ஜேர்மனியின் உள்நாட்டு உளவு நிறுவனம் தீவிர வலதுசாரிகளை எவ்வாறு ஊக்குவிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜேர்மனியின் முன்னணி வாராந்திர செய்தி இதழான Der Spiegel சமீபத்தில் 2012 முதல் 2018 வரை ஜேர்மனியின் உள்நாட்டு உளவுத்துறை அமைப்பின் (Verfassungsschutz) தலைவரான ஹென்ஸ்-கியோர்க் மாஸன் பற்றிய நீண்ட பின்னணிக் கட்டுரையை வெளியிட்டது. அந்தக் கட்டுரை “...மாஸன் உயர் பதவியில் இருந்து தனது விருப்பத்திற்கு மாறாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் தீவிரவாதியாகினாரா? அல்லது அவர் முன்பே தனது வலது தீவிரவாத நிலைப்பாட்டை வளர்த்துக் கொண்டாரா? உளவுத்துறை அமைப்பில் மாஸன் எந்த அளவிற்கு அரசியல் செல்வாக்கு செலுத்தினார்? என்ற கேள்விகளை எழுப்பியது.

2012இல் ஹென்ஸ் ஜியோர்க் மாஸன் (Image: BMI / Sandy Thieme / CC BY-SA 3.0)

உண்மையில், இந்த கேள்விக்கான பதில் நீண்டகாலமாக தெளிவாக உள்ளது. ஜேர்மனியின் தீவிர வலதுசாரி மாற்று (AfD) மூலம் ஜேர்மனியின் புகலிடச் சட்டங்கள் மற்றும் அகதிகளுக்கு எதிராக கருத்துக்கள் முன்னெக்கப்படுவதற்கு முன்பே மாஸன் அவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தார். உளவுத்துறை அமைப்பின் தலைவராக, மாஸன் பல சந்தர்ப்பங்களில் AfD இன் தலைவர்களை சந்தித்து அவர் தலைமையிலான அமைப்பினால் அவர்கள் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க உதவினார். இறுதியாக நவம்பர் 2018 இல் கெம்னிட்ஸ் நகரில் எதிர்ப்புப் புயலைத் தூண்டிய ஒரு தீவிரவலதுசாரி ஆர்ப்பாட்டத்தை பாதுகாத்து மாஸன் பேசியதைத் தொடர்ந்து ஜேர்மன் அரசாங்கத்திற்கு அவரை தற்காலிக ஓய்வுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

மாஸன் அதி-வலதுசாரி தீவிரவாதிகளை பாதுகாத்து ஊக்குவித்த அதே நேரத்தில், அவர் பாசிஸ்டுகளுக்கு எதிரானவர்களையும், போரை எதிர்ப்பவர்களையும் மற்றும் சோசலிஸ்டுகளையும் கடுமையாக ஒடுக்கினார். உளவுத்துறை அமைப்பின் வருடாந்த அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சியை (Sozialistische Gleichheitspartei -SGP) ஒரு 'இடதுசாரி தீவிரவாத' அமைப்பாக பட்டியலிடுவதற்கும் மாஸனே பொறுப்பானவராகும். அவர் கட்சியை உத்தியோகபூர்வ கண்காணிப்புக்கு உட்படுத்தினார். ஏனெனில் மத்திய உள்துறை அமைச்சகம் பின்னர் வாதிட்டது போல், கட்சி 'முதலாளித்துவத்தை, தேசியவாதத்தை, ஏகாதிபத்தியத்தையும் இராணுவவாதத்தையும் எதிர்க்கிறது” என்று கூறப்பட்டது.

இதற்கிடையில், மாஸன் தீவிர வலதுசாரி முகாமில் மிகவும் ஆழமாக மூழ்கிவிட்டமை, Der Spiegel எழுதுவது போல், இது “கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கு [CDU] மட்டுமல்ல, பணியாளர்களை 1,100ல் இருந்து 3,500 ஆக அதிகரித்து ஆறு ஆண்டுகளாக ஹான்ஸ்-கியோர்க் மாஸன் தலைமை தாங்கிய அமைப்பிற்கும் ஒரு பிரச்சனை”. 'மாஸன் அலுவலகத்தை களங்கப்படுத்துகிறார்' என்று ஒரு பாதுகாப்பு அதிகாரி மேற்கோள் காட்டியது.

