உக்ரேனில் உயிரியல் போர் ஆய்வகங்கள் இருப்பதை அமெரிக்க வெளியுறவுத்துறை துணைச் செயலர் ஒப்புக் கொள்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 27, 2022 அன்று, வாஷிங்டனில் நடந்த வெளியுறவுத்துறை செய்தியாளர் கூட்டத்தில் அதன் துணைச் செயலர் விக்டோரியா ஜே. நூலாண்ட் பேசுகிறார் (AP Photo/Susan Walsh, Pool)

செவ்வாயன்று, செனட் சபை விசாரணையில், புளோரிடா குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் மார்கோ ருபியோ, உக்ரேனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் இருப்பது பற்றி எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை துணைச் செயலர் விக்டோரியா நூலாண்ட், உக்ரேனில் ‘உயிரியல் ஆராய்ச்சி மையங்கள்’ இயங்கி வருவதாக பதிலளித்தார்.

ஆய்வகங்களில் அமெரிக்காவின் ஈடுபாடு பற்றி அவர் எதுவும் கூறவில்லை என்றாலும், செனட் வெளியுறவுக் குழு விசாரணையின் போது “அந்த ஆராய்ச்சிப் பொருட்கள் எதுவும் ரஷ்யப் படைகளின் கைகளில் சிக்காமல் தடுக்க” வெளியுறவுத்துறை எடுத்த முயற்சிகள் பற்றி சாட்சியமளிக்க நூலாண்ட் விரைந்து மாறினார். ஒருவேளை உக்ரேனுக்குள் ஒரு உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்களின் தாக்குதல் நடந்திருந்தால், அது ‘சந்தேகத்திற்கு இடமின்றி’ ரஷ்யாவால் நடத்தப்பட்டிருக்கும் என்று கவனமாக ஒத்தூதி அவர் மேலும் தொடர்ந்தார்.

ருபியோ மற்றும் நூலாண்ட் இடையே நடந்த கருத்து பரிமாற்றத்தின் நகல் பின்வருமாறு:

செனட்டர் மார்கோ ருபியோ: உக்ரேனில் இரசாயன அல்லது உயிரியல் ஆயுதங்கள் உள்ளனவா?

விக்டோரியா நுலாண்ட்: உக்ரேனில் உயிரியல் ஆராய்ச்சி மையங்கள் உள்ளன, உண்மையில், நாம் இப்போது ரஷ்ய துருப்புக்களைப் பற்றி கவலைப்படுகிறோம், ஏனென்றால் ரஷ்யப் படைகள் அவற்றை கட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்கலாம், அவர்கள் அந்த ஆராய்ச்சி பொருட்களை அணுகினால், அவை எதுவும் அவர்களின் கைகளில் சிக்காமல் எவ்வாறு தடுப்பது என்பது பற்றி உக்ரேனியர்களுடன் சேர்ந்து நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

செனட்டர் மார்கோ ருபியோ: நேட்டோவின் ஒத்துழைப்புடன், நாட்டில் உயிரியல் ஆயுதங்களை கட்டவிழ்த்து விடுவதற்கு உக்ரேனியர்கள் செய்த சதியை, அவர்கள் எப்படி கண்டுபிடித்தனர் என்பது பற்றிய செய்திகள் அனைத்தையும் ரஷ்ய பிரச்சாரக் குழுக்கள் ஏற்கனவே வெளியிட்டு வருவது பற்றி நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன்.

உக்ரேனுக்குள் உயிரியல் அல்லது இரசாயன ஆயுத சம்பவம் அல்லது தாக்குதல் எதுவும் நடந்திருந்தால், 100 சதவீதம் அதன் பின்னணியில் ரஷ்யர்கள் இருப்பார்கள் என்று நீங்கள் சந்தேகிக்கிறீர்களா?

விக்டோரியா நுலாண்ட்: அதில் எந்த சந்தேகமும் இல்லை, செனட்டர். மேலும், உண்மையில், தாம் செய்ய திட்டமிட்டதை மற்றவர்கள் மீது பழிசுமத்துவதுதான் உன்னதமான ரஷ்ய மதிநுட்பமாகும்.

உக்ரேனிய உயிரி ஆயுத ஆய்வகங்கள் பற்றி நூலாண்ட் குறிப்பாக ஒப்புக்கொண்டமை, அமெரிக்காவால் உக்ரேனுக்குள் ஒரு இராணுவ உயிரியல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகக் கூறும் மாஸ்கோவின் செய்திகளை உறுதிப்படுத்தியது. ரஷ்ய அறிக்கைகள் ‘அபத்தமானது’ என்று கூறும் பென்டகனின் அறிக்கைகளும், மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி செலென்ஸ்கியின் அலுவலகம் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்று மறுப்பதும் முற்றிலும் பொய்யானவை என்பதை வெளியுறவுத்துறை ஒப்புதல் நிரூபிக்கிறது.

