புதிய சோசலிச எதிர்ப்பு சட்டங்களை நிறுத்து! ஜேர்மன் இரகசிய சேவைக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கவும்!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நவம்பர் 18 அன்று, பேர்லின் நிர்வாக நீதிமன்றம் ஜேர்மன் குடியரசிற்கு எதிரான சோசலிச சமத்துவக் கட்சியினது (Sozialistische Gleichheitspartei- SGP) வழக்கை விசாரிக்கத் தொடங்கும். சோசலிச சமத்துவக் கட்சி இரகசிய சேவையின் கண்காணிப்புக்கு உட்பட்டு, அதனது வருடாந்த அறிக்கையில் 'இடதுசாரி தீவிரவாதி' என்று குறிப்பிடப்படுவதற்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்கிறது.

இந்த வழக்கு அசாதாரண முக்கியத்துவம் வாய்ந்தது. சோசலிச சமத்துவக் கட்சியை கண்காணிப்பின் கீழ் வைப்பதற்கான அதன் காரணத்தை, பிஸ்மார்க்கின் சோசலிச எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு வழக்கு தொடுப்பது (Gesinnungsstrafrecht) ஆகியவற்றின் மரபுகளில் இருந்து நேரடியாகப் பின்பற்றப்படும் ஒரு வகையான கருத்துகளின் அடிப்படையில் நீதி வழங்குதலை (Gesinnungsjustiz) மத்திய அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. இதனால் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் பற்றிய ஒவ்வொரு நேர்மறையான குறிப்பும், இராணுவவாதம் மற்றும் போர் பற்றிய ஒவ்வொரு விமர்சனமும், சமூகம் பற்றிய ஒவ்வொரு வர்க்க அடித்தளத்திலான ஆய்வும் கூட அரசியலமைப்பிற்கு முரணானவை என்று அறிவிக்கப்படுகிறது.

இது சோசலிச சமத்துவக் கட்சிக்கு மட்டும் எதிரானதல்ல. தொற்றுநோய்கான 'உயிர்களை விட இலாபங்களுக்கு முக்கியத்துவம்' என்ற கொள்கைகள் பெருகிய முறையில் முதலாளித்துவத்தின் திவால்நிலையை அம்பலப்படுத்துகையிலும், மேலும் அதிகமான தொழிலாளர்கள் ஊதிய குறைப்பு மற்றும் பாரிய பணிநீக்கங்களுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருகையிலும், பயங்கரமான இராணுவத்தைக் கட்டிமைப்பதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகையிலும், சமூக சமத்துவமின்மையின் பாரிய மட்டங்கள் அதிகரிப்பதை சுட்டிக்காட்டுபவர்கள் அனைவரும் மற்றும் முதலாளித்துவத்தை இல்லாதொழிப்பதற்காக வாதிடுவவர்கள் அனைவரும் அச்சுறுத்தப்பட்டு மௌனமாக்கப்பட வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கமாகும். சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஜனநாயக விரோத வாதங்கள் நீண்டகாலமாக ஏனைய இடதுசாரிக் குழுக்களுக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஜேர்மன் அரசாங்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த அடிப்படைத் தாக்குதல் கடுமையாக நிராகரிக்கப்பட வேண்டும். ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் தீவிர வலதுசாரிகளை எதிர்க்க விரும்பும் அனைவரையும் change.org இல் சோசலிச சமத்துவக் கட்சியின் மனுவில் கையெழுத்திடுமாறு நாங்கள் அழைக்கிறோம். ஆதரவளிக்கும் அறிக்கைகள், படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் #DefendSGP என்ற ஹேஷ்டேக்கில் இடுகையிடவும்.

மத்திய அரசாங்கம் எதை தடை செய்ய விரும்புகிறது

2018 கோடையில் தனது வருடாந்த அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சியை 'இடதுசாரி தீவிரவாதி' என்று இரகசிய சேவை (Verfassungsschutz) முதன்முதலில் அழைத்தது. எந்தவொரு குற்றவியல் அல்லது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான நடவடிக்கைகளையும் கட்சி நடத்துவதாகவோ அல்லது திட்டமிட்டதாகவோ குற்றம்சாட்டவில்லை. ஆனால் சட்டபூர்வ வழிமுறைகளால் அதன் நோக்கங்களை அது தொடர்கிறது என்பதை வெளிப்படையாக உறுதிப்படுத்தியது. அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது மற்றும் முதலாளித்துவத்தை விமர்சிக்கிறது என்ற காரணத்திற்காக சோசலிச சமத்துவக் கட்சியை கண்காணிப்பின் கீழ் வைப்பதை நியாயப்படுத்தியது.

