ஜேர்மனியின் இரகசிய சேவையின் தாக்குதலுக்கு எதிராக தினசரி செய்தித்தாள் junge Welt ஐ பாதுகாக்கவும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

செப்டம்பரில், இடதுசாரி தினசரி நாளிதழ் junge Welt பல ஆண்டுகளாக உளவுத்துறையின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு மற்றும் இரகசிய சேவையின் வருடாந்த அறிக்கையின் 'இடதுசாரி தீவிரவாதம்' என்ற அத்தியாயத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால் ஜேர்மனியின் கூட்டாட்சி குடியரசுக்கு எதிராக ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது.

சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische Gleichheitspartei - SGP) இந்த வழக்கை வரவேற்பதுடன் மற்றும் முழுமையாக ஆதரிக்கிறது. junge Welt க்கும் எமக்கும் இடையிலான அரசியல் வேறுபாடுகள் நன்கு தெரிந்தவையே. ஆனால் இது ஜனநாயக உரிமைகள் மற்றும் ஒவ்வொரு சோசலிச அமைப்புகளின் மீதான அடிப்படைத் தாக்குதலாகும்.

junge Welt மீதான அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான குற்றச்சாட்டில் எந்த அடிப்படையும் இல்லை. கார்ல் மார்க்ஸ் மற்றும் ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸை வார்த்தைகளில் குறிப்பிடும் அல்லது இராணுவ மறு ஆயுதமயமாக்கல் மற்றும் வலதுசாரி தீவிரவாதத்திற்கு எதிராகப் பேசும் எவரையும் குற்றவாளியாக்குவதே அதன் நோக்கம் என்பதை அதன் நியாயப்படுத்தலில் மத்திய அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது.

Junge Welt செய்தித்தாள் (Image credit: Junge Welt)

ஜேர்மனியின் இரகசிய சேவை என அழைக்கப்படும் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் (Verfassungsschutz) அறிக்கையில் பெயரிடப்பட்டிருப்பது கூட ஒரு அமைப்பு அல்லது செய்தித்தாளின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாகும். junge Welt குறிப்பிட்டுள்ளபடிவிளம்பர சுதந்திரம் மீதான குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை அது எதிர்நோக்குகின்றது. எடுத்துக்காட்டாக, தேசிய இரயில் போக்குவரத்துக்கு பொறுப்பான Deutsche Bahn மற்றும் பல்வேறு நகரசபைகள் மற்றும் வானொலி நிலையங்கள் இரகசிய சேவையின் பதிவை காட்டி விளம்பரத்திற்கான இடத்தை ஒதுக்க மறுக்கின்றன. நூலகங்கள் செய்தித்தாளுக்கான இணையவழி அணுகலைத் தடுக்கின்றன. மேலும் ஒரு அச்சிடும் நிறுவனம் junge Welt இன் விளம்பரம் அடங்கிய மற்றொரு அச்சு வெளியீட்டை வெளியிட மறுத்துவிட்டது என' என்று பத்திரிகையின் ஆசிரியர் குழு விளக்குகிறது.

மேலும், தகவல்தொடர்புகள் மீதான இரகசிய கண்காணிப்பு, தகவல் தருபவர்களை பயன்படுத்தல் மற்றும் கணினிகளின் இரகசியத் தேடல்கள் உள்ளடங்கலான புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மூலஆதாரங்களை பாதுகாப்பதையும் மற்றும் செய்தித்தாளின் ஆசிரியர் குழுவின் இரகசியத்தன்மையையும் பாதிக்கிறது.

இந்த வழக்கைத் தவிர, இரகசிய சேவை junge Welt பற்றிக் குறிப்பிடும் அறிக்கைகளைத் தொடர்ந்து வெளியிடுவதைத் தடுக்க தற்காலிகத் தடை உத்தரவுக்கு செய்தித்தாள் விண்ணப்பித்துள்ளது. பேர்லின் நிர்வாக நீதிமன்றம் காலக்கெடுவை நீட்டித்ததால், வழக்குக்கு இதுவரை எந்த பதிலும் தாக்கல் வழங்கப்படவில்லை. எவ்வாறாயினும், junge Welt இன் மீதான கண்காணிப்பை பற்றி மே 5 அன்று, இடது கட்சி பாராளுமன்ற கேள்விக்கு முன்வைத்தபோது அதற்கான பதிலில் அரசாங்கம் ஏற்கனவே கண்காணிப்பை நியாயப்படுத்தியது.

