நாம் தமிழர் கட்சி, இந்திய வாகனத் தொழிலாளர்களை இன அடிப்படையில் பிரிக்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

தமிழ் தேசியவாதியான நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான செந்தமிழன் சீமான், இந்தியா முழுவதும் COVID-19 தொற்றுநோய் அழிவுகளை ஏற்படுத்தி வரும்போது, அதற்கு முதலைக் கண்ணீரை வடிக்கிறார்.

செந்தமிழன் சீமான் (Wikimedia Commons)

இது, இந்தியா முழுவதும் வாகன தொழிற்சாலைகளில் பெருகிவரும் வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கான அவரது பிரதிபலிப்பாகும். ஏனெனில், எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்துள்ளது.

COVID-19 காரணமாக இதுவரை டஜன் கணக்கான வாகன உற்பத்தியில் ஈடுபடும் தொழிலாளர்கள் இறந்துவிட்டனர். மேலும் நோய்த்தொற்றுகள் வேகமாக பரவுகின்றன. Ford, Hyundai, Renault-Nissan, Wipro, Eicher Motors, India Yamaha Motor and Royal Enfield ஆகிய தொழிற்சாலைகள், தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பதினான்கு மாதங்களுக்குப் பின்னர், திடீரென்று சீமான் 180 பாகையில் திரும்பி, தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சமூக இடைவெளிக் கொள்கைகளுக்கு வெற்று அழைப்பு விடுத்துள்ளார். "கொரோனா நோய்த்தொற்றுப் பாதிப்புக்கு தொழிலாளர்கள் அதிகப்படியாக உள்ளாகும் தற்போதைய, பேராபத்தான நிலையில் அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் இயங்க தற்காலிகமாகத் தடைவிதிக்க வேண்டும்." தொழிலாளர்களின் கோபம் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர்ந்த அவர், “அத்தியாவசியமற்ற தொழிற்சாலைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது, இதன் விளைவாக தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.” என்று தனது அறிக்கையில் பெருமூச்சு விட்டு குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 வைரஸ் பரவுவதைத் தடுக்க விஞ்ஞானக் கொள்கைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பது அவசியம். அத்தியாவசியமற்ற பணியிடங்களை மூடுவது, பள்ளிகளை மூடுவது மற்றும் நெருக்கடி முடியும் வரை மக்கள் உயிர்வாழ உதவும் அவசர நிதி உதவியை வழங்குதல் ஆகியவை இதில் அடங்கும். எவ்வாறாயினும், தொழிலாளர்களை இன அடிப்படையில் பிரிக்க இனவாத அரசியலை ஊக்குவிக்கும் மற்றும் தேவையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தொழிலாள வர்க்கத்தின் ஒருங்கிணைந்த இயக்கத்தைத் தடுக்கும் நாம் தமிழர் கட்சிக்கு எதிராக வலுவான எச்சரிக்கைகள் செய்யப்பட வேண்டும்.

தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் தலைவிதியைப் பற்றி சீமான் இன்று முன்வைக்கையில், இந்தியாவின் இந்து-மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசாங்கத்திலுள்ள தமிழ்-தேசியவாத திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் (herd immunity policies) கொள்கைகளையே அவரும் பின்பற்றி வருகிறார். இவை தலைநகர் சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் முக்கிய தொழில்துறை மற்றும் வணிக மையங்களில் COVID-19 வேகமாக பரவ வழிவகுத்துள்ளது.

ஏப்ரல் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், நாம் தமிழர் கட்சி தனது பிரச்சாரக் கூட்டங்களுக்கு எந்தவொரு சமூக இடைவெளி விதிகளையும் பின்பற்றவில்லை. அதற்கு பதிலாக, அது நடந்து கொண்டிருக்கும் வைரஸின் வேகமான பரவலைப் புறக்கணித்து ஆயிரக்கணக்கான மக்களுடன் பொதுக்கூட்டங்களை நடத்தியது. உண்மையில், இது தமிழ் நாட்டில் தொற்றுநோய் வேகமாக பரவுவதற்கு ஒரு காரணமாகும்.

