இந்தியாவில் கோவிட்-19 பேரழிவு குறித்து இலங்கை சோ.ச.க. முக்கியமான கூட்டத்தை நடத்தியது

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கை சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மே 30 அன்று, “கோவிட்-19 தொற்றுநோயும் சோசலிச மூலோபாயத்தின் அவசியமும்” என்ற தலைப்பில் ஒரு இணையவழி கூட்டத்தை நடத்தியது.

உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இந்த நிகழ்விற்காக பல வாரங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட பிரச்சாரத்தினால் சுமார் 200 பேர் வரை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் பாதி பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், அதே போல் இலங்கையில் உள்ள சோ.ச.க. உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துகக் குழுவின் ஏனைய பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

கோவிட்-19 தொற்றுநோயும் சோசலிச மூலோபாயத்தின் அவசியமும்

கூட்டத்தின் சர்வதேச தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் இந்நிகழ்ச்சியில் இலங்கை சோ.ச.க. மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்க, கனேடிய மற்றும் பிரெஞ்சு பிரிவுகளின் பேச்சாளர்களும் உரையாற்றினர். ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன.

கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க (இலங்கை) அரசியல் குழு உறுப்பினர் சமன் குணதாச கூறியதாவது: “தொற்றுநோய் உயிரியலில் வேரூன்றியுள்ளது. இருப்பினும், இது முதன்மையாக ஒரு மருத்துவ அல்லது சுகாதார பேரழிவு அல்ல. மாறாக, இது ஒரு சமூக பேரழிவும் சமூக குற்றமும் ஆகும். இது ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட மனிதப் பேரிழிவு, அல்லது இன்னும் துல்லியமாக கூறுவதெனில் 21 ஆம் நூற்றாண்டில் பூகோள முதலாளித்துவத்தின் மிகப்பெரிய அரசியல் குற்றங்களில் ஒன்றாகும்.”

நாட்டின் கோடீஸ்வரர்களின் இலாப நலன்களைப் பாதுகாப்பதற்காக, பொருளாதாரத்தை திறந்த நிலையில் வைத்திருப்பதன் மூலம், இந்தியாவின் மோடி அரசாங்கமும் உலகெங்கிலும் உள்ள சமதரப்பினரைப் போலவே தொற்றுநோயை எவ்வாறு பரப்ப அனுமதித்தது என்பதை குணதாச சுருக்கமாக விளக்கினார்.

முன் கணிக்கக்கூடியதாக இருந்த சமூகப் பேரழிவு, அரசாங்கம் மற்றும் கூட்டுத்தாபனங்களின் நடவடிக்கைகளை எதிர்க்கின்ற இந்தியத் தொழிலாளர்களை தீவிரமயமாக்குவதாக அவர் கூறினார்.

"இந்த போராட்டங்கள் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் போராட்டங்களுடன் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரு சோசலிச முன்னோக்கில் ஒழுங்கு செய்யப்பட வேண்டும். இதன் மூலமே தொழிலாள வர்க்கம் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினரின் கட்டுப்பாட்டில் இருந்து பறித்து, உயிரைக் காப்பாற்றுவதற்கு முன்னுரிமை அளிக்கும் விஞ்ஞான அடிப்படையிலான மூலோபாயத்தை, அதாவது முதலாளித்துவ இலாபங்களுக்கு மேலாக உயிர்பாதுகாப்புக்கு முன்னிரிமை கொடுக்கும் மூலோபாயத்தை செயல்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

குணதாச, இந்தியாவில் உள்ள அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் குழுவினரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார். சிறையில் அடைக்கப்பட்ட 12 மாருதி-சுசுகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிப்பதற்காக போராடுவதற்கான அனைத்துலகக் குழுவினதும் அதன் அனைத்து பிரிவுகளினதும் தற்போதைய உறுதிப்பாட்டை அது மீண்டும் வலியுறுத்தியது. கம்பனியும் அரசாங்கமும் சேர்ந்து செய்த வேட்டையாடலின் மூலம் இந்த தொழிலாளர்கள் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். வட இந்தியாவின் மனேசர் ஆலையில் மாருதி-சுசுகி கார் உற்பத்தி தொழிலாளர்களின் தொழில்கள் மற்றும் வேலை நிலைமைகளைப் பாதுகாக்க துணிந்ததால் இந்த தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றனர்.

