தொற்றுநோய் தேசிய சுகாதார சேவையை மூழ்கடிக்கும் என்ற எச்சரிக்கைகளை புறக்கணித்து இங்கிலாந்து சுகாதார அமைச்சர் 'வேண்டுமென்றே அலட்சியம்' செய்துள்ளார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

பழமைவாத கட்சி சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் புதன்கிழமை டவுனிங் வீதி செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், தொற்றுநோயினால் நோய்தொற்றுக்கள் வெடித்துப் பரவுவதால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் சேர்க்கை கடுமையாக அதிகரித்து தேசிய சுகாதார சேவை (NHS) முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து வருகிறது என்ற சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை நிராகரித்தார்.

“NHS தற்போது எதிர்கொள்ளும் அழுத்தங்கள் சமாளிக்க முடியாதவை என்று நாங்கள் நம்பவில்லை” என ஜாவிட் அறிவித்தார்.

அக்டோபர் 20, 2021, புதன்கிழமை, லண்டனின் டவுனிங் வீதியில் நடக்கும் ஒரு செய்தியாளர்கள் சுருக்க கூட்டத்தின் போது பிரிட்டனின் சுகாதார அமைச்சர் சஜித் ஜாவிட் பேசுகிறார். (Toby Melville/Pool Photo via AP)

NHS கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார மேலாளர்களால் முன்னைய நாள் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு இது ஒரு திமிர்பிடித்த பதிலாக இருந்தது. கூட்டமைப்பு, “NHS அதன் மருத்துவமனைகளிலும் சமூகத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுக்களின் கவலைக்குரிய அதிகரிப்பைக் காண்கிறது, அதன் ஊழியர்கள் முற்றிலும் களைத்துப்போய்விட்ட விளிம்பில் இருக்கும் நிலையிலும்,
தொற்றுநோயால் சீர்குலைந்த அதன் பல சேவைகள் மீட்டெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கும் நிலையிலும் அது பரபரப்பான குளிர்காலத்திற்குத் தயாராகிறது” என எழுதியது.

குறைந்தபட்ச தணிப்பு நடவடிக்கைகளை கூட நிராகரிக்கும் ஜாவிட்டின் வெட்கக்கேடான அறிக்கையில் “வைரஸூடன் வாழ கற்றுக்கொள்வது” என்ற சொற்றொடர் இரண்டு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு பின்னர் உச்சபட்சமாக, 223 ஆக உயர்ந்ததன் பின்னர் இந்த அறிக்கை வெளியானது.

பிரிட்டிஷ் மருத்துவ சங்கத்தின் (British Medical Associaiton-BMA) தலைவர் டாக்டர் சாண்ட் நாக்போல், ஜாவிட்டின் மறுப்பை “வேண்டுமென்றே காட்டப்பட்ட அலட்சியம்”, என்று விவரித்து, “வெஸ்ட்மினிஸ்டர் அரசாங்கம் NHS கட்டுப்பாட்டை இழந்து வருவதைத் தடுக்க ‘திட்டம் B’ ஐ செயல்படுத்தவிருப்பதாக தெரிவித்தது; முன்வரிசையில் நின்று பணியாற்றும் மருத்துவர்களாக, இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது என்று நாம் திட்டவட்டமாக சொல்லலாம்” என்று தெரிவித்தார்.

“சுகாதார அமைச்சரின் சொந்த ஒப்புதலின்படி, நாளாந்தம் 100,000 நோய்தொற்றுக்களை நம்மால் பார்க்க முடிகிறது, மேலும் நாடு பூட்டுதலில் இருந்ததான மார்ச் மாதத்தில் இருந்த அதே எண்ணிக்கையிலான வாராந்திர கோவிட் இறப்புக்களை இப்போது நாம் காண்கிறோம்.”

