இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
சாமிமலை ஓல்டன் தோட்டத்தில் 22 தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இரண்டு இளைஞர்களுக்கு எதிரான வழக்கு ஜனவரி 27 அன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு மீண்டும் மே 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தொழிலாளர்களால் தோட்டத்தில் 'பொதுச் சொத்துக்களுக்கு சேதம்' ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுவது குறித்து சட்டமா அதிபரால் அறிக்கை சமர்ப்பிக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறு கம்பனியின் வழக்கறிஞர்கள் கோரியதோடு இது வழக்கு விசாரணைக்கு இன்றியமையாதது என்று வலியுறுத்தினர்.
இந்த தொழிலாளர்களும் இளைஞர்களும் கம்பனி மற்றும் பொலிசும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் (இ.தொ.கா.) ஒத்துழைப்புடன் மேற்கொண்ட சதிக்கு பலியாகியுள்ளனர். கடந்த பெப்ரவரி 17 அன்று தோட்ட முகாமையாளர் மற்றும் உதவி முகாமையாளரை உடல் ரீதியாக தாக்கியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று கூறுவதுடன் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுக்கின்றனர்.
இ.தொ.கா. வழங்கிய பட்டியலின்படியே பொலிசார் தொழிலாளர்களை கைது செய்துள்ளனர். அதன் உறுப்பினர்களுக்கு எதிரான இந்த இழிந்த நடவடிக்கை, இ.தொ.கா. கம்பனி மற்றும் அரசின் கருவியாகச் செயல்படுவதைக் காட்டுகிறது.
தொழிலாளர் தேசிய சங்கம் (NUW) மற்றும் மலையக மக்கள் முன்னணி (ம.ம.மு.) ஆகியவையும் இதே பாத்திரத்தை வகிக்கின்றன. அவர்கள் கொடூர சதியை மௌனமாக ஆதரித்ததுடன் தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யவில்லை. நாட்டிலும் சர்வதேச அளவிலும் ஏனைய தொழிற்சங்கங்களைப் போன்றே பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் செயற்படுகின்றன.
இ.தொ.கா. தலைவர் ஜீவன் தொண்டமான் தற்போதைய நிர்வாகத்தில் இராஜாங்க அமைச்சராக உள்ளார். ஏனைய தொழிற்சங்கத் தலைவர்களும் முந்தைய நிர்வாகத்தின் போது அமைச்சர்களாக இருந்து சலுகைகளைப் பெற்ற வரலாற்றைக் கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி 18 முதல் மார்ச் 3 வரை பொலிசார் 'சந்தேக நபர்களை' குழுக்களாக கைது செய்யத் தொடங்கினர். கைது செய்யப்பட்டவர்கள் நீதவான் முன்னிலையில் நிறுத்தப்படுவதற்கு முன்னர் மார்ச் 10 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். கடுமையான நிபந்தனைகளுடன் அன்று அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிறது. அவர்கள் மூன்று முறை நீதாவான் முன் நிற்க அழைக்கப்பட்டனர். எனினும், அவர்கள் மீது பொலிசார் முறையான குற்றச்சாட்டுகள் எதையும் பதிவு செய்யவில்லை. கம்பனியும் பொலிசும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து தங்கள் சதியை தொடர்வதை இந்த தாமதமே உறுதி செய்கிறது.
கம்பனியும் பொலிசும் இப்போது 'பொது சொத்துக்களை' சேதப்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடர முயல்கின்றன. அதாவது முகாமையாளரின் பங்களாவை சேதப்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றம்சாட்டி தொழிலாளர்களை கடுமையாக தண்டிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த வருடம் மார்ச் 22 அன்று, ஓல்டன் தோட்டத்தின் கட்டுப்பாட்டிலான ஹொரண பெருந்தோட்ட நிறுவனம், நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் உட்பட 38 தொழிலாளர்களை எந்த விசாரணையும் இன்றி உடனடியாக வேலை நீக்கம் செய்தது.
ஹொரண பெருந்தோட்ட நிறுவனமானது, இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஹேலிஸுக்கு சொந்தமானதாகும். இவர்களில் நான்கு தொழிலாளர்கள் சேவைக் கடிதம் கூட இல்லாமல் இடைநீக்கம் செய்யப்பட்டமை கம்பனியின் எதேச்சதிகாரமான முடிவைக் காட்டுகிறது.
