முன்னோக்கு

நவம்பர் 2021 அமெரிக்க உக்ரேனிய மூலோபாய பங்காண்மையும், உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பும்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு அணு ஆயுதப் போரின் பேராபத்தை அதிகரித்துள்ளதுடன், இன்னும் அதிக வன்முறையான மற்றும் இரத்தக்களரியான தன்மையை ஏற்று வருகிறது. அமெரிக்க/நேட்டோ பிரச்சாரத்தின் ஊடக அமைப்புகளின் சந்தேகத்திற்கிடமான மற்றும் தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒருவர் தள்ளுபடி செய்தாலும் —ரஷ்யப் படைகள் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையை குறிவைத்த அறிக்கை போன்றவை— போரால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தவிர்க்க முடியாமல் சோகமான சம்பவங்களுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் முழு அளவிலான மனிதாபிமான பேரழிவாக வளர்ச்சியடைய அச்சுறுத்துகிறது.

குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மில்லியன் கணக்கானவர்கள் தப்பித்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர், மேலும் காயமடைந்த ரஷ்ய சிப்பாய்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் மதிப்பிடப்பட்டுள்ளது. 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசு சொத்துக்களைக் களவாடியதன் அடிப்படையில் அமைந்த ஓர் ஊழல் நிறைந்த முதலாளித்துவ தன்னலக்குழுவின் நலன்களுக்காக ஆட்சி செய்யும் ஓர் ஆட்சி இந்த போரைத் தொடுத்துள்ளது. லெனினும் போல்ஷிவிக் அரசாங்கமும் 1922 இல் சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்தை நிறுவிய போது எந்த ஜனநாயகக் கோட்பாடுகளை அடித்தளத்தில் வைத்திருந்தார்களோ அவற்றைக் கைவிட்டு புட்டின் இந்த படையெடுப்பை நியாயப்படுத்துகிறார் என்பது அவர் ஆட்சியின் மற்றும் இந்த போரின் வரலாற்றுரீதியில் பின்தங்கிய மற்றும் பிற்போக்குத்தனமான தன்மையை நிரூபிக்கின்றன.

உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் பொருளாதார தடையை கடுமையாக்கும் வகையில், ரஷ்யாவின் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக ஜனாதிபதி ஜோ பைடென், செவ்வாய்க்கிழமை, மார்ச் 8, 2022 அன்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உள்ள ரூஸ்வெல்ட் அறையில் இருந்து அறிவிக்கிறார் (AP Photo/Andrew Harnik)

அப்பாவி மக்கள் மீதான அதன் நாசகரமான பாதிப்புடன் சேர்ந்து, உக்ரேன் மீதான தாக்குதல், கண்டிக்கப்பட வேண்டும். ரஷ்யாவின் பாதுகாப்புக்குச் செயல்படுவதாக கூறப்படும் அதன் கூற்றுக்கள் சோசலிசக் கொள்கைகளுடன் ஒத்துப் போகாது —இந்த கோட்பாடுகள் சர்வதேச வர்க்க ஒற்றுமையை தேசிய பாதுகாப்பு என்ற பிற்போக்குத்தனமான வலியுறுத்தல்களுக்கு மேலாக நிறுத்துகின்றன— மேலும் இவை உண்மைகளால் மறுத்தளிக்கப்படுகின்றன. ரஷ்யா இப்போது முன்னெப்போதையும் விட தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, போரின் பொருளாதார விளைவுகள் ரஷ்ய உழைக்கும் மக்களை வறுமையால் அச்சுறுத்துகிறது.

ஆனால் இந்த சோசலிச கண்டனம், அமெரிக்கா மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகள் வேண்டுமென்றே போரைத் தூண்டுவதில் ஆற்றிய முக்கிய பங்கை மறைக்கும் பரந்த பிரச்சார அமைப்புகளில் இருந்து வெளிப்படும் வஞ்சகமான மற்றும் பாசாங்குத்தனமான கண்டனங்களுடன் பொதுவான எதையும் கொண்டதில்லை. படையெடுப்பை ஒரு தூண்டுதலற்ற நடவடிக்கையாக சித்தரிக்கும் செய்தி ஊடகத்தின் சொல்லாடல் ஒரு ஜோடிப்பாகும், இது நேட்டோ சக்திகளின், குறிப்பாக அமெரிக்காவின் மற்றும் உக்ரேனிய அரசாங்க கைப்பாவைகளின் ஆக்ரோஷ நடவடிக்கைகளை மூடிமறைக்கிறது.

