மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
புதனன்று, ஜேர்மனியின் உச்ச நீதிமன்றம் ஜேர்மனிக்கான மாற்றீட்டு (AfD) கட்சிக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது. இது எதிர்காலத்தில் தீவிர வலதுசாரிக் கட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கான முழுச் சுதந்திரமாகும்.
பெப்ரவரி 2020 இல் AfD இன் வாக்குகளின் உதவியுடன் தாராளவாத ஜனநாயகக் கட்சி (FDP) அரசியல்வாதி தோமாஸ் கெம்மெரிச் துரிங்கியா மாநிலப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதை பகிரங்கமாக விமர்சித்ததற்காக அப்போதைய சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் - CDU) மீது AfD வழக்குத் தொடர்ந்தது.
கெம்மெரிச் இன் கட்சிக்கு மாநில பாராளுமன்றத்தில் ஐந்து இடங்கள் மட்டுமே இருந்தன. 2020 பெப்ரவரி 5 அன்று AfD, CDU மற்றும் FDP ஆகிய மூன்று கட்சிக் கூட்டணியால் ஒரு ஆச்சரியமான சதி மூலம் கிழக்கு ஜேர்மன் மாநிலத்தின் மாநில முதல்வராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கெம்மெரிச் இற்கு ஆதரவாக கிடைத்த 45 வாக்குகளில், 22 AfD இலிருந்து வந்திருந்தது. AfD துரிங்கியாவில் நவ-நாஜி பியோர்ன் ஹொக்க (Björn Höcke) இனால் தலைமை வகிக்கப்படுகின்றது.
மூன்றாம் குடியரசின் முடிவிற்குப் பின்னர் முதல் முறையாக, ஒரு ஜேர்மன் மாநிலத்தில் வலதுசாரி, பாசிசக் கட்சியின் வாக்குகளுடன் ஒரு பிரதம மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நாடு தழுவிய மற்றும் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது தென்னாபிரிக்காவிகான ஒரு வெளிநாட்டு பயணத்தில் இருந்த மேர்க்கல், பகிரங்கமாக நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
தென்னாபிரிக்க ஜனாதிபதியுடனான ஒரு செய்தியாளர் சந்திப்பில், 'உள்நாட்டு அரசியல் காரணங்களுக்கான ஆரம்பக் கருத்து' என்ற வகையில் கெம்மெரிச்சின் தேர்தலை அவர் கண்டித்தார். CDU வினதும் தனதும் அடிப்படை நம்பிக்கைகளை உடைத்த ஒரு 'தனித்துவமான நிகழ்வு' மற்றும் 'AfD இன் உதவியுடன் பெரும்பான்மையை பெற முடியாது' என்று அவர் பேசினார். இது 'மன்னிக்க முடியாதது' மற்றும் 'பின்வாங்கப்பட' வேண்டும். அவரது தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான நாள்” என்றார்.
மூன்று நாட்களுக்குப் பின்னர், கெம்மெரிச் இராஜினாமா செய்தார். அவரது தேர்தலை முதலில் ஆதரித்த துரிங்கியா மாநில CDU மற்றும் மத்திய மட்டத்திலான FDP ஆகியவை தங்கள் ஆதரவை பின்வாங்கிக்கொண்டன.
இப்போது, AfD இன் கோரிக்கையின் பேரில், உச்ச நீதிமன்றம், மேர்க்கெலின் பகிரங்க அறிக்கையும் மற்றும் சான்சிலர் மாளிகையின் உத்தியோகபூர்வ இணைய தளத்தில் வெளியிடப்பட்டிருப்பது அரசியலமைப்பின் 21வது பிரிவில் உள்ள 'அரசியல் கட்சிகளுக்கான சம வாய்ப்புகளுக்கான உரிமையை' மீறுவதாக தீர்ப்பளித்துள்ளது. AfD க்கு அதன் சட்டச் செலவுகளை திருப்பிச் செலுத்துமாறு அது அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
முறையாக, நீதிமன்றம் AfD க்கு ஆதரவாக அதன் தீர்ப்பை, மேர்க்கெல் ஒரு CDU அரசியல்வாதியாகவோ அல்லது தனிப்பட்ட நபராகவோ அல்லாமல் 'உத்தியோகபூர்வமான நிலையில்' தனது அறிக்கைகளை வெளியிட்டார் என்பதாக நியாயப்படுத்தியது. 'அரசியல் கருத்து மோதலில் நடுநிலைமையை' கடைப்பிடிக்க அரசு அமைப்புக்களும் மற்றும் அதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் சான்சிலர்களும் கடமைப்பட்டுள்ளனர். மேலும் அரசியல் நோக்கங்களுக்காக 'அரசாங்க அலுவலகத்துடன் தொடர்புடைய வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகளை' பயன்படுத்தக்கூடாது என்றது.
