மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
லண்டன் பஸ் சாமானியத் தொழிலாளர்கள் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி ஆகியவை லண்டன் பஸ் சாரதி டேவிட் ஓ'சுல்லிவனை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளன. இவர் தலைநகரில் 60 க்கும் மேற்பட்ட பேருந்து ஊழியர்களின் உயிரைக் கொன்ற ஒரு தொற்றுநோய்களின் போது சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கான தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியதற்காக வேலைநீக்கப்பட்டார்.
கிரீக்கில்வூட் பஸ் நிறுத்தும் இடத்தில் நோய்த்தொற்றுகள் பரவுவது குறித்து எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, 57 வயதான ஓ'சுல்லிவன் பிப்ரவரி 3 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டார். லண்டன் பஸ் ஓட்டுநர்களிடையே இறப்பு விகிதம் தேசிய சராசரியின் மூன்று மடங்கு ஆகும். கொல்லப்பட்டவர்களின் குடும்பங்கள் இதற்கான பதில்களைக் கோருகின்றன.
மூன்று தசாப்தங்களாக லண்டன் போக்குவரத்து ஊழியரான ஓ'சுல்லிவன், வேலைவாய்ப்பு உரிமைகள் சட்டத்தின் பிரிவு 44 இன் கீழ் பாதுகாப்பான பணியிடத்திற்கான தனது உரிமைகளை மேற்கோளிட்டு காட்டியதால் ஜனவரி 11 அன்று இடைநீக்கம் செய்யப்பட்டார். ஜனவரி தொடக்கத்தில் லண்டன் பஸ் சாமானியத் தொழிலாளர்கள் குழுவிற்கு கசிந்த தகவல்களின்படி, 12 ஓட்டுநர்கள், ஒரு மேலாளர் மற்றும் Unite உடல்நல மற்றும் பாதுகாப்பு பிரதிநிதி ஆகியோர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 2020 முதல் இந்த ஆண்டு ஜனவரி நடுப்பகுதி வரை 46 கிரீக்கில்வூட் ஊழியர்கள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தகவல் சுதந்திரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
பிரிவு 44 இன் கீழ் ஓ'சுல்லிவன் தைரியமாக தனது சக ஊழியர்களை எச்சரிக்கவும் அவர்களின் உரிமைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கவும் முயன்றார். இதன்படி "ஆபத்து கடுமையானதும் உடனடியானதுமான சூழ்நிலையாக உள்ளது என்று ஒரு பணியாளர் காரணத்துடன் நம்புகையில், பணியிலிருக்க மறுப்பதற்கும் மற்றும் "தங்களை அல்லது ஆபத்தில் உள்ள மற்ற நபர்களைப் பாதுகாக்க" பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்வரை வேலைக்கு சமூகமளிக்காது இருப்பதற்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் உரிமை உண்டு.
மூன்று நாட்களுக்கு முன்னர், லண்டனின் தொழிற் கட்சி மேயர் சாதிக் கான் வைரஸின் எழுச்சி மருத்துவமனைகளை மூழ்கடிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டிருப்பதாக ஒரு பெரிய சம்பவத்தை அறிவித்தார். சேர் கெய்ர் ஸ்டார்மரின் தொழிற் கட்சியின் ஆதரவுடன் போரிஸ் ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் அரசாங்கத்தின் சமூக நோய் எதிர்ப்பு சக்தி பெருக்கும் மூலோபாயத்தால் தூண்டப்பட்ட தொற்றுநோயின் இரண்டாவது அலை தொடங்கியது. தொழிற் கட்சி "பொருளாதாரத்திற்கு" தீங்கு விளைவிக்கும் என்ற அடிப்படையில், அதாவது நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பெரும் செல்வந்தர்கள் இலாபங்களுக்காக வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைகளை நிராகரிக்கின்றது.
பகுதி பூட்டுதல்கள் மிகவும் தாமதமாக அறிமுகப்படுத்தப்பட்டன அல்லது மிக விரைவில் நீக்கப்பட்டன. இது 150,000 க்கும் அதிகமான மரணங்களுக்கு வழிவகுத்தது.
ஜனவரி 8 ம் தேதி, லண்டன் பஸ் சாமானியத் தொழிலாளர்கள் குழு கிரீக்கில்வூட் நோய்த்தொற்றுகள் பரவுவதை தடுக்க வெளிநடப்பு செய்ய அழைப்பு விடுத்தது. இதற்கான அழைப்பு சாதாரணமாக வழங்கப்படவில்லை. செப்டம்பர் மாதம், திருத்தும் இடத்தில் உள்ள குழு உறுப்பினர்கள் மெட்ரோலைன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவன் ஹாரிஸுக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுகள் தொடர்பாக நிர்வாகத்தால் கடுமையான பாதுகாப்பு மீறல்களைப் பற்றி அறிக்கை அளித்தனர். ஓட்டுநர்களுக்கு கட்டாய சோதனை, தொற்றுநோய்களை வெளிப்படையாகப் புகாரளித்தல் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் முழு ஊதியம் உள்ளிட்ட சுய தனிமைப்படுத்துதல் ஆகிய அவசர நடவடிக்கைக்கு கடிதம் கோரியது. Unite அதிகாரிகளான ஜோன் மர்ப்பி மற்றும் பீட்டர் கவனாக் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நகலெடுக்கப்பட்ட கடிதம் புறக்கணிக்கப்பட்டது.