இந்த தேர்தல்களில், நாம் தமிழர் கட்சி 3,108,906 வாக்குகளுடன் (6.1 சதவீதம்) மூன்றாவது இடத்தில் உள்ளது. இது இந்திய ஸ்ராலினிச இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி 504,537 வாக்குகள் (1.09 சதவீதம்) மற்றும் மார்க்சிஸ்ட் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி 390,455 வாக்குகள், (0.84 சதவீதம்), இந்தியாவின் பாரம்பரிய ஆளும் காங்கிரஸ் கட்சி 1,976,527 வாக்குகள், (4.28 சதவீதம்) ஆகியவற்றை முந்தியுள்ளது. இந்த ஸ்ராலினிஸ்டுக் கட்சிகள் ஆளும் திமுகவுடன் கூட்டணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்சியில் இருந்தபோது, பல தசாப்தங்களாக ஏகாதிபத்திய சார்பு மற்றும் தொழிலாள வர்க்க எதிர்ப்பு கொள்கைகளை பின்பற்றிய காங்கிரஸ் மற்றும் ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவர்களின் தொழிற்சங்கங்களின் மதிப்பிழப்புக்கு மத்தியில், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு மாற்று இயக்கத்தை கட்டியெழுப்புவதை, நாம் தமிழர் கட்சி பிளவுபடுத்தும் இன-தேசியவாத வாய்வீச்சு வார்த்தைளுடன் வெட்டுகிறது.

2010 இல் நாம் தமிழர் கட்சி உருவானதிலிருந்து, சீமான் மற்றும் அதன் கட்சித் தலைவர்களின் இனவெறி மற்றும் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான சொல்லாட்சி என்பன இழிபுகழ்பெற்றது. "கோடிக்கணக்கான பிற மாநில மக்கள் தமிழ்நாட்டிற்குள் ஊடுருவி பொருளாதார சுரண்டல் மூலம் தமிழர்களின் முழு பொருளாதார வாழ்க்கையையும் ஆக்கிரமித்துள்ளதால் தமிழ்நாடு ஆபத்தில் உள்ளது" என்று சீமான் பகிரங்கமாக அறிவித்தார்.

தமிழ்நாட்டை, தமிழர்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்றும், தமிழர்களின் வேலைகள் பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களால் திருடப்படுகின்றன என்றும் இனவெறி வாதங்களை சீமான் முன்வைக்கிறார். “என் மக்களுக்கு அதிகாரம் தேவை. தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும்” என்று கூறும் சீமான், தமிழ்நாட்டில் “தன்னலமற்ற, அன்பான சர்வாதிகார மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கம்” உருவாகும் என்றும், அதற்கு தமிழ் இன ஆட்சி உத்தரவாதம் அளிக்கும் என்றும் வலியுறுத்துகின்றார். ஜனநாயக உரிமைகளைத் துவம்சம் செய்யும் மோசமான வரலாறு கொண்ட தமிழ்நாடு “பொலிஸ் படையை நவீனமயமாக்க” அவர் அழைப்பு விடுக்கின்றார்.

அதே நேரத்தில், சீமான் தொழிலாள வர்க்கத்தைத் தாக்கும் பொலிஸ் படைகளை மட்டுமல்ல, தீவிர வலதுசாரி அரசியல் அமைப்புகளையும் ஊக்குவிக்கின்றார். மும்பையின் தாராவி பகுதியில் 2012 நகராட்சித் தேர்தலில் இந்து-தீவிரவாத சிவசேனா மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்து சீமான் பிரச்சாரம் செய்தார். சிவசேனா அமைப்பு முஸ்லிம்கள் மீதான இரத்தக்களரி தாக்குதல்களுக்கு இழிபுகழ் பெற்றது.

தீவிர வலதுசாரி சக்திகளுடனான தனது கூட்டுக்கள் குறித்து பகிரங்கமான சவால்கள் வந்தபோது, சீமானால் அதை மறுக்க முடியவில்லை, மாறாக தடுமாறி பதிலளித்தார்: “பாஜக வேட்பாளர் தமிழ் செல்வன் எங்கள் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர். அவர் அங்குள்ள மக்களுக்கு ஒரு அரணாக இருப்பதோடு, இலங்கை தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகவும் இருக்கின்றார் ” என்று சீமான் குறிப்பிட்டார்.

அதாவது, சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் வன்முறையான வகுப்புவாத சக்திகளுடனான தங்கள் கூட்டணி அம்பலப்பட்டபோது, 2009 ஆம் ஆண்டு இனவாத இலங்கை இராணுவம் இலங்கைத் தமிழர்களை படுகொலை செய்ததற்காக தமிழ்நாடு மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் தொழிலாளர்களின் அனுதாபத்தை சிடுமூஞ்சித்தனமாக சுரண்டிக்கொள்வதன் மூலம் பதிலளித்தனர். 40,000 க்கும் அதிகமான மக்கள் படுகொலை செய்யப்பட்ட 2009 ல் நடந்த இனவாத போரின் முடிவில் இலங்கை இராணுவம் செய்த கொடூரம், எவ்வளவு கொடூரமானது என்றாலும், தொழிலாளர் எதிர்ப்பு, வகுப்புவாத அரசியலை முன்னெடுக்கும் சக்திகளை சீமான் ஊக்குவித்து வருகிறார் என்ற உண்மையை இது மாற்றாது.

