இலங்கை: சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை குழுக்களை அமைத்துக்கொண்டு தமது கோரிக்கைகளுக்கான போராட்டத்தை தம் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியது ஏன்?

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்

நவம்பர் 9 அன்று தாதி, நிறைவுகாண் மருத்துவ மற்றும் இடைநிலை வைத்திய துறையைச் சேர்ந்த சுகாதார ஊழியர்கள் எட்டு கோரிக்கைகளின் அடிப்படையில் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர். 16 தொழிற்சங்கங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சுகாதார தொழில் வல்லுநர் சம்மேளனம் இதற்கான அழைப்பை விடுத்துள்ளது.

ஆறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 5, 2021 அன்று அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றறிக்கையை அமுல்படுத்துவதற்கும், சம்பள முரண்பாடுகளை களைவதற்கான “ரனுக் ஊதிய ஆணைக்குழு அறிக்கையை” அமுல்படுத்த வேண்டும், தற்போதய ரூபா 3,000 சிறப்பு கடமை கொடுப்பனவை ரூபா 10,000 ஆக உயர்த்த வேண்டும், மேலதிக நேர பெறுமதி கணிப்பிடும்போது சகல சுகாதார தொழிலுக்கும் அடிப்படை சம்பளத்தில் 1/80 என கணக்கெடுத்தல் வேண்டும், தொழில் தகமை பட்டத்துக்கு ஏற்ற பொருத்தமான சம்பளத்தை நிறுவி அதற்கு பொருத்தமான தொழில் வாய்ப்பு வழங்க வேண்டும், சகல சுகாதார ஊழியர்களையும் பிரதிநிதித்துவம் செய்யும் சுகாதார பரிபாலன சேவையை நிறுவ வேண்டும் போன்ற கோரிக்கைகள் இதில் உள்ளடங்குகிறது.

இது சுகாதார ஊழியர்களிடையே தொடரும் எதிர்ப்பு அலையின் ஒரு பகுதியாகும். முன்னதாக, செப்டம்பர் 22, 27 மற்றும் அக்டோபர் 8 ஆகிய திகதிகளில், தொற்றுநோய்க்கு உரிய கொடுப்பனவை வெட்டிக் குறைப்பதை நிறுத்து என்பது உட்பட பல கோரிக்கைகளின் அடிப்படையில் சுகாதார ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

27 செப்டம்பர் 2021 அன்று, கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் தாதியர்கள் நடத்திய மறியல் போராட்டம் (Photo souce: Facebook/GNOA)

சுகாதார ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதானது அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான அவர்களின் உடனடி விருப்பத்தைக் காட்டுகிறது.

சரியான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதிகள் இல்லாததால், கோவிட்-19 உடன் நெருக்கமாகப் பணியாற்றும் சுகாதாரப் ஊழியர்கள் நோய்தொற்றுக்கு ஆளாகின்றனர். மேலதிகமாக, பெரிய அளவிலான ஊழியர் பற்றாக்குறையுடன் ஏராளமான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க வேண்டியிருப்பதால் அவர்களின் வேலை நிலைமைகள் மிகவும் கடினமாக நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம், இராஜபக்ஷ அரசாங்கம் பொருட்களின் விலை கட்டுப்பாடுகளை நீக்கி இருப்பதோடு, அவற்றின் விலைகள் வானளவு உயர்ந்துள்ள நிலையில், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினரைப் போலவே, சுகாதார ஊழியர்களும் சொற்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்த போராடுகின்றனர். இந்த தாங்க முடியாத சேவை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளால் தொழிலாளர்கள் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர் .

எனினும், தமது போராட்டங்களில் முன்னணியில் உள்ள தொழிற்சங்கங்கள், அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளின் அடிப்படையில் மீண்டும் மீண்டும் அந்தப் போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பதையே அவர்கள் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், மேற்கண்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கத் தலைவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் வரலாற்று ரீதியாக சாத்தியமானதா? அல்லது செல்லுபடியாகுமா? என்பதில் அனைத்து தொழிலாளர்களும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

நவம்பர் 9 அன்று அழைப்பு விடுக்கப்பட்ட வேலைநிறுத்தம் மற்றும் செப்டம்பர் 22, 27 மற்றும் அக்டோபர் 8 வேலைநிறுத்தங்களின் போது, இந்த தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளை ஒப்பிட்டுப் பார்த்தால், அதே கோரிக்கைகள் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுவதையும் அவை நிராகரிக்கப்படுவதையும் காணலாம். தொழிற்சங்கங்கள், அந்த போராட்டங்களை முன்னெடுக்க அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற “அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்கும்” கொள்கையின் தீவிர திவால்நிலையை இது உறுதிப்படுத்துகிறது.

