ரஷ்யாவிற்கு எதிரான போர் உந்துதலுக்கு ஆதரவளிக்கும்படி இந்தியாவிற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

அமெரிக்காவுடனான அதன் மூலோபாய கூட்டாண்மை மற்றும் ரஷ்யாவுடனான அதன் நீண்டகால பாதுகாப்பு உறவுகளுக்கு இடையேயான இந்தியாவின் ஆபத்தான சமநிலைப்படுத்தும் செயலை பலவீனப்படுத்தும் வகையில், உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக, மாஸ்கோவிற்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர் உந்துதலுடன் ஒரே வரிசையில் நிற்கும்படி இந்தியா மீது வாஷிங்டன் அழுத்தத்தை உக்கிரப்படுத்துகிறது.

இந்தியா நீண்ட காலமாக மாஸ்கோவுடனும் அதே போல் வாஷிங்டனுடனும் நெருங்கிய உறவுகளைப் பேணி வருகிறது, சீனாவிற்கு எதிராக வாஷிங்டனுடன் கூட்டணி வைத்துக்கொண்டு 'மூலோபாய சுயாட்சியை' பாதுகாப்பதாகக் கூறுகிறது. வாஷிங்டனால் 'பெரிய பாதுகாப்புப் பங்காளி' என்று வரையறுக்கப்பட்ட பின்னர், உயர் தொழில்நுட்ப அமெரிக்க இராணுவ கருவிகளை பெற்றுக்கொண்ட போதிலும், இந்தியா இன்னும் கணிசமான அளவில் ரஷ்ய இராணுவத் தளவாடங்களைச் சார்ந்திருக்கிறது. ஸ்டிம்சன் மையத்தின் ஆய்வின்படி, இந்திய இராணுவ தளவாடங்களில் 86 சதவீதம் ரஷ்யாவிலிருந்து வந்தன. இந்தியாவின் சிவில் அணுசக்தி திட்டத்திற்கு ரஷ்ய தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் முக்கியமானவை.

வெள்ளிக்கிழமை தினசரி செய்தியாளர் சந்திப்பின் போது, உக்ரேனில் ரஷ்ய படையெடுப்பைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) அவசர அமர்வின் போது இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாததை அடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் இந்தியா குறித்து உரையாற்றினார். அவர் இவ்வாறு தொடங்கினார், “நாங்கள் இந்தியாவுடன் முக்கியமான நலன்களைப் பகிர்ந்து கொள்கிறோம். இந்தியாவுடன் முக்கியமான மதிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறோம். மேலும் ரஷ்யாவுடன் நாம் கொண்டுள்ள உறவில் இருந்து வேறுபட்ட ஒரு உறவை ரஷ்யாவுடன் இந்தியா கொண்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம். நிச்சயமாக, அது பரவாயில்லை.”

ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியான T. S. திர்மூர்த்தி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் 28 பிப்ரவரி 2022 திங்கட்கிழமை, பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசுகிறார். (AP Photo/John Minchillo)

எவ்வாறாயினும், ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்கும் என வாஷிங்டன் எதிர்பார்ப்பதாக பிரைஸ் தெளிவுபடுத்தினார்: 'மறுபடி மீண்டும், உறவு வைத்திருக்கும் ஒவ்வொரு நாட்டிடமும் நாங்கள் கேட்டுக் கொண்டோம், அதாவது நிச்சயமாக நெம்புகோல் உள்ள நாடுகளிடம், அந்த நெம்புகோலை ஒரு ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்துமாறு நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம்.'