ஜனவரி 2019 இல் சோசலிச சமத்துவக் கட்சி சட்டபூர்வ புகாரை தாக்கல் செய்தபோது, மத்திய உள்துறை அமைச்சகம் 56 பக்க ஆவணத்துடன் பதிலளித்தது. அது ஒரு சட்டரீதியான ஆவணம் அல்லாது மாறாக சோசலிசத்திற்கு எதிரான ஆவேச தூற்றலாக இருந்தது. சோசலிச சமத்துவக் கட்சி இந்த ஆவணத்தை விரிவாகப் பகுப்பாய்வு செய்து, அதன் ஜனநாயக-விரோத வாதத்தை எடுத்துக்காட்டியது. அந்த ஆவணத்தின்படி, ஒரு 'ஜனநாயக, சமத்துவ, சோசலிச சமூகத்திற்கான போராட்டம்' என்பது அரசியலமைப்பிற்கு முரணானது.

'வர்க்க அடித்தளத்தில் சிந்திப்பது' மற்றும் 'சமரசமற்ற எதிரெதிரான போட்டியிடும் வர்க்கங்கள் இருக்கின்றன என்ற நம்பிக்கை' கூட சிந்தனை ரீதியான கட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் வாதிட்டது. வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத சமூக சமத்துவமின்மை மற்றும் உயிர்களை விட இலாபத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் இரக்கமற்ற கொரோனா வைரஸ் கொள்கைளை முகங்கொடுக்கையில், வர்க்க அரசியலைப் பற்றிய எந்தக் குறிப்பும் குற்றமாக்கப்பட வேண்டும்.

மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ட்ரொட்ஸ்கி அல்லது லுக்செம்பேர்க் பற்றிய எந்தவொரு நேர்மறையான குறிப்பும் அரசியலமைப்பின் மீதான தாக்குதலாக அறிவிக்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக, அரசாங்கம் 'தாராளவாத ஜனநாயக அடிப்படை ஒழுங்கிற்கு எதிரான முயற்சிகள்' என்று அழைக்கப்படுபவற்றின் ஒரு முழு பட்டியலை உருவாக்கியுள்ளது. இப்பட்டியலில் 'முதலாளித்துவத்தை' தூக்கிவீசி சோசலிசத்தை ஸ்தாபிப்பதற்கான கோரிக்கை', 'ஏகாதிபத்தியம்' மற்றும் 'இராணுவவாதம்' என்று அழைக்கப்படுவதற்கு எதிரான போராட்டம்' மற்றும் 'தேசிய அரசுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்' ஆகியவற்றை நிராகரித்தல் இதில் அடங்கும்.

அதே நேரத்தில், உள்துறை அமைச்சகம் முதலாளித்துவத்தை தூக்கியெறிவதை நோக்கமாகக் கொண்ட குறிப்பிட்ட நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதுடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. 'பொது நிகழ்வுகளை நடத்துதல், உரைகளை வெளியிடுதல் மற்றும் தேர்தல்களில் பங்கேற்பது' போன்ற நடவடிக்கைகள் கூட சோசலிசக் கருத்துக்களைப் பரப்புவதற்கு உதவுவதாக இருக்குமானால் அது அரசியலமைப்பிற்கு எதிரானது எனக் கூறுகின்றது.

கருத்துகளின் அடிப்படையில் (Gesinnungsjustiz) வழக்குத் தொடுப்பதை சட்டபூர்வமாக்குவதன் மூலம், ஜேர்மன் அரசாங்கம் பிஸ்மார்க்கின் சோசலிச-விரோத சட்டங்களின் அடிப்படையை உருவாக்கிய ஜனநாயக விரோத பாரம்பரியத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. ஹிட்லரின் மூன்றாம் குடியரசு ஒவ்வொரு அரசியல் எதிரியையும் இல்லாதொழிப்பதற்கும், அவர்களை வதை முகாம்களுக்குள் தூக்கி எறிந்து கொன்றுவிடுவதற்காக, அந்த நபர்களின் குற்றமானது எந்தவொரு திட்டவட்டமான நடவடிக்கையிலிருந்தும் பெருகிய முறையில் பிரிக்கப்பட்டது.

