முன்னோக்கு

உலகப் போருக்கான விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாக்கும் நோக்கில் போயிங் நிறுவனத்தில் விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வாஷிங்டனின் ரென்டனில் போயிங் எந்திரவியலாளர்களின் மறியல் வரிசையின் ஒரு பகுதி

புதனன்று, 33,000 போயிங் தொழிலாளர்கள் தங்கள் ஐந்து வார கால வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும் சர்வதேச எந்திரவியலாளர்கள் சங்கத்தின் (IAM) ஒப்பந்தத்தில் வாக்களிப்பார்கள். ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் இதர முக்கியப் பிரச்சனைகளில் அவர்களது கோரிக்கைகள் எதையும் இந்த ஒப்பந்தம் பூர்த்தி செய்யாததால், தொழிலாளர்கள் அதை மிகப் பரந்த அளவில் நிராகரிக்க வேண்டும். வேலைநிறுத்தத்திற்கு பழிவாங்கும் விதமாகவும், மற்றும் நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றுள்ள பாரிய பாதுகாப்பு நெருக்கடிக்கு விலை கொடுக்கும் வகையிலும், நிர்வாகம் ஏற்கனவே தொடங்கியுள்ள பாரிய வேலைநீக்கங்களுக்கும் இந்த ஒப்பந்தம் பச்சைக்கொடி காட்டியுள்ளது.

போயிங்கில் நடக்கும் போராட்டத்திற்கு, IAM அதிகாரத்துவத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய மூலோபாயம் அவசியப்படுகிறது. IAM ஒருபோதும் வேலைநிறுத்தத்தை விரும்பவில்லை என்பதுடன், மறியல் களத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்காமல், அவர்களை மென்மையாக்க முயன்றுள்ளது. போயிங் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு திங்களன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அறிவித்ததைப் போல: “நிர்வாகத்துடனும் அரசாங்க அதிகாரிகளுடனும் முழங்கைகளை உரசும் தொழிற்சங்க நிர்வாகிகள்போல் அல்லாமல், சாமானிய தொழிலாளர்களே முழுமையான அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்ற கோட்பாட்டிற்காக நாம் போராட வேண்டும்.”

அதே நேரத்தில் போயிங் இடம்பெற்றுவரும் போராட்டம் சமுதாயத்தை யார் இயக்குகிறார்கள், யாருடைய நலன்களுக்காக நடத்துகிறார்கள் என்ற அடிப்படைக் கேள்வியை எழுப்புகிறது. போயிங் தொழிலாளர்கள், நிறுவனத்தின் இரக்கமற்ற தன்மைக்கு, ஒட்டுமொத்த பொருளாதார வாழ்க்கையின் மாற்றத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தை தொழிலாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பதிலளிக்க வேண்டும்.

போயிங் தொழிலாளர்கள் வெறுமனே ஒரு அழுகிய ஒப்பந்தத்தையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ மட்டும் எதிர்கொள்ளவில்லை. வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நகர்வுகள் ஆளும் வர்க்கத்தின் ஒட்டுமொத்த போர்க் கொள்கையுடன் நெருக்கமாக தொடர்புபட்டுள்ளன. இது ஒரு போர்க்கால ஒப்பந்தமாகும். இது தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிப்பதன் மூலமாக, ஒரு பிரதான பாதுகாப்பு ஒப்பந்தக்காரரின் வினியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் வளைகுடா கடற்கரை மற்றும் கிழக்கு கடற்கரை துறைமுகத் தொழிலாளர்களின் ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் தலையிட்டதைப் போலவே, இடைக்கால தொழிலாளர் செயலர் ஜூலி சூவின் தலையீடு இந்த ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாக இருந்தது.

காஸாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலை மத்திய கிழக்கில் ஒரு பிராந்திய போராக விரிவடைந்து வருகின்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானுடனான போரின் விளிம்பில் உள்ளது. அதேநேரத்தில், அமெரிக்கா ரஷ்யாவுடனான அதன் பினாமிப் போரை ஒரு அணுஆயுத மோதல் புள்ளிக்கு தீவிரப்படுத்தி வருவதுடன், அதன் பிரதான போட்டியாளரான சீனாவுக்கு எதிராக ஒரு புதிய போருக்கும் தயாரிப்பு செய்து வருகிறது. இந்த மோதல்கள் அனைத்தும், உண்மையில், ஓர் உலகளாவிய போரின் ஆரம்ப கட்டங்களாகும். சுரண்டல் மற்றும் சமத்துவமின்மைக்கு தொழிலாள வர்க்கத்திற்குள் இருக்கும் பாரிய எதிர்ப்பினால், இத்திட்டங்கள் தடைபடுவதை அமெரிக்க ஆளும் வர்க்கம் அனுமதிக்க மாட்டாது.

இராணுவம், பொருளாதாரம், உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைகள் அனைத்தும் அமெரிக்க முதலாளித்துவத்தின் போட்டியாளர்களுடன் முற்றுமுழுதான மோதல் என்ற ஒற்றை இலக்கிற்கு அடிபணியச் செய்யப்பட்டு வருகின்றன. பைடென் நிர்வாகம் அதன் 2022 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில், “உள்நாட்டு மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு இடையிலான பிளவுக் கோட்டை உடைத்துள்ளது” என்று தற்பெருமை பேசுகிறது.

கடந்த திங்களன்று போயிங் வேலைநிறுத்தம் குறித்து வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் வெளியிட்ட கருத்துரை ஒன்று ஆளும் வர்க்கத்தின் மூலோபாய சிந்தனையைத் தொகுத்தளித்தது. “அமெரிக்கா, சீனாவுடன் புவிசார் அரசியல் போட்டியில் உள்ளது, இது இராணுவ சக்தியால் மட்டுமல்ல, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வல்லமையாலும் வரையறுக்கப்படுகிறது” என்று ஜேர்னலின் தலைமை பொருளாதார வருணனையாளர் கிரெக் இப் (Greg Ip) எழுதுகிறார். போயிங் மிகப்பெரிய அமெரிக்க உற்பத்தி ஏற்றுமதியாளராக உள்ளது, இதற்கு எந்த மாற்றீடும் கிடையாது .

சீனாவுடனான ஒரு போரில், பிரதான போர்க்களமாக இருக்கக்கூடிய தாய்வானுக்கு குறை மின் கடத்திகளின் (semiconductors) மாற்று ஆதாரத்தை வழங்குவதில் சிப் தயாரிப்பாளர் இன்டெல்லின் பாத்திரத்தையும் கிரெக் இப் மேற்கோள் காட்டுகிறார். எனவே, “தேசிய தலைவர்கள் இந்த நிறுவனங்களின் துயரங்களை புறக்கணிக்க விரும்புகிறார்கள், அவர்களால் முடியாது. விமானங்கள் மற்றும் குறை மின் கடத்திகளை தயாரிப்பதில் அமெரிக்கா ஓரளவு அறிவை பராமரிக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு ஆணையிடுகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஆளும் வர்க்கமானது, தனது போர்க் கொள்கையை அனைத்து சமூகத்தையும் அணிதிரட்டாமல் அதற்கு அடிபணியச் செய்யாமல் செயல்படுத்த முடியாது. முதலும் முக்கியமானதுமாக, கடந்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்து வரும் வேலைநிறுத்தங்களில் வெளிப்படுத்தப்பட்ட தொழிலாளர்களின் எதிர்ப்பை அது உடைக்க வேண்டும்.

