இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
டிசம்பர் 30 அன்று, வடமாகாண சுகாதார ஊழியர்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு தலைநகரான யாழ்ப்பாணத்தில் ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் ஊர்வலத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக சுமார் 500 தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்தில் கூடினர்.
ரணூக்கின் சம்பளக் குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்தி, சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டும், மேலதிக நேர கட்டணங்களை அதிகரிக்க வேண்டும், நுகர்பொருட்கள் மற்றும் மருந்துகளின் விலைகளை குறைக்க வேண்டும், பதவி உயர்வு முரண்பாடுகளை களைய வேண்டும், பாடசாலை மாணவர்களுக்கு இலவச முக கவசங்களை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உழைக்கும் வர்க்கத்தை பிளவுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட கொடூரமான இனவாத யுத்தத்தினால் அழிவடைந்த வடமாகாணத்தின் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக திரண்டனர். அங்கிருந்து நகரின் பிரதான வீதிகள் ஊடாக ஊர்வலமாகச் சென்று யாழ்ப்பாணம் பிரதான பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் அப்பகுதியில் பணிபுரியும் சிங்கள, தமிழ் தொழிலாளர்கள் வர்க்க சகோதரத்துவத்துடன் கலந்துகொண்டு உண்மையான வர்க்க ஐக்கியத்தை வெளிப்படுத்தினர்.
சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினால் வடக்கில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முதலில், தொழிலாளர்களின் சுகயீன விடுமுறையை செலவழிக்க நாடு தழுவிய வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்த தொழிற்சங்கத் தலைவர்கள், பின்னர் பிரதேசம் பிரதேசமாக துண்டு துண்டாக வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்தனர். தொடர்ச்சியான மாகாண வேலைநிறுத்தங்களைத் தொடர்ந்து கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்துவதே தொழிற்சங் கூட்டமைப்பின் நோக்கமாகும்.
அரசாங்கத்தை வற்புறுத்தும் பரந்த போராட்டங்கள் மூலம் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும் என்ற மாயையை உறுப்பினர்கள் மத்தியில் பரப்புவதற்கே, தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைகளை ஏற்பாடு செய்கின்றன. கடந்த ஆண்டில் இதுபோன்ற குறைந்தது 30 போராட்டங்களை சுகாதார ஊழியர்கள் நடத்தியுள்ளனர். உண்மையில், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வெளிப்படுத்தும் போர்க்குணத்தை அடக்கி ஒடுக்கி, அரசாங்கமும் ஆளும் வர்க்கமும் தாக்குதல்களை நடத்துவதற்கு காலத்தை வழங்குவதையே தொழிற்சங்கங்கள் செய்கின்றன.
இலங்கையில் உள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களும் இதே போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். தொழிலாளரக்ள் ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்களே தடையாக உள்ளன. முதலாளித்துவ முறமையுடனும் அரசுடனும் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களும் அவற்றின் அதிகாரத்துவமும், அத்தகைய போராட்டம் அரசாங்கத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் எதிராக சவால் செய்யும் ஒரு அரசியல் போராட்டமாக இருப்பதை அறிவார்கள்.
தொழிற்சங்கங்களின் இந்த ஒத்திவைப்பு மூலம், அரசாங்கம் வர்க்கப் போராட்டத்திற்கு எதிராக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. சமூக ஊடகங்களை தணிக்கை செய்வதற்கும் அரச ஊழியர்களின் வாயை அடைப்பதற்கும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அத்தியாவசிய சேவை உத்தரவுகள் இந்த தயாரிப்பின் ஒரு பகுதியாகும்.
இலங்கையில் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகள், சர்வதேசரீதியாக ஒடுக்கப்பட்ட தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அதே பிரச்சனைகளின் ஒரு பகுதியாகும். 2019 இல் கொரோனா உலகளாவிய தொற்றுநோயால் ஏற்படுத்தப்பட்ட ஆழமான பொருளாதார நெருக்கடி இலங்கையும் வெளிப்பட்டுள்ளது. நெருக்கடியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த ஆளும் வர்க்கம் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றின் அபாயம் அதிகரித்துள்ள நிலையிலும் கூட, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ள அடுத்த வருடத்திற்கான வரவு-செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துறையில் 6 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் தொற்றுநோய் காரணமாக சுகாதார ஊழியர்களின் வேலை நிலைமைகள் மோசமடைவதாலேயே தொழிற்சங்கங்கள் இந்த போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கின்றன.