அடுத்த நாள், குடியரசுக் கட்சியின் செனட்டர் ஜோன் கார்னின், ரஷ்யாவிற்கு எதிரான UNSC வாக்கெடுப்பில் இந்தியா வாக்களிக்காதது குறித்து 'ஏமாற்றத்தை' வெளிப்படையாக வெளிப்படுத்தினார். புஷ் நிர்வாகத்தின் போது கார்னின் மற்றும் அப்போதைய செனட்டர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரால் நிறுவப்பட்ட அமெரிக்க செனட்டின் ஒரே ஒரு -குறிப்பிட்ட நாட்டுக்கென அமைக்கப்பட்ட குழுவான செனட் இந்தியா கூட்டத்தின் காக்கஸின் இணைத் தலைவராக கார்னின் உள்ளார், இது வாஷிங்டன் இந்தியாவுடன் அதன் இராணுவ-மூலோபாய கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுகிறது.

கார்னின் இவ்வாறு கூறினார், 'ஏமாற்றமாக உள்ளது: உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு இந்தியா பகிரங்கமாக கண்டனம் செய்வதைத் தவிர்த்துள்ளது, அதை சமயம் புது டெல்லி மாஸ்கோவுடன் மூலோபாய உறவையும், வளர்ந்து வரும் ஜனநாயகங்களின் கூட்டணியில் அதன் பங்கையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறது.'

இந்தியாவுடன் அமெரிக்காவின் நெருக்கமான உறவுகளுக்காக கார்னின் வாதிடுகிறார். அவர் இந்தியாவுடன் அமெரிக்க இராணுவ உறவுகளை தீவிரப்படுத்தவும், ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பை வாங்கியதற்காக இந்தியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு விலக்கு அளிக்கவும் பிரச்சாரம் செய்தார். எவ்வாறாயினும், ரஷ்ய-உக்ரேன் போர் பற்றிய அவரது கருத்துக்கள், ரஷ்யாவிற்கு எதிரான அதன் போர் உந்துதலுக்கு ஆதரவளிக்க இந்தியாவை கட்டாயப்படுத்த வாஷிங்டன் பொருளாதாரத் தடைகளைப் பயன்படுத்தலாம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பிப்ரவரி 24 அன்று அமெரிக்க இதழான Foreign Policy இல் எழுதுகையில், வாஷிங்டனில் உள்ள வில்சன் சென்டர் எனப்படும் சிந்தனைக் கூடத்தில் தெற்காசியா தொடர்பான பணிகளை இயக்கும் மைக்கல் குகல்மேன் இவ்வாறு கூறினார்: “தற்போதைய நெருக்கடி [ரஷ்ய-உக்ரேன் போர்] குறித்த இந்தியாவின் பகிரங்க அறிக்கைகள் இதுவரை ரஷ்ய அதிகாரிகளை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளன. ... ஆனால் உக்ரேனில் ரஷ்ய ஆக்கிரமிப்பு, இந்திய நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தல்களை முன்வைக்கிறது, அது மாஸ்கோவை பெய்ஜிங்கின் கரங்களுக்குள் தள்ளுவது முதல் ஆசிய-பசிபிக் பகுதியில் சீன சக்தியை எதிர் கொள்வதில் இருந்து வாஷிங்டனை திசை திருப்புவது வரை.'

ஞாயிற்றுக்கிழமை, உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி விவாதிக்க ஐ.நா பொதுச் சபையின் அரிய ஒரு சிறப்பு அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க UNSC யில் நடந்த நடைமுறை வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது. ரஷ்யா அதற்கு எதிராக வாக்களித்த நிலையில் சீனா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்கெடுப்பில் பங்கெடுக்கவில்லை. அத்தகைய நடைமுறை வாக்குகள் UNSC வீட்டோவை பயன்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால், ஐநா பொதுச் சபையின் சிறப்பு அமர்வு திங்களன்று கூடியது; ரஷ்ய ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் கட்டுப்படுத்தாத ஒரு தீர்மானம் புதன்கிழமை வாக்களிக்கப்பட உள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ போர் பிரச்சாரத்திற்கு இது ஒரு முக்கிய அம்சமாகும்.