'அதன்படி, அரசியல் கருத்துமோதலில் ஒரு பக்கசார்பை எடுக்கும் ஒரு மத்திய மந்திரியின் அறிக்கை, கட்சிகளின் சம வாய்ப்புக் கொள்கையை மீறுகிறது மற்றும் அரசு அமைப்புகள் தொடர்பாக மக்கள் தமது அரசியல் நோக்கங்களை உருவாக்குவதற்கான சுதந்திரமான மற்றும் திறந்த செயல்முறையின் நேர்மையை மீறுகிறது” என்று அதன் தீர்ப்பை நியாயப்படுத்தும் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பில் விளக்குகிறது.
ஆனால் நீதிபதி ஆஸ்ட்ரிட் வால்ராபென்ஸ்டீனின் சிறுபான்மை வாக்குகளில் இருந்து வெளிப்படுவது போல இது சட்டபூர்வமான முடியை பிளக்கும் செயலாகும். உச்ச நீதிமன்றத்தின் எட்டு உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது செனட்டின் தீர்ப்பை ஆதரிக்ககாத மூன்று உறுப்பினர்களில் வல்ராபன்ஸ்ரைனும் ஒருவராவார். இது நீதிமன்ற வரலாற்றில் வழக்கத்திற்கு மாறான கருத்து மோதலாகும்.
கட்சி ஜனநாயகத்தில் அரசாங்கப் பணிகள் எப்போதுமே கட்சி அரசியலால் வடிவமைக்கப்படுகின்றன என்று வல்ராபன்ஸ்ரைன் சுட்டிக்காட்டுகிறார். அரசியல் இலக்குகளை உருவாக்கும் நிகழ்ச்சிப்போக்கு குறைமதிப்பிற்கு உட்படுத்தப்படலாம் என்ற ஆபத்து 'அரசாங்க நடவடிக்கையின் நடுநிலைமையின் தோற்றத்தால் துல்லியமாக நியாயப்படுத்தப்படுகிறது.' நடுநிலைமையாக இருப்பதற்கான கடமை அரசு வளங்களைப் பயன்படுத்துவதில் மட்டுமே இருக்கின்றதே தவிர 'அரசாங்க நடவடிக்கைகளின் சுய-பிரதிநிதித்துவத்தில்' அல்ல.
தீர்ப்பிற்கான காரணத்தை ஒருவர் இன்னும் நெருக்கமாகப் படித்தால், நீதிமன்றத்தின் பெரும்பான்மையானது AfD க்கு வெற்றுப்பத்திரத்தை கொடுத்துள்ளது என்பது தெளிவாகிறது. தீவிர வலதுசாரிக் கட்சியுடனான அரசாங்கக் கூட்டணியை மேர்க்கெல் நிராகரிப்பதாக தீர்ப்பு வெளிப்படையாகக் குறைந்தது தற்போதைக்காவது குற்றம் சாட்டுகிறது.
எனவே, மேர்க்கெலின் அறிக்கை AfDக்கான 'எதிர்மறையான தகுதிகளை' கொண்டுள்ளது என்று தீர்ப்பின் உத்தியோகபூர்வ செய்திக்குறிப்பு கூறுகிறது. இது 'துரிங்கிய மாநில பிரதம மந்திரியின் தேர்தல் மற்றும் CDU மாநில பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை பற்றிய மதிப்பீடு மட்டும் அல்ல', ஆனால் 'விண்ணப்பதாரரை [AfD] எவ்வாறு கையாள்வது மற்றும் ஜனநாயக பிரிவினருக்குள் அதன் நிலை தொடர்பாகவும் அடிப்படை அறிக்கையை உள்ளடக்கியுள்ளது.
'AfD' உடன் பெரும்பான்மையை உருவாக்க முடியாது என்ற 'அடிப்படை நம்பிக்கையை' பிரதம மந்திரி தேர்தல் உடைத்துக்கொண்டது' என்று நீதிமன்றம் கூறியது. 'ஆரம்பத்திலிருந்தே மேர்க்கெல் ‘மன்னிக்க முடியாதது’ என்று விவரித்து மற்றும் அதன் முடிவை மாற்ற வேண்டும் என்று கோரியதால் இந்த மதிப்பீடு பலப்படுத்தப்பட்டுவிட்டது' என்றது.
