இந்த மொழிபெயர்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையில், ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷவின் அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) கட்டளையிடப்பட்ட மூர்க்கமான சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட ஆரம்பித்துள்ளது. இது ஏற்கனவே தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் எதிர்கொள்ளும் மோசமான வாழ்க்கை நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) இந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முன்முயற்சி எடுக்க தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது. தொழிலாள வர்க்கம் அதன் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை ஒன்றுதிரட்டி, கிராமப்புற ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு, சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்தக் கூடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராட வேண்டும். இந்த வழியில் மட்டுமே உழைக்கும் மக்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அவநம்பிக்கையான சூழ்நிலைக்கு தீர்வு காண முடியும்.
கோவிட்-19 தொற்றுநோயால் தீவிரமடைந்துள்ள உலகப் பொருளாதார வீழ்ச்சியில் சிக்கித் தவித்த இலங்கை முதலாளித்துவம், 1948 இல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் பெற்ற பின்னர் கண்டிருக்காத ஒரு நெருக்கடிக்குள் மூழ்கியுள்ளது. உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதல் பொருளாதாரத்தை மேலும் பாதக்கின்றது.
நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு பெப்ரவரியில் 2.21 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. இது ஒன்றரை மாத இறக்குமதிக்கு கூட போதுமானதாக இல்லாததோடு இந்த ஆண்டு செலுத்தப்பட வேண்டிய 7 பில்லியன் டொலர் பாரிய வெளிநாட்டுக் கடனில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாக உள்ளது. இந்தியா, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிடம் இருந்து நாணய மாற்று நடவடிக்கைகளின் வடிவில் அடிக்கடி கடன் வாங்கியதிலேயே நாடு பிழைத்து வருகிறது.
பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில் செல்கிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் இறக்குமதி விலைகளால் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுகின்ற அதே சமயம், சுற்றுலா, ஏற்றுமதி மற்றும் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்து வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களில், ஜனாதிபதி இராஜபக்ஷ தனது அரசாங்கம் தேசத்தைக் காப்பாற்றும் என்று அறிவித்து, உழைக்கும் மக்களின் முதுகில் பொருளாதார நெருக்கடியின் சுமையை இடைவிடாது சுமத்தியுள்ளார். இந்த மாதம், ஒரு தொலைக்காட்சி உரையில், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பக்கம் திடீரென முழுமையாக திரும்பி, அதன் சிக்கன கோரிக்கைகளை நேரடியாக ஏற்றுக்கொண்டார்.
சர்வதேச நிதி நிறுவனங்களான சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் தர நிர்ணய முகமைகள் அனைத்தும், இந்த திருப்பத்தை கோரியுள்ளன. சர்வதேச வங்கிகள் தாம் கொடுத்த கடன்களை மீள செலுத்த வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துகின்றன. சமீபத்தில் அர்ஜென்டினா, ஈக்வடார், சுரினாம் மற்றும் ஸம்பியாவிலும் இதேபோன்ற தலையீடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஏற்கனவே இலங்கையின் வருடாந்த பணவீக்க விகிதம் செப்டெம்பர் மாதத்திலிருந்து இரட்டிப்பாகி, பெப்ரவரியில் 15 சதவீதமாக இருந்தது. உணவுப் பற்றாக்குறை மிக அதிகமாக 25.7 சதவீதமாக உள்ளது. அத்தியாவசிய உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காமல் இலட்சக் கணக்கானோர் தவித்து வருகின்றனர்.
