“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விட்டு ஒழுங்கமைக்கிறது”

சர்வதேச இணையவழி மே தின பேரணியில் பிரிட்டனில் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏன் கலந்து கொள்கிறார்கள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மே 1 ஆம் தேதி, சனிக்கிழமையன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) நடத்தும் சர்வதேச இணையவழி மே தின பேரணியில் பிரிட்டனிலுள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் ஏன் கலந்து கொள்கிறார்கள் என்பது பற்றி உலக சோசலிச வலைத் தளத்திடம் அவர்கள் பேசினர். இங்கு பதிவு செய்து இந்த முக்கியமான நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.

பிரையன், வட மேற்கு இங்கிலாந்தில் உள்ள Merseyside சுற்றுலா பகுதியைச் சேர்ந்த ஆசிரியரான இவர், “சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியில் அங்கம் வகிப்பதும், உலக சோசலிச வலைத் தளத்தின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்வதும் முக்கியமானது என நான் நினைக்கிறேன்” என்றார்.

“இங்கிலாந்திலும் சர்வதேச அளவிலும் உள்ள தொழிலாளர்கள் பிரதான அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளால் கைவிடப்பட்டுள்ளனர், காரணம் இவையனைத்தும் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையையும் ஆரோக்கியத்தையும் விலை கொடுத்து பெரும் செல்வந்தர்களின் பேராசைக்கு ஆதரவளிக்கின்றன. பெருநிறுவன ஆதரவு ஊடகங்கள் இட்டுக்கட்டும் பொய்களின் வலையில் நாம் சிக்கியிருக்கிறோம், ‘அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது’ என்றும், ‘வைரஸூடன் வாழ நாம் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றும் அவை நமக்கு கூறுகின்றன.”

“இங்கிலாந்து அரசாங்கத்தினது, மற்றும் ஏனையோரது கொலைகாரக் கொள்கைகளை உலக சோசலிச வலைத் தளத்தைத் தவிர வேறு எவரும் கணக்கில் கொள்ளவில்லை. இந்த கொள்கைகளை எதிர்க்கும் மற்றும் தொழிலாளர்களின் தேவைகளை முன்னெடுத்துச் செல்லும் ஒரு இயக்கத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதை அடைய மே தின இணையவழி கூட்டம் நமக்கு உதவும் என்று நான் நம்புகிறேன்.”

டேவ், இவர் இங்கிலாந்தின் வட மேற்கில் உள்ள ஒரு மூத்த சுகாதாரப் பாதுகாப்பு உதவியாளராவார். இவர், “மே தின பேரணியில் நான் கலந்துகொள்கிறேன், ஏனெனில் இது சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்கான குறிப்பிடத்தக்க வரலாற்று கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக இந்த மே தினம், சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (International Workers Alliance of Rank-and-File Committees) கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுப்பதுடன், முதலாளித்துவத்திற்கும், மற்றும் சமூக ஜனநாயகம், தொழிற்சங்கங்கள் மற்றும் அவர்களது குட்டி முதலாளித்துவ உற்சாக தலைவர்களின் தலைமையின் துரோகத்திற்கும் எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கம் போராடுவதற்கான தொடக்கத்தையும் அது குறிக்கிறது” என்று கூறினார்.

“நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI), முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான தாக்குதலை முன்னெடுக்க சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது, மற்றும் ஒழுங்கமைக்கிறது. சர்வதேச ஒற்றுமைக்கும் முதலாளித்துவத்திற்கு எதிரான நடவடிக்கைக்கும் அழைப்பு விடுப்பதை விட மே தினத்தை கொண்டாடுவதற்கான சிறந்த வழி வேறு என்ன உள்ளது? இது வெற்று வார்த்தைகளோ, வார்த்தைஜால மோசடியோ அல்ல, மாறாக முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவரும் குறிக்கோளுடன் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கையாகும்.”

ஜூட் ஜாக்சன், இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளரும், உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகருமான இவர், “தற்போது பல ஆண்டுகளாக WSWS ஆல் நடத்தப்பட்ட மே தின இணையவழி பேரணிகள், எப்போதும் தகவல் வழங்கக்கூடிய, அறிவுத்திறம் வாய்ந்த நிகழ்வுகளாக உள்ளன, மேலும் பூகோள அளவிலான அரசியல் நிலைமையை பகுப்பாய்வு செய்கின்றன என்பதுடன், சூழ்நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க ஒரு ஒத்திசைவான திட்டத்தையும் முன்வைக்கின்றன” என்று தெரிவித்தார்.