தொழிலாளர்கள் தங்கள் பணத்தை செலவழித்து, தாங்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்தமைக்காக நிர்வாகத்திற்கு எதிராக தொழில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், தொழிலாளர்களின் கோபத்தை திசை திருப்புவதற்காக தொழிற்சங்கங்களும் வழக்குத் தொடர்ந்தன. இந்த வழக்குகள் ஜனவரி 26 அன்று ஹட்டன் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதிலும், மனுதாரர்களின் அடுத்த விசாரணை மார்ச் 29 ஆம் திகதிக்கும் மற்றைய விசாரணை மார்ச் 31 ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டது.
வேலைநீக்க கடிதம் எதுவும் சமர்ப்பிக்கப்படாது வேலை நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் வேலையில் அமர்த்த தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்ட காலத்திற்கான இழப்பீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. எனினும், அவர்களை கம்பனி இன்னும் வேலைக்கு திரும்ப அழைக்கவில்லை. இலங்கையில், தொழிலாளர் நீதிமன்றங்கள் பொதுவாக முதலாளிகளின் பக்கம் நிற்கின்றன, ஊழியர்களின் பக்கம் அல்ல.
குறைந்த ஊதியத்திற்கு எதிராக தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்புகளை கலைத்துவிட, அடிப்படை தினசரி ஊதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கோரி கடந்த ஆண்டு பெப்ரவரி 5 அன்று இ.தொ.கா. அழைப்பு விட்ட ஒரு நாள் தேசிய வேலைநிறுத்தத்தில் அவர்கள் கலந்து கொண்ட பின்னரே, ஓல்டனில் வேட்டையாடல் தொடங்கியது. இந்த கோரிக்கை முதன்முதலில் ஒரு தசாப்தத்திற்கு முன்னரே முன்வைக்கப்பட்டது. நிச்சயமாக, ஒரு நல்ல வாழ்க்கைக்கு இந்த தொகை போதாது. இந்தக் கோரிக்கையின் பேரில், தொழிலாளர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து போராடினர், ஆனால் தொழிற்சங்கங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டனர்.
ஓல்டனில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, நிர்வாகம் அவர்களில் சிலரை உடல் ரீதியாக துன்புறுத்தி ஆத்திரமூட்டியது. தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுத்ததோடு மற்றும் பெப்ரவரி 17 அன்று அவர்கள் முகாமையாளரின் பங்களா முன் போராட்டம் நடத்தினர். இதை ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றுவதற்காக கம்பனி பயன்படுத்திக்கொண்டது.
ஓல்டன் தொழிலாளர் மீதான அடக்குமுறை, அனைத்து தோட்டங்களிலும் வேலைச் சுமையை அதிகரிக்கவும், ஜனநாயக விரோத நடவடிக்கைகளை முன்னெடுக்க இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதற்கும் கம்பனிகள் நாட்டம் கொண்டிருப்பதை சமிக்ஞை செய்தது. தொற்றுநோயால் தீவிரமடைந்த நெருக்கடி, தோட்டங்களின் மறுசீரமைப்பை விரைவுபடுத்த முதலாளிகளால் பயன்படுத்தப்படுகிறது.
அதிக உழைப்புச் செலவுகளால் நஷ்டம் அடைவதாகக் கூறும் கம்பனிகள், சுரண்டலைத் தீவிரப்படுத்தும் வழிமுறையாக 'வருமானப் பகிர்வு' முறைமையைச் செயல்படுத்தக் கோருகின்றன. இந்த முறைப்படி, ஆயிரக்கணக்கான தேயிலைச் செடிகள் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன; குடும்பத்துடன் உழைக்கும் அவர் அல்லது அவள் அவற்றை பராமரிக்க வேண்டும்; கம்பனி உரங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குகிறது. அறுவடைக்குப் பிறகு உற்பத்தியை கம்பனி எடுத்துக் கொள்கிறது; முதலாளியின் செலவுகள் மற்றும் இலாபம் கழிக்கப்பட்ட பின்னர், மீதமுள்ள தொகை தொழிலாளிக்கு அவரது வருமானமாக வழங்கப்படும்.
இந்த முறைமை குத்தகை விவசாய முறைமையுடன் தொடர்புடையதாகும். இது நடைமுறைப்படுத்தப்படும் போது தொழிலாளர்கள் தங்களது ஓய்வூதிய நிதி மற்றும் மீதமுள்ள நலன்புரி நன்மகளை இழக்க நேரிடும். இந்த முறைமை முதலில் நடைமுறைப்படுத்தப்பட்ட தோட்டங்களில் அதை தொழிலாளர்கள் எதிர்த்தனர்.