அன்னியச் செலாவணி பற்றாக்குறை எரிபொருள் இறக்குமதியை குறைக்க நிர்ப்பந்தித்துள்ளதன் காரணமாக அது மணித்தியாலக் கணக்கான மின்சாரத் துண்டிப்புக்கும் சமையல் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கவும் வழிவகுத்துள்ளது. எரிபொருள் இல்லாமல், அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முடங்கியுள்ளது. சமையல் எரிவாயு அல்லது மின்சாரம் இல்லாமல், பேக்கரிகள், உணவகங்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிறு வணிக நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. முச்சக்கர வண்டிகளுக்கு பெற்றோல் வாங்குவதற்காகக் காத்திருந்த நான்கு முதியவர்கள் உயிரிழந்துள்ளதுடன், பெற்றோல் வரிசையில் ஏற்பட்ட தகராறில் மேலும் ஒருவர் கொல்லப்படும் அளவுக்கு நெருக்கடி நிலை மிகக் கடுமையானதாக உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான சிக்கனப் பரிந்துரையை மார்ச் 2 அன்று அறிவித்தது. அதன் கொடூரமான நடவடிக்கைகளில் வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையை பாரியறளவு குறைத்தல், வட்டி விகிதங்களை அதிகரித்தல், சரக்கு மற்றும் சேவை வரிகளை அதிகரித்தல், ரூபாயின் மதிப்பை குறைத்தல் மற்றும் அரச துறையை மேலும் மறுசீரமைப்பதும் அடங்கும்.
நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான ஒப்பந்தங்களை பூர்த்தி செய்வதற்கு ஏப்ரலில் வாஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிவிப்பு வெளியான மூன்று வாரங்களில், அதிகாரிகள் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் அளவுக்குக் குறைத்துள்ளனர். எரிபொருள் விலை சுமார் 50 சதவீதமும், ரயில் போக்குவரத்து 58 சதவீதமும் அதிகரித்துள்ளது. மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் பெரிய அளவில் உயர்த்தப்பட உள்ளன. சமூகத்தின் 'ஏழைப் பிரிவினருக்கு' உதவுவது என்ற போர்வையில் சமூக மானியங்கள் குறைக்கப்படவுள்ள அதே நேரம், அரசுத் துறையில் வேலைகள் மற்றும் ஊதியங்களில் வெட்டுக்களை மேற்கொள்வதும் திட்டநிரலில் அடங்கியுள்ளன.
இராஜபக்ஷ தனது தேசிய உரையின் போது, அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு 'எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களுக்காக தொடரும்' என்று அறிவித்தார். நிலைமையை பொறுத்துக்கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். எவ்வாறாயினும், அவரது அரசாங்கமும் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் பாதுகாக்கும் இலாப அமைப்புமுறையே இந்த பேரழிவு நிலைமைக்கு காரணம் ஆகும்.
இராஜபக்ஷ, இந்த சிக்கன நடவடிக்கைகளை அமைதியான முறையில் மேற்கொள்ள முடியாது என்பதை அறிந்திருப்பதோடு, சர்வாதிகார ஆட்சி வடிவங்களுக்கு மாறுவதற்கு தயாராகி வருகிறார். அவர் ஜனாதிபதியாக இருந்த காலம் முழுவதும், அரசு நிர்வாகத்தை இராணுவமயமாக்கினார். அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வை தடுத்தல் மற்றும் பொது சுகாதாரத்துக்கும் கல்விக்குமான நிதி ஒதுக்கீடுகளையும் மற்றும் விவசாயிகளுக்கான உர மானியங்களையும் வெட்டிக் குறைக்கும் அதே வேளை, பாதுகாப்பு சேவைகள் மற்றும் பொலிசுக்கான செலவினங்களை அவர் உயர்த்தியுள்ளார்.
கோபத்துடன் வரிசையில் நிற்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் அரசாங்கம் இராணுவ சிப்பாய்களை எரிபொருள் நிரப்பும் நிலையங்கறளில் நிறுத்தியுள்ளது.
இராஜபக்ஷ கடந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவைப் பெற அனைத்துக் கட்சி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளும் கலந்து கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன திட்டநிரலுக்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தின.
அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு தங்களுக்கு எதுவும் இல்லை என்று கூறி, பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) கலந்து கொள்ளவில்லை. கொதித்தெழும் வெகுஜனங்களின் கோபத்தை சுரண்டிக்கொள்வதை நோக்கமாகக் கொண்ட அவர்களின் வாய்வீச்சு தோரணைகள் ஒரு போலித்தனம் ஆகும்.
அரசாங்கத்தை அகற்ற பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் ஐ.ம.ச. நாடு முழுவதும் கூட்டங்களை நடத்தி வருகிறது. அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்த ஆயிரக்கணக்கானோர் இவற்றில் கலந்துகொண்டுள்ளனர். எவ்வாறாயினும், ஐ.ம.ச. சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் எந்த கவலையும் கொண்டிருக்கவில்லை. உண்மையில், கடந்த ஆண்டு அது அவ்வாறு செய்ய அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தது.