புதன்கிழமை அன்று, ராய்ட்டர்ஸ் அறிக்கை, “பெப்ரவரி 24 அன்று உக்ரேன் மீது படையெடுத்து ரஷ்யா அதன் இராணுவ நடவடிக்கையை எடுத்தபோது, குற்றம்சாட்டப்பட்ட திட்டம் பற்றிய ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறினார்” என்று செய்தி வெளியிட்டது.

“பெப்ரவரி 24 தேதிக்குப் பின்னர் பிளேக், காலரா, ஆந்த்ராக்ஸ் மற்றும் பிற நோய்க்கிருமிகளின் மாதிரிகளை அழிக்க உக்ரேனிய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டதைக் காட்டும் ஆவணங்கள் ரஷ்யாவிடம் இருந்தன” என்றும் ஜாகரோவா தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி கூறியது. ஜாகரோவா மேலும், “நமது நாட்டின் எல்லைக்கு மிக அருகாமையில், உக்ரேனிய உயிரியல் ஆய்வகங்களில், உயிரியல் ஆயுத கூறுகளின் அபிவிருத்தி மேற்கொள்ளப்படுகிறது என்று எங்களால் முன்னரே முடிவு செய்ய முடிந்தது” என்றும் கூறினார்.

இந்த அம்பலப்படுத்தல்களுக்கு பதிலளித்து, செவ்வாயன்று சீன வெளியுறவு அமைச்சகம், அமெரிக்க நிதியுதவியுடன் உக்ரேனில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரஷ்யர்கள் கூறுவதான உயிரியல் ஆயுத ஆராய்ச்சி பற்றிய ‘முழு விபரங்களையும் வழங்குமாறு’ அமெரிக்காவிடம் கோரியது.

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஜாவோ லிஜியன், “உக்ரேன், அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும்” உறுதி செய்வதற்காக, “குறிப்பாக, அமெரிக்கா, இந்த ஆய்வகங்கள் பற்றி நன்கு அறிந்த பிரிவினர் என்ற வகையில், சேமித்து வைக்கப்பட்டுள்ள நோய்க்கிருமிகளின் வகைகள் மற்றும் நடத்தப்பட்ட ஆராய்ச்சி உட்பட, சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட விபரங்களை கூடிய விரைவில் வெளியிட வேண்டும்” என்று கூறினார்.

உக்ரேனில் உள்ள உயிரியல் ஆயுத மையங்கள் பற்றிய விபரங்கள் மார்ச் 6 அன்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது, அப்போது மேஜர் ஜெனரல் இகோர் கொனாஷென்கோ, உயிரியல் போருக்கான கொடிய நோய்களுக்கான நோய்க்கிருமிகள் பென்டகனால் நிதியளிக்கப்பட்ட உக்ரேனிய ஆய்வகங்களில் உருவாக்கப்படுகின்றன என்று குற்றம்சாட்டினார்.

“வெளிப்படையாகச் சொன்னால், ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையின் தொடக்கத்துடன், உக்ரேன் பிரதேசத்தில் இரகசிய உயிரியில் பரிசோதனைகள் நடத்தப்படுவது வெளிப்படுத்தப்படுவது தொடர்பாக பென்டகன் தீவிர கவலை கொண்டிருந்தது” என்று ரஷ்ய செய்தி நிறுவனம் TASS க்கு கொனாஷென்கோ தெரிவித்தார்.

புதன்கிழமை பிற்பகலில் வெள்ளை மாளிகையின் செய்திச் செயலாளர் ஜென் சாகி வெளியிட்ட சேதக் கட்டுப்பாட்டு ட்விட்டர் பதிவானது, நூலாண்டின் காங்கிரஸ்வாத சாட்சியத்தைப் பற்றி குறிப்பிடவில்லை, ஆனால் ரஷ்ய மற்றும் சீன அறிக்கைகளை ‘அபத்தமானவை’ மற்றும் ‘தவறான தகவல் நடவடிக்கை’ என்று அழைத்தது. மேலும், “இரசாயன ஆயுதங்கள் மாநாடு மற்றும் உயிரியல் ஆயுதங்கள் மாநாடு ஆகியவற்றின் கீழ் அமெரிக்கா தனது கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதுடன், அத்தகைய ஆயுதங்களை அது எங்கும் உருவாக்கவில்லை அல்லது வைத்திருக்கவில்லை” என்று சாகி கூறினார்.