கட்டாய முகக்கவச பயன்பாடு, தொலைவிலிருந்து வேலை செய்தல் மற்றும் தடுப்பூசி அடையாளச் சீட்டு வைத்திருத்தல் போன்ற குறைந்தபட்ச தணிப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய அதன் சொந்த “திட்டம் B” ஐ கூட நிராகரித்தமை, எவ்வளவு மனித உயிர்கள் விலை கொடுக்கப்பட்டாலும், அதுபற்றி அக்கறையின்றி வைரஸை வெடித்து பரவ அனுமதிக்கும் அதன் கொள்கையை அரசாங்கம் கைவிடாது என்பதை உறுதிப்படுத்துகிறது.

சுகாதாரச் அமைச்சரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள், பெருவணிக நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வலதுசாரிகளின் மிகவும் நுரைத்துப்போன பிரிவுகளால் வெளிப்படையாக ஆதரிக்கப்படுகின்றன. நோய்தொற்றுக்கள் மற்றும் இறப்புக்களின் அதிகரிப்பு வீதத்தைப் பொருட்படுத்தாமல், அவர்களது இலாபமீட்டலுக்கு இடையூறாக இருக்கும் பூட்டுதல்கள் அல்லது பொது சுகாதார நடவடிக்கைகளை வேண்டாம் என கோருகின்றனர். ஜாவிட்டின் நடவடிக்கைகள், “வைரஸூடன் வாழ்வது” என்ற “புதிய இயல்பை” நிறுவுவதற்கு, பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பணியாளர்களின் எதிர்ப்பை எதிர்கொள்வதற்கு அவசியமான பயிற்சியாக பார்க்கப்படுகின்றது.

“NHS மற்றொரு கோவிட் நெருக்கடியை எதிர்கொள்ளவில்லை, சஜித் ஜாவிட் அதை அறிவார்”, என்ற தலைப்பில் டெய்லி டெலிகிராஃபில் வெளிவந்த ஒரு கட்டுரையில், ஸ்பெக்டேட்டர் பத்திரிகையின் ஆசிரியர் ஃப்ரேசர் நெல்சன், “வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றல்லாமல், அதனுடன் எப்படி வாழ்வது என பிரிட்டன் கற்றுக்கொள்ளும் முதல் குளிர் பருவகாலம் இதுவாகும். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட, அதிலும் அவசரநிலையை எதிர்கொள்ளாத ஒரு நாட்டில், கட்டுப்பாடுகளை மீண்டும் செயல்படுத்துவது ஒரு புதிய வாழ்க்கை முறையை உருவாக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அவை தொற்றுநோய்க்கானது அல்லாமல், குளிர்காலத்திற்கான புதிய விதிமுறைகளாக இருக்கும். நாம் ‘புதிய இயல்பை’ சோதித்துப் பார்க்கவுள்ளோம்” என்று எழுதியுள்ளார்.

“தாங்கமுடியாத அழுத்தம்” என்ற பதாகையின் கீழ் மருத்துவர்களும் செவிலியர்களும் கூட்டமாக ஜாவிட்டை சுற்றி வளைப்பதை சித்தரிக்கும் கேலிச்சித்திரத்துடன் இந்த கட்டுரையில் உள்ளது.

ஆனால் உண்மை என்னவென்றால், டோரி வலதுசாரி போலவே தொற்றுநோயை கட்டுப்படுத்துவதை தொழிற் கட்சியும் வெறுமனே எதிர்க்கிறது. பாராளுமன்றத்தில், இந்த கட்சியின் தலைவர் சர் கெய்ர் ஸ்டார்மர் திட்டம் B க்கான அழைப்பு பற்றி விவரித்து, அது “தவறான கவனம்… திட்டம் A ஏன் தோல்வியடைகிறது? என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும்” என்றார். அதாவது, ஜோன்சன் மற்றும் ஜாவிட்டை போல தடுப்பூசிகள் மீது பிரத்யேக கவனம் செலுத்த அவரும் அழைப்பு விடுத்தார்.