கடந்த ஆண்டு, அரசாங்கத்தின் குற்றவியல் கொள்கைகள் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கு அனுமதித்ததால், ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாச, அரசியல் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். தலைவர்கள் 'தங்கள் தனிப்பட்ட இலட்சியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு' நமது பிரஜைகளை உயிருடன் வைத்திருப்பதிலும், நாடு 'அராஜகத்திற்குள்' இழுக்கப்படுவதைத் தடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் அறிவித்தார்.
ஜனவரியில், பிரேமதாச, 1980களில் பிரிட்டனில் மார்கரெட் தாட்சரின் தொழிலாள வர்க்க விரோத ஆட்சியின் வழியில், ஒரு 'தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்திற்கு' அழைப்பு விடுத்தார்.
ஜே.வி.பி.யும் “போதும், கீழே இறங்கு, போ,' என்று அரசாங்கத்தை கோரும் பேரணிகளை நடத்துகிறது. அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, சுதந்திரத்திற்குப் பின்னர் கடந்த 74 வருடங்களில் அரசியல் கட்சிகள் தோல்வியடைந்துள்ளதாகக் கூறி, ஒரு 'மக்கள் அரசாங்கத்திற்கு' அழைப்பு விடுக்கிறார்.
ஒரு 'மக்கள் அரசாங்கம்' எப்படி ஆட்சிக்கு வரும் அல்லது என்ன செய்யும் என்பது பற்றி திஸாநாயக்க எதுவும் கூறவில்லை. சர்வதேச நாணய நிதிய திட்டநிரலைப் பற்றி அவர் மௌனமாக இருப்பது, ஜே.வி.பி. அத்தகைய நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
உண்மையில், சந்தை சார்பு மறுசீரமைப்பை திணித்த அரசாங்கங்களுக்கு ஜே.வி.பி மீண்டும் மீண்டும் ஆதரவளித்து வந்துள்ளது. 2004 இல், அது ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் கூட்டணியில் நுழைந்ததுகொண்டதுடன், ஜே.வி.பி. அமைச்சர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த உதவினர்.
ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும் அரசாங்கத்தையே 'எதிர்க்கின்றன', ஆனால் அதன் பிற்போக்கு கொள்கைகளை அல்ல. ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின் எஞ்சிய பகுதியினரைப் போலவே அவர்களும் பீதியடைந்து, எதிர்ப்பின் எழுச்சியை தணிப்பதற்கு முற்படுகின்றனர். சமீபத்திய சண்டே டைம்ஸ் தலையங்கம் எச்சரித்தபடி, 'சர்வதேச நாணய நிதியத்தின் சிகிச்சை எளிதாக இருக்கப் போவதில்லை... அதனுடன் தொடர்புடைய வெகுஜன கிளர்ச்சி அரசியல் ஸ்திரமின்மையை உருவாக்குகிறது.'
இந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் வெற்றுப் பேச்சுக்களால் யாரும் ஏமாந்து விடக்கூடாது. முதலாளித்துவ அமைப்பை இறுதிவரை பாதுகாக்கின்ற ஐ.ம.ச. மற்றும் ஜே.வி.பி.யும், தற்போதைய நெருக்கடியின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதில் இராஜபக்ஷவைப் போலவே இரக்கமற்றவர்களாக இருப்பர்.
அதேபோல், எதிர்க் கட்சிகளின் போலிப் பிரச்சாரங்களுக்குப் பின்னால் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை பிணைத்து விடுவதற்கு முயலும் முன்நிலை சோசலிசக் கட்சி மற்றும் சோசலிச மக்கள் மன்றம் போன்ற பல்வேறு போலி-இடது குழுக்களில் நம்பிக்கை வைக்கக்கூடாது.
