மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
பாசிச படைப்பிரிவுகள் உட்பட உக்ரேனின் இராணுவப் படையை ஆயுதமயமாக்கலை பிரிட்டன் அதிகரிக்க உள்ளதாக டவுனிங் தெரு உறுதியளித்துள்ளது. கியேவ் அரசாங்கத்திற்கு Starstreak அதிவேக ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து முனைகிறது. பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சனின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர், 'உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குதிலிருந்து பிரிட்டன் ரஷ்யாவால் தடுக்கப்படாது' என்று அச்சுறுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை போலந்து எல்லைக்கு அருகில் உள்ள இராணுவ நிலையம் மீது ரஷ்ய தாக்குதலில் மூன்று பிரிட்டிஷ் முன்னாள் சிறப்புப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியான செய்திகளுக்குப் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அவர்களின் மரணம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படாததுடன் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கம் உக்ரேனில் அதன் இராணுவத்தினர் இருப்பதை மறுக்கிறது.
இது ஒரு பொய்யாகும். இராணுவ மற்றும் பாசிச பின்னணியை கொண்ட ஆயிரக்கணக்கான வெளிநாட்டு கூலிப்படையினர், பலர் உக்ரேனில் தீவிரமாக உள்ளனர். மேலும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் பிப்ரவரியில் ரஷ்யாவிற்கு எதிராக போராட உக்ரேனுக்கு செல்லும் பிரித்தானியர்களை 'முற்றிலும்' ஆதரிப்பதாக கூறினார். உக்ரேனில் சண்டையிடுவதற்காக பிரித்தானியர்கள் வெளியேறுவது சட்டவிரோதமானது என்று அரசாங்கம் பின்னர் கூறியது. ஆனால் இது வெறும் பதிவுக்காக கூறப்பட்டது. அங்கு யாரும் பயணிப்பதைத் தடுக்க எதுவும் செய்யப்படவில்லை.
1991ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து மாஸ்கோவிற்கு எதிரான முடிவில்லாத ஆத்திரமூட்டல்களில் நேட்டோ ஈடுபட்டுள்ளது என்பதிலிருந்து, ரஷ்ய ஆக்கிரமிப்பின் குற்றவியல் தன்மையை பிரித்துவிடமுடியாது. 2014ல் வலதுசாரி மைதான் சதுக்க சதியை ஆதரித்த பின்னர், நேட்டோ யூகோஸ்லாவியாவை துண்டாடியதைப் போலவே மாஸ்கோவில் ஆட்சி மாற்றத்திற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக உக்ரேனியப் படைகளுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சியை முடுக்கிவிட்டுள்ளது. உத்தியோகபூர்வ மறுப்புகள் இருந்தபோதிலும், நேட்டோ ஏற்கனவே உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக மறைமுகமான போரில் ஈடுபட்டுள்ளது என்பதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
நாடாளுமன்ற நூலகத்தின் 'உக்ரேனுக்கான இராணுவ உதவி 2014-2021' என்ற அறிக்கை மார்ச் 4 அன்று வெளியிடப்பட்டது. அது 'உக்ரேனுக்கு இங்கிலாந்து இராணுவ உதவி நீண்டகாலமாக உள்ளது' எனக் கூறுகிறது. உத்தியோகபூர்வமாக இது மைதான் சதுக்க சதிக்கு பின்னர் தான் அக்டோபர் 2014 இல் 'இருதரப்பு இராணுவ உதவியுடன்' தொடங்கியது. ஆனால் உத்தியோகபூர்வமற்ற இராணுவ உறவுகள் 1991 வரை செல்கின்றன.
அந்த ஆண்டு உக்ரேன் நேட்டோவின் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு குழுவில் ஒரு பங்காளி நாடாகவும், 1994 இல் அமைதிக்கான கூட்டுழைப்பு திட்டத்திலும் இணைந்தது.
2015 ஆம் ஆண்டின் முற்பகுதியில், UK இன் Operation Orbital அறிவிக்கப்பட்டது. இதில் 'உயிரிழப்பை உருவாக்காத' இராணுவ உபகரணங்கள் மற்றும் 'பல ஆலோசனை மற்றும் குறுகியகால பயிற்சி குழுக்கள் மூலம் உக்ரேனிய ஆயுதப்படைகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி ஆகியவை அடங்கும்.' 2015 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில், பிரித்தானியா 2.2 மில்லியன் பவுண்டுகளை உக்ரேனுக்கு 'பரிசாக' வழங்கியது. இது, அன்றிலிருந்து விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 2019 இல், பாதுகாப்பு அமைச்சகம் (MoD) Operation Orbital மார்ச் 2023 வரை நீட்டிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. இந்த நடவடிக்கையில் 'நகர்ப்புற சூழலில் தற்காப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியும்' அடங்கும்.