ஞாயிற்றுக்கிழமை UNSC வாக்கெடுப்புக்குப் பின்னர், ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ். திர்மூர்த்தி, முழுமையான மோதலைத் தவிர்க்க பேச்சுவார்த்தை மற்றும் (போர்) விரிவாக்கத்தை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். 'இந்த விஷயத்தில் கவுன்சில் கடைசியாகக் கூட்டப்பட்டதிலிருந்து உக்ரேனில் நிலைமை மேலும் மோசமடைந்திருப்பது வருத்தமளிக்கிறது,' என்று திர்மூர்த்தி மேலும் கூறினார்: 'இராஜதந்திரம் மற்றும் பேச்சுவார்த்தை பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை. … இந்த நேரத்தில் அச்சுறுத்துவதாக தோன்றினாலும் கருத்து வேறுபாடுகள் மற்றும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்கான ஒரே பதில் பேச்சுவார்த்தை மட்டுமே, இராஜதந்திரப் பாதை கைவிடப்பட்டது வருத்தம் அளிக்கிறது. நாம் அதற்குத் திரும்ப வேண்டும்.'

எவ்வாறாயினும், இந்திய ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் ரஷ்யாவிற்கு எதிராக வாஷிங்டனுடன் இந்தியா அணிசேர வேண்டும் என்று கோரத் தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சஷி தரூர், ரஷ்யாவை கண்டிக்காததற்காக பிரதமர் நரேந்திர மோடியின் இந்து மேலாதிக்க அரசாங்கத்தை விமர்சித்தார். வியாழனன்று, அவர் டுவீட் செய்தார்: 'ஆக ரஷ்யா ஒரு 'ஆட்சி மாற்ற' நடவடிக்கையை [உக்ரேனில்] நடத்துகிறது. இதுபோன்ற தலையீடுகளை தொடர்ந்து எதிர்த்து வந்த இந்தியா எவ்வளவு காலம் அமைதியாக இருக்க முடியும்?

The Wire இதழில், சுசில் ஆரோன் ரஷ்யாவிற்கு எதிரான UNSC வாக்கெடுப்பில் இந்தியா புறக்கணித்ததை விமர்சித்தார், 'ரஷ்யாவின் உக்ரேன் படையெடுப்பு மீதான இந்தியாவின் புறக்கணிப்பு வாஷிங்டனில் பார்வையை மாற்றும்' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையில் அவர் விமர்சித்தார். 'அமெரிக்க அரசியல் கற்பனையில் ரஷ்யா எவ்வளவு பெரியதாக இருக்கிறது என்பதை மோடி அரசாங்கம் குறைத்து மதிப்பிடுகிறது' என்று குறைகூறிய அவர், 'இந்த வாக்கெடுப்பின் மூலம் புதுடெல்லி அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பிற கூட்டாளிகளை ஒரேயடியாக அந்நியப்படுத்தி விட்டது' என்று வருத்தம் தெரிவித்தார்.

மோடி 'பேச்சுவார்த்தைக்கு' அழைப்பு விடுத்து, வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த முயற்சிக்கையில், நேட்டோ சக்திகள் உக்ரேனை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, ரஷ்யாவுடன் போரை நோக்கி வேகமாக நகர்கின்றன. இந்தச் சூழலில், அவர்களின் ரஷ்ய எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு இந்தியா முழுவதுமாக அடிபணிவதைக் காட்டிலும் குறைவான எதிலும் அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள்.

மாஸ்கோ ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதில் இருந்து 30 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், வாஷிங்டன் யூரேசியா முழுவதிலும் அதன் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கு முறையாக வேலை செய்துள்ளது. ரஷ்யாவை சுற்றி வளைக்க கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் விரிவாக்கம் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியமாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து லிபியா மற்றும் சிரியா வரை பல தசாப்தங்களாக முடிவில்லாத நவ-காலனித்துவப் போர்களை உள்ளடக்கியது.