மாதத்திற்கு 6,000 யூரோக்கள் அரசு ஓய்வூதியம் பெறுவதாக மதிப்பிடப்பட்ட மாஸன் ஓய்வு காலத்தின் போது தனது பாசிச நிலைப்பாட்டை அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறார். அவர் பாதுகாப்பற்ற அகதிகள் மீதான தாக்குதல்களை மூடிமறைத்து, தீவிர வலதுசாரி சதி கோட்பாடுகளை பரப்பினார். 'கோவிட் தடுப்பூசிகளை தடைசெய்ய' அழைப்பு விடுத்தார் மற்றும் 'சோசலிச சித்தாந்தத்தின் ஆபத்துகள்' தொடர்பாக மற்றும் இடதுசாரிகளால் சமூகம் அழிக்கப்படுவதாகக் கூறப்படுவதை ஆதரித்தார்.

மாஸன் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளார் மற்றும் தற்காலிகமாக WerteUnion இல் (மதிப்புகளின் ஒன்றியத்தில்) சேர்ந்தார். தீவிர பழமைவாத WerteUnion இன் தலைவர் மக்ஸ் ஒற்ற (Max Otte) ஆவார். அவர் ஜேர்மனியின் ஜனாதிபதி பதவிக்கு AfD இன் உத்தியோகபூர்வ வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜேர்மனியின் புதிய வலதுகளின் மைய அமைப்பான Junge Freiheit இலும் மாசென் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். மேலும் Alt-Right இயக்கத்தின் தளமான Gettr என்ற சமூக வலைப்பின்னலில் செயலில் உள்ளார்.

'நாளுக்கு நாள், வலதுசாரி சித்தாந்தவாதிகள் மற்றும் சதி ஆதரவாளர்களின் உலகில் மாஸன் ஆழமாக மூழ்கி வருவதாகத் தெரிகிறது' என Der Spiegel எழுதியது. உளவுத்துறை அமைப்பில் மாஸனின் வாரிசு மற்றும் பல ஆண்டுகளாக அவரது உதவியாளராக இருந்த தோமஸ் ஹால்டன்வாங் (Thomas Haldenwang) 'தனது முன்னாள் தலைவரிடம் இருந்து முடிந்தவரை தன்னைத் தூர விலக்கிக் கொள்ள' முயற்சிக்கிறார். பத்திரிகையின்படி, ஹால்டன்வாங் “நாட்டில் உள்ள பழைய மற்றும் புதிய தீவிர வலதுசாரி தீவிரவாதிகளுக்கு எதிராக உறுதியான போக்கை எடுக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் மாஸனின் ஒவ்வொரு புதிய ஆத்திரமூட்டலும் அவரது முயற்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது”.

Der Spiegel ஹால்டன்வாங்கிற்கு உதவ முயல்கின்றது. மாஸன் ஏற்கனவே தனது சொந்த நற்பெயரை அழித்திருந்தால், குறைந்தபட்சம் உளவுத்துறையின் நற்பெயரையாவது காப்பாற்ற வேண்டும். Der Spiegel இல் உள்ள பத்திரிகையாளர்கள், “மத்திய மற்றும் மாநில உளவுத்துறைகளில் பணிபுரியும் மற்றும் முன்னாள் ஊழியர்களுடன் பேசினர்”. மேலும் “மாஸன் பதவியில் இருந்த காலத்திலிருந்து இரகசியமானதும் மற்றும் நம்பிக்கைக்குரியதும் என வகைப்படுத்தப்பட்ட ஆவணங்களை மதிப்பீடு செய்தனர்.” கட்டுரையின் ஆசிரியர்கள் ஏற்கனவே பொதுவான அறியப்பட்டுள்ளவற்றை மட்டுமே வெளிப்படுத்த மிகுந்த சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் அறிக்கையின் மதிப்பீடு எவ்வாறாயினும் பேரழிவுகரமானது.

தகவல்களின் ஒரு சுருக்கம், உளவுத்துறை அது போராட வேண்டிய தீவிர வலதுசாரி தீவிரவாதத்தின் ஒரு மையமாக இருக்கின்றது என்பதை தெளிவுபடுத்துகிறது. AfD மற்றும் நாட்டின் தீவிரமிக்க நவ-நாஜி பிரிவுகள் அவற்றின் வெற்றிகளுக்கு பெரும்பாலும் உளவுத்துறை உடந்தையாக இருந்தமைக்கு கடமைப்பட்டுள்ளன. தீவிர வலதுசாரிகளின் பக்கத்தில் இருந்து வெளிப்படும் ஆபத்துக்களுக்கு எதிரான எந்தவொரு முக்கியமான போராட்டமும், இந்த ஒருவரும் ஊடுருவிப்பார்க்கமுடியாத மற்றும் சதிசெய்யும் அமைப்பை கலைப்பதில் இருந்து தொடங்க வேண்டும்.

அனைத்து கட்சிகளினது உள்துறை அமைச்சர்களினதும் ஆதரவு

மாஸன் மிகவும் பரந்த பிரச்சனையின் மிகத் தெளிவான வெளிப்பாடு மட்டுமே. அவருடைய வலதுசாரிக் கருத்துக்கள் ஆரம்பத்திலேயே அறியப்பட்டிருந்தாலும் அல்லது அதன் காரணமாகவே அவருக்கு தொடர்ச்சியான உள்துறை அமைச்சர்கள் மற்றும் ஜேர்மனியின் அனைத்து பாராளுமன்றக் கட்சிகளும் பதவி உயர்வு அளித்து ஆதரவளித்தனர்.

அந்த நேரத்தில் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை அரசாங்கத்தின் உள்துறை அமைச்சராக இருந்த ஒட்டோ ஷில்லி (Otto Schily - சமூக ஜனநாயகக் கட்சி - SPD) இன் கீழ் அவர் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஷிலியின் கீழ், மாஸன் மத்திய உள்துறை அமைச்சகத்தின் தலைவரானார். ஜேர்மனியில் பிறந்து வளர்ந்த முராத் குர்னாஸ் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றாலும், ஜேர்மனிக்குத் திரும்ப அனுமதிக்கப்படாது இருப்பதற்கும், அவர் ஐந்து வருடங்களுக்கு இழிவான அமெரிக்க குவாண்டனாமோ சிறைச்சாலையில் இருப்பதையும் மாஸன் உறுதி செய்தார்.

2012 இல், உள்துறை மந்திரி ஹான்ஸ்-பீட்டர் பிரீட்ரிச் (கிறிஸ்தவ சமூக ஒன்றியம் - CSU) NSU (National Socialist Underground - தேசிய சோசலிச தலைமறைவு அமைப்பு) என்ற பயங்கரவாதக் குழுவைச் சுற்றியுள்ள ஊழலை மறைப்பதற்காக உளவுத்துறையின் தலைவராக மாஸனை நியமித்தார். மாஸனின் நியமனத்திற்கு சற்று முன்னர், நவ-நாஜிகளின் மூவர் பயங்கரவாத செயல்களின் பின்னர் கண்டறிப்பட்டனர். இதன் போது அவர்கள் 10 இனவெறி கொலைகள், பல குண்டுவெடிப்புகள் மற்றும் பல வங்கிக் கொள்ளைகளை செய்திருந்தனர். இவை அனைத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களின் முன் நடத்தப்பட்டன. NSU இனைச் சுற்றியுள்ளவர்களிடையே டஜன் கணக்கான இரகசிய முகவர்கள் செயலில் இருந்த போதிலும், உளவுத்துறை, பாசிசக் குழுவின் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாது எனக் கூறி, தொடர்புடைய இரகசிய கோப்புகளை அழித்தது.

ஜேர்மனியின் இடது கட்சியும் கூட பதவியேற்றவுடன், மாஸனுக்கு அதன் கதவுகளைத் திறந்து, பேர்லினில் பொதுக் கூட்டத்தில் பங்கு பெற அவரை அழைப்புவிட்டது.

உளவுத்துறையின் புதிய தலைவராக, மாஸன் தன்னை 'திரு. சுத்தப்படுத்துபவர் (Mister Clean)' என்று அணிவகுத்துக்கொண்டு 'பாதுகாப்பு பெட்டிகளை திறக்கும் நாள்' என்று அறிவித்தார். இரகசிய கோப்புகள் திறக்கப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.

அதன் ஆராய்ச்சியின் அடிப்படையில், Der Spiegel “இந்த செயல்பாடு ஒருபோதும் மேற்கொள்ளப்படவில்லை” என்று முடித்தது. நவ-நாஜி வலைப்பின்னல் அப்படியே இருந்தது. 2019 இல் காசெல் (Kassel) மாவட்டத் தலைவர் வால்டர் லூப்கவை படுகொலை செய்த ஸ்டீபன் ஏர்ன்ஸ்ட் இந்த வலைப்பின்னலின் ஒரு பகுதியாக இருந்தார். ஏர்ன்ஸ்ட் NSU உறுப்பினர்களை தனிப்பட்ட முறையில் அறிந்திருந்ததுடன், அவர்களைப் போலவே உளவுத்துறையின் இரகசிய முகவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருந்தார்.

பிரீட்ரிச் இற்கு பின்னர் பதவிக்குவந்த மத்திய உள்துறை மந்திரிகளான தோமஸ் டி மைசியர் (CDU) மற்றும் ஹார்ஸ்ட் சீஹோபர் (CSU) ஆகியோரும் மாஸனைப் பாதுகாத்தனர். மாஸன் அவரது நண்பரான மத்திய பொலீஸ்துறைத் தலைவர் டீட்டர் ரோமானுடன் சேர்ந்து, சான்சிலர் அங்கேலா மேர்க்கலின் அகதிகள் கொள்கையை 2015 இல் செய்தி ஆசிரியர்களிடம் கண்டித்தபோது, டி மைசியர் தனது விசுவாசமற்ற அதிகாரியை ஓய்வுபெற அனுப்பத் துணியவில்லை. Der Spiegel இன் படி, டி மைசியர், 'அதிகமாக தனது சொந்த நிகழ்ச்சி நிரலைத் தொடரவும் மற்றும் அதன்படி அவரது உள்நாட்டு உளவுத்துறை சேவையை சீரமைக்கவும்” மாஸனை அனுமதித்தார்.

ஹோர்ஸ்ட் சீஹோபர் மாஸனைப் பதவி உயர்வு கொடுத்து அவரை உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்புக்கான அரச செயலாளராக மாற்ற விரும்பினார். அவரது புதிய பதவியில், மாஸன் நாட்டின் அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களுக்கும் பொறுப்பாக இருந்திருப்பார். பலத்த எதிர்ப்புகளுக்குப் பின்னர்தான் சீஹோஃபர் தனது திட்டத்தை கைவிட்டு மாஸனை தற்காலிக ஓய்வுக்கு அனுப்பினார்.

மாஸன் பதவியைவிட்டு வெளியேறிய பின்னர் AfD ஐப் பாதுகாப்பதற்கான தனது முயற்சிகளை சீஹோபர் தொடர்ந்தார். Süddeutsche Zeitung பத்திரிகை இந்த ஆண்டு ஜனவரி 21 அன்று, உள்துறை மந்திரி தனிப்பட்ட முறையில் தலையிட்டு, AfD பற்றிய 800 பக்க இரகசிய அறிக்கையை உளவுத்துறையில் இல்லாதுபோகச் செய்தார் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய வெறுப்பு மற்றும் இனவெறி அறிக்கைகளை தீவிர வலதுசாரி தீவிரவாதத்தின் எடுத்துக்காட்டுகளாக வகைப்படுத்த சீஹோபர் தயாராக இருக்கவில்லை.

பல ஆண்டுகளாக, மாஸன் AfD மற்றும் பியோர்ன் ஹொக்க தலைமையிலான அதன் நவ-நாஜி 'இன” (völkisch) பிரிவினை பற்றி கேள்வியெழுப்ப மறுத்துவிட்டார். எவ்வாறாயினும், Der Spiegel இன் ஆராய்ச்சியின்படி, பல மாநில உளவுத்துறை அமைப்புகள் அத்தகைய போக்கை ஆதரித்தன. 2015 இல், AfD ஜேர்மன் கூட்டாட்சி நாடாளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு முன்பு, மாஸன் அப்போதைய AfD கட்சித் தலைவர் பிரவ்க்க பெட்ரி ஐ குறைந்தது இரண்டு முறை சந்தித்தார். Der Spiegel இன் கூற்றுப்படி, 'மாஸன் உளவுத்துறையால் இலக்குவைக்கப்படுவதை தவிர்ப்பது எப்படி என்பது பற்றி கட்சிக்கு உதவிக்குறிப்புகளை வழங்கினார் என்ற சந்தேகம் உள்ளது”.

மாஸன் இவ்வாறு நடக்கவில்லை மறுக்கிறார். ஆனால் எல்லா சூழ்நிலை ஆதாரங்களும் அது நடந்ததைச் சுட்டிக்காட்டுகின்றன. பெட்ரி உடனான இரண்டு சந்திப்புகள் பற்றி எவ்வித குறிப்புகளும் இடையில் இருக்கவில்லை. மாஸன் சார்லாந்து உள்துறை அமைச்சகத்தின் ஒரு மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு குறிப்பாக தீவிரமான சார்லாந்து AfD இன் கண்காணிப்பு விவாதிக்கப்பட்டது. அதற்கு சிறிது காலத்திற்குப் பின்னர், பெட்ரி மீண்டும் மாஸனை சந்தித்த பின்னர் சார்லாந்து மாநில கட்சிப் பிரிவை கலைத்தார்.

Der Spiegel இன் கூற்றுப்படி, புதிய வலதுசாரிகள், அடையாள இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் மக்களின AfD உறுப்பினர்களின் கருத்தியல் பயிற்றுவித்தல் பள்ளியான அரச கொள்கைகளுக்கான Götz Kubitschek’s அமைப்பு மீதான கண்காணிப்பையும் மாஸன் தடுத்துள்ளார்.

புதிய உள்துறை மந்திரியும் இந்த நிலைப்பாட்டிற்கு கொண்டுவரப்படுகிறார்

இதற்கிடையில், AfD இல் ஆதிக்கம் செலுத்துவது பாசிச ஹொக்கவின் பிரிவாகும். கட்சியின் நிறுவனர் பெர்ன்ட் லுக்க மற்றும் பிரவ்க்க பெட்ரி ஆகியோருக்குப் பின்னர், AfDஇல் இருந்து இராஜினாமா செய்த மூன்றாவது முக்கிய நபர் ஜோர்க் மொய்த்தன் ஆவார். கட்சி வலதுசாரிப் பக்கமாக வெகுதூரம் நகர்ந்துவிட்டதாக வாதிட்டு ஜனவரி மாத இறுதியில் மொய்த்தன் இராஜினாமா செய்தார். மாஸன் மற்றும் சீஹோபர் ஆகியோரின் பாதுகாப்புக் கரம்தான் இந்த வெளிப்படையான பாசிசப் பிரிவு AfD இல் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த உதவியது.

ஹால்டன்வாங்கின் கீழ் நிலைமை மாறவில்லை. உளவுத்துறை அமைப்பு என்பது ஒரு அரசுக்குள் இருக்கும் ஒரு அரசாகும். அது நீண்டகாலமாக எந்த ஜனநாயகக் கட்டுப்பாட்டையும் தவிர்க்கிறது. புதிய உள்துறை மந்திரி நான்சி ஃபேசர் (Nancy Faeser - SPD) மீதான சமீபத்திய தாக்குதல்களால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பேசர் கடந்த கோடையில் நாஜி ஆட்சியால் துன்புறுத்தப்பட்டவர்களின் சங்கம்/பாசிச எதிர்ப்பாளர்களின் கூட்டமைப்பு (VVN-BdA) இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஏனெனில், ஹெஸ்ஸ மாநிலத்தில் SPD இன் முன்னாள் தலைவராக இருந்தபோது ஃபேசருக்கு அனுப்பப்பட்ட பாசிச 'NSU 2.0' இனால் கையொப்பமிடப்பட்ட கொலை மிரட்டல்களை இக் கட்டுரை கையாள்கிறது.

VVN-BdA பாசிச எதிர்ப்பு கல்வியூட்டலை மேற்கொள்கிறது. சமீபத்தில் இறந்த அவுஷ்விட்ஸ் இல் உயிர்பிழைத்த எஸ்தர் பெஜரானோவும் அதன் சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். இந்த அமைப்பில் நாஜி ஆட்சியிலிருந்து தப்பியிருக்கும் பிற பாதிக்கப்பட்டவர்களும் மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவர்கள் (DKP, நாஜிகளால் இரக்கமின்றி அடக்கப்பட்ட KPDயின் வாரிசு அமைப்பு) உட்பட முன்னாள் வதை முகாம் கைதிகளும் அடங்குவர்.

DKP உறுப்பினர்கள் இருப்பதால் VVN-BdA மத்திய மட்டத்திலும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா, ஹம்பேர்க் மற்றும் பாடன்-வூர்ட்டெம்பேர்க் மாநிலங்களிலும் உளவுத்துறையால் தொடர்ந்து உளவு பார்க்கப்படுகிறது. பவேரியாவின் உளவுத்துறை அதன் அறிக்கையில் VVN-BdA ஐ 'ஜேர்மனியில் பாசிச எதிர்ப்பு துறையில் செயல்படும் மிகப்பெரிய இடதுசாரி தீவிரவாத தாக்கம் கொண்ட அமைப்பு' என்று விவரிக்கும் அளவிற்கு செல்கிறது. இதன் பொருள் நாஜிகளின் குற்றங்களைப் பற்றிய கல்வியூட்டல் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என்று கருதப்படுகிறது.

அவரது கட்டுரையின் காரணமாக, ஃபேசர் ஒரு 'இடதுசாரி தீவிரவாத' அமைப்புடன் ஒத்துழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தது, தீவிர வலதுசாரிகளின் முக்கிய பத்திரிகையான அங்கமான Junge Freiheit ஆகும். மஞ்சள் பத்திரிகையான Bild மற்றும் பல CDU பிரதிநிதிகள் பின்னர் ஆர்வத்துடன் இப்பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

உண்மையில், பழைமைவாத Frankfurter Allgemeine Zeitung கூட ஃபேசர் 'இடதுபுறத்தில் இல்லை, மாறாக SPD இன் வலதுசாரி பக்கத்தில்' இருக்கிறார் என்று சான்றளிக்கிறது. அது எழுதுகிறது: “முழு தகுதி பெற்ற வழக்கறிஞரான இவர், முதலாளித்துவத்தை உள்ளே இருந்து அழிப்பதற்காக பிராங்பேர்ட்டின் வங்கி சுற்றுவட்டத்தில் உள்ள ஒரு பெரிய சர்வதேச சட்ட நிறுவனத்தில் பணியாற்றவில்லை. செய்தித்தாள் தொடர்கிறது: “அவரால் அங்கு நல்ல பணம் சம்பாதிக்க முடிந்தது, மேலும் சுதந்திர சந்தை தாராளவாத FDP ஆதரவாளர்கள் பலர் கனவு மட்டுமே காணக்கூடிய ஒரு வேலையை அவரால் பெறமுடிந்தது. ஃபேசர் அதிக பழமைவாத வாக்காளர்களை ஈர்க்கும் ஒரு சமூக ஜனநாயகவாதிகளில் ஒருவர்”.

1918 நவம்பர் புரட்சியின் போது புரட்சிகர தொழிலாளர்கள் மற்றும் மாலுமிகள் மீது இரத்தக்களரி அடக்குமுறைக்கு உத்தரவிட்ட குஸ்டாவ் நொஸ்க (Gustav Noske) முதல் அனைத்து சமூக ஜனநாயக கட்சி மந்திரிகளையும் போலவே ஃபேசர் இந்த தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றுவார். அரசு அமைப்பினுள் வலதுசாரி சக்திகளை கட்டுப்படுத்த முற்படுவதற்கு பதிலாக, அவர்களுக்கான தனது சொந்த நம்பகத்தன்மையை நிரூபிப்பதன் மூலம் அவர்களின் நம்பிக்கையை எப்போதும் தேடுவார்.

தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அரசு அமைப்பினுள் வலதுசாரி சதிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இந்த சூழலில், உளவுத்துறைக்கு (Verfassungsschutz) எதிரான சோசலிச சமத்துவக் கட்சி (SGP) தொடுத்துள்ள சட்டபூர்வ வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

சோசலிச சமத்துவக் கட்சி உள்நாட்டு உளவுத்துறையினால் செய்யப்படும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலை ஏற்கத் தயாராக இல்லை. இது மாஸன் வெளியேறிய பின்னரும் தடையின்றி தொடர்கிறது. எனவே சோசலிச சமத்துவக் கட்சி உள்துறை அமைச்சகத்தின் மீது வழக்குத் தொடர்ந்ததுடன் மற்றும் உளவுத்துறைக்கு ஆதரவாக தீர்ப்பளித்த பேர்லின் நிர்வாக நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளது.

அனைத்து உலக சோசலிச வலைத் தள வாசகர்களையும் சோசலிச சமத்துவக் கட்சியின் வழக்கை ஆதரிக்குமாறு நாங்கள் அழைக்கிறோம். எங்கள் மனுவில் கையொப்பமிட்டு, எங்கள் சட்டச் செலவுகளுக்கு நன்கொடை அளித்து, வழக்கு தொடர்பான தகவலைப் பரப்புங்கள்.

Loading