1991 இல் சோவியத் அதிகாரத்துவம் சோவியத் ஒன்றியத்தை கலைத்ததன் பின்னணியில் இருந்து மட்டுமே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்களையும் மற்றும் உக்ரேன்-ரஷ்ய போரையும் புரிந்து கொள்ள முடியும். முதலாளித்துவத்தின் கீழ் 'அமைதி மற்றும் செழிப்புக்கான' ஒரு காலக்கட்டத்தைத் திறந்து விடாமல், ஸ்ராலினிசத்தின் பொறிவானது உலக ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது. அதைத் தொடர்ந்து 'அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எரிமலை வெடிப்பு' வந்தது, இதை லியோன் ட்ரொட்ஸ்கி 1934 இலேயே முன்கணித்திருந்தார்.

ஐரோப்பா மற்றும் ஆசியாவில், அமெரிக்கா ரஷ்யாவைச் சுற்றி வளைத்து அடிபணிய வைக்கும் நோக்கில் ஒரு மூலோபாயத்தைப் பின்பற்றியது. சோவியத் அதிகாரத்துவமும் ரஷ்ய தன்னலக்குழுவும் நம்பும் அளவுக்கு மாயையில் இருப்பதாக அதன் முந்தைய வாக்குறுதிகளை நேரடியாக மீறி, நேட்டோ உக்ரேன் மற்றும் பெலாருஸ் தவிர கிழக்கு ஐரோப்பாவின் எல்லா முக்கிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்துள்ளது.

நேட்டோவில் உக்ரேன் உறுப்பு நாடாக ஆவதை எதிர்த்த ரஷ்ய சார்பு அரசாங்கத்தை தூக்கியெறிய, 2014 இல், அமெரிக்கா கியேவில் ஒரு அதிவலது ஆட்சிக்கவிழ்ப்பு சதியை முடுக்கி விட்டது. 2018 இல், ரஷ்யா மற்றும் சீனாவுடன் 'வல்லரசு மோதலுக்கு' தயாராகும் ஒரு மூலோபாயத்தை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஏற்றது. 2019 இல், மத்தியதூர அணுஆயுத தளவாடங்களை நிலைநிறுத்துவதற்குத் தடையாக இருந்த INF ஒப்பந்தத்தில் இருந்து அது ஒருதலைப்பட்சமாக விலகியது. ரஷ்யாவுடனான போருக்கான தயாரிப்புகளும் மற்றும் உக்ரேனை ஆயுதமயப்படுத்துவதும் தான், 2019 இல் டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க குற்றவிசாரணைக்கான ஜனநாயகக் கட்சியின் முதல் முயற்சியில் மையத்தில் இருந்தன.

கடந்தாண்டு, ஜனவரி 6 பாசிச ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியை அடுத்து, பைடென் நிர்வாகம் பொறுப்பின்றி ரஷ்யாவுக்கு எதிரான ஆத்திரமூட்டல்களை அதிகரித்தது.

நவம்பர் 10, 2021 இல் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கென் மற்றும் உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோரால் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-உக்ரேனிய மூலோபாய பங்காண்மை சாசனம் இதைப் புரிந்துகொள்வதற்கான திறவுகோலாகும்.

இராஜாங்க அணுகுமுறையின் வழக்கமான எச்சரிக்கை மொழிகளை விட்டு விட்டு, அந்த சாசனத்தின் மொழி ஓர் இராணுவத் தாக்குதல் கூட்டணியின் மொழியாக இருந்தது. அது 'வலிந்து தாக்குதல் மற்றும் சர்வதேச சட்ட மீறல்களுக்கு' 'ரஷ்யாவைப் பொறுப்பாக்க' சூளுரைத்தது.

அந்த சாசனம் மார்ச் 2021 இல் இருந்து கியேவின் இராணுவ மூலோபாயத்திற்கு ஒப்புதல் அளித்தது, அந்த மூலோபாயம் கிரிமியாவையும் மற்றும் பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த டான்பாஸையும் 'மீண்டும் கைப்பற்றும்' இராணுவ இலக்கை வெளிப்படையாக அறிவித்தது, அவ்விதத்தில் அது கிழக்கு உக்ரேனில் மோதலை தீர்ப்பதற்கான உத்தியோகபூர்வ கட்டமைப்பாக 2015 இல் ஏற்படுத்தப்பட்ட மின்ஸ்க் ஒப்பந்தங்களைக் கைத்துறந்திருந்தது.