எந்திரவியலாளர்களின் சர்வதேச சங்கம் மற்றும் பிற தொழிற்சங்கங்களில் உள்ள அதிகாரத்துவத்தினர் வெறுமனே பெருநிறுவன சார்பு விற்பனையாளர்கள் மட்டுமல்ல, அரசின் கைவினைக் கருவிகளாக உள்ளனர். சமீப காலத்தில் நடந்த ஒவ்வொரு பெரிய காட்டிக்கொடுப்பும், இரயில்வே ஊழியர்களுக்கு எதிரான வேலைநிறுத்தத் தடையிலிருந்து UPS, வாகனத் தொழில்துறை மற்றும் ஏனைய இடங்களிலும் கையெழுத்திடப்பட்ட பாரிய வேலைநீக்கங்கள் வரை, வோல் ஸ்ட்ரீட்டின் வெளிநாட்டுப் போட்டியாளர்களுடனான மோதலுக்கு அமெரிக்க விநியோகச் சங்கிலிகள் மற்றும் தொழில்துறையைப் பாதுகாப்பதற்காக வெள்ளை மாளிகையுடன் நெருக்கமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இதுதான் பைடெனின் தொழிலாளர் கொள்கைகளின் நிஜமான உள்ளடக்கமாகும். இது ஜூலையில் அவர் தொழிற்சங்கங்களை தனது உள்ளூர் நேட்டோ என்று அழைத்த போது தெளிவாக்கப்பட்டது.

அதிகாரத்துவத்தின் கண்ணோட்டத்தை சுருங்கக் கூறுகின்ற ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஷான் பெயின், இரண்டாம் உலகப் போரின் போது குண்டுவீசும் விமானங்கள் உற்பத்தியானதையும், அக்காலகட்டத்தின் போர்க்கால பொருளாதாரத்தையும், தொழிலாளர்கள் இன்று பின்பற்ற வேண்டிய முன்னுதாரணம் என்று பாராட்டுகிறார். Stellantis நிறுவனத்தில் 2,300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வதற்கு ஒப்புதல் கொடுத்தபின்பு, ஃபைனும் UAW தொழிற்சங்க எந்திரமும் தற்பொழுது போயிங் உதிரிப்பாகங்கள் விநியோகிக்கும் நிறுவனமான Eaton இல் நடக்கும் வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தியுள்ளன.

பாரிய சமூக பதட்டங்களை ஒரு வெளிநாட்டு “எதிரியை” நோக்கி வெளிப்புறமாக திருப்பி விடுவதன் மூலமாக, ஒரு செயற்கையான “தேசிய ஐக்கியத்தை” திணிப்பதே போரின் மற்றொரு முக்கிய செயல்பாடாகும். பாரிய சமத்துவமின்மை மற்றும் சீரழிந்து வரும் வாழ்க்கைத் தரங்கள் மீதான கோபத்தால் உந்தப்பட்டு, அமெரிக்கா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாளர்களின் அதிகரித்து வரும் வேலைநிறுத்த அலைக்கு, ஆளும் வர்க்கத்தின் விடையிறுப்பின் ஒரு முக்கிய கூறுபாடாக இது உள்ளது.

ஆனால், முதலாளித்துவத்தை போரை நோக்கி உந்தித் தள்ளும் நிலைமைகள் சமூகப் புரட்சிக்கான உந்துதலையும் உருவாக்குகின்றன. ஆரம்பத்தில் இருந்தே போர்கள் ஆழமாக மதிப்பிழந்துள்ளன. தொழிலாள வர்க்கத்தின் மீதான பாரிய தாக்குதல்களுடனான அவற்றின் தொடர்பு, போருக்காக செலவிடப்பட்டு வரும் ட்ரில்லியன் கணக்கான பணம், இறுதியில் அவர்களின் முதுகில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தொழிலாளர்களுக்கு எடுத்துக்காட்டுகிறது.

முதலாளித்துவவாதிகளின் ஒவ்வொரு தேசிய பிரிவும் தொழிலாளர்களிடம் இருந்து யார் அதிக இலாபங்களைப் பிழிந்தெடுக்க முடியும் என்று போட்டியிட்டு வருகின்ற நிலையில், போயிங் நிறுவனத்தின் போட்டியாளர்களின் தொழிலாளர்களும் பாரிய வெட்டுக்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். எம்ப்ரேர் (Embraer) இல் பிரேசிலிய தொழிலாளர்கள் தங்கள் சொந்த விற்றுத்தள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர். எயர்பஸ் தொழிலாளர்கள் பாரிய வேலைநீக்கங்களை எதிர்த்துப் போராடி வருகின்றனர், பிரிட்டனில் இருந்து இல்லிநோய்ஸ் வரையில் ஈட்டன் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களை நடத்தி வருகின்றனர்.