கடுமையான நிஜ வாழ்க்கை விளைவுகளுடன், NHS இன் நிலைமை சமாளிக்கக்கூடியது என்று கூறுவது நையாண்டித்தனமாக உள்ளது. இது, விபத்து மற்றும் அவசரநிலை (Accident and Emergency-A&E) பிரிவுகளின் மற்றும் இங்கிலாந்து முழுவதும் செயல்படும் அவரச மருத்துவச்சேவை வண்டிகளின் நெருக்கடி மூலம் அப்பட்டமாக மறுக்கப்படுகிறது. கடந்த வார இறுதியில் அவசர மருத்துவச்சேவை வண்டிகளுக்கான தலைமை நிர்வாகிகள் சங்கம் (Association of Ambulance Chief Executives-AACE), நாட்டின் அனைத்து அவசர மருத்துவ வண்டி சேவைகளும் உச்சபட்ச எச்சரிக்கை நிலையில் இருப்பதாக அறிவித்தது. விரிவான கவனிப்பு வழங்க முடியாத மற்றும் நோயாளிகள் ஆபத்தில் உள்ள சூழ்நிலைகளில் “கறுப்பு எச்சரிக்கை” அல்லது OPEL4 எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மருத்துவமனைகளில் நோயாளிகளை ஒப்படைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால், அவசர மருத்துவ சேவை வண்டிகள் இழந்த மணிநேரங்கள் ஏப்ரல் 2021 இல் 4,700 மணிநேரங்களாக இருந்தது கடந்த மாதம் 35,000 மணிநேரங்களுக்கு மேலாக அதிகரித்துள்ளதாக AACE தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தால் மறுக்கப்பட்ட நெருக்கடியை எடுத்துக்காட்ட NHS ஊழியர்கள் சமூக ஊடகங்களின் பக்கம் திரும்புகின்றனர். ட்விட்டரில், ஆக்ஸ்போர்டில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்கு வெளியே வரிசையாக நிற்கும் ஆம்புலன்ஸ்களின் புகைப்படத்தை ஒரு துணை மருத்துவ மாணவர் பதிவிட்டு, நோயாளிகளின் இடமாற்றத்திற்காகக் காத்திருக்கிறார், 25 பேர் கொண்ட வரிசையில் தான் 23வது இடத்தில் இருப்பதாக விளக்கினார். அவருடைய செய்தி, “இது குளிர்காலம் கூட இல்லை, உதவுங்கள்” என்றிருந்தது. இதற்கு இன்னொரு மருத்துவர், “மருத்துவமனை நிரம்பியுள்ளதால் இந்த அவசர மருத்துவ ஊர்திகளால் 999 அழைப்புக்களை ஏற்க முடியாது, அவர்கள் நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுடன் [அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்] நுழைய முடியாது, அதனால் தான் அவர்கள் வெளியே சிக்கி உட்கார்ந்திருக்கின்றனர்,” என்று பதில் ட்வீட் செய்திருந்தார். மேலும், மற்றொரு மருத்துவமனையின் இதேபோன்ற வரிசைகளைக் காட்டும் காணொளியுடன் “இதே நிலை தான் போர்ட்ஸ்மவுத்திலும் உள்ளது” என்ற ஒரு ட்வீட் டாக்டருக்கு வந்தது.

கடந்த திங்கட்கிழமை, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை, நோர்போக்கின், கோர்லஸ்டன்-ஆன்-சீ இல் உள்ள James Paget மருத்துவமனையில் அவசர அறைக்கு மாற்ற இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக காத்திருந்ததன் பின்னர் அவசர மருத்துவ ஊர்தியின் பின்புறத்தில் அவர் இறந்துபோனார். அன்று மதியம் மருத்துவமனைக்கு வெளியே 14 அவசர மருத்துவ ஊர்திகள் வரிசையில் காத்திருந்தன.

மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை என்பது அவசர சிகிச்சை அறைக்கு மாற்றுவதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். NHS ஏற்கனவே குளிர்காலம் மற்றும் காய்ச்சல் பருவத்தின் தொடக்கத்திற்கு முன்பே பாதுகாப்பான படுக்கையில் தங்கும் வரம்புகளை தாண்டியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளின் படுக்கைகள் 91 சதவீத அளவிற்கு நிரம்பிவிட்டதாக Independent தெரிவித்துள்ளது. 85 சதவீதத்திற்கு மேல் உள்ள அனைத்தும் ஆபத்தானதாகக் கருதப்படுகிறது.

NHS ஊழியர்களின் மன அழுத்தம் அவர்களின் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. NHS மற்றும் சமூக பராமரிப்பில் உள்ள “ஊழியர்களின் விரக்தி நிலை” குறித்து ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு குழு நடத்திய குறுக்கு விசாரணையின் முடிவுகள், “கோவிட்-19 தொற்றுநோய் பணியாளர்களின் வேலை அழுத்தத்தை அதிவேகமாக அதிகரித்துள்ளது. தொற்றுநோயின் விளைவாக பணியாளர்களின் நல்வாழ்வு, மன அழுத்தம் மற்றும் அவர்களது விரக்தி நிலை குறித்து கவலைகள் இருப்பதாக 92 சதவீத அறக்கட்டளைகள் NHS வழங்குநர்களிடம் தெரிவித்தன.

அவசர மருத்துவ வண்டி பணியாளர் குழுவினர் அவர்களது வழமையான 12 மணிநேர வேலை நேரத்தைத் தாண்டி கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது என்றும், பெரும்பாலும் ஓய்வு இடைவெளிகளும் கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். முக்கிய சுகாதார தொழிற்சங்கமான Unison அவசர அழைப்பு அறைகளின் அதிகப்படியான சுமைகளை புகாரளித்துள்ளது. ஒரு சேவை பிரிவில் 400 அழைப்புகள் வரை பதிலளிக்காது இருந்தது, சில சமயங்களில் அவசர அழைப்புக்களை கையாளுபவர்கள் 100 க்கும் மேற்பட்ட சம்பவங்களுக்கு அவசர மருத்துவ வண்டி சேவை தேவையிருப்பதிலிருந்து தங்கள் மாற்றுப் பணியை தொடங்குகின்றனர். சில சந்தர்ப்பங்களில் அவசர மருத்துவ வண்டிக்காக 24 மணிநேரம் வரை காத்திருப்பதும் இதில் அடங்கும்.

ஜோன்சனின் பழமைவாதக் கட்சி அரசாங்கம், NHS ஐ அதன் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் மூலோபாயத்தை பின்தொடர்வதில் விளிம்பிற்கு இட்டுச் செல்கிறது, எதிர்ப்பு உருவாகாமல் இருக்க தொழிற்சங்கங்களிலும் தொழிற் கட்சியிலும் அது தங்கியிருக்க முடியும்.

தொற்றுநோயை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது” என்ற தலைப்பில் இந்த ஞாயிற்றுக்கிழமை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வழங்கிய இணையவழி கருத்தரங்கை கேட்குமாறு NHS ஊழியர்களை நாம் ஊக்குவிக்கிறோம். இது, உலகெங்கிலும் உள்ள ஆளும் உயரடுக்கினரால் பின்பற்றப்படும் கொலைகார கொள்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த போரட்டத்தின் ஒரு பகுதியாகும். தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு விஞ்ஞான ரீதியான அறிவார்ந்தக் கொள்கைக்கு அதை அமல்படுத்துவதை உறுதிப்படுத்த ஒரு சமூக சக்தி தேவைப்படுகிறது, அதாவது இலாபத்தை அல்லாமல், உயிர்களை பாதுகாப்பதற்கான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நடவடிக்கை அதற்கு தேவைப்படுகிறது.

Loading