P&O தொழிலாளர்களுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு 1.82பவுண்டுகள் ஊதியத்துடன் கப்பல் பயணத்தை மீண்டும் தொடங்குகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வியாழன் அன்று 800 கப்பல் தொழிலாளர்களை P&O பணிநீக்கம் செய்ததில் டவுனிங் ஸ்ட்ரீட் நேரடியாக ஈடுபட்டுள்ளது. ஜோன்சன் அரசாங்கத்திற்கு அதனைப் பற்றி முன்னர் தெரியாது என்ற பொய்கள் கிழிந்துள்ளன.

மூன்று நிமிட Zoom அழைப்பு மூலம் குழுவினர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஊதியம் பெற்ற முகமூடி அணிந்த, கைவிலங்கு இடுவதற்கு பயிற்சி பெற்ற குண்டர்களால் தொழிலாளர்கள் கப்பல்களில் இருந்து அகற்றப்பட்டனர்.

The Evening Standard பத்திரிகை சனிக்கிழமை “ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் திட்டம் பற்றி தனக்குத் தெரியாது என முன்பு கூறியிருந்தாலும், பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் செய்தித் தொடர்பாளர், புதன்கிழமை அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக சில அதிகாரிகளுக்கு P&O தகவல் அளித்ததை உறுதிப்படுத்தினார்” என செய்தி வெளியிட்டுள்ளது.

Sunday Times பத்திரிகை வாழ்வாதாரத்தின் மீதான இத்தகைய பாரிய தாக்குதல்கள் ஒருபோதும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் வெறுமனே திட்டமிடப்படவில்லை, ஆனால் அரசாங்கம் மற்றும் அரசுக்கு எதிராக தொழிலாளர்களை முடுக்கிவிடும் என்பதைக் காட்டும் விவரங்களை தந்துள்ளது. ஒரு மூத்த அரசாங்க அதிகாரியால் வரையப்பட்ட விளக்கக் குறிப்பு, நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்னதாக Whitehall முழுவதும் பரப்பப்பட்டது. அக்குறிப்பு “P&O Ferries புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் பல ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த முயற்சிக்கவும் அல்லது வழித்தடங்களை திரும்பவும் தொடங்கவும் முகமை ஊழியர்களைப் பயன்படுத்தவும் ஒரு எண்ணம் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். சேவைகளுக்கு இடையூறு 10 நாட்கள் நீடிக்கும் என மதிப்பிடுகின்றனர்” என அறிவித்தது.

'இந்த மிருகத்தனமான நடவடிக்கை, ஊழியர்களை பெருமளவில் குறைத்துள்ள சந்தையில் உள்ள மற்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதால் P&O இற்கு அவசியமானது. அறிக்கைகளின்படி, P&O ஆனது இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் உக்ரேனில் இருந்து பெறும் தொழிலாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 1.82 பவுண்டுகள் மட்டுமே செலுத்துகிறது. பிரித்தானியாவில் 23 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 8.91 பவுண்டுகள் ஆகும்.

லிவர்பூல்-டப்ளின் கப்பல்கள் சனிக்கிழமைக்குள் இயல்பு நிலைக்கு திரும்பியதன் மூலம் P&O ஏற்கனவே அதன் சில முக்கிய வழிகளை மீண்டும் தொடங்க முடிந்தது. 'லிவர்பூல்-டப்ளின் வழித்தடத்தில் உள்ள இரண்டு P&O கப்பல்கள் பிலிப்பைன் ஊதிய தரவரிசையின்படி... ஒரு மணி நேரத்திற்கு 3.47 பவுண்டுகள் என்ற அடிப்படை கட்டணத்தை செலுத்திய ஒப்பந்தங்களை கொண்டிருந்தன' என்று இரயில், கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிற்சங்கம் (RMT) கூறியது. 'டோவரில் உள்ள P&O கப்பல் குழுவினர், ஒரு மணித்தியாலத்திற்கு 2.38 டாலர் ஊதியம் பெறும் இந்திய மாலுமிகளால் மாற்றப்பட்டுள்ளனர்' என்றும் RMT தெரிவித்துள்ளது.