சிங்கள மொழியில் பேசிய சோ.ச.க (இலங்கை) துணை தேசிய செயலாளர் தீபால் ஜயசேகர, இந்தியாவில் ஏற்பட்ட கோவிட் -19 பேரழிவு குறித்து விரிவான கண்ணோட்டத்தை வழங்கினார். அவரது உரையின் ஆங்கில மற்றும் தமிழ் மொழிபெயர்ப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.

தொழிலாளர்களுக்கு நிதி மற்றும் சமூக ஆதரவை மறுக்கும் அதே வேளை, வணிகங்கள் திறந்த நிலையில் இருக்க பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முடிவு மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்தது, என அவர் கூறினார். கோவிட்-19 நோய்த்தொற்றுகளின் தற்போதைய ஆபத்தான எழுச்சியுடனும் கூட, மோடி "நோயைக் கட்டுப்படுத்த ஒரு தேசிய பூட்டுதலை செய்வதை கடுமையாக எதிர்க்கிறார்."

மோடி அரசாங்கம் மற்றும் இந்திய ஆளும் உயரடுக்கினதும் கொலைகாரத்தனமான "சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்" கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்கள் முன்வைக்க வேண்டிய சோசலிச கோரிக்கைகளை ஜயசேகர விரிவாகக் கூறினார். இது, பொது முடக்கத்துக்கான போராட்டம் மற்றும் முறைசாரா துறையில் உள்ளவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஏழை விவசாயிகள் மற்றும் மீனவர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியத்துடனும், அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளையும் மூடுவதற்கான போராட்டத்தை உள்ளடக்கியது. அத்தியாவசிய சேவைகளில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும், முழு கோவிட்-19 பாதுகாப்பு கிடைக்க வேண்டும், அனைவருக்கும் இலவச தடுப்பூசிகளை வழங்கவும் சுகாதார அமைப்பை மேம்படுத்துவதற்கும் பாரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும், என அவர் விளக்கினார்.

"அத்தகைய ஒரு திட்டத்திற்கான போராட்டத்தை வழிநடத்தும் ஒரே சமூக சக்தி, எந்தவொரு தேசிய-அரசுக்கோ தனியார் சொத்துக்களுக்கோ கட்டுப்படாத சர்வதேச தொழிலாள வர்க்கமே ஆகும்... உலக முதலாளித்துவத்திற்கு எதிராகவும் சர்வதேச சோசலிசத்திற்காகவும் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்திற்காக, தெற்காசியாவிலும் உலகெங்கிலும் உள்ள அதன் வர்க்க சகோதரர்களுடன் இணைந்துகொள்ளுமாறு இந்திய தொழிலாள வர்க்கத்துக்கு நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம்.”

WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் சோ.ச.க. (கனடா) தேசிய செயலாளருமான கீத் ஜோன்ஸ், மொன்ட்ரியாலில் இருந்து பேசியபோது, “மேற்கில் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்ற, இந்தியாவின் உத்தேச முதலாளித்துவ எழுச்சியானது செயல்பிறழ்ச்சி, கொடூரம் மற்றும் 21 ஆம் நூற்றாண்டு முதலாளித்துவத்தின் குற்றவியல்தனத்தை உள்ளடக்கிய மற்றும் உதாரணமாக இருக்கின்ற, ஒரு கெடுதியான சமூகத்தை உருவாக்கியுள்ளது. தற்போதைய நெருக்கடி, இந்தியாவின் புதிய பொருளாதாரக் கொள்கை எனப்படுவது மூன்று தசாப்தங்களாக எதைச் செய்துள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

"இந்திய முதலாளித்துவமானது சுதந்திரத்திற்குப் பின்னர், அரசு-தலைமையிலான அபிவிருத்தி திட்டத்தை, அதாவது இறக்குமதி பதிலீட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு தேசியவாத மூலோபாயத்தை, பின்பற்றி வந்தது. இதை அது வஞ்சகத்தனமாக சோசலிசம் என முத்திரை குத்திக்கொண்டது. எனினும், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1991 ஜூலையில், அதை கைவிட்டு, அமெரிக்கா தலைமையிலான உலக முதலாளித்துவ ஒழுங்கினுள் இந்தியாவின் முழு ஒருங்கிணைப்பையும் தொடங்கியது.”