அதில், SGPயின் கண்காணிப்பை நியாயப்படுத்துவதற்காக உருவாக்கிய கருத்துக்களை அடிப்படையாகக் கொண்ட நீதி வழங்கும் (Gesinnungsjustiz) அதே ஜனநாயக விரோத வாதத்தையே மத்திய அரசு மீண்டும் மீண்டும் கூறுகிறது. இது junge Welt எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ அல்லது தயார் செய்வதாகவோ குற்றம் சாட்டவில்லை. ஆனால் அதன் ஆசிரியர் குழு 'அடிப்படை மார்க்சிச நம்பிக்கைகளை' கொண்டிருப்பது பிரத்தியேகமாக அரசியலமைப்பிற்கு எதிரானதாக உள்ளதாக கூறுவதை நியாயப்படுத்துகிறது.

அரசாங்கத்தின் கூற்றுப்படி, இது 'தாராளவாத ஜனநாயகத்தை ஒரு சோசலிச/கம்யூனிச சமூக ஒழுங்குடன் மாற்றுவதை அதன் முக்கிய குறிக்கோளாகக் கொண்டுள்ளது. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், லீப்க்னெக்ட் மற்றும் லுக்செம்பேர்க் ஆகியோரைப்பற்றி junge Welt சாதகமாககுறிப்பிடுவதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றது.

இன்னுமொரு இடத்தில், 'முதலாளித்துவத்தின் மீதான அடிப்படை விமர்சனத்திற்காக' junge Welt ஐ அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது. முதலாளித்துவமும், மார்க்சிச கற்பித்தலினால் இதிலிருந்து உருவாகும் ஜேர்மன் குடியரசின் அரசியல் சமூக அமைப்பு முறை அடிப்படையாக நிராகரிக்கப்படுகின்றது. இது தொடர்பாக எழுதும் ஆசிரியர்கள் தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுகளை அதற்கான காரணகர்த்தாவாக அடையாளம் காணப்பட்ட 'முதலாளித்துவம்' ஒழிப்பதில் பார்க்கிறார்கள்' எனக்குறிப்பிட்டது.

இந்த மயிர் கூச்செறியும் கருத்தின்படி, பேச்சு சுதந்திரம் அல்லது ஜனநாயக தேர்தல்கள் போன்ற ஜனநாயக உரிமைகளுக்கான அடித்தளமாக சுதந்திர ஜனநாயக ஒழுங்கமைப்பு இருக்கவில்லை, மாறாக உற்பத்தி சாதனங்களின் மீதான உரிமை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுரண்டல் ஆகியவையே இருக்கின்றது. அவ்வாறானால் இது சோசலிசத்தின் கீழ் ஒழிக்கப்பட வேண்டியதாகும். பெரும் பணக்காரர்களின் நலன்களை கேள்வி கேட்கும் எவரும் குற்றவாளிகளாக ஆக்கப்படுவார்கள். இந்த தர்க்கத்தின்படி, 56.3 சதவீத பேர்லின் மக்களும் இரகசிய சேவை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்கள் சமீபத்தில் நகரின் அதிக வாடகைகள் குறித்த ஒரு பொதுஜன வாக்கெடுப்பில் வீட்டுவசதி உடமை நிறுவனங்களை கையகப்படுத்துவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

'உற்பத்திசார்ந்த வர்க்க அடித்தளத்தின் வரைறைகளின்படி ஒரு சமூகத்தைப் பிரிப்பது' கூட சுதந்திர ஜனநாயக ஒழுங்கமைப்பிற்கும் மனித கண்ணியத்திற்கும் முரணானது என்று அரசாங்கம் கூறும்போது இது இன்னும் தெளிவாகிறது. அதன்படி, வறுமைக் கூலியோ, வீடற்ற தன்மையோ அல்லது ஊட்டச்சத்துக் குறைபாடோ மனித கண்ணியத்திற்கு முரண்படானதாக இல்லை, மாறாக இந்த அப்பட்டமான சமூக சமத்துவமின்மைக்குப் பெயர் சூட்டுவது முரணானதாக உள்ளது!

வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான சமூக சமத்துவமின்மைக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் அதே வேளையில், தொற்றுநோய்களில் இரக்கமற்ற 'உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை' என்ற கொள்கைகளை உந்தித் தள்ளும் அதே வேளையில், இந்த வர்க்க அரசியலை அதன் பெயரால் அழைக்கும் அனைவரையும் அரசியலமைப்பின் எதிரி என்று முத்திரை குத்துகிறது.

இங்கு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அது junge Welt பத்திரிகையாக வெளியிடப்படுவதையே தாக்குகிறது. உண்மை என்னவென்றால், இரகசிய சேவையின் கண்காணிப்பை நியாயப்படுத்த எந்த வகையான கருத்துக்களையும் வெளியிடுவது மட்டும் போதாது. அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான கூட்டாட்சிச் சட்டத்தின் படி, அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காக சட்டத்தின் கீழ் உள்ள பாதுகாப்பின் பொருளை நீக்குதல் அல்லது பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நபர்களின் குழு வேண்டுமென்றே ஒன்றுகூடுதலில் ஈடுபட்டதாகக் காட்டப்பட வேண்டும்.

கொலம்பிய FARC-EP அல்லது பாலஸ்தீனிய பிரதிநிதிகள் போன்ற குழுக்களின் பிரதிநிதிகளுடன் செய்தித்தாள் அமைப்பு மற்றும் மாநாடுகளை நடத்துவதன் மூலம் அத்தகைய நடத்தையை அரசாங்கம் உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் இந்த அபத்தமான கட்டுமானங்களால் உண்மையில் இங்கு கையாளப்படுவது கருத்துகளின் அடிப்படையில் நீதி வழங்குதல் என்பதே என்ற உண்மையை மறைக்க முடியாது. அதிகாரிகளை எதிர்க்கும் கருத்துக்களை வெளியிடுவதால் மட்டுமே இந்த நாளிதழ் அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ்வந்துவிட்டது.

அதே சமயம், பத்திரிகையின் பரவலைத் தடுப்பதும், பத்திரிகை சுதந்திரத்தின் மீது தாக்குதல் நடத்துவதும்தான் அதன் நோக்கம் என்று அரசாங்கம் வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறது. அரசாங்கத்தின் கூற்றுப்படி, இரகசிய சேவை அறிக்கையில் செய்தித்தாள் பெயரிடுவதன் நோக்கம் துல்லியமாக 'அரசியலமைப்புக்கு எதிரான முயற்சிகள் குறித்து பொதுமக்களுக்கு அறியப்படுத்துவதும், மேலும் அவ்வாறு உருவாவதற்கான விளைநிலத்தை இல்லாதொழிப்பதுமாகும்.' எனக் கூறுகின்றது.

கார்ல் மார்க்ஸ் அல்லது மற்ற மார்க்சிஸ்டுகள் பற்றிய எந்தவொரு நேர்மறையான குறிப்புகளையும் குற்றமாக்கும் அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட முயற்சி, அத்துடன் 'முதலாளித்துவம் மீதான கடுமையான விமர்சனம்' மற்றும் வர்க்க முரண்பாடுகளை பற்றி குறிப்பிடுவதும் கூட, உளவுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் வருடாந்த அறிக்கையில் பெயரிடுதல் பற்றி SGP தனது கண்காணிப்புக்கு எதிரான போராட்டத்தில் முன்வைத்த முன்னோக்கை உறுதிப்படுத்துகிறது.

2018 ஆம் ஆண்டு முதல் முறையாக அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் அறிக்கையின் 'இடதுசாரி தீவிரவாதம்' என்ற அத்தியாயத்தில் பட்டியலிடப்பட்டதை அடுத்து, ஜனவரி 24, 2019 அன்று பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தில் SGP ஒரு வழக்கைத் தாக்கல் செய்தது. உளவுத்துறை நிறுவனம் அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை ஆதரிக்கிறது, முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது மற்றும் ஸ்தாபனக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களை நிராகரிக்கிறது எனக் கூறி கட்சியை பட்டியலில் சேர்த்ததை நியாயப்படுத்தியது.