குறைந்த சம்பளத்திற்கு எதிராக பெருந்தோட்டத்துறையில் பெருகிவரும் அமைதியின்மைக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ கடந்த ஆண்டு ஏப்ரலில் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக வர்த்தமானியில் வெளியிட்டார். இதன் மூலம், இராஜபக்ஷ, ஆளும் கூட்டணியின் பங்காளியான இ.தொ.கா. உட்பட தொழிற்சங்கங்களின் ஆதரவுடன், தொழிலாளர்களின் கோபத்தை திசை திருப்ப முயன்றார்.
எவ்வாறாயினும், கம்பனிகள் அரசாங்கத்தின் உத்தரவை நிராகரித்ததுடன், தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்பட வேண்டுமானால் அவர்களின் வேலைச் சுமையை பாரியளவில் அதிகரிக்க வேண்டும் என்று கோரின. இந்தத் தாக்குதலுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாக தொடர் போராட்டங்கள் எழுந்தன.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து, வருமானப் பகிர்வு முறையை இன்னும் பரந்த அளவில் செயல்படுத்தத் தயாராகி வரும் கம்பனிகள், ஒவ்வொரு தோட்டத்திலும் வேலைச்சுமையை அதிகரிக்கத் தொடங்கின.
வருமானப் பகிர்வு முறைமை ஓல்டன் தோட்டத்தில் பாதியளவு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 2000-3000 தேயிலை செடிகள் தொழிலாளர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. அவர்கள் இந்த நிலத்தில் மட்டுமே வேலை செய்ய வேண்டும். தோட்டத்தை சுத்தம் செய்வது, களையெடுப்பது உட்பட வேறு எல்லா வேலையிலும் முழு குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்.
நாளாந்தம் வேலை செய்யும் தொழிலாளர்கள் 1,000 ரூபா சம்பளம் பெற தினசரி 18 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும். இலக்கை எட்ட முடியாதவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு ரூபா 40 மட்டுமே கிடைக்கும்.
இந்த முறையானது ஹொரண பெருந்தோட்டத்தின் கீழ் பெயர்லோன், ஸ்டொக்ஹொம், மானெலு மற்றும் கவரவில உட்பட சாமிமலை பிரதேசத்தில் உள்ள ஏனைய தோட்டங்களிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓல்டனில் தோட்டத் தொழிலாளர்களை பழிவாங்குவதானது அதிகரித்த வேலைச் சுமைகள், சம்பள வெட்டுக்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பெருகிவரும் எதிர்ப்புக்களை நசுக்குவதற்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை அதிகரிப்பதன் ஒரு பகுதியாகும்.
கடந்த ஆண்டு செப்டெம்பர் 29 அன்று, வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களுக்குப் பின்னர், ஹொரண தோட்டக் கம்பனியின் கட்டுப்பாட்டில் உள்ள தலவாக்கலையில் உள்ள கட்டுகலை தோட்டத்தில் 11 தொழிலாளர்களை பொலிசார் கைது செய்தனர். அவர்கள் அதிகரித்து வரும் வேலைச் சுமையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒக்டோபர் 7 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையும் பொலிஸ் நிலையத்திற்கு செல்வது உள்ளிட்ட கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களும் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் பழிவாங்கலுடன் கம்பனிகளுக்கும் ஒத்துழைக்கும் போது, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மட்டுமே அடக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் பிரச்சாரத்தை ஆரம்பித்து, ஓல்டன் தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுவை உருவாக்குவதற்குத் தலைமை தாங்கியது.
சோசலிச சமத்துவக் கட்சியும், ஓல்டன் தொழிலாளர் நடவடிக்கை குழுவும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விலக்கிக்கொள்ளுமாறும், வேலைநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளியையும் நிபந்தனையின்றி மீண்டும் வேலையில் அமர்த்துமாறும் அழைப்பு விடுத்தன.
தொழிலாள வர்க்கத்தை தீவிரமாக அணிதிரட்டுவதன் மூலமே ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் வேட்டையாடல்களை தோற்கடிக்க முடியும். ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தோட்டங்களிலும் மற்ற எல்லா வேலைத் தளங்களிலும் தொழிலாளர்களின் சொந்த நடவடிக்கை குழுக்களை அமைப்பதன் மூலமும் மட்டுமே அதைச் செய்ய முடியும்.
மேலும் படிக்க
- இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோருங்கள்
- இலங்கை: வேலை சுமை அதிகரிப்பு, சம்பள வெட்டு மற்றும் ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுவதற்கு பெருந்தோட்டங்கள் முழுவதும் நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு
- இலங்கை: கட்டுக்கலை தோட்டத் தொழிலாளர்கள் சம்பளம் மற்றும் வேலை நிலமைகள் மீதான நிர்வாகத்தின் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுகிறார்கள்