டிசம்பர் 21 ம் தேதி, நிறுத்தும் இடத்தில் மெட்ரோலைன் நடத்தப்பட்டதாகக் கூறிய கோவிட்-19 “இடர் மதிப்பீட்டின்” நகலைக் கோரி Unite பிரதிநிதி மோவியா எல் பஷீருக்கு குழு கடிதம் எழுதியது. எந்த பதிலும் கிடைக்கவில்லை. தொற்றுநோய் காலம் முழுவதும் மெட்ரோலைன், லண்டன் போக்குவரத்து (TfL) மற்றும் Unite ஆகியவை நிறுத்தும் இடங்களில் தொற்றுநோய்கள் பரவுவதை மறைத்து, பஸ் தொழிலாளர்களை பாதுகாப்பற்ற நிலையில் விட்டது.
கோவிட்-19 இன் பணியிடங்களில் வைரஸ் பரிமாற்றம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற போதிலும், TUC பாதுகாப்பு தொடர்பாக எந்தவொரு கூட்டு நடவடிக்கையையும் ஏற்பாடு செய்யவில்லை. மே 2020 இல் தயாரிக்கப்பட்ட ஒரு TUC ஆவணம், “ஒரு தொழிற்சங்க அணுகுமுறையை… பாரியளவில் வேலைக்கு திரும்ப செய்வதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து” முன்மொழிந்து, உயர் தொழிற்சங்க அமைப்பு ‘ஒரு தொற்றுநோயை எவ்வாறு நிர்வகிப்பது, அல்லது வேலைக்கு திரும்புவதற்கான வேகம் அல்லது தன்மை’ பற்றிய விஞ்ஞானம் பற்றி எந்தவொரு நிலைப்பாடும் எடுக்காது” என அறிவித்தது.
அதற்கு பதிலாக, கோவிட்-19 பாதுகாப்பு மீறல்கள் குறித்த கவலைகளை அரசாங்கத்தின் அதிகாரமில்லாத சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகியிடம் சமர்ப்பிக்குமாறு தொழிலாளர்கள் கூறப்பட்டனர். பிரிவு 44 இன் கீழ் நடவடிக்கை எடுக்கும் ஊழியர்களுக்கு ஆதரவளிப்பதாக Unite உள்ளிட்ட TUC இன் உடன் இணைந்துள்ள நிறுவனங்கள் உறுதியளித்தன. இந்த வாக்குறுதிகள் பொய்யென அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. Unite கிரீக்கில்வூட்டில் வெளிநடப்பு செய்வதற்கான அழைப்பை எதிர்த்தது. பின்னர் ஓ'சுல்லிவனுக்கு எதிராக நிறுவனத்தின் ஒழுங்காற்று விசாரணைக்கான ஆதாரங்களை சமர்ப்பித்தது. இது ஊழல்மிக்க நீதிமன்றமாகும்.
களங்கமற்ற வேலைவரலாற்று பதிவைக் கொண்ட ஓ'சுல்லிவன் பிப்ரவரி 3ஆம் திகதி "பாரிய முறைகேடான நடத்தை" காரணமாக வேலைநீக்கம் செய்யப்பட்டார். மெட்ரோலைன் "தவறான மற்றும் சேதப்படுத்தும் தகவல்களை பரப்புதல்" மற்றும் "சட்டவிரோத தொழில்துறை நடவடிக்கைக்கு தூண்டுதல்" என்று அவர்மீது குற்றம் சாட்டியது. தொற்றுநோய்களின் போது ஊழியர்களைப் பாதுகாக்க மெட்ரோலைன் தவறியதற்கான தெளிவான சான்றுகள் உள்ளன. அக்டோபர் 2020 முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை லண்டன் பஸ் ஓட்டுநர்களிடையே 301 நோய்த்தொற்றுகள் இருந்ததாக இந்நிறுவனம் அறிவித்தது. இது தகவல் சுதந்திரத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களின்படி அரிவாவில் (327 நோய்த்தொற்றுகள்), ஸ்டேஸ்கோச் (366 நோய்த்தொற்றுகள்) மற்றும் கோ-அஹெட் (534 நோய்த்தொற்றுகள்) ஆகியவற்றால் அதிகமாக இருந்தது. ஆனால் ஜூலை 8, 2020க்குள், மெட்ரோலைனில் கோவிட் 12 பேருந்து ஊழியர்களின் இறப்புகளுக்கு காரணமாக இருந்தது. இது கோ-அஹெட்டில் அடுத்த மிக அதிக எண்ணிக்கையிலான இறப்புகளில் (7) இரு மடங்காகும். ஓ'சுல்லிவன் வேலைவாய்ப்பு நீதிமன்றத்தில் நியாயமற்ற பணிநீக்கத்திற்கு எதிராக முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.