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது சிபிஎம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஆகிய இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் துரோக அரசியல் பாத்திரத்தை ஜோன்ஸ் மதிப்பாய்வு செய்தார்.

"கடந்த 30 ஆண்டுகளாக, சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகியவை, பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக அரன்களாக, இந்திய முதலாளித்துவத்தின் வரலாற்றுக் கட்சியான காங்கிரஸையும், மற்றும் வலதுசாரி பிராந்திய பேரினவாத மற்றும் சாதிவாதக் கட்சிகளையும் தூக்கிநிறுத்தின. இந்து மேலாதிக்க வலதுசாரி பிஜேபியை தோற்கடிப்பதற்காக, இந்த கட்சிகளை ஆதரிக்க வேண்டும், என்று ஸ்ராலினிச கட்சிகள் கூறி வந்தன,” என அவர் கூறினார்.

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஜோ கிஷோர், கோவிட்-19 வைரஸ் மற்றும் சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகள் போன்ற ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்த பிற்போக்கு கொள்கைகள் ஜனாதிபதி பைடனின் கீழும் எவ்வாறு தொடரப்படுகின்றன என்பதை விளக்கினார்.

"அமெரிக்க பரந்த செல்வத்தை கொண்டிருந்த போதும், மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டிருந்த போதும், அது பெரும்பான்மையான மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இலாயக்கற்ற ஒரு சமூக மற்றும் அரசியல் முறைமையை தொற்றுநோய் அம்பலப்படுத்தியுள்ளது."

அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கின் குற்றவியல் கொள்கைகள், “தொற்றுநோயில் இருந்து உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், தொற்றுநோயை ஒழிப்பதற்கும் அன்றி, மாறாக பங்குச் சந்தையின் ஏற்றம் நிலைத்திருப்பதற்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய நலன்களை மேலும் மேம்படுத்துவதற்கும் இலக்குவைக்கப்பட்டுள்ளன…” என கிஷோர் தொடர்ந்து கூறினார்.

“இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் இந்த முக்கியமான முன்னேற்றங்கள் குறித்து விழிப்புணர்வு பெற வேண்டும். அமெரிக்கா என்பது, நரேந்திரமோடியின் வலதுசாரி அரசங்கத்திற்கு ட்ரம்ப் மற்றும் பைடென் நிர்வாகம் வழங்கும் தீர்க்கமான ஆதரவு உள்ளடங்கலாக, சீனாவிற்கு எதிரான போருக்கு அச்சுறுத்துகின்ற, ஒவ்வொரு நாட்டிலும் பிற்போக்கிற்கு ஆதரவு அரணாக செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் இயற்கையான கூட்டாளிகளான அமெரிக்க தொழிலாள வர்க்கமும் அங்கே உள்ளது.”

சோ.ச.க. (இலங்கை) அரசியல் குழு உறுப்பினர் எம். தேவராஜா, இந்தியாவிலும் பிற தெற்காசிய நாடுகளிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்கள், “சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும்” கொலைகாரக் கொள்கையையும் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்து போராட்ட அலைகளை முன்னெடுப்பதாக எடுத்துரைத்ததோடு தொழிற்சங்கங்களின் துரோகப் பங்கையும் விளக்கினார்.