மேலும்: “இறுதியாக துரிங்கியாவில் பிரதமர் தேர்தல் ஜனநாயகத்திற்கு ஒரு மோசமான நாள் என்று கூறியதன் மூலம், நாடாளுமன்ற பெரும்பான்மையை உருவாக்குவதில் விண்ணப்பதாரரின் [AfD இன்] பங்கேற்பு பொதுவாக ஜனநாயகத்திற்கு கேடு விளைவிப்பதாக தான் கருதுவதாக மேர்க்கெல் தெளிவுபடுத்தினார். மற்றும் ஜனநாயக சமூகத்தில் அரசியலில் கூட்டணிகளை உருவாக்குவதற்கும் மற்றும் உள்நாட்டு அரசியலில் ஒத்துழைப்பதற்கும் விண்ணப்பதாரரின் திறனைப் பற்றி மறைமுகமாக ஒட்டுமொத்த எதிர்மறை மதிப்புத் தீர்ப்பை வழங்கினார்”.
இது, 'அரசியல் முடிவெடுக்கும் செயல்பாட்டில் சம பங்கேற்பதற்கான உரிமையின் மீதான அத்துமீறல்' ஆகும். மேர்க்கெல் இவ்வாறு 'நடுநிலையாக இருப்பதற்கான தேவையால் நிர்ணயிக்கப்பட்டபடி, தன்னை வெளிப்படுத்துவதற்கான தனது அதிகாரத்தின் கணிசமான வரம்புகளை மீறினார்.' அவர் 'கூட்டணிகளை உருவாக்கும் மற்றும் ஜனநாயக பிரிவினருக்குள் ஒத்துழைக்கும் திறன் கொண்ட கட்சிகளின் வட்டத்தில் இருந்து AfDக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார்' என தீர்ப்புக் கூறுகிறது.
இந்த வார்த்தைகள், கீழே குறிப்பிடப்படுவதைத் தவிர தெளிவாக வேறெதையும் காட்டவில்லை. அதாவது ஒரு உத்தியோகபூர்வ பதவியின் நிலையில், நாஜி சர்வாதிகாரத்தை தீங்கற்றதாக கூறி, இனவெறியைத் தூண்டி, வன்முறை நவ-நாஜிகளின் நெருக்கமான ஒரு வலைப்பின்னலுடன் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கட்சியுடன் ஒத்துழைப்பதற்கு எதிராகப் பேசும் ஒரு அரசியல்வாதி அரசியலமைப்பை மீறுகிறார்!
உச்ச நீதிமன்றம் இன்னும் மேலே செல்கிறது. சில சந்தர்ப்பங்களில் 'மத்திய அரசாங்கத்தின் செயல்படும் திறன் மற்றும் ஸ்திரத்தன்மை' அல்லது 'அரசுகளின் மத்தியில் ஜேர்மன் கூட்டாட்சி குடியரசின் நற்பெயர் மற்றும் நம்பிக்கை' அச்சுறுத்தப்பட்டால், இந்த நடுநிலையாக இருப்பற்கான தேவை பொருந்தாது என்ற முடிவிற்கு வருகின்றது. இருப்பினும், நீதிமன்றம் மேலும் கெம்மெரிச் AfD இன் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்படியான ஒரு விடயம் நடக்கவில்லை எனக் கூறியது.
அந்த நேரத்தில் ஏற்கனவே அப்போதைய கட்சித் தலைவர் அன்னகிரேட் கிராம்ப்- காரன்பவர் உட்பட மற்ற CDU அரசியல்வாதிகளால் கண்டனம் செய்யப்பட்டுள்ளபோது CDU/CSU மற்றும் SPD இன் பெரும் கூட்டணியான கூட்டாட்சி அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மை துரிங்கிய CDU வலதுசாரி தீவிரவாதிகளுடன் அணிகளை உருவாக்குவதால் அச்சுறுத்தப்படவில்லை என்று தீர்ப்பு கண்டறிந்தது. மேலும், 'துரிங்கியாவில் நடக்கும் பிரதம மந்திரி தேர்தல், வெளியுறவுக் கொள்கையில் செயல்படும் திறனைக் கட்டுப்படுத்தும் வகையில், ஜேர்மனியின் கூட்டாட்சிக் குடியரசின் நற்பெயரையோ அல்லது நம்பிக்கையையோ அசைக்கக்கூடியதாக இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை' என்று நீதிமன்றம் சுருக்கமாகக் கூறுகிறது.