ஆனால், தொழிலாள வர்க்கம் அரசாங்கக் கொள்கைக்கு எதிராக எந்தவொரு சவாலையும் விடுப்பதைத் தடுப்பதற்காக, கோரிக்கைகளை கொடுக்க மறுப்பது ஒரு அதிகாரி அல்லது அமைச்சரின் தவறு அல்லது அகங்காரத்தை காரணமாகக் காட்ட இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் முயல்கின்றனர். மற்ற தொழிற்சங்கங்களும் இதே கொள்கையை பின்பற்றுகின்றன.
யாழ்ப்பாணம் இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய சுகாதார ஊழியர்களிடம் கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் செயலாளர் சமன் ரத்னப்பிரிய, கோரிக்கைகளுக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு செயலாளர் உரிய சுற்றறிக்கையை வெளியிடவில்லை என தெரிவித்தார். 'இதை அவர் இராணுவம் என்று நினைக்கிறார்,' என சுகாதார செயலாளர் மீது குற்றம் சாட்டிய ரத்னப்பிரிய, 'இந்தப் போராட்டத்தை தொடர்வோம்' என்று அறிவித்தார்.
சுகாதார செயலாளராக மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய sராஜபக்ஷ நியமித்துள்ளார். இது தனது நிர்வாகத்தை இராணுவமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். அரசின் கொள்கையையே சுகாதார செயலர் மேற்கொள்கிறார்.
இந்த தொழிற்சங்கக் கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், அரசாங்க தாதியர் சங்கத்தின் செயலாளர் சமன் ரத்னப்பிரிய மற்றும் மருத்துவ இரசாயன சங்கத்தின் ரவி குமுதேஷ் போன்ற தொழிற்சங்க அதிகாரிகளாவர். கடந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் போது, வர்க்கப் போராட்டங்களுக்கு கருங்காலி வேலை செய்த வரலாற்றைக் கொண்ட இந்த தொழிற்சங்கத் தலைவர்கள், ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய மக்கள் சக்தி உடன் நெருக்கமான அரசியல் உறவுகளைக் கொண்டுள்ளனர். ரத்னப்பிரிய 2020 பெப்ரவரியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
செவிலியர்கள் உட்பட சுகாதாரப் ஊழியர்கள் இப்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும், ஒரேயடியாக தலைதூக்கியவை அல்ல. ரத்னப்பிரிய உட்பட தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளால் பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்ட சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளின் விளைவுகள், உலகளாவிய தொற்றுநோயால் ஆழமடைந்த நெருக்கடியின் மத்தியில் தீவிரமடைந்து வருகின்றன.
எதிர்ப்புக்களில் தலையிட்ட சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர்கள், 'தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக சுகாதார ஊழியர்கள் சுயாதீன நடவடிக்கைக் குழுக்களை உருவாக்கிக்கொண்டு போராட்டத்தை தங்கள் கையில் எடுக்க வேண்டியிருப்பது ஏன்?' என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தளத்தில் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழு வெளியிட்ட அறிக்கையை தொழிலாளர்கள் மத்தியில் வநியோகித்து, அவர்களுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தனர்.
சுகாதார ஊழியர்களின் நடவடிக்கைக் குழுவானது (HWAC), தொழிற்சங்க அதிகாரத்துவம் அரசாங்கத்துடன் முன்னெடுக்கும் இரகசியப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக, போராட்டத்தின் முடிவுகள் சாதாரண தொழிலாளர்களால் எடுக்கப்பட வேண்டும் என்றும் சுகாதாரத் துறையில் உள்ள தொழிலாளர்கள் போலவே, இலங்கையிலும் சர்வதேச அளவிலும், தங்களின் வாழ்க்கை மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்க, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற ஏனைய தொழிலாளர்களதும் போராட்டங்கள் முதலாளித்துவத்திற்கு எதிரான சோசலிச கொள்கையின் அடிப்படையில் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என அழைப்பு விடுத்தது.