தொற்றுநோயால் ஆழமடைந்துள்ள உலக முதலாளித்துவத்தின் அமைப்பு ரீதியான நெருக்கடியில், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் வர்க்கங்கள் தங்கள் நெருக்கடியின் சுமையை தொழிலாள-ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களின் மீது சுமத்தி, அவர்களின் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளையும் நசுக்குகின்றன. இராஜபக்ஷ அரசாங்கம் அதையே பின்பற்றுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் பற்றிய செய்திகள் இது ஒரு சிக்கன வரவு-செலவுத் திட்டம் என்று கூறுகின்றன. இதனை சுட்டிக்காட்டிய நிதியமைச்சர் பசில் இராஜபக்ஷ, நவம்பர் 01 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வரவு-செலவுத் திட்டத்தில் “மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை,” மாறாக “அது மக்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளும்,” எனக் கூறினார்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு சுகாதார சேவைக்கான செலவு 6 பில்லியன் ரூபாவால் வெட்டப்பட்டு 153 பில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து இந்த ஆண்டு சுகாதாரத்துக்கான ஒதுக்கீட்டில் 28 பில்லியன் ரூபா குறைக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டிற்கான கோவிட் நோயை கட்டுப்படுத்துவதற்கான நிதி 18 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ள போதிலும் அடுத்த ஆண்டுக்கான தொகை 12 பில்லியனாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முதலாளித்துவ அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பது முற்றிலும் பயனற்றது. மற்ற தொழிலாளர்களைப் போலவே, சுகாதார ஊழியர்களும் அரசாங்கத்திற்கும் முழு முதலாளித்துவ அமைப்புக்கும் எதிராக முன்னெடுக்கும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும். தாங்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளையிட்டு தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடையும் எதிர்ப்பு, அத்தகைய அரசியல் போராட்டமாக அபிவிருத்தியடையாமல் தடுக்க்கும் நோக்கிலேயே வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்க தொழிற்சங்கங்கள் முன்வந்துள்ளன.

முதலாளித்துவ அமைப்புடன் உறுதியாக இணைந்திருக்கும் தொழிற்சங்கங்களில், உறுப்பினர்கள் மத்தியில் எந்த ஜனநாயக கலந்துரையாடலும் இல்லாமல் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. போராட்டங்களுக்கு அழைப்புவிடப்படுவதும், அவை அடிப்படையாகக் கொள்ள வேண்டிய வேலைத் திட்டம் தீர்மானிக்கப்படுவதும், இருதியில் அவை காட்டிக் கொடுக்கப்படுவதும் அதிகாரத்துவத்தில் உள்ள சிலரின் முடிவுகளைப் பொறுத்தே முடிவெடுக்கப்படுகின்றது.

இவ்வாறாக, கடந்த காலம் பூராவும் இடம்பெற்ற போராட்டங்களில், அரசாங்கத்தின் தாக்குதலைத் சுகாதார ஊழியர்கள் மீது திணிக்கும் வகையிலேயே இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கங்களுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வருகின்றன. தொழிற்சங்கங்கள், ஜூன் 11 அன்று, தங்கள் மாத சம்பளத்தில் 78 சதவீதமான தொகையை தொற்றுநோய்க்கான கொடுப்பனவாக வழங்க வேண்டுமெனக் கோரி மேற்கொண்ட வேலைநிறுத்தத்தை, மூன்று மாத கொடுப்பனவாக 7,500 ரூபா பெற்றுக்கொண்டு போராட்டத்தை முடித்துக்கொள்ளத் தீர்மானித்தன.

தொற்றுநோய் தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் நவம்பர் 9 போராட்டத்தின் கோரிக்கைகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. முதலாளித்துவத்தின் இலாப வெறியை முன்னெடுப்பதன் பேரில், “தொற்றுநோயுடன் வாழ்வது” என்ற அரசாங்கத்தின் கொலைகாரக் கொள்கைக்கு இணங்க, அந்தக் கோரிக்கைகளை துண்டித்ததன் மூலம், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் நலன்களை அன்றி, முதலாளித்துவ நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற அரசாங்கத்தின் பிரச்சாரத்திற்கு மாறாக, தொற்றுநோய் ஆபத்தான முறையில் பரவக்கூடும் என்று மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் பலமுறை எச்சரித்து வருகின்றனர். அதே நேரத்தில், சுகாதாரப் பணியாளர்கள் தனிப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்கள் (பி.பி.இ.) மற்றும் தொற்றுநோய்க்கான கொடுப்பனவுகள் தொடர்பாக சுகாதார ஊழியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழ்நிலையில், போராட்டங்கள் தொடர வேண்டுமானால், தொழிற்சங்கங்களிடம் இருந்து போராட்டத்தை தொழிலாளர்களை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ள வேண்டும் என சுகாதார தொழிலாளர் நடவடிக்கை குழு வலியுறுத்துகிறது. மேலும், இந்த போராட்டம், இதேபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ளும், தொழிலாள வர்க்கத்தின் ஏனைய பிரிவினருடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். ஏற்கனவே போராடி வரும் ஆசிரியர்கள், மின்சாரம் மற்றும் துறைமுகங்கள் போன்ற துறைகளில் தொழிலாள வர்க்கத்தின் பிரிவினருடன் ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவது இன்றியமையாதது.

தொழிலாளர்கள் இடையே அந்த ஒத்துழைப்பைக் கட்டியெழுப்பக் கூடிய வலுவான கோரிக்கைகளில் ஒன்றான, “பாவனைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை உயர்த்த வேண்டும்!” என்பதற்கு எதிராக, பொது சேவை தொடர்பான ஊதிய முரண்பாடுகளை தீர்க்க 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 'ரனுக்கின் சம்பள ஆணைக்குழு' அறிக்கையை தொழிற்சங்கங்கள் தூக்கிப் பிடிக்கின்றன. இதன் கீழ் தாதியர், துணை மருத்துவ சேவை ஆகிய துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தபட்சம் ரூபா 5,000 ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பொருட்களின் விலைகள் உயர்வதால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கை நெருக்கடியை தீர்க்க, இந்த அற்ப ஊதிய உயர்வு கோரிக்கைகள் போதுமானவை அல்ல.

சுகாதார வல்லுநர்கள் சம்மேளனம், போராட்டத்துக்காக விடுத்த அறிக்கையில் இந்த தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தனம் மிகத் தெளிவாக அம்பலத்துக்கு வருகிறது. “தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் எடுத்த சில சாதகமான தீர்வுகளை கூட நடைமுறைப்படுத்துவதில் தாமதம் ஏற்படுத்துவதன் காரணமாக, தொழிற்சங்க நடவடிக்கையை நாடாமல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் மாற்றீடு இல்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முதலாளித்துவ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் தீர்வு காண முடியும் என்ற மாயையை இந்த சம்மேளனம் தூக்கிப்பிடிக்கிறது. அதன் அடிப்படையில் நடவடிக்கைகளை எடுத்து, அரசாங்கத்தின் மீது எதிர்பார்ப்பு வைத்துக்கொண்டு, அரசாங்கம் 'சாதகமான தீர்வுகளை' வழங்கியிருப்பதாகவும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில்தான் தாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அந்த அறிவிப்பின்படி, 2020 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் மேற்படி சம்பள அறிக்கையை அமுல்படுத்த அமைச்சரவை தீர்மானித்த போதிலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

தொழிற்சங்கங்களின் முதலாளித்துவ சார்பு தன்மை அவற்றின் செயல்கள் மூலம் அம்பலத்துக்கு வருகின்றன. தொழிலாளர்களின் வர்க்க பலத்தை பறைசாற்றும் ஒரு வேலை நிறுத்தத்திற்கு பதிலாக, முதலாளித்துவ அமைப்புக்கு எந்த சவாலையும் விடுக்காத வகையில், சுகயீன விடுமுறை அறிவித்து வேலைக்கு சமூகமளிக்க வேண்டாம் என்று அவை அழைப்பு விடுத்துள்ளன.

அரசாங்கம் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாமைக்கு தாமதம் காரணம் அல்ல, மாறாக இராஜபக்ஷ ஆட்சி உட்பட உலகம் முழுவதிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்கள், முதலாளித்துவ பொருளாதார நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதால், தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவர்களின் சமூக நிலைமைகளையும் வாழ்க்கையையும் நாசமாக்குவதற்கு செயற்ப்படுகின்றன.