RMT, Nautilus தொழிற்சங்கம் மற்றும் தொழிற் கட்சி ஆகியவை பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு வீரம்மிக்க போராட்டத்தை நடத்துவதாகக் கூறுகின்றன. ஆனால் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தின் மீதான இந்த தாக்குதல் பல ஆண்டுகளாக படகு மற்றும் கப்பல் தொழிற்துறையில் தொழிற்சங்கங்களின் உடந்தையுடன் நடைபெற்று வருகிறது.

கடந்த வியாழன் அன்று நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஏற்கனவே 2005 இல் Irish Ferries இனால் நடத்தப்பட்டது. தொழிலாளர் செலவுகள் மற்றும் நிலைமைகளைக் குறைக்க மூன்று ஐரிஷ் கப்பல்களுக்கு சைப்ரஸ் கப்பல் ‘கொடி மாற்றம்’ செய்யப்பட்டது. Irish Ferries மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களை மாற்றுவதற்காக, அதன் பணியாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு பணிநீக்கத்தை வழங்கியது. நவம்பர் 24, 2005 அன்று, Isle of Inishmore கப்பலின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் அதற்கு செல்வதற்கு தனியார் பாதுகாவலர்களை நிறுவனம் வாடகைக்கு அமர்த்தியது. அதே நேரத்தில் புதிய ஊழியர்களும் படகில் ஏறினர்.

பாரிய வேலைநீக்கம் 20 நாள் வேலைநிறுத்தத்தை தூண்டியது. இது சேவைகள், தொழில்துறை, தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப தொழிற்சங்கம் Irish Ferries உடன் மூன்று ஆண்டு ஒப்பந்தத்தை எட்டியதன் மூலம் முடிவுக்கு வந்தது. அதன் மூலம் தனது தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு சைப்ரஸ் இனை அடித்தளமாக கொண்ட ஒரு நிறுவனத்தின் மூலம் வேலைக்கு அமர்த்தப்பட்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 7.65 யூரோக்கள் (£5.19) குறைந்தபட்ச ஊதியமாக வழங்கப்பட்டதுடன் மற்றும் தொழிற்சங்கம் மேலும் தொழில்துறை நடவடிக்கை எதுவும் செய்வதில்லை என உறுதியளித்தது.

RMT மற்றும் Nautilus இன் முக்கிய புகார் என்னவென்றால், தொழிலாளர்களை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து P&O அவர்களிடம் ஆலோசனை செய்யவில்லை என்பதாகும். P&O அவ்வாறு செய்திருந்தாலும், விளைவு இப்படித்தான் இருந்திருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தொற்றுநோய் தாக்கியதால், RMT இன் உடந்தையுடன் 1,100 வேலைகளை P&O ஆல் பணிநீக்கம் செய்ய முடிந்தது.

ஹல்லில் உள்ள P&O இறங்குதுறையில் உள்ள Pride of Hull கப்பல் பஹாமாஸில் உள்ள நாசவ்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அதன் பெயர் கூறுகிறது (WSWS Media)

அதன் ஊழியர்கள் பிரிட்டனில் வசிக்காத பட்சத்தில், கப்பல் நிறுவனங்களுக்கு தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதில் இருந்து பிரித்தானிய வேலைவாய்ப்பு சட்டங்கள் விலக்கு அளிக்கின்றன என்ற உண்மையை கப்பல் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றன. இது, நிறுவனங்கள் வழக்கமாக தங்கள் கப்பல்களை வெளிநாடுகளில் பதிவு செய்து, எந்த வேலைவாய்ப்பு சட்டத்தையும் மீறுவதற்கு அவர்களுக்கு உதவுகின்றன. 2019 ஆம் ஆண்டில், P&O Ferries தனது கப்பல்களை பிரித்தானியாவில் இருந்து சைப்ரஸ் மற்றும் பஹாமாஸ் உள்ளிட்ட நாடுகளின் கொடிக்கு மாற்றியது.