இந்த துரோக போலி-இடது குழுக்கள் கடந்த வார இறுதியில் 'மக்கள் போராட்ட இயக்கம்' என்பதை அறிவித்து 'அரசாங்கத்தை விரட்டியடிப்போம்' என்று பிரகடனம் செய்யும் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தின. ஆனால் என்ன செய்வதற்கு! அதன் அறிவிக்கப்பட்ட வேலைத்திட்டம் என்னவெனில், 'அடுத்த ஆட்சிக்கு வரும் எந்த அரசாங்கத்துடனும்... மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க அழுத்தம் கொடுப்பதற்கும் பேரம் பேசுவதற்கும்' ஒரு மக்கள் சக்தியைக் கட்டியெழுப்புவதாகும்.
ஒரு பலம்வாய்ந்த சக்தி ஏற்கனவே வெளிவரத் தொடங்கிவிட்டது – அது தொழிலாள வர்க்கம் ஆகும். சுகாதாரம், ரயில்வே, கல்வி, தபால், பெட்ரோலியம், துறைமுகங்கள் மற்றும் பெருந்தோட்டப் பகுதியிலும் உள்ள இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் கடந்த ஆண்டு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைக் கோரி வேலைநிறுத்தங்களிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர். ஆனால் முதலாளித்துவ சார்பு தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் பேரம் பேசுவதன் மூலமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை வெல்ல முடியும் என்ற மாயையை ஊக்குவித்ததால், இந்தப் போராட்டங்கள் துல்லியமாக எதையும் சாதிக்கவில்லை.
பெரும்பான்மையான பொதுத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்த நடவடிக்கையை குற்றமாக்கும் அரசாங்கத்தின் அடக்குமுறை அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தை எந்த தொழிற்சங்கமும் எதிர்க்கவில்லை. அனைத்து தொழிற்சங்கங்களும் ஏதோ ஒரு வகையில் அரசியல் ஸ்தாபனத்துடன் பிணைக்கப்பட்டுள்ளதுடன், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை நசுக்க அதன் தொழில்துறை பொலிஸ் படையாக செயல்படுகின்றன.
உழைக்கும் மக்கள் மற்றொரு முதலாளித்துவ அரசாங்கம் அதிகாரத்திற்கு வர அனுமதிக்க முடியாது. எந்தளவு அழுத்தம் கொடுத்தாலும் பேரம் பேசினாலும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதலை அது நிறுத்தப் போவதில்லை. தொழிலாளர்கள் விடயத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும். நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளை அணிதிரட்டி சோசலிச முன்னோக்கிற்காகப் போராட வேண்டும்.
சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.ச.க.), சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மாறாக, இராஜபக்ஷ ஆட்சிக்கு பதிலாக வேறொரு முதலாளித்துவ அரசாங்கத்தை பதிலீடு செய்வதை அல்ல.
அத்தகைய போராட்டத்தின் முதல் படி, தொழிலாளர்கள் தங்கள் வர்க்க நலன்களுக்காக போராடுவதற்கு தொழிற்சாலைகள், வேலைத் தளங்கள் மற்றும் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளில், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளைச் சாராமல் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிக்க வேண்டும். இத்தகைய குழுக்கள், தாம் எதிர்கொள்ளும் பயங்கரமான நிலைமைகளை எதிர்ப்பதற்கான வழியை நாடுகின்ற கிராமப்புற ஏழைகளுக்கு அணிதிரளும் புள்ளியாக மாறும்.
சோசலிச சமத்துவக் கட்சி ஏற்கனவே சுகாதாரம், கல்வி மற்றும் பெருந்தோட்டத் துறைகளில் நடவடிக்கைக் குழுக்களை ஸ்தாபிப்பதில் முன்முயற்சி எடுத்துள்ளது, ஆனால் இந்த ஆரம்ப நடவடிக்கைகள் விரைவாக விரிவாக்கப்பட வேண்டும். தங்களின் வேலைகள் மற்றும் நிலைமைகளைப் பாதுகாக்கப் போராடுவதற்கு இதுபோன்ற குழுக்களை நிறுவ விரும்பும் ஏனைய பிரிவு தொழிலாளர்களுக்கு எங்கள் அரசியல் உதவியை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சோசலிச சமத்துவக் கட்சி பின்வரும் கோரிக்கைகளுக்காக போராட தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது:
- அனைவருக்கும் பாதுகாப்பான வேலைகள் மற்றும் பணவீக்கத்திற்கு எதிராக முழுமையாக குறியிடப்பட்ட கண்ணியமான ஊதியங்கள் வேண்டும்!