எமக்கான சட்டப்பூர்வ புகாருக்கு அதன் பதிலில், அரசாங்கம், முதன்முறையாக ஜனநாயக விரோத வாதத்தை உருவாக்கியது. அது இப்போது junge Welt இற்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகிறது. எனவே, ஒரு 'ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமுதாயத்திற்கான போராட்டம்' மற்றும் 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' என்று கூறப்படுவதற்கு எதிரான போராட்டம் மட்டுமே அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. மேலும், 'வர்க்க அடித்தளத்தில் சிந்திப்பது' மற்றும் 'சமரசமற்ற எதிரெதிரான போட்டியிடும் வர்க்கங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை' ஆகியவை சுதந்திர ஜனநாயக ஒழுங்கின் மீதான தாக்குதலாக SGP க்கு பதில் அளிக்கப்பட்டது.

SGP தனது பதிலில், அரசாங்கமும் அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகமும் பிஸ்மார்க்கின் சோசலிச-விரோதச் சட்டங்கள் மற்றும் நாஜிகளின் சிந்திப்பதற்குத் தண்டனை ஆகியவற்றிலிருந்து நேரடியாக இந்த வழியை எடுத்துக்கொண்டு தீவிர வலதுசாரி நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றுவதாகக் காட்டியது. 'அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் அறிக்கையும் உள்துறை அமைச்சகத்தின் வழக்கறிஞர்களின் ஆவணமும், பொதுக் கருத்தை அச்சுறுத்துவதையும், முதலாளித்துவம், தேசியவாதம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்து எதிர்ப்பையும் குற்றமாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட அரசு எந்திரத்தில் வலதுசாரி தீவிரவாத சதித்திட்டத்தின் தயாரிப்புகள் ஆகும்.

அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகம் தீவிர வலதுசாரி பிரிவினருடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்துள்ளது என்று அது மேலும் கூறியது. SGP மீதான அதன் தாக்குதலுடன், தற்போதைய பிற்போக்குத்தனமான சமூக மற்றும் அரசியல் சூழ்நிலையை விமர்சிக்கும் எவருக்கும் வழக்குத் தொடுப்பதற்கான அடிப்படையை வழங்கும் சிந்தனைக் குற்றங்களுக்கு ஒரு புதிய வகையான சட்டப்பூர்வ விசாரணைக்கு இந்த குற்றவியல் அரசாங்க அமைப்பு ஒரு முன்னுதாரணத்தை அமைக்க விரும்புகிறது. வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் மார்க்சிய இலக்கியங்களை விற்பனை செய்யும் புத்தக விற்பனையாளர்கள் அல்லது விமர்சனக் கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மீது வழக்குத் தொடரப்படும்.

இந்த எச்சரிக்கை junge Welt க்கு எதிரான அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் பகுதியின் நடவடிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு 'Ende Gelände' இயக்கம் ஏற்கனவே பேர்லின் மாநில இரகசிய சேவையால் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டது, ஏனெனில், இது மற்றவற்றுடன் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை 'முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் பாசிசத்திற்கு எதிரான விடயங்களுடன்' இணைத்துள்ளது என புலனாய்வு நிறுவனம் குறிப்பிட்டது. வலதுசாரிகளுக்கு எதிரான இசைக்குழுக்கள் மற்றும் கச்சேரிகள் வலதுசாரிகளை எதிர்ப்பதால் 'இடதுசாரி தீவிரவாதிகள்' என்றும் அவதூறு செய்யப்பட்டன.

இந்த நிலைமைகளின் கீழ், அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தின் கண்காணிப்புக்கு எதிராக SGP இன் சட்டப்பூர்வ புகார் அசாதாரண முக்கியத்துவம் பெறுகிறது. நவம்பர் 18 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள வாய்மொழி விசாரணை தொடர்பான எங்கள் அறிக்கையில், நாங்கள் பின்வருமாறு எழுதினோம்:

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் தீவிர வலதுசாரிகளை எதிர்க்க விரும்பும் அனைவரையும் change.org இல் SGP இன் மனுவில் கையெழுத்திடுமாறு நாங்கள் அழைக்கிறோம். ஆதரவு அறிக்கைகள், படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் #DefendSGP ஹேஷ்டேக்குடன் இடுகையிடவும். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் மற்ற அனைத்து இடதுசாரி குழுக்கள் மீதான இரகசிய சேவைகளின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் ஜனநாயக விரோத சதிகளுக்கான விளைநிலமான இந்த வலதுசாரி அமைப்பு கலைக்கப்பட்டவேண்டும்.

அரசியலமைப்பு பாதுகாப்பு அலுவலகத்தை கலைக்க வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். மேலும் அதன் வருடாந்த அறிக்கையில் இருந்து junge Welt ஐ உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Loading