ஜூன் 2020 இல் உக்ரேனுக்கு நேட்டோவுடன் மேம்படுத்தப்பட்ட வாய்ப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இது “உக்ரேனுக்கு நேட்டோவின் பயிற்சிகள், தகவல் பரிமாற்றம் மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான முன்னுரிமை அணுகலை வழங்குகிறது. செப்டம்பர் 2020 இல், உக்ரேன் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் கனேடிய துருப்புக்களுடன் கூட்டு முயற்சியை நடத்தியது. இது உக்ரேனின் புதிய நீடித்த நிலையின் கீழ் முதல் பயிற்சியாகும்.
அந்த ஆண்டு அக்டோபரில், கியேவின் கடற்படைத் திறன்களை மேம்படுத்த இங்கிலாந்துக்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு பொதுவான நோக்குநிலையை ஒப்புக்கொண்டது. உக்ரேனின் கடற்படை ரோந்துக்கு 'ஏவுகணைகளை விற்பனை செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தல்', 'எட்டு வேகமான ஏவுகணை போர்க்கப்பல்களின் அபிவிருத்தி மற்றும் கூட்டு தயாரிப்பு' மற்றும் 'கருங்கடல் மற்றும் அசோவ் கடலில் புதிய கடற்படை தளங்களை உருவாக்குவதற்கான உதவி' ஆகியவை பற்றிய ஒப்பந்தங்கள் நடந்து வருகின்றன.
இந்த முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இங்கிலாந்து 22,000 உக்ரேனிய இராணுவத்தினருக்கு பயிற்சி அளித்துள்ளதாக விளக்கவுரையில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வழியையே பிரிட்டன் பின்பற்றியது. உக்ரேன் '1990 களின் முற்பகுதியில் இருந்து அமெரிக்க வெளிநாட்டு மற்றும் இராணுவ உதவிகளைப் பெறுவதில் முன்னணியில் உள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் முதல் தசாப்தத்தில், உக்ரேன் கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டாலர்கள் அமெரிக்க உதவியைப் பெற்றது. 2014 இல் கிரிமியாவை ரஷ்யா இணைப்பதற்கு முந்தைய ஆண்டுகளில், உக்ரேன் ஆண்டுக்கு 105 மில்லியன் டாலர்களை பெறுகிறது. இதில் வெளிநாட்டு இராணுவ நிதியுதவியும் அடங்கும்,” என்று நாடாளுமன்ற அறிக்கை கூறுகிறது.
'2014 இல் ஒபாமா நிர்வாகம் உக்ரேனுக்கு குறிப்பிடத்தக்க உயிரிழப்பு அல்லாத இராணுவ உபகரணங்களை வழங்கியது... அந்த நேரத்தில், ஒபாமா நிர்வாகம், காங்கிரஸின் ஆதரவுடன், 'கிழக்கு' நெருக்கடிக்கு இராஜதந்திரம் முடிவுக்குக் கொண்டுவரத் தவறினால், உக்ரேனுக்கு ஆபத்தான ஆயுதங்களை வழங்குவது குறித்து பரிசீலிப்பதாகக் குறிப்பிட்டது'.
உக்ரேனுக்கு 'பெரிய மரணம் விளைவிக்கும் தற்காப்பு ஆயுதங்களை' வழங்க உத்தியோகபூர்வமாக ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது.
'குறிப்பாக 2019 இல் ஜனாதிபதி ட்ரம்ப் மீதான முதல் பதவிவிலக்கல் விசாரணையுடன் இது உக்ரேனிய பாதுகாப்பு உதவி மற்றும் தொடர்புடைய மரண ஆயுதங்களை வழங்குதலை நிறுத்தியது' என்று அறிக்கை கூறுகிறது. இந்த 'இடைநிறுத்தம்' செப்டம்பர் 2019 இல் நீக்கப்பட்டது. அதன் பின்னர், ஆகஸ்ட் 2021 இல், 'பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான அடித்தளத்தை வழங்க அமெரிக்காவும் உக்ரேனும் ஒரு மூலோபாய பாதுகாப்பு கட்டமைப்பில் கையெழுத்திட்டன. பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தம், கருங்கடலில் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இணைய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை பகிர்வு மற்றும் ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்கொள்வது ஆகியவை அதன் முன்னுரிமைகளில் அடங்கும்.
இந்த நிதியுதவியை யார் பெறுகிறார்கள் என்பதற்கான அறிகுறியாக, கடந்த ஆண்டு கியேவில் நடந்த, செப்டம்பர் 2021 இல் Operation Orbital இல் மூன்று பிரிட்டிஷ் தளபதிகள் மற்றும் உக்ரேனின் தேசிய பாதுகாப்பு படையின் (NGU) மூன்று அதிகாரிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் புகைப்படங்களை Declassified இணைய தளம் வெளியிட்டது.
'கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கு எதிராக போராடும் துணை இராணுவ மற்றும் தன்னார்வ படைப்பிரிவுகளின் வரிசையை இணைக்க தேசிய பாதுகாப்பு படை 2014 இல் உருவாக்கப்பட்டது' என்று Declassified எழுதுகிறது. 'இது ஒரு நவ-நாஜி பிரிவான அசோவ் படைப்பிரிவையும் உள்ளடக்கியது. அதில் ஆயிரம் பேர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.”
பாதுகாப்பு அமைச்சகம் 'கூட்டம் தனிப்பட்டது மற்றும் விளம்பரப்படுத்தப்படக்கூடாது என நம்புகிறது'. 'பொதுவில் கிடைக்கக்கூடிய எந்தவொரு பிரித்தானிய வெளியீடுகளிலும் சந்திப்பு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை' ஆனால் Orbital இன் துணைத் தளபதி லெப்டினன்ட் தளபதி அன்டி கொக்ஸ் கலந்துகொண்டதாகப் புகாரளிக்கும் சமூக ஊடகங்களில் புகைப்படம் முதலில் உக்ரேன் தேசிய பாதுகாப்பு படையால் வெளியிடப்பட்டது.
உக்ரேன் தேசிய பாதுகாப்பு படையின் அறிக்கை கொக்ஸை மேற்கோள் காட்டி, 'உக்ரேனின் ஆயுதப்படைகளின் பிரிவுகளுக்கு அவர்களின் போர் திறன்களை வளர்ப்பதற்காக இன்று நடத்தப்படும் பயிற்சி நடவடிக்கைகளில் உக்ரேனின் தேசிய படையின் பிரதிநிதிகளை ஈடுபடுத்த பிரிட்டிஷ் இராணுவம் தயாராக உள்ளது' என்று உறுதியளித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், 'பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காக சந்திப்பு வழக்கமான ஈடுபாடுதான்' என்று கூறி, Declassified இன் உரிமைகோரல்களை மறுத்தார்.
கூட்டத்திற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, அதே “உக்ரேன் தேசிய பாதுகாப்பு படை (NGU) இணைய தளம் அசோவ் படைப்பிரிவின் ஏழு ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. 'வெற்றியின் ஏழு ஆண்டுகள்' என்ற தலைப்பில், இது நவ-நாஜி பிரிவுக்கு ஆடம்பரமான பாராட்டுக்களால் நிரம்பியிருந்தது.
ஜோர்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஐரோப்பிய, ரஷ்ய மற்றும் யூரேசிய ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையை மேற்கோள் காட்டி Declassified, மற்றொரு பாசிச ஆயுதக் குழுவான போராளிகளான Centuriaவின் உறுப்பினர் ஒருவர், உக்ரேனின் இராணுவத்தில் தற்போது பணியாற்றும் பல உறுப்பினர்கள், “பிரிட்டனில் 11 மாத அதிகாரி பயிற்சி பெற்றுள்ளனர் என்பதை வெளிப்படுத்துகிறது. இவர்கள் உயரதிகாரிகளுக்கான இராணுவ பயிற்சி நிலையமான Sandhurst இல் 2020 இல் பட்டம் பெற்றுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சகம் உத்தியோகபூர்வமாக ஈடுபாட்டை மறுக்கும் அதே வேளையில், பிரிட்டனின் ஊடகங்கள் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போரில் இங்கிலாந்தின் பங்கு பற்றி வெளிப்படையாக கூக்குரலிடுகின்றன.
கடந்த வாரம், Daily Telegraph 'ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனின் எதிர்ப்பை பிரிட்டன் எவ்வாறு ஆயுதமயமாக்கியது என்பதற்கான உள்கதை ஒன்றைப்பற்றி' பெருமையாகக் கூறியது.
'கவர்ச்சிகரமாகவும் மற்றும் ஊக்கமளிக்கும்வகையிலும் உக்ரேனை உலகம் ஆயுதமயமாக்கியது எவ்வாறு என்பது பற்றிய உண்மையான கதையை' அது எழுதுகிறது. MI6, சிறப்புப் படைகள், அமெரிக்க உளவுத்துறை மற்றும் இணையப் போர் நடவடிக்கையாளர்கள் 'அனைவரும் தங்கள் பங்கை ஆற்றியுள்ளனர்'.
உக்ரேனிய தளபதி யெவ்ஜென் பொன்டர் Telegraph இடம், “எங்களுக்கு அதிகமான முக்கியமான உதவிகள் கிடைக்கின்றன. அடுத்த தலைமுறை இலகுவான டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் [Next-generation Light Anti-tank Weapons - NLAWs], மூன்று டாங்கிகள் மற்றும் ஒரு கவச போர் வாகனத்தை தாக்கின. அவற்றை எரித்தன, அழகாக எரிந்தது' என்றார்.
