்தச் சலுகைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் என்பதையிட்டு அவர்கள் பீதியடைந்துள்ளனர்.
இலங்கை தொழிலாளர்களின் வர்க்க உறவுகள் இந்திய முதலாளித்துவ பா.ஐ.க. அல்ல, மாறாக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் உள்ள மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் ஆவர். சோசலிசத்திற்கான போராட்டத்தின் அடிப்படையில், ஏகாதிபத்திய யுத்தம் மற்றும் தொழிலாளர்களை முதலாளித்துவம் சூறையாடுவதை எதிர்த்து, சோசலிச சமத்துவக் கட்சியால் ஆதரிக்கப்படும் இலங்கை பெருந்தோட்ட நடவடிக்கைக் குழுக்கள் போன்ற அமைப்புகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், சீரழிந்துள்ள தேசிய அடிப்படையிலான அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும்.
மேலும் படிக்க
- இலங்கையில் அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள் எதிர்கொள்ளும் தீர்க்கமான அரசியல் பிரச்சினைகள்
- 2022 மே தினத்தின் சவால்: முதலாளித்துவம், தேசிய பேரினவாதம் மற்றும் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்திற்காக!
- பாரிய அரசாங்க எதிர்ப்பு எழுச்சியின் மத்தியில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன?