இலங்கை ஜனாதிபதி சிக்கன நடவடிக்கைக்கு எதிரான வெகுஜன போராட்டங்களை நசுக்க அவசரகால நிலையை பிரகடனம் செய்தார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, அத்தியவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் நீண்ட நாளாந்த மின்வெட்டு சம்பந்தமாக கொழும்பிலும் நாடு முழுவதிலும் அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ நேற்று அவசரகால நிலையை அமுல்படுத்தினார்.

மார்ச் 31, 2022 வியாழன், இலங்கையின் கொழும்பின் புறநகரில் உள்ள இலங்கை ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நடந்த போராட்டத்தின் போது இலங்கையர் ஒருவர் அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்புகிறார்.

'பொது பாதுகாப்பு, பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் சமூகத்தின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பொருட்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல்' ஆகியவற்றிற்காக அவசரநிலை அவசியமானது என்று அந்த அறிவிப்பு கூறியது. 'விநியோகங்கள் மற்றும் சேவைகளைப் பராமரித்தல்' என்பதில், இராஜபக்ஷவின் அவசரகாலச் சட்டத்தின் உண்மையான நோக்கம், தற்போதைய எதிர்ப்புக்களை நசுக்குவது மட்டுமன்றி, அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் எழுச்சி அலைகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

ஏற்றுமதி வருமானம், சுற்றுலாப் பயணிகளின் வருகை, புலம்பெயர் தொழிலாளர்களிடம் இருந்து வரும் பணம் ஆகியவற்றிலான சரிவு மற்றும் அதிகரித்து வரும் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துதல் போன்றவற்றால் இராஜபக்ஷ அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. இது கோவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் இப்போது நடந்து வரும் போரினால் மோசமடைந்துள்ளது.

பெப்ரவரியில், ஒன்றரை மாத இறக்குமதிகளுக்கு மட்டுமே இலங்கைக்கு அந்நிய செலாவணி கையிருப்பு இருந்தது. இது எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மருந்து விநியோகங்களில் கூட கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் இல்லாததால் மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், எரிபொருள் மற்றும் கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் சமையல் எரிவாயுக்காக நீண்ட வரிசையில் நிற்பது பொதுவானதாக ஆகியுள்ளது.

கடந்த மாதம், சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டமை, ரூபாயின் கூடுதலான மதிப்பிழப்பு, மானியங்களில் வெட்டுக்கள் மற்றும் அரச துறையில் மறுசீரமைப்பும் தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஊதியங்கள் மீது இன்னும் ஆழமான தாக்குதல்களைக் குறிக்கும்.

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிரான தற்போதைய எதிர்ப்புக்கள் மேலும் மேலும் தன்னிச்சையான மற்றும் வெகுஜனத் தன்மையை எடுத்து வருகின்றன. மார்ச் 31 அன்று, சுமார் 100 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பின் புறநகர்ப் பகுதியான நுகேகொட, மிரிஹானாவில் உள்ள ஜனாதிபதி இராஜபக்ஷவின் தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்லும் பாதையை மறித்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியின் வீட்டை முற்றுகையிட முயன்றதோடு, 'கோடா வீட்டுக்குப் போ' என்று கோஷமிட்டதுடன் அவரை பதவி விலகுமாறு கோரினர்.

சுதந்திர வீடியோ ஊடகவியலாளர் சஞ்சீவ கல்லகே உட்பட 50 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பொலிஸாரால் தாக்கப்பட்டு காயமடைந்த கல்லகே, சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு செல்ல விடாமல் பொலிஸார் தன்னை தடுத்ததாக முறைப்பாடு செய்துள்ளார்.

ஆங்கில மொழி டெய்லி மிரர் பத்திரிகையின் நிசல் பதுகே, வருண வன்னியாராச்சி ஆகிய இரு ஊடகவியலாளர்கள், கற்கள் மற்றும் பிற மழுங்கிய பொருட்களால் தாக்கப்பட்டதில் அவர்களின் தலை மற்றும் கைகளில் பல காயங்களுக்கு உள்ளாகினர். போராட்டக்காரர்களுடனான மோதலில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருபத்தி எட்டு பேர் நீதிமன்றங்களுக்கு முன் கொண்டுவரப்பட்டனர். 22 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏனைய ஆறு பேர் ஏப்ரல் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பொலிஸ் அடக்குமுறையின் போது ஏற்பட்ட காயங்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

மிரிஹான போராட்டத்தின் போது பொலிஸ் பஸ் மற்றும் ஜீப் உட்பட சில வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளி காட்சிகளில் முகவர் ஆத்திரமூட்டல்காரர்களை காணக்கூடியதாக உள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ, குறித்த பஸ், போராட்டக்காரர்கள் இருந்த இடத்தில் இல்லாமல், பொலிசார் இருக்கும் பக்கத்திலேயே இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பஸ்சுக்கு தீ வைப்பதைக் காணலாம். அந்த தனிநபரை தடுக்க பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது, போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைப் பிரயோகம் உட்பட அடுத்தடுத்த பொலிஸ் தாக்குதலை நியாயப்படுத்த, இந்தச் சம்பவம் பயன்படுத்தப்பட்டது என்று பலமாக பரிந்துரைக்கிறது.

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அஜித் பெரேரா, 26, அல் ஜசீரா ஊடகத்திடம் பின்வருமாறு கூறினார்: “தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்சார வெட்டு போன்றவற்றை எதிர்க்கவே நாங்கள் வந்தோம்... ஜனாதிபதியின் வீட்டிற்கு வருவதற்கான முடிவு தன்னிச்சையானது. இவ்வளவு அழிவுகளை ஏற்படுத்திய ஜனாதிபதி வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.” மற்றொரு எதிர்பாளரான முகமது அஸ்ரி, 21, கூறியதாவது, “பொருளாதாரம் மிகவும் மோசமாகிவிட்டது, எங்களால் இரண்டு வேளை உணவை [ஒரு நாளைக்கு] கூட சாப்பிட முடியாது. என் வாழ்நாளில் இவ்வளவு மோசமான விஷயங்கள் இருந்ததில்லை. கோட்டா போக வேண்டும்.”

களனி மற்றும் கல்கிசை உட்பட கொழும்பு பிரதேசத்தின் ஏனைய இடங்களில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. களனியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பில் இருந்து மலையகத் தலைநகர் கண்டி வரையிலான பிரதான நெடுஞ்சாலையை மறித்து மரக்குற்றிகளை எரித்தனர். போராட்டக்காரர் சமன் வனசிங்க, 'நான் கோபமாக இருக்கிறேன், எல்லோரும் கோபமாக இருக்கிறார்கள்... இப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? அனைத்து இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும்” என்று ஊடகங்களுக்குக் தெரிவித்தார்.

போராட்டங்கள் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், கொழும்பின் வடக்கு, தெற்கு மற்றும் மத்தியப் பிரிவுகளிலும், நுகேகொட, களனி மற்றும் கல்கிசையிலும் பொலிசார் உடனடி ஊரடங்குச் சட்டத்தை விதித்தனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில், மேல் மாகாணம் முழுவதும் நள்ளிரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பொலிஸ் மா அதிபர் அறிவித்தார்.

அனைத்து எதிர்ப்புக்களையும் குற்றமாக்க இராஜபக்ஷ அரசாங்கம் மேற்கொள்ளும் நகர்வுகளை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு, இராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் நடந்த போராட்டங்களின் பின்னணியில் 'ஒரு தீவிரவாதக் குழு' இருப்பதாக வெள்ளியன்று அறிவித்தது. இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்களில் பலர் 'ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரவாதிகள்' என்றும் அது கூறியுள்ளது.

'தீவிரவாதம்' என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு இனவாத பெயர்விசேடனம் சேர்க்கப்படவில்லை. எவ்வாறாயினும், வெகுஜன ஆர்ப்பாட்டங்களைத் தடம் புரட்ட முயற்சிப்பதற்கும், அரச அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும் அவர்கள் இனவாதத்தைப் பயன்படுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்காது. இராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்தைத் தூண்டுவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளால் 2019 ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத குண்டுத் தாக்குதலை பற்றிக்கொண்டதோடு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தமிழர் விரோத உணர்வைத் தூண்டிவந்துள்ளார்.

இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் ஏப்ரல் 3, ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு மற்றும் ஏனைய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த சமூக ஊடகங்கள் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் 'நமக்காகவும், எமது நாட்டிற்காகவும், எமது எதிர்காலத்திற்காகவும்' வீதிக்கு வருமாறு மக்களை வலியுறுத்தியுள்ளனர். எந்தவொரு அரசியல் கட்சியின் பெயரும் இல்லாமல் கையால் எழுதப்பட்ட பதாகைகளை கொண்டு வருமாறு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.), மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் அரசாங்கக் கூட்டாளியான தேசிய சுதந்திர முன்னணி (தே.சு.மு.) போன்ற பாராளுமன்ற எதிர்க் கட்சிகள் திட்டமிடப்பட்ட எதிர்ப்புக்களில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துள்ளன. அவர்களின் பதில், பாரிய அரசாங்க எதிர்ப்பு அமைதியின்மை அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் உருவாகி வருவதாக அரசியல் ஸ்தாபனத்தில் நிலவும் அச்சத்தை சுட்டிக்காட்டுகிறது.

'இந்த நெருக்கடிக்கு எதிராக பொது மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உண்டு' என்று ஜே.வி.பி. பதற்றத்துடன் அறிவித்த போதிலும், எதிர்ப்புக்களின் பின்னால் 'அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பொறுப்புக்கூறக்கூடிய அமைப்பாளர் அல்லது குழுவைக் காண முடியவில்லை' என்று கவலை தெரிவித்தது.

ஐ.தே.க. வியாழன் பிற்பகல் வெளியிடப்பட்ட அறிக்கை, 'அநாமதேய குழுக்களால் ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு போராட்டத்திலும் சேரப்போவதில்லை' என்று கூறியது. ஆர்ப்பாட்டங்களை 'அரபு வசந்தத்தின் இலங்கையின் பதிப்பு' என்று விவரித்த தேசிய சுதந்திர முன்னணி, தாம் உட்பட அரசாங்கக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள், ஏப்ரல் 3 எதிர்ப்புக்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்று மேலும் கூறியது.

பிரதான பாராளுமன்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), அரசாங்கத்திற்கு எதிராக வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயல்கிறது. ஐ.ம.ச. போராட்டங்களை ஆதரிப்பதாகக் கூறிய போதிலும், குறித்த ஏற்பாடுகளுக்கும் தங்கள் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்தது.

இராஜபக்ஷ அரசாங்கத்தை விமர்சிக்கும் அதே வேளை, ஐ.தே.க., ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.க்கும் அதன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்ட சிக்கன நடவடிக்கைகள் சம்பந்தமாக எந்த அடிப்படை எதிர்ப்பும் கொண்டிருக்கவில்லை. ஐ.தே.க. மற்றும் ஐ.ம.ச., முன்னர் சர்வதேச நாணய நிதியத்தை அணுகுமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஜே.வி.பி., சர்வதேச நாணய நிதிய நடவடிக்கைகள் குறித்து மௌனம் காப்பதானது அது ஆட்சியில் இருந்தால் அதே கொள்கைகளை அமுல்படுத்தும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

தனது சிக்கன நடவடிக்கைகள் இலகுவாக அமுல்படுத்த முடியாது, அது தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற வறியவர்களிடமிருந்து பாரிய எதிர்ப்பைத் தூண்டும் என்பதை இராஜபக்ஷ அரசாங்கம் நன்கு அறிந்துள்ளது. இதனாலேயே அது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சி வழிமுறைகளை அதிகளவில் நம்பியுள்ளது.

ஏப்ரல் 3 எதிர்ப்புக்கள் 'அரசியல் சார்பற்றதாக' இருக்க வேண்டும் என்று அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது அனைத்து பிரதான கட்சிகள் மீதும் காணப்படும் பரவலான பொது விரோதத்தை பிரதிபலிக்கிறது. அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் முழு அரசியல் ஸ்தாபனத்திற்கும் எதிரான அரசியல் போராட்டத்தை தாங்கள் எதிர்கொள்வதை தொழிலாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தாங்களே நடத்தும் போராட்டங்கள் எவ்வளவு பெரிய போர்க்குணமிக்கதாக இருந்தாலும், அவை உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியைத் தீர்க்கப் போவதில்லை. மையப் பிரச்சினை 'அரசியல் வேண்டாம்' என்பதல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் விட இலாபத்தை முன்னிலைப்படுத்தும் முதலாளித்துவ முறைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கிற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதே ஆகும்.

மார்ச் 30 அன்று, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வெளியிட்ட அறிக்கை கூறுவது போல்: “உழைக்கும் மக்கள் மற்றொரு முதலாளித்துவ அரசாங்கம் அதிகாரத்திற்கு வர அனுமதிக்க முடியாது. எந்தளவு அழுத்தம் கொடுத்தாலும் பேரம் பேசினாலும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை அது நிறுத்தப் போவதில்லை. தொழிலாளர்கள் விடயத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி சோசலிச முன்னோக்கிற்காகப் போராட வேண்டும்.

'சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.), சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மாறாக, இராஜபக்ஷ ஆட்சிக்கு பதிலாக வேறொரு முதலாளித்துவ அரசாங்கத்தை பதிலீடு செய்வதை அல்ல.'

Loading