வலதுசாரி சதியை நிறுத்து!

இத்தகைய ஜனநாயக விரோத மற்றும் பாசிச மரபுகளுக்கு ஜேர்மன் ஆளும் வர்க்கம் திரும்புவது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். வலதுசாரி மற்றும் தீவிர வலதுசாரி போக்குகள் வளர்ந்து வருகின்றன. ஏனெனில் வேண்டுமென்றே வெகுஜன தொற்றுக்குள்ளாக்கல், சமூக சமத்துவமின்மை மற்றும் போர் ஆகியவை ஜனநாயக உரிமைகளுடன் பொருந்திப்போவதில்லை. ட்ரம்பின் ஜனவரி 6 ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி, போல்சனாரோவின் சதிக்கான தயாரிப்புகள் மற்றும் ஸ்பெயினில் இராணுவ சதி ஆகியவை இந்த திசையில் அச்சுறுத்தும் நிகழ்வுகளாக உள்ளன.

முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காக மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய குற்றங்கள் புரியப்பட்ட ஜேர்மனியில், இந்தப் போக்குகள் குறிப்பாக முன்னேறியுள்ளன. இரகசிய சேவை அறிக்கை மற்றும் உள்துறை அமைச்சகம் சமர்ப்பித்த சட்டக் கடிதம் ஆகியவை அரசு எந்திரத்திற்குள் உள்ள தீவிர வலதுசாரி சதியின் தயாரிப்புகளாகும். இது பொதுக் கருத்தை அச்சுறுத்துவதையும், முதலாளித்துவம், தேசியவாதம், ஏகாதிபத்தியம், இராணுவவாதம் மற்றும் ஜேர்மனிக்கான பாசிச மாற்றீட்டு கட்சி (AfD) ஆகியவற்றுக்கான அனைத்து எதிர்ப்புக்களையும் 'இடதுசாரி தீவிரவாதம்' என்று குற்றச்செயலாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2017 இரகசிய சேவை அறிக்கையானது அப்போதைய அமைப்பின் தலைவரான ஹென்ஸ்-ஜியோர்க் மாஸன் (Hans-Georg Maaßen) என்பவரால் AfD இன் தலைவர்களுடன் நெருக்கமான ஆலோசனையில் தொகுக்கப்பட்டது என்பது நீண்ட காலமாக அறியப்பட்டதாகும். மாஸனின் மிகவும் வெளிப்படையான வலதுசாரி தீவிரவாத பேச்சுக்களால் அவரை பதவியை விட்டு அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது, அவரது நீண்டகால துணைத் தலைவர் தோமஸ் ஹால்டன்வாங் அதே போக்கைத் தொடர்ந்தார்.

அரசியலமைப்புப் பாதுகாப்பிற்கான கூட்டாட்சி அலுவலகம் (Bundesamt für Verfassungsschutz), இரகசிய சேவை என அழைக்கப்படுவது பல ஆண்டுகளாக நவ-நாஜி பிரிவினருடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது இரகசிய செயல்பாட்டாளர்களின் பரந்த வலைப் பின்னல்களுக்கு நிதியளித்து வழிநடத்துகிறது. ஒன்பது புலம்பெயர்ந்தோர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியின் கொலைக்கு காரணமான நவ-நாஜி பயங்கரவாத கும்பலான தேசிய சோசலிஸ்ட் தலைமறைவு இயக்கத்தின் (NSU) சுற்றுவட்டத்தில் 40 முகவர்களை புலனாய்வு அமைப்புகள் இருத்தியுள்ளன.

இடதுசாரிக் குழுக்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்களுக்காக அவமதிக்கப்படுகையில், இராணுவம் மற்றும் பொலிஸ்துறையில் உள்ள பல தீவிர வலதுசாரி பயங்கரவாத வலைப்பின்னல்களுக்கு இந்த உளவுச் சேவைகள் பாதுகாப்பை வழங்குகின்றன. ஹால மற்றும் ஹனாவ் நகரங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மற்றும் முன்னணி கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி வால்டர் லூப்கேயின் கொலைக்குப் பின்னரும் கூட, இந்த வலைப்பின்னல்களின் தலைவர்கள் உளவுச் சேவைகளுடன் இன்னமும் தொடர்பில் இருக்க முடிகிறது.

சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகார்!

சோசலிச சமத்துவக் கட்சி இரகசிய உளவுச் சேவைகளின் கண்காணிப்பின் கீழ் ஏன் வந்துள்ளது என்றால், அது இராணுவவாதத்தின் வளர்ச்சியையும், அரசியல் ஸ்தாபகத்தில் வலது பக்கம் நோக்கி பாரிய திருப்பத்தையும் எதிர்ப்பதாலும் மற்றும் உழைக்கும் மக்களிடையே அதற்கான பரந்த எதிர்ப்பை வெளிப்படுத்த முற்படுவதாலுமாகும். இக் கட்சி அரசு எந்திரத்தில் உள்ள வலதுசாரி சதியை அம்பலப்படுத்தியுள்ளதுடன் மற்றும் தொழிலாள வர்க்கத்தினுள் ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராடுகின்றது.

ஆனால் சோசலிச சமத்துவக் கட்சி மீதான தாக்குதல் ஒவ்வொரு முற்போக்கான இயக்கத்தின் மீதான தாக்குதலுமாகும். உள்துறை அமைச்சகம் வெற்றி பெற்றால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும். சமூக சமத்துவமின்மை, சுற்றுச்சூழலின் அழிவு, அரச அடக்குமுறை, இராணுவவாதம் மற்றும் முதலாளித்துவ சமூகத்தின் எந்தவொரு மோசமான நிலைக்கும் எதிராக போராடும் அனைவரையும் குறிவைக்க இது பயன்படுத்தப்படலாம். உள்துறை அமைச்சகத்தின் சட்டக் கடிதத்தின் தர்க்கத்தை நோக்கினால், இத்தகைய தாக்குதல்கள் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்கள், மார்க்சிச இலக்கியங்களை விற்கும் புத்தகக் கடைகள் அல்லது விமர்சனரீதியான கலைஞர்கள், செய்தித்துறையினர் மற்றும் புத்திஜீவிகளுக்கும் எதிராக திருப்பப்படலாம்.

சோசலிச சமத்துவக் கட்சிக்கு எதிரான கடிதத்தில் உருவாக்கப்பட்ட வாதங்கள் ஏற்கெனவே மற்ற இடதுசாரி குழுக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, இடதுசாரி செய்தித்தாள் Junge Welt இன் கண்காணிப்பு பற்றி இடது கட்சி மே மாதம் முன்வைத்த பாராளுமன்றக் கேள்விக்கு பதிலளித்த அரசாங்கம், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸைப் பற்றிக் குறிப்பிட்டு சமூக வர்க்கங்களின் இருப்பை அது ஏற்றுக்கொள்கின்றது என்ற உண்மையை மேற்கோள் காட்டி அரசாங்கம் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. பல இடதுசாரி இசைக் குழுக்கள், பாசிச எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் குழுவான “Ende Gelände” ஆகியவை கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, இரகசிய சேவையின் வருடாந்த ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளன.

கருத்துகளின் அடிப்படையில் (Gesinnungsjustiz) வழக்குத் தொடுக்கும் இந்த வடிவம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்! ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க விரும்புவோர் மற்றும் தீவிர வலதுசாரிகளின் ஆபத்தை எதிர்க்க விரும்புபவர்கள் ஜேர்மன் இரகசியப் பிரிவினரின் இந்தத் தாக்குதலுக்கு எதிராக எதிர்ப்புத் தெரிவிக்கவும், சோசலிச சமத்துவக் கட்சியை பாதுகாக்கவும் மீண்டும் அழைப்பு விடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் மற்ற அனைத்து இடதுசாரி குழுக்கள் மீதான இரகசிய சேவைகளின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மேலும் ஜனநாயக விரோத சதிகளுக்கான விளைநிலமான இந்த வலதுசாரி அமைப்பு கலைக்கப்பட்டவேண்டும்.

change.org இல் இணையவழி மனுவில் கையொப்பமிடுங்கள்! ஆதரவு அறிக்கைகள், படங்கள் மற்றும் ஒளிப்பதிவுகளை சமூக ஊடகங்களில் #DefendSGP ஹேஷ்டேக்குடன் இடுகையிடவும்

Loading