மறுபுறம், அரசாங்கம் வெட்டுக்களுக்கு வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை நசுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் மீது சீறிப்பாய கொடூரமான அவசரகாலச் சட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களைத் தடைசெய்யும் அத்தியாவசிய சேவைகளை நடைமுறைப்படுத்தியுள்ளார்.

சுகாதார ஊழியர்களின் போராட்டம் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்கிறது. இது தொழிலாள வர்க்கத்தினுள் ஒற்றுமை பிரச்சினையையும் முன் கொண்டு வந்துள்ளது. இத்தகைய ஐக்கியத்திற்கு முற்றிலும் விரோதமான தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களை பிளவுபடுத்த, படிநிலைகள் மற்றும் குறுங்குழுவாதத்தை அதிகளவில் ஊக்குவிக்கின்றன. ஒரு போலி ஐக்கியத்தை காட்டி நிற்கும் தொழிற்சங்கங்களின் சம்மேளனம் கூட, தொழிலாளர்களின் போராட்டங்களை ஐக்கியப்படுத்துகின்றவாறு அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற ஊதிய உயர்வைக் கோராததன் காரணம் இதுவே ஆகும்.

அவர்கள் ஒன்றுபட்டிருப்பது தொழிலாளர்களின் போராட்டங்களை வென்றெடுப்பதற்காக அல்ல, மாறாக அவர்களைக் காட்டிக் கொடுப்பதற்காகவே. இந்தச் சூழலில், சுகாதார ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான உண்மையான போராட்டம், தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளித்துவ அரசுக்கு எதிராக நடத்தப்பட வேண்டும். தங்களின் சொந்த ஜனநாயக கலந்துரையாடல் மூலம் முடிவுகளை எடுக்கும் நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் மட்டுமே இத்தகைய போராட்டத்தை முன்னெடுக்க முடியும்.

அத்தகைய உண்மையான போராட்டம், பின்வரும் கோரிக்கைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

  • தொற்றுக்கான மாதாந்த கொடுப்பனவான 7,500 ரூபாவை சம்பளத்தில் 78 சதவீதமாக உயர்த்தி தொடர்ந்து வழங்கு!
  • சரியான தனிப்பட்ட சுகாதார கருவிகளையும் (PPE) பாதுகாப்பான போக்குவரத்து வசதிகளையும் உடனடியாக வழங்கு!
  • 'உயரும் சம்பள அளவு.' அதாவது, பாவனைப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை உயர்வுக்கு ஏற்ப தானாகவே உயரும் ஊதிய உயர்வு உடனடியாக வேண்டும்!
  • பொது சுகாதார சேவையை மேம்படுத்த பில்லியன் கணக்கில் நிதி வழங்கு!
  • அனைத்து மருத்துவமனைகளிலும் சுயாதீன தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்பி, சர்வதேச தொழிலாளர் கூட்டணியை நோக்கி முன்னேறுவோம்!

மேற் குறிப்பிட்ட இந்தக் கோரிக்கைகள் முதலாளித்துவ அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு சவாலாக அமைவதால், இந்தக் கோரிக்கைகள் முழு முதலாளித்துவ முறைமைக்கும் எதிரான, சர்வதேச சோசலிசத்திற்கான அரசியல் போராட்டத்தின் மூலம் மட்டுமே செயல்படுத்தப்பட முடியும்.

நாட்டின் பிற துறைகளிலும் ஏனைய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் இதே நிலைமைகளையும் இதே தாக்குதல்களையும் எதிர்கொள்கின்றனர். அதை தோற்கடிக்க தொழிலாளர்களின் ஐக்கியம் முக்கியமானது. சுகாதாரப் தொழிலாளர்கள் நடவடிக்கைக் குழு, இதுபோன்ற நடவடிக்கை குழுக்களின் கூட்டணிக்காக போராடி வரும் அதே வேளை, அனைத்து சுகாதாரத் தொழிலாளர்களையும் தங்கள் மருத்துவமனைகள் மற்றும் நிறுவனங்களில் நடவடிக்கைக் குழுக்களை அமைக்க முன்வருமாறு அழைப்பு விடுக்கிறது.

Loading