மார்ச் 4 அன்று, ஓ'சுல்லிவன் வாட்ஃபோர்ட் வேலைவாய்ப்பு தீர்ப்பாயத்தில் இடைக்கால நிவாரணம் கோரிய (அதாவது, தற்காலிகமாக மீண்டும் பணியமர்த்தல்) தனது நியாயமற்ற பணிநீக்க உரிமைகோரல் பற்றிய முடிவு நிலுவையில் உள்ளது. அவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டது. உரிமைகோரல் முழு விசாரணைக்குச் செல்வதைத் தடுக்க மெட்ரோலைன் ஒரு சிறந்த QC வழக்கறிஞ்ஞரை நியமித்தது. தனது மகளின் உடல்நலம் பற்றிய ஓ'சுல்லிவனின் கவலைகள் பொருத்தமற்றது என்று அவர் விவரித்தார். பின்னர் அவர் வழக்கு செலவுக்கு விண்ணப்பித்தார். இது ஓ'சுல்லிவனின் குடும்பத்தை ஏழ்மையான நிலைக்கு கொண்டு சென்றிருக்கும். நிர்வாக இயக்குனர் ஸ்டீவ் ஹாரிஸ் மற்றும் மனிதவளத் தலைவர் டேரன் ஹில் ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளை வீடியோ இணைப்பு மூலம் நேரடியாகப் பார்த்தனர்.
ஓ'சுல்லிவனின் சட்டப்பூர்வ பாதுகாப்பை ஆதரிப்பதற்கான ஒரு மக்கள் நிதிதிரட்டல் கூட்டம் தொடங்கப்பட்டது மற்றும் மெட்ரோலைனின் பணபலத்தை பொறுத்தவரை அதிகபட்ச ஆதரவு தேவை. ஆனால் அவர் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவதில் உள்ள மிக முக்கியமான காரணி தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பெறப்பட்ட ஆதரவாகும். ஒற்றுமைக்கான தீர்மானங்களும் செய்திகளும் லண்டனிலும் அதற்கு அப்பாலும் உள்ள பஸ் நிறுத்தும் இடங்களிலும், போக்குவரத்துதுறை, தேசிய சுகாதார சேவை, உற்பத்தி, கிட்டங்கிகள், கட்டுமானம், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உள்ள முக்கிய தொழிலாளர்களால் நிறைவேற்றப்பட வேண்டும்.
ஓ'சுல்லிவன் பதவி நீக்கம் என்பது ஒரு பரிசோதனை வழக்காகும். தொற்றுநோய் முழுவதும், மக்களுக்கு உணவளித்தல், நோயுற்றவர்களுக்கு சிகிச்சையளித்தல், போக்குவரத்து வழங்குதல், பொருட்கள், எரிசக்தி பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகளை உலகளவில் வழங்கி சமூகத்தை இயக்கி வைத்திருந்தவர்கள் இந்த முக்கிய தொழிலாளர்களாவர். ஆயினும்கூட, ஒரு கொடிய மற்றும் மிகவும் தொற்று வைரஸிலிருந்து பாதுகாக்க தொழிலாளர்களின் உரிமைகள் வரும்போது, அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் போலி கைதட்டல் மற்றும் அஞ்சலிகளும் ஆவியாகி ஆளும் வர்க்கம் அதன் கோரமான பற்களைத் காட்டுகின்றது.
டேவிட் ஓ சுல்லிவன் தனியாக போராட விடக்கூடாது! லண்டன் பஸ் சாமானியத் தொழிலாளர்கள் குழுவும் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியும் ஐரோப்பா, அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவில் உள்ள எங்கள் சகோதர சகோதரிகள் உட்பட எல்லா இடங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றன. ஒருவருக்கு ஏற்படும் பாதிப்பு அனைவருக்குமான ஒரு பாதிப்பாகும்!
உங்களால் எப்படி உதவ முடியும்:
மக்கள் நிதிதிரட்டலுக்கு நன்கொடை வழங்குங்கள்
https://www.crowdjustice.com/case/test-case-for-key-worker-rights-during-pandemic/
ஆதரவுச் செய்தி அனுப்பவும்
https://wsws.org/en/topics/campaigns/defend-david-osullivan#comment
உங்கள் பணியிடத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும்
https://wsws.org/en/topics/campaigns/defend-david-osullivan#resolution
பஸ் தொழிலாளர்களின் கோவின்-19 ஆய்வை பூர்த்திசெய்யவும்
https://form.jotform.com/210722972144048
பிரச்சாரப் பக்கத்தைப் பார்வையிடவும்
http://wsws.org/defend-osullivan