ஆங்கிலோ-ஸ்வீடிஷ் ஆயுதங்களான NLAWs, 'ரஷ்ய மற்றும் உக்ரேனிய ஆயுதப்படைகளுக்கு இடையிலான போரில் ஒரு சிறந்த சமப்படுத்தலுக்கு உதவுகின்றது' என்று விவரித்த தளபதி, 'NLAW ஒரு அற்புதமான விஷயம். ஒரு ஜவெலின் [அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தோழில் சுமந்து செல்லக்கூடிய டாங்கி எதிர்ப்பு ஏவுகணை] சிறந்த தூரத்தில் தாக்க கூடியவை. ஆனால் நகரத்தில் தாக்குவதற்கு NLAW சிறப்பாக உள்ளது'.
'ஒவ்வொரு NLAW க்கும் 30,000 பவுண்டுகள் செலவாகும் மற்றும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும்' என்று செய்தித்தாள் தெரிவிக்கிறது. இதில் ரஷ்ய படையெடுப்பிற்கு முன்பு வழங்கப்பட்ட 2,000 உட்பட பிரிட்டன் உக்ரேனுக்கு 3,615 NLAWகளை அனுப்பியுள்ளது'. அது மொத்தத்தில் ஒரு சிறிய பகுதி மட்டுமே. இன்றுவரை, 1948-49 பேர்லின் ஆகாய மூலமான உதவிக்கு பின்னர் மிகப்பெரிய அவசர விநியோகப் பணியில் ஜனநாயக மேற்கு நாடுகளால் ஸ்டிங்கர் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட 17,000 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் உக்ரேனுக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் கடந்து செல்லும் போது, ஆயிரக்கணக்கான ஆயுதங்கள், தோட்டாக்கள், தலைக்கவசங்கள், குண்டுதுளைக்காத உள்ளாடைகள், அதிக சக்திவாய்ந்த உணவுகள் மற்றும் இரவுநேரத்தில் பார்க்கும் கருவிகள் குவிகின்றன”.
'130,000-வலிமையான இராணுவத்தின் ஒழுங்கமைப்பு மற்றும் பயிற்சியைத் தொடங்கிய உக்ரேனுக்கு இராணுவ உதவி மற்றும் நிதியுதவி வழங்குவதில் ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய பங்கை' செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய டொன்பாஸ் பிராந்தியத்தில் ஏற்கெனவே சண்டையிட்டு சிலர் ஏற்கனவே போரிட்ட அனுபவங்களை கொண்டுள்ளனர்”.
அமெரிக்க இணைய கட்டளையகமானது (US Cyber Command) ரஷ்ய தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் தாக்குதல்களை 'சீர்குலைக்க' கிழக்கு ஐரோப்பாவைச் சுற்றி இணைய நடவடிக்கை குழுக்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க உளவுத்துறை உக்ரேனுடன் துருப்பு நகர்வுகளைப் பற்றி பகிர்ந்து கொள்கிறது என Telegraph குறிப்பிட்டது.
உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்கிய 14 நாடுகளில் அமெரிக்காவும் இங்கிலாந்தும் அடங்கும். 'நடுநிலை' ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆயிரக்கணக்கான டாங்கி எதிர்ப்பு ஆயுதங்களை அனுப்பியுள்ளது. ஜேர்மனி உக்ரேனுக்கு 1,400 டாங்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் 500 ஸ்டிங்கர்களை வழங்கியுள்ளது. நெதர்லாந்து 40 Panzerfaust டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள், 400 ஏவுகணைகள் மற்றும் 200 ஸ்டிங்கர்களை அனுப்புகிறது.
பிற நாடுகள் ஆயிரக்கணக்கான கைத்துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், இயந்திர துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கிகளை வழங்குகின்றன.
'பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் உக்ரேனில் உக்ரேனிய இராணுவச் சீருடை அணிந்து கண்காணிப்பாளர்களாகச் செயல்படுவதாக இராணுவ வல்லுநர்கள் ஊகிக்கின்றனர்' என்று செய்தித்தாள் அறிவிக்கின்றது.
மேலும் படிக்க
- நவம்பர் 2021 அமெரிக்க உக்ரேனிய மூலோபாய பங்காண்மையும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பும்
- உக்ரேனில் உயிரியல் போர் ஆய்வகங்கள் இருப்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ஒப்புக் கொள்கிறார்
- ஓய்வுபெற்ற ஜெனரல்கள் விமானம் பறக்கத்தடை மண்டலத்திற்கு அழைப்பு விடுக்கையில், ரஷ்யா மீது அமெரிக்கா "நிதியப் போரை" தீவிரப்படுத்துகிறது