தொழிலாள வர்க்கத்தில் பெருகிவரும் சமூக கோபம், அதை தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எதிரான மோதலுக்குள் தள்ளி வருகிறது. இது அதிகரித்து வரும் தொடர்ச்சியான ஒப்பந்த நிராகரிப்புகள் மற்றும் கிளர்ச்சிகளில் வெளிப்படுகிறது. சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் (IWA-RFC) வளர்ச்சி தான் இதற்கு மிகவும் நனவான வெளிப்பாடாகும்.

இதற்கிடையில், அனைத்து உத்தியோகபூர்வ அரசியல் கட்சிகளும் தொழிலாளர்களுக்கு சர்வாதிகாரம் மற்றும் போரின் வெவ்வேறு வடிவங்களைத் தவிர, வழங்குவதற்கு எதுவும் இல்லை. கடந்த வாரம், “நாட்டுக்கு உள்ளே இருக்கும் எதிரி” மீதான ட்ரம்பின் தாக்குதல், ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும், சீனா அல்லது ரஷ்யாவை விடவும், உள்நாட்டுத் தொழிலாளர்களை எவ்வாறு பிரதான அபாயமாக காண்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டுகிறது.

போயிங் தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு, திங்களன்று அதன் அறிக்கையில், “சமூகம் இரண்டு மிகப்பெரிய முகாம்களாகப் பிளவுபட்டுள்ளது என்ற உண்மையை எங்கள் வேலைநிறுத்தம் வெளிப்படுத்தி உள்ளது: செல்வ வளத்தை உருவாக்கும் தொழிலாளர்கள் மற்றும் நம்மைச் சுரண்டி வாழும் முதலாளிகள். எங்கள் வேலைநிறுத்தம் சமூகத்தின் செல்வத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள், நாங்களா அல்லது அவர்களா என்பதன் மீதான ஒரு சண்டையாகும்” என்று விளக்கியது.

தொழிலாளர்களைப் பொறுத்த வரையில், இதற்கு போர்-ஆதரவு முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அவற்றின் தொழிற்சங்க எடுபிடிகளில் இருந்து சுயாதீனமாக, அவர்களின் அளப்பரிய அதிகாரத்தை அணிதிரட்டுவதன் அடிப்படையில் ஒரு புதிய மூலோபாயம் அவசியப்படுகிறது. ஏகாதிபத்திய போரின் போலியான “தேசிய ஐக்கியத்தை” நிராகரித்து, தொழிலாளர்கள் உலகெங்கிலும் அவர்களின் பொதுவான நலன்களின் அடிப்படையில் ஐக்கியப்பட வேண்டும். ஏகாதிபத்திய சூறையாடலில் எந்த ஆர்வமும் இல்லாத தொழிலாள வர்க்கம், போருக்கு எதிரான ஒரு சமரசமற்ற போராட்டத்தின் மூலமாக மட்டுமே அதன் நலன்களைப் பாதுகாக்க முடியும்.

எவ்வாறிருப்பினும், போருக்கு எதிரான போராட்டத்திற்கு முதலாளித்துவ இலாப அமைப்புமுறைக்கு எதிரான அதன் மூலாதாரத்திற்கு எதிரான ஒரு போராட்டம் அவசியமாகும். போயிங் போராட்டம் நேரடியாக உற்பத்தியில் தொழிலாளர்களின் கட்டுப்பாடு தேவை என்பதை முன்வைக்கிறது; இதில் போயிங் தேசியமயமாக்கப்படுவதும் அடங்கும். இலாபத்திற்கான இரக்கமற்ற உந்துதலுக்கு உற்பத்தியை அடிபணியச் செய்வதுதான் முடிவில்லா தொடர்ச்சியான பேரழிவுகளுக்கும் போயிங் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களின் விரிவாக்கத்திற்கும் பொறுப்பாகும்.

இது, ஏகாதிபத்திய போரின் அடிப்படையில் அல்லாமல், தனியார் இலாபத்திற்காக அல்லாமல், சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்காக சமூகத்தை மறுஒழுங்கமைக்கும் வகையில், தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதுதான் சோசலிசத்தின் வேலைத்திட்டமாகும்.

Loading