'ரஷ்யாவால் முயற்சிக்கப்பட்ட கிரிமியா இணைப்பை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது' என்றும், 'உக்ரேனின் முழு பிராந்திய ஒருமைப்பாட்டை மீட்டெடுக்கும் வரை பொருளாதாரத் தடைகள் மற்றும் 'பிற சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள்' உட்பட 'ஆயுதமேந்திய ஆக்ரோஷ நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கான உக்ரேனின் முயற்சியை ஆதரிக்க விரும்புவதாகவும்' அமெரிக்கா கூறியது.

வாஷிங்டன் வெளிப்படையாகவே 'ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க நேட்டோ விரிவாக்க வாய்ப்புகளுக்கான பங்காளியாக உக்ரேன் தன்னை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளுக்கு' ஒப்புதல் அளித்தது.

எல்லா உள்நோக்கங்கள் மற்றும் நோக்கங்களை வைத்துப் பார்த்தால், நேட்டோவில் உக்ரேன் உறுப்பு நாடு இல்லை, அவ்வாறு இருக்கவும் இல்லை என்பது ஒரு கட்டுக்கதையே. அதே நேரத்தில், ரஷ்யா உடனடியாக ஓர் உலகப் போரைத் தூண்டாது என்பதால், உக்ரேன் உத்தியோகபூர்வமாக உறுப்பு நாடு இல்லை என்ற உண்மையை ரஷ்யாவுடன் ஒரு மோதலைத் தூண்டுவதற்கான ஒரு வாய்ப்பாக நேட்டோ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன.

ரஷ்ய இராணுவம் மற்றும் மக்களிடையே உள்ள எதிர்ப்புக்கு எதிராக உக்ரேனில் உள்ள பாசிச சக்திகள் அதிரடித் துருப்புக்களாக முக்கிய பாத்திரத்தை வகிக்கும் என்பது குறித்து அமெரிக்காவுக்கு நன்றாக தெரியும். 1929-1933 இல் ஸ்ராலினிசத்தின் கீழ் வேளாண்துறை கட்டாயமாக கூட்டுமயமாக்கப்பட்டதை பொய்யாக 'செயற்கை பஞ்சப் படுகொலை' (Holodomor) என்றும், அதனால் ஏற்பட்ட பஞ்சம் உக்ரேனிய மக்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு 'இனப்படுகொலை' என்றும் உக்ரேனின் அதிவலதினது வரலாற்று கட்டுக்கதையை அந்த சாசனம் அங்கீகரித்தது.

அந்த ஆவணத்தில் ஒரு பத்தி குறிப்பிடுகிறது, '1932-1933 இல் உக்ரேன் ஹோலோடோமோர் (செயற்கை பஞ்சம்) மற்றும் கடந்த காலத்தில் உக்ரேனுக்கு எதிராக மற்றும் உக்ரேனுக்குள் நடத்தப்பட்ட ஏனைய கொடூரங்களைக் குறித்து மக்களிடையே அதிக பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவது உட்பட அமெரிக்காவும் உக்ரேனும் நினைவூட்டும் பிரச்சாரங்களை ஊக்குவிக்க தொடர்ந்து நெருக்கமாக ஒத்துழைக்க விரும்புகின்றன.”

ஆனால் 1.5 மில்லியன் உக்ரேனிய யூதர்களின் உயிர்களைப் பறித்த யூத இனப்படுகொலை, மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்த உக்ரேனிய பாசிசவாதிகளின் குற்றங்கள் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு (OUN-B) மற்றும் உக்ரேனிய கிளர்ச்சி இராணுவம் (UPA) ஆகியவை பல்லாயிரக்கணக்கான யூதர்கள், போலந்துக்காரர்கள் மற்றும் உக்ரேனிய பாசிச எதிர்ப்பாளர்களைப் போரின் போதும் அதற்குப் பின்னர் உடனடியாகவும் படுகொலை செய்தன.

அவற்றின் வழிவந்த அமைப்புகள், பாசிச ஸ்வோபோடா கட்சியில் இருந்து நவ-நாஜி அசோவ் பட்டாலியன் (Azov Battalion) வரை, இப்போது உக்ரேனிய அரசுடனும் மற்றும் இராணுவத்துடனும் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன், நேட்டோ ஆயுதங்களுடன் பெரிதும் ஆயுதம் ஏந்தியிருக்கின்றன.