AfD அதன் எழுச்சிக்கு முதன்மையாக மற்ற ஸ்தாபகக் கட்சிகளின் கொள்கைகள் மற்றும் அரசு அமைப்புகளின் ஆதரவிற்கு கடமைப்பட்டுள்ளது என்பதை உலக சோசலிச வலைத் தளம் பல ஆண்டுகளாகக் எடுத்துக்காட்டி வருகிறது. FDP இலிருந்து இடது கட்சி வரை அனைத்துக் கட்சிகளாலும் பின்பற்றப்பட்ட சமூக வெட்டுக்கள் மற்றும் குடியேற்ற எதிர்ப்புக் கட்டுப்பாடுகளின் கொள்கையே AfD ஐ முதலில் பலப்படுத்தியது. அரசியலமைப்பின் பாதுகாப்பிற்கான அலுவலகத்தின் அப்போதைய தலைவர் (ஜேர்மனியின் இரகசிய சேவை என்று அழைக்கப்படுகிறது) ஹென்ஸ் ஜியோர்க் மாஸன், இவ்வமைப்பு கண்காணிப்பின் கீழ் வருவதைத் தவிர்ப்பது எப்படி என்று தனிப்பட்ட பேச்சுகளில் AfD க்கு அறிவுறுத்தினார்.
2017 இலையுதிர்காலத்தில் AfD 92 பிரதிநிதிகளுடன் நாடாளுமன்றத்திற்குள் (Bundestag) நுழைந்தபோது ஏனைய அனைத்துக் கட்சிகளும் அதனுடன் இணைந்து செயல்பட்டன. பாரிய கூட்டணியில் இணைந்ததன் மூலம், SPD ஒரு சட்டமன்ற பதவிக்காலத்திற்கு AfDயை முக்கிய எதிர்க் கட்சியாக்கியது. இது அனைத்து நாடாளுமன்றக் குழுக்களிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதுடன் மற்றும் இந்த வழியில் அரசாங்கத்தின் பணிகளில் திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்டது.
துரிங்கியாவின் அமைச்சராக கெம்மெரிச் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், உலக சோசலிச வலைத் தளம் பின்வருமாறு எழுதியது, “AfD இன் உதவியுடன் ஆளும் பெரும்பான்மையை அமைக்க இரு கட்சிகளும் [CDU மற்றும் FDP] எடுத்த முடிவு ஒரு வரலாற்று திருப்புமுனையாகும். ஜேர்மனியில் ஆளும் வர்க்கம் பரந்த மக்கள் எதிர்ப்பை எதிர்கொண்டு சமூக சமத்துவமின்மை மற்றும் இராணுவவாதத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மீண்டும் பாசிச மற்றும் எதேச்சாதிகார வழிமுறைகளை நாடுகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது”.
இதற்கிடையில், AfD ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளது. கடந்த மூன்று மாநிலத் தேர்தல்களில் பெருமளவு வாக்குகளை இழந்துள்ளது. ஷிலேஸ்விக்-கோல்ஸ்ரைனில், அது முதல் முறையாக ஒரு மாநில பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது. நீண்டகால இணைத் தலைவர் ஜோர்க் மொய்தன் உட்பட ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். பியோர்ன் ஹொக்க இனைச் சுற்றியுள்ள பாசிசப் பிரிவு பெருகிய முறையில் கட்சியில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தப் பின்னணியில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நவ நாஜிக் கட்சிக்கு ஒரு புதிய ஊக்கத்தை அளிக்கும் முயற்சியாகும். அதன் தீவிர வலதுசாரி பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் AfD தலைவர் டினோ ஸுருபல்லா, 'இது ஜனநாயகத்திற்கு ஒரு நல்ல நாள்' என்று ஆரவாரம் செய்தார். மேர்க்கெல், அவரது கருத்துக்களால் AfD இன் உரிமைகள் மற்றும் அரசியலமைப்பை அப்பட்டமாக மீறியுள்ளார் என்றார்.
இராணுவவாதம், போர் மற்றும் பணவீக்கம் மற்றும் சமூக வெட்டுக்களின் விளைவுகள் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கலை எதிர்ப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துவதற்கும் ஆளும் வர்க்கத்திற்கு AfD தேவைப்படுகிறது.
மேலும் படிக்க
- ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனம் தீவிர வலதுசாரிகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது
- முதலாளித்துவத்தை விமர்சிப்பது அரசியலமைப்பிற்கு எதிரானது என பேர்லின் நிர்வாக நீதிமன்றம் அறிவித்துள்ளது
- ஜேர்மனியின் இரகசிய சேவையின் தாக்குதலுக்கு எதிராக தினசரி செய்தித்தாள் junge Welt ஐ பாதுகாக்கவும்
- புதிய சோசலிச எதிர்ப்பு சட்டங்களை நிறுத்து! ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கவும்!