- பொது சுகாதாரம், கல்வி மற்றும் நலன்புரி சேவைகளை விரிவுபடுத்த பில்லியன் கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்பட வேண்டும்! கோவிட்-19 வைரஸை ஒழிக்க, பொது சுகாதாரக் கட்டுப்பாடுகளை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்!
- விவசாய இடுபொருட்கள் மீதான மானியத்தை மீண்டும் வழங்குவதன் மூலம் விவசாயிகளுக்கு கண்ணியமான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிக்க வேண்டும்!
- பணம் இல்லை என்று கூறும் இலாப அமைப்பின் பாதுகாவலர்களிடம், பெரும் பணக்காரர்களின் இலாபத்திற்காக அன்றி, பெரும்பான்மையினரின் அவசர சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சமூகம் மேலிருந்து கீழாக மறுசீரமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
- அனைத்து வெளிநாட்டு கடன்களையும் நிராகரி!
- பெரிய பெருநிறுவனங்கள், தோட்டங்கள் மற்றும் வங்கிகளை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் தேசியமயமாக்கு!
தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களிடமிருந்து சிங்கள தொழிலாளர்களை பிரிக்க பல தசாப்தங்களாக நேர்மையற்ற முதலாளித்துவ அரசியல்வாதிகளால் ஊக்குவிக்கப்பட்ட நச்சு இனவாத அரசியலை நிராகரிக்குமாறு தொழிலாளர்களுக்கு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கிறது. அதன் பொது வர்க்க நலன்களுக்காக போராட ஒன்றுபடுவதன் மூலம் மட்டுமே தொழிலாள வர்க்கம் அதன் சமூக நிலைமை மீது நடந்து வரும் தாக்குதலை தோற்கடிக்க முடியும்.
இலங்கை நெருக்கடியானது முதலாளித்துவத்தின் உலகளாவிய நெருக்கடியின் ஒரு பகுதியாகும். உலகெங்கிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு எதிரான போரையும் உள்நாட்டில் வர்க்கப் போரையும் நாடுகின்றன. குற்றவியல்தனமான 'அதை நடக்கட்டும்' என்ற கொள்கை, கோவிட்-19 வைரஸினால் மில்லியன் கணக்கானவர்கள் மரணிப்பதற்கு வழிவகுத்தது போல், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், மனிதகுலத்தை ஒரு பேரழிவு உலகப் போரை நோக்கி தள்ளுகிறது, அதில் பல மில்லியன் மக்கள் இறக்க நேரிடும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தேசிய தீர்வு எதுவும் இல்லை. இந்த நாட்டில் உள்ள தொழிலாளர்களின் கூட்டாளிகள், மதிப்பிழந்த முதலாளித்துவ எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் போலி-இடது துணைக் கருவிகள் அல்ல, மாறாக தங்கள் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது இதே போன்ற தாக்குதல்களை எதிர்கொள்கின்ற உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களே ஆகும். உலகெங்கிலும் உள்ள தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளின் பக்கம் திரும்புமாறு தொழிலாளர்களை அழைக்கிறோம்.
சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கப் போராட்டங்களை ஒன்றிணைப்பதற்கான வழிமுறையாக நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் தொடங்கப்பட்ட நடவடிக்கை குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியுடன் இலங்கைத் தொழிலாளர்கள் தங்கள் நடவடிக்கைக் குழுக்களை இணைக்க வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச மாற்றீட்டிற்கான புரட்சிகரப் போராட்டத்திற்குத் தேவையான வெகுஜனக் கட்சியாக சோசலிச சமத்துவக் கட்சியை கட்டியெழுப்ப அதில் இணைந்துகொள்ளுமாறு தொழிலாளர்களையும் இளைஞர்களையும் அழைக்கிறோம்.
மேலும் படிக்க
- இலங்கை சுகாதார ஊழியர்களின் தேசிய வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு
- அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு சோசலிச கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்
- இலங்கை தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் மீண்டும் வேலையில் அமர்த்தக் கோருங்கள்