மோடியின் இந்து மேலாதிக்க பாரதீய ஜனதா கட்சி (BJP) மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு இந்திய அரசாங்கங்களின் கீழ் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களாக அமெரிக்க-இந்திய மூலோபாய கூட்டாண்மையின் வளர்ச்சி, சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் தயாரிப்புகளுக்கு இந்தியாவை ஒரு முன்னணி அரசாக மாற்றியுள்ளது. இப்போது, மேலும், வாஷிங்டன், சீனாவுக்கு எதிராக மட்டுமல்லாமல், ரஷ்யாவுக்கு எதிராகவும் இந்தியா அதன் பின்னால் அணிசேர்ந்து நிற்க வேண்டும் என்று கோருகிறது.

இது பிஜேபி மற்றும் காங்கிரஸின் அரசியல் திவாலை அம்பலப்படுத்துவது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் ஸ்ராலினிச கூட்டாளிகளின் அரசியல் திவால்நிலையையும் அம்பலப்படுத்துகிறது. இந்தியாவின் முதன்மையான ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM, உக்ரேனில் நடந்த போர் குறித்த அதன் எதிர்வினையை ஒரு சுருக்கமான பொலிட் பீரோ அறிக்கையில் 'ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான ஆயுத மோதல் குறித்து கடுமையான கவலைகளை' வெளிப்படுத்தியது.

'ரஷ்யா உக்ரேனுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுத்தது துரதிர்ஷ்டவசமானது' என்று புலம்பிய CPM 'ஆயுதப் போர்களை உடனடியாக நிறுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும்' என்று கெஞ்சியது. உக்ரேனை நேட்டோவுடன் இணைப்பதற்கான நகர்வு உள்ளிட்ட, 'ரஷ்யாவிற்கு கொடுக்கப்பட்ட உத்தரவாதத்திற்கு மாறாக, கிழக்கு நோக்கி சீராக விரிவாக்கம் செய்யும்' நேட்டோ நகர்வுகளை விமர்சிக்கும் அதே வேளையில், அது இவ்வாறு எழுதியது: 'பேச்சுவார்த்தைகளுக்கான நிகழ்வுப்போக்கு மீண்டும் தொடங்கப்பட வேண்டும் மற்றும் இரு தரப்பினரும் எட்டிய முந்தைய ஒப்பந்தங்கள் பின்பற்றப்பட வேண்டும்.'

ஸ்ராலினிஸ்டுகள் விட்டுவிடுவது என்னவென்றால், எல்லாவற்றிற்கும் மேலாக வாஷிங்டனால் உந்தப்பட்ட போருக்கான நேட்டோ சக்திகளின் வளர்ந்து வரும் தயாரிப்புகளைத்தான். இதன் பொருள் வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளின் ஆத்திரமூட்டல்கள் ஒரு அணுவாயுத மூன்றாம் உலகப் போரைத் தூண்டிவிடக்கூடும், இது உலகெங்கிலும் பில்லியன் கணக்கானவர்களுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக அதை தூங்கச்செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. ரஷ்ய மற்றும் உக்ரேனிய முதலாளித்துவ அரசாங்கங்கள், எப்படியாவது ரஷ்யாவையும் சீனாவையும் இலக்காகக் கொண்ட வாஷிங்டனால் உந்தப்பட்ட ஒரு சர்ச்சையைத் தீர்க்கும் என்று நம்புகிறார்கள்.

ஸ்ராலினிச கூற்றுக்களுக்கு மாறாக, உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பாக வளரும் நெருக்கடியானது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சண்டை அல்ல, மாறாக இந்திய ஆளும் உயரடுக்கு அரசியல்ரீதியாக உடந்தையாக இருக்கும் பூகோள ரீதியான ஏகாதிபத்தியம் தலைமையிலான போருக்கான உந்துதல் ஆகும். ஸ்ராலினிச அல்லது தேசியவாதக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதும், இந்தியாவிலும் ஆசியா முழுவதிலும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதும்தான் அத்தகைய போர் வெடிப்பதைத் தடுப்பதற்கான ஒரே வழி.

Loading