கடந்த ஆண்டு, தமிழ்நாட்டில் முந்தைய அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (அதிமுக) அரசாங்கத்தின் போது, சென்னையில் உள்ள சத்தியவானி முத்துநகர் குடிசைப்பகுதி மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். இதனை, இந்தியாவின் பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக கோபத்தை தேசிய வழிகளில் திசை திருப்ப முயன்ற சீமான், நகரத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான இந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பின்வருமாறு பதிலளித்தார்: “சென்னையில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எவ்வித தடையுமின்றி, நிரந்தர வசிப்பிடம் பெற்று, பாதுகாப்பாக அனைத்து வசதிகளும் நிறைந்த நகரின் முக்கிய பகுதிகளில் குடியேறி வாழ முடிகிறது. ஆனால் தொன்மையான தமிழ் குடியானவர்களுக்கு இந்த வசதி கிடையாது.”

திடீரென தமிழ் வாகனத் தொழிலாளர்களைப் பற்றி சிடுமூஞ்சித்தனமாக சீமான் அக்கறை காட்டிக்கொண்டிருக்கின்றபோது, சுரண்டல், நிரந்தரமற்ற தற்காலிக வேலை, அல்லது அத்தியாவசியமற்ற பணிகளில் ஈடுபடுவதினால் பெருந்தொற்றுநோய் பரவ உதவுகிறது என்பதற்கு தொழிலாளர்கள் மத்தியில் வளர்ச்சியடைந்துவரும் எதிப்புக்கள் பற்றி சீமான் இதுவரை எதுவும் கூறவில்லை.

அதற்கு பதிலாக, சீமான் மீண்டும் இன வெறுப்புகளுக்கு அழைப்புவிட முயன்றார். இந்த முறை அவர், சீனாவிற்கு எதிராக அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வழிநடத்தப்பட்ட கொரோனா வைரஸைப் பற்றிய வலதுசாரி சதி கோட்பாட்டை வாந்தியெடுத்து, இந்த தொற்றுநோய் சீனாவால் தொடங்கப்பட்ட "உயிரியல் போர்" என்று அழைத்தார். இந்தியாவை சீனாவிற்கு எதிரான ஒரு முன்னணி இராணுவ நட்பு நாடாக மாற்ற முற்படும் வாஷிங்டனுக்கு, சீமான் ஆட்சிக்கு வந்தால் அவர் தொடரும் ஏகாதிபத்திய சார்பு, முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை இதன் மூலம் தெளிவுபடுத்தினார்.

கொரோனா தொற்றுநோய் என்பது உலகளாவிய நெருக்கடியாகும். இது பாஸ்போர்ட்டுகளையும் எல்லைகளையும் புறக்கணிக்கும் ஒரு வைரஸால் இயக்கப்படுகிறது, மேலும் இது ஒரு பகுத்தறிவு, விஞ்ஞானக் கொள்கைக்கான தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டத்தால் மட்டுமே தீர்க்கப்பட முடியும். தற்காலிக ஆலை மூடலுக்கு வழிவகுத்த இந்திய தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்களும் ஆர்ப்பாட்டங்களும் மீண்டும் தொழிலாள வர்க்கத்தின் பாரிய சக்தியைக் காட்டியுள்ளன. எவ்வாறாயினும், இந்த சக்தியை இந்தியாவில் உள்ள தொழிலாளர்களை, அனைத்து இனக் கோடுகளிலும், சீனா, அமெரிக்கா மற்றும் அதற்கும் அப்பால் உள்ள வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைக்கும் ஒரு நனவான போராட்டத்தில் மட்டுமே அணிதிரட்ட முடியும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சாமானியர் கமிட்டிகளைக் கொண்டிருக்கும் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை உருவாக்குவதற்கான அழைப்பை முன்வைத்துள்ளது. அதைச் சுற்றி, பெருநிறுவன இலாபங்களுக்கு எதிராக உயிர்களைப் பாதுகாக்கும் போராட்டத்தில் தொழிலாளர்களை ஒழுங்கமைக்கவும் அணிதிரட்டவும் முடியும். இன வெறுப்புகளுக்கு அழைப்புவிடும் சீமானின் வேண்டுகோள் அத்தகைய இயக்கத்தை வெட்டுகிறது, தொழிலாள வர்க்கத்தை ஏற்கனவே இருக்கும் ஸ்ராலினிச அமைப்புகளுக்கும் திவாலான தேசிய-அரசு அமைப்பிற்கும் கீழ்ப்படுத்துகிறது. இவை தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான, எதிரியின் வேலை என்று நிராகரிக்க வேண்டும்.