உலக சோசலிச வலைத் தளம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் செய்த நேர்காணல்களில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகள் இந்த தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளினால் நாடு இன்று அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதாக வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் ஆய்வக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
“கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் கூட, எங்கள் தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய வேண்டியுள்ளது. எங்கள் மருத்துவமனையில் சில பகுதிகளில் மருந்துகள் மற்றும் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ளது. நாங்கள் எங்கள் சம்பளத்திற்காக மட்டும் போராடவில்லை. சுகாதாரத் துறையில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று அவர் கூறினார்.
தங்களுடைய வாழ்க்கை நிலைமைகளுக்காகப் போராடும் மற்ற தொழிலாளர்களுடன் ஒன்றுபடுவதற்கான போராட்டத்திற்கு தங்களுக்கு எந்த அமைப்பும் இல்லை. தொழிற்சங்கங்கள் அதை செய்ய வேண்டும் ஆனால் அவர்கள் அதை செய்யவில்லை, என அவர் தெரிவித்தார்.
பருத்தித்துறை பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் பின்வரும் அறிக்கையை வெளியிட்டார். 'இன்று கொரோனா வைரஸ் தொற்று குறைவாக இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது, ஆனால் எந்தவொரு சுகாதாரப் பாதுகாப்பும் இல்லாமல் அனைவரும் வேலை செய்ய வேண்டியுள்ளது. முன்பு போல், பி.சி.ஆர். பரி சோதனைகள் இப்போது செய்யப்படுவதில்லை. அதற்கு தேவையான உபகரணங்கள் கூட எங்களிடம் இல்லை,'' என்றார்.
தொழிற்சங்கங்கள் குறித்து அவர் கூறியதாவது: இங்கு தொழிற்சங்க போராட்டம் நடக்கிறது. கோரிக்கைகளை வென்றெடுக்க உழைக்கவில்லை. இறுதியில், எதுவும் நடக்காது.”
யாழ்ப்பான போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதி ஒருவர் கூறும்போது, “நாங்கள் தற்போது ஆபத்தான நிலையில் பணியாற்றி வருகிறோம். கொரோனாவில் இருந்து பாதுகாக்க எதுவும் செய்யப்படுவதில்லை. இப்போது இது புறக்கணிக்கப்படுகிறது. முதற்கட்டமாக, கொரோனா வார்டுகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்போது பொது வார்டுக்கு அருகில் உள்ள வார்டுகளில் எந்த விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இன்றி கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவை சாதாரண சளி என்று நினைப்பது ஆபத்தானது.
யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், “எமது வைத்தியசாலையில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை காணப்படுகின்றது. சில துறைகளில் வைத்தியர்கள் பற்றாக்குறையும் உள்ளது. அதே சமயம் மருந்து தட்டுப்பாடும் உள்ளது. எனவே, அந்த மருந்துகளை வெளியில் வாங்குவதற்கு மருந்துச் சீட்டு எழுத வேண்டும். நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது.
அவர் மேலும் கூறியது: “அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதியத்தை அரசாங்கம் வழங்குவதில்லை. கிடைக்கும் சம்பளம் செலவுக்கே போதாது. ஒடுக்கப்பட்ட ஏழைகள் பெரும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள்”
மறுபுறம், எழுச்சி பெறும் வர்க்கப் போராட்ட அலையை இனவழியில் திசைதிருப்ப சிங்களப் பேரினவாதத்தைத் தழுவிக்கொண்டுள்ள இராஜபக்ஷ அரசாங்கம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தனது அடக்குமுறை எந்திரத்தை வலுப்படுத்தி வருகிறது.
மேலும், தமிழ்த் தேசிய அரசியலைத் தழுவிக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சிகளின் தேசியவாத அரசியல், தமிழ்த் தொழிலாளர்களை அவர்களது வர்க்க தோழர்களிடம் இருந்து பிரிப்பதைப் பறைசாற்றுகிறது. இந்தக் கட்சிகள் தெற்கில் உள்ள தொழிலாளர்களுடன் வடக்கில் உள்ள தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டுப் போராடுவார்கள் என்று அஞ்சுகின்றன.
மேலும் படிக்க
- அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்ப்பதற்கு, இலங்கை தொழிலாளர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு சோசலிச கொள்கைகளுக்காகப் போராட வேண்டும்
- 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை சுகாதார தொழிலாளர்கள் சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகளை வழங்குமாறு கோரி வேலைநிறுத்தம் செய்தனர்
- இலங்கை: சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளுக்கான போராட்டத்தை தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியது ஏன்?