செவ்வாயன்று, RMT பொதுச் செயலாளர் மிக் லிஞ்ச், அவர் கூற விரும்பியதைவிட தொழிற்சங்கத்திற்கு தெரிந்த மற்றும் எதிர்க்காதது பற்றி அதிகமாக வெளிப்படுத்தினார். அவர் விளக்கினார், 'வெள்ளிக்கிழமை நாங்கள் நிறுவனத்துடன் ஒரு சந்திப்பை நடத்தவிருந்தோம். பின்னர் வியாழக்கிழமை அவர்கள் எங்கள் உறுப்பினர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தனர்.'

தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல் ரேர்னர் “RMT உடனும் தன்னுடனுமான முன்னைய கூட்டத்தில் மணித்தியாலத்திற்கு 2.40 (£1.82) டாலர்கள் கொடுக்க P&O ஒப்புக்கொண்டதாக” தெரிவித்தார்.

ஹெல் இல் பதியப்பட்ட Pride of Rotterdam இல், 'அவர்கள் எட்டு வாரங்கள் வேலை செய்கிறார்கள் மற்றும் இரண்டு வாரங்கள் விடுமுறையில் இருக்கிறார்கள்,' என்று அவர் கூறினார். 'அவர்கள் சாப்பிடுவதற்கு ஒரு சிறிய இடைவெளியுடன் 12 மணிநேர பணிமுறைகளை செய்கிறார்கள்... அவர்கள் ஹல்லில் மோசமான பலகட்டில்கள் கொண்ட தங்குமிடங்களைப் பெறுகிறார்கள். பெரும்பாலும் ஒரு இரவுக்கு சுமார் 9 பவுண்டுகள் செலுத்தும் தங்கும் விடுதிகளில் தங்குகிறார்கள். சிலர் பதினைந்து நாட்களாக கூடாரங்களில் கூட தங்குவது தெரிந்தது”.

2020 ஜனவரியில் இருந்து வெளியான ஊடக அறிக்கைகள், போர்ச்சுகல் மற்றும் லித்துவேனியாவில் இருந்து வரும் தொழிலாளர்களை இடமாற்றம் செய்ய, ஒரு மணி நேரத்திற்கு 1.74 (வாரத்திற்கு £70க்கும் குறைவானது) பவுண்டுகள் என்ற புதிய அளவுகோலை அமைக்க, 100 பிலிப்பைன்ஸ் தொழிலாளர்களை P&O பணியமர்த்தியுள்ளது என்பதை RMT அறிந்திருந்தது.

அந்த நேரத்தில் தொழிற்சங்கம் டோரி அரசாங்க மந்திரிகளிடம் பிரச்சினையை எழுப்பியதாக லிஞ்ச் பரிதாபமாக கூறினார். அவர்கள் அத்தகைய நிலைமைகளை ஒவ்வொரு UK நிறுவனத்திற்கும் ஒரு அளவுகோலாகக் கருதுகின்றனர். P&O ஆல் விதிக்கப்படும் ஊதிய நிலைகள் சர்வதேச போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்க அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

ITV வியாபார மற்றும் பொருளாதாரத்துறை கட்டுரையாளர் ஜோயல் ஹில்ஸ் ட்வீட் செய்துள்ளார், “ஒரு சாதாரண மாலுமிக்கு (OS) ITF/ILO குறைந்தபட்ச பரிந்துரைக்கப்பட்ட விகிதம் - வழக்கமாக ஒரு கப்பலில் குறைந்தபட்ச தரவரிசை 15.9 டாலர்கள் நாளுக்கு அல்லது 8 மணி நேர பணிமாற்ற வேலைக்கு மணித்தியாலத்துக்கு 1.99 டாலர்கள்' ஆகும். “ITF ILO குறைந்தபட்ச ஊதிய அளவு”, “விகிதங்கள் 1 ஜனவரி 2021 முதல் பொருந்தும்” என்ற தலைப்பில் ஒரு ஆவணத்தின் படத்தை ஹில்ஸ் ட்வீட் செய்துள்ளார்.

அவர் குறிப்பிட்டார், “P&O தனது ஊதியச் செலவை பாதியாக குறைக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இந்தியாவில் இருந்து வரும் முகவர் மூலமான தொழிலாளிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு 1.80 பவுண்டுகள் (இங்கிலாந்தின் சட்டப்பூர்வ ஊதியமான மணி$ககு 8.91 பவுண்டுகள் மிகக் குறைவாக) வழங்குவது சட்டபூர்வமானது மற்றும் போட்டித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். மற்ற கப்பல் இயக்குனர்களும் போலந்து மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இங்கிலாந்து அல்லாத பணியாளர்களை பயன்படுத்துகின்றனர்.

P&O போன்ற உலகளாவிய நிறுவனங்களால் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட நிலைமைகளின் கீழ், கார்ப்பரேட் கொள்கையின் இன்றியமையாத அடிப்படையானது, தொழிற்சங்கங்களால் தொழிலாள வர்க்கத்தினுள் வளர்க்கப்படும் தேசிய பிளவுகளை சுரண்டுவதாகும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட DP World, 1985 இல் நிறுவப்பட்ட Jebel Ali Free Zone (Jafza) போன்ற தடையற்ற வர்த்தக மண்டலங்களில் உள்ள தொழிலாளர்களைச் சுரண்டுவதில் முன்னோடியாக உள்ளது. Jafza இப்போது 8,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்தி பில்லியன்களை இலாபம் ஈட்டுகிறது. வளைகுடா அரசின் தன்னலக்குழுக்களால் திரட்டப்பட்ட பரந்த செல்வம், துன்பகரமான ஊதியத்தில் தொழிலாளர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சுரண்டுவதை சார்ந்துள்ளது. அவ்வாறான நிலைமைகளை ஐரோப்பாவிற்கும் கொண்டுவரலாம் என்பதை P&O நிரூபிக்கின்றது.

'800 பிரிட்டிஷ் மாலுமிகளின் வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீதான இந்தத் தாக்குதலை நிறுத்துங்கள்' மற்றும் 'பிரிட்டனின் கப்பல்களைக் காப்பாற்றுங்கள்' என்று கோரும் கன்சர்வேடிவ் போக்குவரத்துச் செயலர் கிரான்ட் ஷாப்ஸின் அழைப்பின் மூலம், பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீதான தொழிற்சங்கங்களின் தேசியவாத பிரச்சாரம் சுருக்கமாக காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தப் போராடாமல் பிரித்தானியாவில் ஊதிய மட்டங்களை பராமரிக்கும் இந்த முயற்சி, ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தரத்தை அழிப்பதை உறுதி செய்வதுடன், நிறுவனங்கள் எளிதாக மாற்று பணியாளர்களை நியமிக்கவும் இயலுமானதாக்குகின்றது.

'உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என்ற புரட்சிகர தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுத் தெளிவான அழைப்பின் அடிப்படையில் ஒரு போராட்டம் தேவை. அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களின் கூட்டுத் தாக்குதலை தொழிலாளர்கள் பிரிட்டனிலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைப்பதன் மூலம் மட்டுமே எதிர்க்க முடியும்.

இதற்கு தொழிற்சங்கங்களுடனான அரசியல் மற்றும் நிறுவன ரீதியிலான முறிவு மற்றும் கப்பல் துறை முழுவதும் சாமானிய தொழிலாளர் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். மே 2021 இல், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) ஆரம்பித்தது. P&O தொழிலாளர்களை சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை இன்றே தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Loading