“அதிலும் இந்த ஆண்டு, உலகம் முழுவதும் கோவிட் பெருந்தொற்று கொதித்தெழுந்து கொண்டிருக்கையில், இதில் பங்கேற்பதும், மேலும் குறிப்பாக ஏப்ரல் 23, 2021 அன்று, ‘சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர்கள் கூட்டணியை நோக்கி’ என்ற தலைப்பில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்ட அறிக்கையை படிப்பதும் முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதே. சமீபத்திய வரலாற்றில் மனித இனம் ஓட்டப்பந்தயத்தை எதிர்கொண்டுள்ள மிகுந்த ஏற்ற இறக்கம் நிறைந்த காலங்கள் இவை என்ற நிலையில், தொழிலாள வர்க்கம் அதன் வரலாற்று பணிக்காக படிப்பினைகளை கற்றுக்கொண்டு, பணிகளை நிறைவேற்ற வேண்டும்.”

குளோட், அண்மையில் பிரிட்டனில் நடைபெற்ற சாமானிய கல்வித் தொழிலாளர் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொண்ட இலண்டனைச் சேர்ந்த இளம் வேலையில்லாத தொழிலாளியான இவர், “வீடற்ற தன்மை மற்றும் கல்வியில் பாகுபாடு ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நிலைமையை, அதிலும் குறிப்பாக நரம்பியல் பன்முகத்தன்மை கொண்டவர்களது நிலைமையைப் பற்றி, மற்றும் மறைக்கப்பட்ட குறைபாடுகள் ஒப்புக்கொள்ளப்படுவதன் முக்கியத்துவம் பற்றி மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர நான் ஐந்து ஆண்டுகளாக போராடி வருகிறேன்.

“சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி உருவாக்கப்படுவதை நான் ஆதரிப்பதால், சனிக்கிழமை நடைபெறும் மே தின கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன்.”

பென், யார்க்கைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியாளர் கூறினார்: “கொரோனா வைரஸிலிருந்து பல்லாயிரக்கணக்கான இறப்புகள் இல்லாமல் முதலாளித்துவத்தால் தொற்றுநோயிலிருந்து தப்ப முடியாது. கோவிட் -19 க்கு, அதை அழிக்க மகத்தான ஒருங்கிணைப்பு மற்றும் உலகளாவிய வளங்கள் தேவை, மற்றும் காலநிலை மாற்றம் பிரச்சினை அதைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக உள்ளது. தொழிலாளர்கள் இதை உறுதிப்படுத்த அதிகாரத்தை தங்கள் கைகளில் எடுக்க வேண்டும்! மே 1 ஆம் தேதி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்!”

ரேச்சல், ஒரு பள்ளியில் உதவி தொழிலாளியாக பணியாற்றும் இவர், சர்வதேச மே தின பேரணிக்கு ஆதரவளிப்பதுடன், சாமானிய தொழிலாளர் பாதுகாப்புக் குழுக்களின் வலையமைப்பை நிறுவுவதற்கு ஆதரவளித்து நடத்தப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் சமீபத்திய கூட்டத்தைப் பற்றி கூறினார், “இந்த இணையவழி சந்திப்பு ஒரு நல்ல யோசனை என்றே நான் நினைத்தேன், ஏனென்றால் பொதுவாக தொழிலாளர்கள் மற்றும் சமூகத்திற்காக ஒலிக்கும் ஒரு குரல் தேவை. பிரிட்டிஷ் அரசாங்கம் தொடர்ந்து மனித வாழ்க்கையை விட இலாபங்களையே முன்னிலைப்படுத்தும் நிலையில், தொடர்ந்து நமக்கு கூறப்படும் அவர்களது மூலோபாயம் என்பது உலகின் வேறு எந்த நாட்டையும் விட ஏற்கனவே தனிநபர் வருமானம் இழக்கப்பட்டு வருவதன் பின்னணிக்கு எதிராக ஏராளமான உயிர்கள் விலையாக கொடுக்கப்படும் என்பதே. அவர்களது கொள்கை சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை மீது மோசமான கவனத்தைக் கொண்டுள்ளது, இதை, பல ஆராய்ச்சியாளர்கள் ஒரு ‘ஆபத்தான வீழ்ச்சி’ என்று அழைப்பதுடன், ‘சமூக கொலையுடன்’ ஒப்பிடுகிறார்கள்.”

“பெற்றோர்கள் மீதான அழுத்தத்தின் காரணமாக மட்டுமே ஜனவரி 2021 இல் இங்கிலாந்தில் பள்ளிகள் மூடப்பட்டன, அப்போது ஏராளமான இறப்புக்களும் நோய்தொற்றுக்களும் நிகழ்ந்து கொண்டிருந்த போதிலும், அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க அரசாங்கம் நோக்கம் கொண்டிருந்தது.

"இதுபோன்ற அரசியல் முடிவுகளுக்கு எதிரான ஒரு கூட்டுக் குரல் பெருகிய முறையில் பேராசை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு எதிராக பேசுவதற்கான ஒரே வழியாகும். விவாதமின்றி பொது மக்களின் தேவைகளுடன் ஒத்துப்போகாத கொள்கைகளை அது திணிக்க விரும்புகிறது. பொது மக்களின் வாழ்க்கை மற்றும் நல்வாழ்வில் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை அது சிறிதும் கருதவில்லை."

Loading