"மரண ஓலத்திலுள்ள முதலாளித்துவத்தின் பொதுவான அச்சுறுத்தலையே தொழிலாளர்கள் முகங்கொடுப்பதுடன், அவர்கள் சர்வதேச அளவில் ஐக்கியப்படவேண்டும். அதைச் செய்வதற்கு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கும் அதை முடக்குவதற்கும் முதலாளித்துவ வர்க்கமும் அவர்களின் அரசாங்கங்களாலும் தூண்டப்பட்டுவருகின்ற அனைத்து வகையான இனவாதத்தையும் தேசியவாதத்தையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

பாரிஸிலிருந்து பேசுகையில், சோ.ச.க. (பிரான்ஸ்) துணை தேசிய செயலாளர் வி. ஞானா, ஐரோப்பாவில் உள்ள அரசாங்கங்கள், மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் கோரப்படும் பொது சுகாதார நடவடிக்கைகளை செயல்படுத்த மறுத்துவிட்டதன் விளைவாக, கோவிட்-19 வைரஸினால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துவிட்டதாக சுட்டிக்காட்டினார். "ட்ரொட்ஸ்கிசத்திற்காகவும், சோசலிசத்திற்கான போராட்டத்தில் இனம், மதம், மொழி மற்றும் சாதி என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து, தொழிலாளர்களை ஐக்கியப்படுத்த, இலங்கையில் சோ.ச.க. முன்னெடுத்த பல தசாப்த கால போராட்டத்தையும் அவர் மறுபரிசீலனை செய்தார்.

இறுதியாக உரையாற்றிய, WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினரும் சோ.ச.க. (இலங்கை) பொதுச் செயலாளர் விஜே டயஸ், அனைத்துலகக் குழுவின் இந்தியப் பிரிவைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இந்த இணைய வழி கூட்டம் “ஒரு புதிய கட்டத்தை” குறிக்கிறது என்று கூறினார்.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக இந்திய தொழிலாளர்களுக்கு லியோன் ட்ரொட்ஸ்கி எழுதிய கடிதத்தை அவர் மேற்கோள் காட்டினார்: “தொழிலாள வர்க்கத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையான விவசாயிகளை தன்பக்கம் ஈர்த்துக்கொள்வதற்கு, முதலாளித்துவத்தில் இருந்து முழுமையான சுதந்திரம் பெறுவது இன்றியமையாதது ஆகும். பாட்டாளி வர்க்கம் மட்டுமே ஒரு தரமான, புரட்சிகர விவசாய திட்டத்தை அபிவிருத்தி செய்யவும், மில்லியன் கணக்கான விவசாயிகளை ஊக்குவித்து அணிதிரட்டுவதற்கும், பூர்வீக ஒடுக்குமுறையாளர்களுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் அவர்களை வழிநடத்துவதற்கும் திறன் கொண்டது.”

“இந்திய முதலாளித்துவத்தின் போலி வாக்குறுதிகள் மற்றும் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிகளினதும் அவற்றுடன் தொங்கிக்கொண்டிருக்கும் போலி இடதுகளதும் அப்பட்டமான துரோகத்துக்கும்” எதிராகப் போராடுவதற்காக ஒரு மார்க்சிச புரட்சிகர கட்சியைக் ஸ்தாபிப்பதற்கு, ட்ரொட்ஸ்கி பரிந்துரைத்த நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையிலான போராட்டத்தை அனைத்துலகக் குழு தொடர்ந்து முன்னெடுக்கின்றது.

அவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உடன்படிக்கைகள், முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் இந்தியாவில் ட்ரொட்ஸ்கிசத்தை கலைத்தல் ஆகியவற்றை தழுவிக்கொண்ட பப்லோவாத திருத்தல்வாத கொள்கைகளையும் பிராந்தியத்திலும் மற்றும் இலங்கையிலும் ட்ரொட்ஸ்கிசத்தின் புரட்சிகர தொடர்ச்சிக்கான அனைத்துலகக் குழுவின் போராட்டத்தையும் அவர் சுருக்கமாக மதிப்பாய்வு செய்தார்.

இந்தியாவில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தை கட்டியெழுப்ப இலங்கையில் சோ.ச.க. முன்னெடுக்கின்ற போராட்டம், 1998 இல் உலக சோசலிச வலைத் தளத்தை நிறுவியதன் மூலம் பெரிதும் பலப்படுத்தப்பட்டது என்று டயஸ் கூறினார். “சோசலிச புரட்சியின் உலகக் கட்சியைக் கட்டியெழுப்ப நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுத்த போராட்டம் WSWS ஊடாக ஒவ்வொரு கண்டத்தின் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் உடனடி கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது,” என்று அவர் கூறினார்.