வெள்ளை மாளிகையின் செய்திச் செயலர் பின்னர், ரஷ்யா “அலெக்ஸி நவால்னி போன்ற புட்டினின் அரசியல் எதிர்ப்பாளர்களை படுகொலை செய்வதற்கு அது எடுத்த முயற்சிகள் மற்றும் அவர்களுக்கு நஞ்சூட்டியது உட்பட, இரசாயன ஆயுதங்களை பிரயோகித்ததற்கான நீண்ட மற்றும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட குற்றங்களைப் புரிந்துள்ளது” என்று அதனைக் குற்றம்சாட்டினார். மேலும், “இரசாயன ஆயுதங்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்திய சிரியாவின் ஆசாத் ஆட்சிக்கு ரஷ்யா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், ரஷ்யாவில் ஏகாதிபத்திய-ஆதரவு புட்டின்-விரோத எதிர்ப்பின் தலைவரான நவால்னிக்கு டிசம்பர் 2020 இல் நஞ்சூட்டப்பட்டதாக கூறப்பட்ட குற்றமானது, ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், பைடென் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னதாக ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புக்களை முடுக்கிவிடுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்வதேச போர் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அது மாறியது. இதற்கிடையில், விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட ஆவணங்கள், டமாஸ்கஸில் அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டமாக 2018 இல் டூமாவில் சிரிய இரசாயன ஆயுதத் தாக்குதல் பற்றிய அப்பட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன.

'ரஷ்யாவே செய்யும் துஷ்பிரயோகங்களுக்கு மேற்கு நாடுகளை குற்றம் சாட்டும் பழக்கம்' ரஷ்யாவிற்கு உள்ளது என்று கூறி சாகி தனது ட்வீட்டை நிறைவு செய்திருந்தார், ஆனால் செவ்வாய்க்கிழமை அன்று, நூலாண்டின் சாட்சியம் மூலம் இந்த கூற்று பொய்யானது என முழுமையாக அம்பலப்பட்டுள்ளது.

உக்ரேனில் ரஷ்யா படையெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போருக்கான தயாரிப்புக்களை முழு உலகிற்கும் அம்பலப்படுத்தியதான, நூலாண்டின் அழிவுகரமான வெளிப்பாடுகளை பெருநிறுவன ஊடகங்கள் ஆச்சரியமாக பார்த்தன. வெள்ளை மாளிகை செய்திகளுக்காக வெளிப்படையாக வரிசையில் காத்திருக்கும் முக்கிய அமெரிக்க செய்தி நிறுவனங்கள் எதுவும் இதுவரை அதை தெரிவிக்கவில்லை. இதற்கிடையில், உக்ரேனில் உள்ள உயிரியல் ஆயுத ஆய்வகங்கள் பற்றிய இப்போது சரிபார்க்கப்பட்ட ரஷ்ய குற்றச்சாட்டுக்களை ‘ஒரு பொய்யான கதை’ என்றும், ‘வெற்று சதி கோட்பாடு’ என்றும் செய்தி அறிக்கைகள் தொடர்ந்து குறிப்பிடுகின்றன.

புதன்கிழமை நண்பகலில் வெளியான Newsweek அறிக்கை, உதாரணமாக, “உண்மையில், அமெரிக்க பாதுகாப்புத் துறை உக்ரேனில் ஒருபோதும் உயிரியல் ஆய்வகத்தைக் கொண்டிருக்கவில்லை” என்று கூறுகிறது. மேலும், பென்டகன் மற்றும் உக்ரேன் சுகாதார அமைச்சகம் இடையேயான கூட்டாண்மை என்பது “சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பேழிவுகர ஆயுதங்களின் அச்சுறுத்தலைக் குறைக்கும் நோக்கத்துடன் 1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதான கூட்டுறவு அச்சுறுத்தல் குறைப்பு திட்டத்தின் (Cooperative Threat Reduction Program) ஒரு பகுதியாகும்” என்றும் Newsweek தெரிவித்தது.

உக்ரேனின் பென்டகன்-ஆதரவுடனான உயிரியல் ஆயுதங்களின் உற்பத்தி பற்றிய அம்பலப்படுத்தலானது, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ ரீதியாக என்னென்ன தயாரிப்புகளைச் செய்கிறது என்பது குறித்து சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவில் மில்லியன் கணக்கான மக்களை கொன்று குவிப்பதில் சென்று முடிந்ததான அதன் பல தாசப்தங்கள் நீடித்த ஆக்கிரமிப்புப் போர்களை வைத்துப் பார்த்தால், அமெரிக்கா அதன் புவிசார் மூலோபாய நோக்கங்களைத் தொடர்வதற்கு அது மேற்கொண்ட தயாரிப்புக்களில் இருந்த பொய், ஆத்திரமூட்டல் மற்றும் இராணுவ வன்முறையின் அளவு பற்றி எந்த மாயைகளும் இருக்க முடியாது.

Loading