அந்நாட்டை ஒரு கொலைக் களமாகவும், ரஷ்யாவுடனான போருக்கு முதல் போர்க்களமாகவும் மாற்ற பிரதி உபகாரமாக உக்ரேனிய தன்னலக்குழு வாஷிங்டனிடம் இருந்து என்ன வாக்குறுதிகளைப் பெற்றது என்பதை வெளிக்கொணரும் பொறுப்பு வரலாற்றாளர்கள் மீது விழும். ஆனால் ஒரு விஷயம் தெளிவாக உள்ளது: அதாவது, கிரெம்ளினும் ரஷ்ய படைத் தளபதியும் இந்த ஆவணத்தை வரவிருக்கும் ஒரு போருக்கான அறிவிப்பாக அல்லாமல் வேறு எவ்வாறும் வாசிக்க முடியாது.

2021 முழுவதும் மற்றும் படையெடுப்புக்கு சற்று முந்தைய வாரங்களிலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், நேட்டோவுடன் உக்ரேனை ஒருங்கிணைப்பது மற்றும் மேற்கத்திய சக்திகளை அதை ஆயுதமயப்படுத்துவது ரஷ்யாவுக்கு 'எச்சரிக்கைக் கோடாக' விளங்குகிறது என்று மீண்டும் மீண்டும் எச்சரித்ததுடன், அமெரிக்கா மற்றும் நேட்டோவிடம் இருந்து 'பாதுகாப்பு உத்தரவாதங்களை' கோரி இருந்தார்.

ஆனால் இந்த அறிக்கைகள் அனைத்தையும் அமெரிக்கா அவமதிக்கும் வகையில் நிராகரித்தது, நேட்டோ ரஷ்யாவின் எல்லைகளில் ஒன்றன்பின் ஒன்றாக மிகப் பெரிய இராணுவப் பயிற்சிகளை நடத்தியது — மே மாதம் நடத்தப்பட்ட மிகப் பெரும் Defender 2021 பயிற்சிகள், ஜூன் மற்றும் ஜூலையில் கருங்கடலில் நடத்தப்பட்ட Operation Sea Breeze ஆகியவையும் இதில் உள்ளடங்கும். இறுதியாக, போருக்கு முந்தைய வாரங்களில், ரஷ்யப் படையெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தொடர்ந்து எச்சரித்தவாறு, பைடென் நிர்வாகம் அதே வேளையில் அதைத் தடுக்க எந்த இராஜாங்க நடவடிக்கையும் எடுக்காமல், அதைத் தூண்டிவிட எல்லாவற்றையும் செய்தது.

ஒரு ஓரத்தில் ஒதுக்கப்பட்ட புட்டின் ஆட்சி, உக்ரேன் மீதான படையெடுப்பைக் கொண்டு 1991 க்குப் பின்னர் இருந்து நடந்து வரும் ரஷ்யா மீதான சுற்றிவளைப்பை ஏதோவகையில் மாற்றி, ஏகாதிபத்தியத்துடன் ஓர் உடன்பாட்டை எட்டி விடலாம் என்று கணக்கிட்டார். ஜாரிசம் முதல் அக்டோபர் 1917 சோசலிசப் புரட்சிக்கு எதிரான ஸ்ராலினிச பிற்போக்குத்தனம் வரை ரஷ்ய வரலாற்றின் பிற்போக்குத்தனமான ஒவ்வொன்றினதும் வாரிசாக விளங்கும் வரலாற்றுரீதியில் திவாலான ஒரு வர்க்கத்தால் ஏகாதிபத்தியத்திற்குக் காட்டப்படும் விடையிறுப்பு இது தான்.

உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பாக விளைந்துள்ள, அமெரிக்கா/நேட்டோவின் எரிச்சலூட்டும் ஆத்திரமூட்டல்கள், முழு அளவிலான அணுஆயுதப் போராக தீவிரமடையக்கூடிய, அரசியல்ரீதியில் ஒரு பயங்கரமான சூழலை உருவாக்கியுள்ளது. ஒருவிதமான போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டாலும் கூட, அது மற்றொரு வன்முறை வெடிப்புக்கு இடையேயான இடைநிறுத்தக் காலம் என்பதற்குக் கூடுதலாக வேறொன்றுமாக இருக்காது.

பேரழிவை நோக்கிய இந்த முனைவை ஒரேயொரு சக்தியால் மட்டுமே நிறுத்த முடியும்: அதாவது, ஏகாதிபத்திய இராணுவவாதத்திற்கும், உலகை எதிர்விரோத முகாம்களாகப் பிரிக்கும் வரலாற்றுரீதியில் காலாவதியான தேசிய-அரசு அமைப்புமுறைக்கும், மற்றும் இலாபங்கள், மனிதகுலத்தை பேரழிவை நோக்கி செலுத்தும் அதன் இடைவிடாத முனைவைக் கொண்டுள்ள இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப் போராட்டத்தால் மட்டுமே அதைச் செய்ய முடியும்.

Loading